Skip to main content

துணிகரமான விளையாட்டு மட்டுமே விளையாட்டு

 மார்டின் பட்லர்

(போர்ச்சுகீசிய நாட்டில் வசிக்கும் மார்டின் பட்லர், சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த ரஷ்ய மெய்ஞானியான குர்ட்ஜிப் அவர்களின் நேரடி மாணவியான ரீனா ஹேண்ட்சின் உதவியுடன் ஆன்மப் பயிற்சிகளில் பல்லாண்டு காலம் ஈடுபட்டவர். மனித நிலைமைகள் பற்றிய ஆழமான புரிதலுக்கு இவர் வருவதற்கு ஸ்பினோஷா போன்ற தத்துவவாதிகளையும் முறையாகக் கற்றிருக்கிறார். martinbutler.eu  என்ற இணையத்தளத்தில் கட்டுரைகளையும் வீடியோக்களையும் தொடர்ந்து இட்டுவருகிறார். என் காலத்தையும் என்னைச் சுற்றியுள்ள நிலைமைகளையும் புரிந்துகொள்வதற்கும் இந்தச் சூழ்நிலைகளுக்குள் எனது விழைவுகள், ஆசைகள், வலிகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்வதற்கும், எனக்கு வழங்கப்பட்டுள்ள வளங்களினூடாக நிறைவாகவும் நீதியாகவும் இருப்பதற்கும் மார்டின் பட்லரின் எழுத்துகள் உதவிகரமாக இருக்கின்றன. அவரது எழுத்துகள் உரிமைத்துறப்பை அறிவித்திருப்பதால் எனக்குப் பிடித்தவற்றை இங்கே மொழிபெயர்த்து வெளியிடுகிறேன். இங்கே தொடர்ந்து அது வெளியாகும். தன்னில் மட்டுமே வேலை சாத்தியம் என்று நம்புபவர்கள் அவரது எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கலாம். மார்டின் பட்லர் என்னிடம் ஏற்படுத்திய பயன்விளைவை இன்னும் சில வாசகர்களும் அடையலாம் என்ற நம்பிக்கையில் இந்தக் கட்டுரைகளை மொழிபெயர்க்கிறேன்.)


வாழ்க்கையை வாழ்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒரு விலங்கின் வாழ்க்கையை வாழலாம்; அல்லது மனித உயிரின் வாழ்க்கையை வாழ்வது இன்னொரு வழி. மனித உயிர்கள் ஆச்சரியகரமாக அரிதானவை.
விலங்கின் வாழ்க்கையை எளிதாக வரையறுத்து விடலாம். அதன் முயற்சிகள், விழைவுகள், கனவுகள் அனைத்தும் உயிர்தரிப்பது இனப்பெருக்கம் செய்வது நோக்கிய உந்துதலால் வழிநடத்தப்படுவதே. பணம் சம்பாதிப்பது, மந்தையின் அங்கீகாரத்தை வேண்டுவது, ஓரளவு ஆதிக்கம் செலுத்தும் வலிமை, குடியிருப்பு உருவாக்கம், உணவுத் தேடல் ஆகியவற்றில் தான் நம்மில் பெரும்பாலானவர்கள் ஈடுபட்டிருக்கிறோம். விலங்குகளும் இந்த எல்லா விஷயங்களையும் செய்கின்றன. அத்துடன் உயிர்தரித்திருப்பதற்கான வாய்ப்புகள் மேம்படும் போது நாம் அருமையாக உணர்கிறோம். அது குறையும்போது நாம் துயரப்படுகிறோம்.

