Skip to main content

கேம் ஆப் த்ரோன்ஸ்
உலகில் உள்ளது எல்லாமும் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ வலைத்தொடரில் உண்டு. காவியங்களுக்கே உரிய படைப்பம்சம்தான். காதல் உண்டா? உண்டு. உக்கிரமான சண்டை உண்டா? உண்டு. உறங்கிய பிறகும் ஆழ்மனத்தில் ஓசையிடும் வாள்களின் சத்தமும் குதிரைகளின் குளம்பொலிகளும் உண்டு. வெறுப்பு, சதி, எதிர்பாரா திருப்பங்கள், பழிவாங்கல்கள் உண்டு. வாழ்க்கையை விசாரிக்கும் அடிப்படைக் கேள்விகளும், புத்திசாலித்தனமும், இதற்கெல்லாம் அப்பால் காலம்காலமாக சந்தேகத்துடன் விசாரித்துவரும் பேய்கள், பில்லி சூன்யம், ஜோம்பிகளின் நடமாட்டமும் உண்டு. ‘இருள் சூழ்ந்திருக்கிறது; முற்றிலும் பயங்கரங்கள்’ என்ற வசனம் ‘கேம் ஆப் த்ரோன்’ஸுக்கு முழுக்கப் பொருந்தும். அத்தனை பயங்கரங்களும் பார்வையாளனை வசீகரிக்கின்றன. அவர்கள் வாழும் உலகுக்கு இணையான பிரமாண்டத்தை நிகர் உலகத்துக்கு நகர்த்துகின்றன.

இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய கலைவடிவமான சினிமாவின் சாத்தியங்களுக்கு அப்பாற்பட்ட சாத்தியம் ஒன்றுண்டு என்பதை ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ மெய்ப்பிக்கிறது. சினிமாவைச் சிறுகதையின் வரையறையைக் கொண்டது என்றும், கதைத் தொடரை நாவல் என்றும் வகைப்படுத்தலாம். ‘கேம் ஆப்த்ரோன்ஸ்’ வெளிக்காட்டும் மன, நில, பருவநிலை, கதாபாத்திர, இயற்கைச் சூழல்களின் பன்முகத்தன்மையை அதிகபட்சம் மூன்றரை மணி நேரம் கொண்ட ஒரு சினிமாவில் சாதிப்பது சாத்தியமே இல்லை. சினிமாவில் கற்பனையே செய்ய முடியாத காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’, லியோ டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ நாவல்களை அதன் கிளைக்கதைகள்,

உபகதாபாத்திரங்களையும்கூட சேர்த்து வலைத்தொடரில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’. கதை முடிச்சு வெஸ்டரோஸ் என்ற கற்பனை நிலப்பரப்பில் உள்ள செவன் கிங்டம்ஸின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக ஒன்பது ராஜ வம்சங்களுக்கு இடையே நடக்கும் அதிகாரப் போர்தான் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ கதை. தணிக்கையின் வரையறையைத் தாண்டிய காதல் களி, தெறிக்கும் ரத்தம், பறக்கும் டிராகன்கள், பிரமாண்டங்கள் எனப்பார்வையாளரை உடனடியாக ஈர்க்கும் எல்லா அம்சங்களும் இதில் உண்டு. ஆனால், பிரதானமாக மனித மனங்களையே களனாகக் கொண்டு காலங்காலமாக விளையாட்டுகளை நிகழ்த்தும் தீவிரமான அரசியல் யதார்த்த திரில்லர் என்றும் இதைச் சொல்லலாம்.

