ஜே. கிருஷ்ணமூர்த்தி
தூரத்து மலைகளின் பின்னால் சூரியன் சரிந்து, பள்ளத்தாக்கில் நிழல்களை நீண்டதாகவும் இருட்டாகவும் ஆக்கியிருந்தது. கடலிலிருந்து குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்த அமைதியான மாலைப்பொழுது அது. வரிசையாக நின்றிருந்த ஆரஞ்சு மரங்கள் கிட்டத்தட்ட கருப்பாகத் தெரிந்தன. பள்ளத்தாக்கில் நீளும் நெடிய சாலையில் நகரும் வாகனங்களில் அஸ்தமனச் சூரியனின் ஒளி பட்டு ஒளிர்ந்தது. வசீகரமும் அமைதியும் கொண்ட சாயங்காலம் அது.
எல்லையற்று விரியும் வெளியையும், முடியாத தொலைவையும் மனம் நிறைப்பது போல முடிவேயில்லாமல் மனம் விரிவது போல இருந்தது. மனத்துக்குப் பின்னரும் அப்பாலும் எல்லா விஷயங்களையும் ஏதோவொன்று கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. மனம் தன்னுடையதல்லாத ஒன்றைப் புரிந்துகொள்ளவும் நினைவுபடுத்தவும் முயன்று இலக்கில்லாமல் போராடிக் கொண்டிருந்தது. அதனால்தானோ என்னவோ, அது தனது வழக்கமான செயல்பாட்டையும் நிறுத்திவிட்டது. ஆனால் தனது இயற்கையோடு இல்லாத ஒன்றை அதனால் உள்வாங்கமுடியாத நிலையில், சூழலின் ஆழ்மைக்குள் மனமும் புதைந்துவிட்டது. மாலை இருளடர்ந்துவிட்டது, அத்துடன் தூரத்தில் நாய்களின் குரைப்பொலிகள் எந்தவகையிலும் தொந்தரவூட்டவில்லை. அனைத்து உணர்வுநிலைகளையும் தாண்டிய அனுபவமாக அது இருந்தது.
அறிவுறுத்தவோ, அனுபவிக்கவோ மனத்தால் முடியாதது. மனம் போடும் காட்சிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஏதொவொன்றைப் பற்றி அறிந்த புரிந்த அது எது? அதை யார் அனுபவம் கொள்வது? அன்றாட நினைவுகளின், எதிர்வினைகளின், தூண்டல்களின் மனம் அல்ல. அங்கே இருக்கும் இன்னொரு மனமா அது. அல்லது, எல்லாவற்றுக்கும் மேலே அப்பாலானதால் மட்டுமே விழிப்புக்குள்ளாகும் உறங்கிக் கொண்டிருக்கும் மனத்தின் ஒரு அங்கமா?
மனத்தின் முறைப்பாட்டில் பிறக்காத ஆழமாக இருக்கும்நிலையில், அதை அறியும் ஒன்று எது? அனுபவிப்பவராக மனம் அதை அறிந்திருக்கிறதா? அனுபவிப்பவர் என்பவரே இல்லாத நிலையில் அந்த ஆழமே சுயமாக அறிந்துள்ளதா?
மலையடிவாரத்தில் அது நிகழ்ந்தபோது, அனுபவிப்பவர் என்று யாரும் இல்லை. அப்படியான நிலையிலும் மனத்தின் விழிப்புநிலை என்பது ஒட்டுமொத்தமாக வித்தியாசமாகவும் மேலார்ந்த தரத்திலும் அளவிட முடியாத நிலையிலும் இருந்தது. மனம் தன் பூர்விகச் செயல்பாடுகளில் இல்லை. விழிப்புடனும் அடங்கியும் இருந்தது. ஆனாலும் குளிர்ந்த காற்று மரத்தின் இலைகளில் விளையாடுவதை அறிவதைத் தவிர அதன் இயல்பிலான எந்த நகர்வும் அங்கே இல்லை. அவதானித்ததை அளக்கும் அவதானி அங்கே இல்லை. அங்கே அது மட்டுமே இருக்கிறது, அளவற்று அதுவே தன்னை தன்னில் அறிந்துகொண்டிருக்கிறது. ஆதியும் வார்த்தையும் இல்லாதது இல்லாதது.
அனுவபத்தாலோ சொற்களாலோ அதைப் பிடிக்க முடியாதென்பதை மனம் அறிந்திருக்கிறது. அங்கே தான் அநாதியாக அளவிடற்கரியாததாக உறைந்திருக்கிறது.
(ஜே. கிருஷ்ணமூர்த்தி எழுதிய commentaries on living நூலிலிருந்து)
Comments