ஒரு விலங்கின் வாழ்க்கையைத் தான் பெரும்பாலான பேர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வேறு வகை வாழ்க்கையை அவர்களால் கற்பனை செய்ய முடியாது. விலங்கிருப்பின் வலிகளையும் அதன் சந்தோஷங்களையும் அவர்கள் அனுபவிக்கிறார்கள். சிலருக்கு விலங்கின் வாழ்க்கை போதாமல் இருப்பதால், ஏதோ ஒன்றின் இழப்பை உணர்கின்றனர். அப்போதுதான் ஒரு தேடல் தொடங்குகிறது. மதம், ஆன்மிக மரபுகள், சுய- உதவி, தத்துவம், மனோவியல் தொடர்புடையதாக அந்தத் தேடல் இருக்கும். இந்த விழைவுகள் எல்லாவற்றின் பொதுக் காரணியாக புரிதலுக்கான விருப்பம் இருக்கும். ஒரு மனித உயிரியின் வாழ்க்கையை வாழ்வதற்கானது தான் இந்தப் புரிதலுக்கான முயற்சிகளாகும். இதனாலேயே நமது விலங்கு இயல்பை நாம் புறக்கணிக்க வேண்டுமென்பதாகவோ அதன் சந்தோஷ, துயரங்களை தடுத்தாட்கொள்ளும் சக்தியைப் பெறுவதாகவோ புரிந்துகொள்ள வேண்டியதில்லை. நமக்குள் வளர வேண்டிய ஒன்றைக் குறித்த புரிதல் அது.

புரிதலுக்கான தேடல் முயற்சியில் அதற்கேயுரிய அபாயங்கள் இல்லாமலில்லை. பாம்புத் தைலம் விற்பவர்களிடமும் போலி குருக்களிடமும் உடனடியாக சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. யாரோ ஒருவரிடம் “பதில்கள்” அனைத்தும் இருப்பதான நம்பிக்கையும் உள்ளது. மனித உயிர் போல வாழ்வதற்கு நாம் தீர்க்கமான அறிவைப் பயன்படுத்தித்தான் புரிதலுக்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். நாமே முயன்று கண்டுபிடிக்கும் பதில்கள் மட்டுமே பயனுள்ளது. நாம் நம்மை, இந்த உலகத்தை புரிந்துகொள்ளப் போராடுகிறோம். நாம் நம்மைப் பூட்டியிருக்கும் கருத்துருவ, புலனுணர்வு சார்ந்த சிறைக்கு வெளியே ஏதாவது இருக்கக்கூடுமாவென்று பார்ப்பதற்கு முயற்சிக்கிறோம். அந்தப் பயணம் வழிகளற்றதும் இலக்கற்றதுமாகும். அத்துடன் அந்தப் பயணம் பலவீனர்களுக்கானதுமல்ல.

விலங்கு தொடர்ந்து திருப்தியைத் தேடிக்கொண்டும் எதையாவது செய்து அந்தச் செயலுக்கான பரிசைத் தேடிக்கொண்டுமிருக்கும். மனித உயிரைப் பொருத்தவரை, புரிதலுக்கான முயற்சி தான் பரிசு என்பது தெரிந்திருக்கும். மன அளவில் எந்த உறுதியான நோக்கமும் இன்றி புரிதலுக்கான முயற்சியை ஒரு மனிதன் செய்வதற்கான காரணத்தைச் சிலர் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். விலங்கு அதைப் புரிந்து கொள்ளாது.

புரிதலுக்கான தேடல் என்பது திட்டவட்டமான அறிவார்த்த நடவடிக்கை போலத் தொனிக்கலாம்; ஒரு பொழுதுபோக்குச் செயல்பாடாகவும் அர்த்தப்படலாம். நமது உணர்வுகள், மனம், உடல் அனைத்தும் செயலில் உள்ளபோது புரிதல் வருகிறது. நம்மைப் புரிந்து கொள்வதற்கு ஈவிரக்கமற்ற நேர்மையும் தளராத தைரியமும் தேவை. துணிகரம் இல்லாத விளையாட்டு விளையாட்டே அல்ல, அத்துடன் இந்த விளையாட்டுதான் உண்மையிலேயே விளையாடத் தகுதியானது.
விலங்காக வாழுவது விலங்காக இறப்பதும்தான். மனித உயிராக வாழ்வதென்பது ஒட்டுமொத்தமாக வேறொன்றைக் கோருகிறது. ஒவ்வொரு நபரும் தங்களுக்கானதைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒருகட்டத்தில் மேஜையில் தங்களை முழுமையாகப் பணயமாக வைக்க வேண்டும். அதுதான் விளையாட்டில் துணிகரம்.

Comments