வனம், பனி படிந்த நிலம், கடல், பாலை எனத் தனித்துவம் வாய்ந்த திணைகளில் பல்வேறு கிளைகளாக இக்கதை செல்கிறது. செவன் கிங்க்டம்ஸின் அரியாசனத்தின் பெயர் அயர்ன் த்ரோன். கற்காலம் முடிந்து உலோகக் காலகட்டம் தொடங்கியபோது இரும்புதானே சிம்மாசனமாக உருவாகியிருக்க வேண்டும். ஐரோப்பாவின் மத்திய காலகட்டத்து சமூக, அரசியல், பொருளாதார, வாழ்க்கைச் சூழல்களைப் பிரதிபலிக்கும் கதைத் தொடர் இது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று மறுமலர்ச்சிக் காலத்துக்குப் பின்னாலான லட்சியங்களை அடைய ஐரோப்பா எத்தனை ரத்தத்தை சிந்தியுள்ளது, எத்தனை கொடூரங்களைக் கடந்துள்ளது என்பது எங்கேயோ உணர்த்தப்படுகிறது. “ரத்தத்தில் வரலாறு எழுதப்படுகிறது. மனித வரலாற்றின் உண்மையான பயங்கரங்களை சூனியக்காரக் கிழவிகளோ ரத்தக்காட்டேரிகளோ நிகழ்த்தவில்லை. அவை நம்மாலேயே நிகழ்த்தப்பட்டன. மன்னர்கள், இளவரசர்கள், தளபதிகள், ஆசை நாயகிகள், துரோகங்கள், போர்களைப் பற்றிப் படித்தாலே தெரியும். கற்பனை இதில் பத்து சதவீதம்தான்” என்கிறார் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ மூலக்கதை ஆசிரியரான ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்டின். தொடரின் முதல் சீசன், முதல் அத்தியாயத்திலேயே விளையாட்டின் கதாபாத்திரங்கள் சுழன்றாடத் தொடங்கிவிடுகின்றன.

ஹவுஸ் ஸ்டார்க் வம்சத்தின் தற்போதைய தலைவனான லார்ட் எட்டார்ட் நெட் ஸ்டார்க்கின் ஐந்து நேரடி வாரிசுகளான குழந்தைகளும், முறைதவறிப் பிறந்த குழந்தையான ஜான் ஸ்நோவும்தான் மொத்த கதையின் மையசக்தியாக வெளிப்ப் டுகிறார்கள்.

விருப்பத்துக்கும் கடமைக்கும் இடையில் துண்டாடப்பட்டு முதல் சீசனிலேயே இறந்துபோனாலும் நெட் ஸ்டார்க்கின் மரணம்தான் மொத்த விளையாட்டையும் நடத்தப்போவதால், வலுவான நடிகரான ஷான் பீன்னை, நெட் ஸ்டார்க்காக ஆக்கியுள்ளனர். கர்ணனாக நமக்குத் தோன்றும் நெட் ஸ்டார்க், கிருஷ்ணனின் சாயல் உள்ள குள்ளனான டிரியன் லேனிஸ்டர் தொடங்கி திருநங்கை வேரிஸ் வரை ஒவ்வொருவரின் ஆளுமை, வரலாறு, உளவியல் அனைத்தும் துல்லியமாக வலுவாக உருவாக்கப்பட்டவை. அதனால்தான், அவர்களோடு அவர்களது கதைகளோடு அவர்களது நோக்கங்களோடு நாம் ஒருகட்டத்தில் அடையாளம் காண்கிறோம். அதே நேரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத மாபெரும் புதிருக்கும் நம்மை ஒப்புக் கொடுத்துவிடுகிறோம்.

நமது மனத்துக்கு நெருக்கமாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தைப் பிரியத்தோடு பின்தொடர்கிறோம் என்றால் அவர் நிச்சயமாக நாம் நினைத்துப் பார்க்காத வேளையில் கொல்லப்படுவார். நாம் விரும்புவதைக் கொன்றும் தூரத்திலும் வைத்துவிடுவார் இயக்குநர். நாம் வெறுத்த, கண்டுகொள்ளாத சில கதாபாத்திரங்கள் மெதுவாக நமது மனத்தின் மையத்துக்கு வரும். நல்ல கதாபாத்திரங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்களுக்கு இந்தக் கதையைப் பொறுத்தவரை பெரும்பாலும் அல்பாயுசுதான்.

என் மனம் ஒருவரிடத்தில் ஒருத்தியிடத்தில் சாய்வதையும் வெறுத்து ஒறுப்பதையும் இன்னொன்றில் பற்றிக் கரையேறுவதையும் பார்ப்பது மிகச் சுவாரசியமான கதைக்கு வெளியிலான தனி விளையாட்டாக இருந்தது.  

