ஜே. கிருஷ்ணமூர்த்தி
பனைகளுக்கு அப்பால் தூரத்தில் நிம்மதியற்ற கொடூரமான கடல்; அது அமைதியற்று, முரட்டு அலைகளோடு வலுத்த சுழிப்புடன் திகழ்ந்தது. இரவின் மௌனத்தில் அதன் ஆர்ப்பரிப்பு தூரத்திலிலுள்ள ஒரு தீவிலும் கேட்கக்கூடியதாக இருப்பதோடு அதன் ஆங்காரத்தில் ஒரு எச்சரிக்கை, அச்சுறுத்தல் இருந்தது. ஆனால் இங்கோ, பனைகளுக்கு நடுவே, ஆழ்ந்த நிழல்களும் மோனமும் இருந்தன. அன்று முழுநிலவு. கிட்டத்தட்ட பகல்போல ஒளிர்ந்தது. அனலோ கண்ணைக் கூசும் ஒளியோ இல்லை. காற்றிலாடும் பனைகள் மேல் விழும் ஒளி, மிருதுவாக எழில்மிக்கதாக இருந்தது. பனைகள் மீது விழும் நிலவொளி மட்டுமல்ல, அவற்றின் நிழல்களும், வட்டமான கிளைகளும், மின்னும் நீரும் வளமான பூமியும், எல்லாமும். பூமி, வானம், நடக்கும் மனிதன், கத்தும் தவளைகள், தூரத்து ரயிலின் சீழ்க்கையொலி என அனைத்தும் மனத்தால் அளக்க இயலாத ஒரு உயிர்ப்பொருள்.
மனம் என்பது அற்புதமான ஒரு கருவி; அத்தனை சிக்கலான, நுண்ணிய, எண்ணிலாத அத்தனை சாத்தியங்களையுடையதாக மனிதன் படைத்த எந்த இயந்திரமும் இல்லை. நமக்குத் தெரிவது மனத்தின் மேலோட்டமான மட்டங்களைப் பற்றி மட்டுமே; அதன் மேல் தளத்திலேயே நமது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டு வாழ்வதில் திருப்தியும் அடைகிறோம். மனத்தின் செயல்தான் சிந்தனை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். கூட்டம்கூட்டமாகக் கொலையைத் திட்டமிடும் ராணுவத் தளபதி, தந்திரக்கார அரசியல்வாதி, அறிவு படைத்த பேராசிரியர், வேலைத்திறன் கொண்ட தச்சர் ஆகியோருடைய சிந்தனைகள்.
மனம் என்பது அற்புதமான ஒரு கருவி; அத்தனை சிக்கலான, நுண்ணிய, எண்ணிலாத அத்தனை சாத்தியங்களையுடையதாக மனிதன் படைத்த எந்த இயந்திரமும் இல்லை. நமக்குத் தெரிவது மனத்தின் மேலோட்டமான மட்டங்களைப் பற்றி மட்டுமே; அதன் மேல் தளத்திலேயே நமது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டு வாழ்வதில் திருப்தியும் அடைகிறோம். மனத்தின் செயல்தான் சிந்தனை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். கூட்டம்கூட்டமாகக் கொலையைத் திட்டமிடும் ராணுவத் தளபதி, தந்திரக்கார அரசியல்வாதி, அறிவு படைத்த பேராசிரியர், வேலைத்திறன் கொண்ட தச்சர் ஆகியோருடைய சிந்தனைகள்.
தீர்க்கமான சிந்தனை என்றுண்டா? எல்லா சிந்தனையும் மனத்தின் மேல்தளச் செயல்பாடு மட்டுமில்லையே? சிந்திக்கும்போது மனம் ஆழத்தில் உள்ளதா? காலம், நினைவு, அனுபவம் எல்லாவற்றுக்கும் அப்பால் தன்னுடையதல்லாத ஒன்றை மனம் அறிந்திருக்கிறதா?