எதிர்மறையான கதாபாத்திரங்களின் வல்லமையை உணர்த்துவதற்கு நல்லவர்களை அவ்வப்போது பலிகொடுப்பது அவசியம் என்ற தந்திரத்தைப் பிரமாதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

தனி நன்மை, தனித் தீமை என்ற எதிர்நிலைகளில் கருப்பும் வெளுப்புமாக எந்தக் கதாபாத்திரமும் வாழ்க்கைபோலவே இதிலும் இல்லை. முதல் அத்தியாயத்திலேயே சிறுவன் பிரான் ஸ்டார்க்கைத் தனது முறைதவறிய உறவை மறைப்பதற்காக உயரத்திலிருந்து தள்ளிவிடும் ஜெய்மி லேனிஸ்டர், அடுத்தடுத்தப் பருவங்களில் அத்தனை நேசத்துக்குரியவனாகப் பரிணாமம் அடைகிறான். தீங்கு, சுயநலத்தின் உச்சமாகத் தோன்றும் அரசி செர்ஸி, குழந்தைகளுக்குத் தாயாக அபாரமான நேசத்தைப் பொழிபவளாக ஒரு தோற்றத்தைக் காட்டுகிறாள். முகத்தில் தீக்காயத் தழும்புடன் குரூபியாகவும் முரடனாகவும் வரும் சேண்டர் க்ளிகேனும், செவன் கிங்க்டம்ஸ் ராஜ்ஜியத்தை நடுக்கத்துக்குள்ளாக்கும் மதகுரு ஹைஸ்பேரோவும் கிட்டத்தட்ட இரண்டு துருவங்களிலிருந்து வெளிப்படும் தத்துவவாதிகள் என்றே சொல்லிவிடலாம். உணவு, உயிர் தரிக்கும் வேட்கை தவிர மனித வாழ்க்கைக்கு எந்த உயர்நோக்கமும் இல்லை என்று நம்பும் சேண்டர் க்ளீகேன் பேசும் வசனங்கள் இன்றைய வாழ்க்கைச் சூழலுக்கும் பொருந்திப்போகுபவை. கிறிஸ்துவும் நபிகளும் மார்க்ஸும் சேர்ந்தவராக வெளிப்படுகிறார் ஹைஸ்பேரோ. ஏழைகள் குறித்தும், உலகின் பெரும் பகுதி வளங்களைக் குறைந்த எண்ணிக்கையில் சேர்த்து வைத்திருக்கும் ஆட்சியாளர்கள் குறித்தும் அவர் பேசும் வசனங்கள் தற்கால அரசியல், பொருளாதாரச் சூழல்களுக்கும் பொருந்துபவை. “நாங்கள் யார்? எங்களுக்கென்று குடும்பப் பெயர்களோ, பின்னணியோ கிடையாது. எங்களில் ஒவ்வொருவரும் ஏழைகள், அதிகாரமற்றவர்கள். ஆனாலும், நாங்கள் ஒன்றுசேர்ந்தால் ஒரு சாம்ராஜ்யத்தைத் தூக்கியெறிந்துவிட முடியும்.”

சிறுமி ஆர்யா ஸ்டார்க், வீராங்கனையாக அகத்திலும் புறத்திலும் அடையும் மாற்றம் ஒரு பெரிய ஜென் கதையைப் பார்க்கும் அனுபவத்தைக்கொடுப்பது. ஒரு குட்டி ராஜ்ஜியத்தின் அப்பாவி இளவரசியாகத் தொடங்கி, பல்வேறு இழப்புகளையும் பலிகளையும் கடந்து முகமற்றவளாகி மீண்டும் சுயமுகத்தை அடைகிறாள்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வீடு, அலுவலகம் என்றாகிவிட்ட நகர்புறத்து மக்களை இந்தக் கதை ஈர்க்கத்தான் வேண்டும். அல்பமான அன்றாடம், பெரிய மாறுதல்கள் ஏதுமற்ற சாரமும் சாகசமுமற்ற வாழ்க்கை, தவணை இஎம்ஐ நெருக்கடிகளிலிருந்து பிரமாதமாகத் தப்பிப்பதற்கான இடமாக ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ ஆகிவிட்டதில் வியப்பில்லை.

பார்க்காத நிலங்களில் பார்க்காத பருவநிலைகளில் உலோகக் காலத்து ஆயுதங்களுடன் குதிரைகளும் நமது நடுவீட்டில் எந்த அபாயமும் இல்லாமல் நம் ரத்தத்தைச் சூடேற்றி ஓடுவதென்பது எத்தனை சுவாரசியமானது!

உள்ளும் புறமும் மனிதர்கள் பட்டவர்த்தனமாக, கரடுமுரடாக, நிர்வாணமாக அடிப்படை வேட்கைகளுக்கு முகமூடி போடாமல் மோதும் கொலை வன்மம் உலகம் முழுக்க நகர்ப்புறப் பார்வையாளர்களைக் கட்டிப்போடுவதில் வியப்பேதும் இல்லை.