சுயத்தோடு இணைந்த செயல்பாடுகளுக்கு அப்பால், மனம் எப்போதும் எதையாவது தேடித் தடுமாறிக் கொண்டிருந்தாலும் எந்த மையத்திலிருந்து அது தேடுகிறதோ அந்த இடம் எப்போதும் ஒன்றாகவே உள்ளது. மனம் வெறும் மேல்தளச் செயல்பாடல்ல. அத்துடன் பல நூற்றாண்டுகளின் மறைவான அசைவுகளும் அங்கே உள்ளன. அந்த அசைவுகள், வெளிச் செயல்பாட்டை மேம்படுத்தவும் கட்டுப்படுத்தவும் செய்வதால்தான், மனம் தனக்கேயுரிய வேண்டும்- வேண்டாம், நல்லது- தீயது, சரி - தவறு போன்ற இரட்டைகளின் மோதலை உருவாக்கி விடுகிறது.
அங்கே முழு மனம் இல்லை, அது ஒன்றையொன்று எதிர்க்குமாறு உடைந்து பல பாகங்களாக உள்ளன. உடைந்துபோன பாகங்களைத் தானே இணைத்து, ஒருங்கிணைக்கும் மனத்தால் அமைதியைக் கொண்டுவர முடியாது. அந்த மனம் எண்ணத்தாலும், அறிவாலும் அனுபவத்தாலும் ஆனது. காலம், துயரங்களின் விளைபொருளாகவே மனம் இருப்பதால், அது ஒன்றுசேர்ந்த பின்னரும், சூழ்நிலைகளின் பொருளாகவே இருக்கும்.
இந்த ஒருங்கிணைப்பு விவகாரத்தை நாம் தவறாக அணுகுகிறோம். பாகம் ஒருபோதும் ஏகமாகாது. பாகம் வழியாக ஏகத்தைச் சாத்தியப்படுத்த முடியாது. ஆனால், அதை நாம் பார்ப்பதில்லை. பல பாகங்களை உள்ளடக்கும் குறிப்பிட்ட வீங்கிய பொருளையே நாம் பார்க்கிறோம். சிதறியிருக்கும் பாகங்களையெல்லாம் கொண்டு சேர்ப்பது ஒருங்கிணைப்பையோ அவற்றுக்குள் சீர்மையையோ கொண்டுவருவதில்லை. மிகுந்த அக்கறை, கவனம், சரியான கல்வியைக் கொண்டு அவற்றை இணைத்தாலும் அது நிகழ்வதேயில்லை.
அறியாததை இருப்புக்குக் கொண்டுவருவதுதான், எல்லாவற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. அறிந்தது ஒருபோதும் அறியாததை வரவேற்க இயலாது. சுயம் உருவாக்கிய ஒருமிப்பு என்னும் குட்டையில் முடிவற்று மகிழ்ச்சியாகத் திளைத்திருக்க மனம் விரும்புகிறது. அப்படியிருந்தால், அறியாததன் படைப்புத்திறனை அதனால் வெளிக்கொண்டுவரவே முடியாது. சுய மேம்பாடு என்பது அடிப்படையில் இரண்டும்கெட்டான் தன்மையிலானது. ஒழுக்கம் வழியான சுய முன்னேற்றம், திறன்கள் வழியிலான சுய மேம்பாடு, நேர்மறையான, எதிர்மறையான பாதுகாப்புணர்வால் ஏற்படும் சுய மேம்பாடு என சுயத்தோடு சேர்ந்த எந்த வேலையும் இரண்டும்கெட்டான்தான்.
இரண்டும் கெட்டான் விளைவையே பேராவல் உருவாக்கும். பேராவல் என்பது ஒரு குழுவின் வழியாகவோ ஒரு கருத்தின் அடிப்படையிலோ செயல் பூர்வமான சுயதிருப்தியை அடைவதாகும்.
அறிந்தது அனைத்துக்கும் நடுவே சுயம் அமர்ந்திருக்கிறது. நிகழின் வழியாக இறந்தகாலம் எதிர்காலத்துக்குப் போவது அது. அறிந்ததன் இடத்தில் செய்யப்படும் எந்தச் செயல்பாடும் ஆழமற்ற மனத்தை நோக்கியது. அளக்க இயலாததற்கு முன்னால் மனத்தின் மகத்துவம் மிகச் சிறியது. அறிந்ததையும் தெரிந்ததையும் ஒப்பிட முடியும். அறிந்ததன் செயல்பாடுகள் அனைத்துமே துயரத்தைத் தான் கொண்டுவரும்.
(ஜே. கிருஷ்ணமூர்த்தியின்
‘commentaries on living’ நூலிலிருந்து)
Comments