இந்தக் கதைத்தொடருக்கு மூலமான ‘எ சாங்க் ஆப் ஐஸ் அண்ட் பயர்’ நாவலின் பெயரிலேயே, பருவநிலை மாறுதல்கள் தொடர்பாக மனித குலம் சந்திக்கப்போகும் நெருக்கடியைக் குறிப்பிடுவதாக விமர்சகர்கள் சொல்கிறார்கள். ‘வின்டர் இஸ் கம்மிங்’ என்ற எச்சரிக்கை கதைத்தொடர் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. சுயநல, தற்காலிகப் பொருளாதார, அதிகார நலன்களுக்காக நாம் சண்டையிட்டுக்கொண்டிருக்கும்போது, நம்மை இன்னொரு அபாயம் பீடிக்கப்போகிறது என்பதைக் காண்பிப்பவர்கள்தான் வைட் வாக்கர்ஸ் எனப்படும் சடலப்படையினராகக் காண்பிக்கப்படுகின்றனர்.

பொழுதுபோக்குக்கு அப்பால் சிந்திப்பதற்கும், பிரதிபலிப்பதற்கும், துலக்கிக்கொள்வதற்கும், கவித்துவத் தூண்டல்களைப் பெறுவதற்கும், சுயத்தில் நிலைபெற்ற நமது பழக்கங்கள், படிவுகள், மனத்தடைகளிலிருந்து விடுபடுவதற்குமான அம்சங்கள் இப்படைப்பில் உண்டு.

எல்லைகளின் பெயரால், தேசிய வெறியின் பெயரால் பெயரால் அதிகாரமென்பது எத்தனையெத்தனை முகமூடிகளுடன் செயல்படுகிறது? கருப்பர்கள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், பெண்கள், சிறுபான்மையினர், புலம்பெயர்பவர்கள் மீது வரலாறெங்கும் தொடரும் ஒடுக்குமுறைகளைப் பிரதிபலிக்கும் படப்பிரதியாகவும் ‘கேம் ஆப் த்ரோன்’ஸைப் பார்க்க முடியும்.

ஒரு நாகரிகமான, குறைந்தபட்சம் மனிதாபிமானம் கொண்ட, வெளிப்படையாக வன்முறைகளைக் காண்பிக்க முடியாத உலகத்தைப்படைக்க எத்தனை துயரங்களைக் கடந்துவந்திருக்கிறோம் என்பதை நினைவூட்டுவதாகவும் படிப்பினையாகவும் படிக்கலாம்.


Comments

Saravana Raja said…
இரு நாட்கள் முன்பே படிக்க நினைத்து, இன்றுதான் படித்தேன். தமிழில் இத்தனை ஆர்வத்துடன் கே.ஆ.த் குறித்து யாரும் எழுதியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. வலைத் தொடர்களின் சாத்தியம் மற்றும் தேவை குறித்தும், குறிப்பிட்ட தொடரின் சாரத்திலிருந்து பல ஈர்க்கத்தக்க அவதானிப்புகளையும் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். தொடர்க.

Popular posts from this blog

விகடன் என்னும் ஒரு பெருநிறுவனத்துக்கு எதிராக எளியவர் பச்சோந்தி பெற்றிருக்கும் வெற்றி

கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது.      இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந

ஒருநாள் - நகுலன்

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை .

நீலக்குதிரைகள் - மேரி ஆலிவர்

நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு கட்டிக் கொள்கிறேன். என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது. ஓவியன் ப்ரான்ஸ் மர்க் மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி இறந்துபோனான். போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு விளக்குவதை விட நான் இறந்தே விடலாம். அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும் அல்லது அதை அவற்றால் நம்பவே முடியாது. ப்ரான்ஸ் மர்க் உனக்கு எப்படி நன்றி சொல்வது. நமது உலகம் காலப்போக்கில் கூடுதலாக அன்பானதாக ஆகலாம். அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின் ஒரு சிறு துண்டாக இருக்கலாம். இப்போது அந்த நான்கு குதிரைகளும் நெருக்கமாக வந்து ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை அவை பேசவும் செய்யாது. என்ன சொல்லக் கூடும் அவை இத்தனை அழகாக