Skip to main content

ஐயா, எது ஆகவும் முயற்சிக்காதீர்கள்



ஜே. கிருஷ்ணமூர்த்தி



முழுநிலவு நதியின் மேல் அப்போதுதான் எழுந்துகொண்டிருந்தது; புழுதித் திரை நிலவைச் சிவப்பாக்கியிருந்தது. குளிருக்காக எழுப்பப்பட்ட நெருப்பு பல கிராமங்களிலிருந்து புகையாக எழும்பிக் கொண்டிருந்தது. நதியில் ஒரு சலனமும் இல்லை. ஆனால் ஆழ்ந்து வலுவாக மறைந்து அதன் ஓட்டம் இருந்தது. தகைவிலான் பறவைகள் தாழ்ந்து பறந்து கொண்டிருந்தன. அதன் சிறகின் நுனிகள் தண்ணீரைத் தீண்டியபோது, அமைதியாக இருக்கும் நீரின் மேல்பரப்பைக் கொஞ்சமே தொந்தரவு செய்யமுடிந்தது.

நதியின் மேலே, மாலை நட்சத்திரம் தூரத்திலுள்ள சந்தடி மிக்க நகரத்தின் மசூதி மேல் அப்போதுதான் துலங்கத் தொடங்கியது. கிளிகள் மனிதர்கள் வசிக்குமிடத்துக்கு அருகே வந்து சேர்ந்துகொண்டிருந்தன, அவற்றின் பறத்தலோ ஒருபோதும் நேர்கோட்டில் இல்லை. கிரீச்சிட்டபடி அவை இறங்குகின்றன. ஒரு தானியத்தை எடுத்துக் கொண்டு பக்கவாட்டாகப் பறக்கின்றன. ஆனால் அவை பசிய மரத்தைத் தேடி முன்னே பறந்துகொண்டே இருக்கின்றன. அங்கே அவை நூற்றுக்கணக்கில் கூடுகின்றன. அடைக்கலாகும் மரத்துக்குப் போய் சேருவதற்காக மீண்டும் பறக்கின்றன. இருள் வரும்போது அங்கே மௌனம் இருக்கிறது. மரங்களின் உச்சிக்கு மேல் நிலவு வந்துவிட்டது. நிச்சலனமான நீரின் மேல் வெள்ளித் தடத்தை நிலவு உருவாக்கியுள்ளது.

“கூர்ந்து செவிசாய்ப்பதன் முக்கியத்துவம் எனக்குத் தெரிகிறது. ஆனால் நான் உண்மையிலேயே கவனிக்கிறேனா என்பது சந்தேகமாக உள்ளது. ஆனால் அதற்கு மிகுந்த முயற்சியை நான் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.” என்றார் அவர்.

நீங்கள் கூர்ந்து கவனிப்பதற்கு முயற்சியைச் செய்யும்போது, நீங்கள் உண்மையில் கவனிக்கிறீர்களா? முயற்சி செய்யும் அந்தச் செயலே கவனிப்பதற்குத் தடங்கலில்லையா? உங்களுக்குச் சந்தோஷத்தைத் தரும் ஒன்றைக் கேட்கும்போது, அதற்கு ஏதாவது முயற்சி செய்வீர்களா?

நிச்சயமாக நீங்கள் செய்யும் முயற்சி கட்டாயப்படுத்துதல் தான். கட்டாயம் என்பதே எதிர்ப்புதான் இல்லையா? எதிர்ப்பு, பிரச்சினைகளை உருவாக்கும். அப்படியான நிலையில் ஒன்றுக்குச் செவிகொடுப்பதும் பிரச்சினைகளில் ஒன்றாகவே மாறுகிறது. ஆனால் ஒன்றைக் கேட்கும் செயல் ஒருபோதும் பிரச்சினைக்குரியதாக இருக்கவே முடியாது.

“ஆனால் என்னைப் பொருத்தவரை அது பிரச்சினைதான். நான் சரியாகக் கேட்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஏனெனில் நீங்கள் பேசுவது ஆழ்ந்த முக்கியத்துவம் கொண்டது. ஆனால் வார்த்தை சார்ந்த அர்த்தத்தைத் தாண்டி என்னால் போகவே முடிவதில்லை.” என்றார்.

நீங்கள் நான் பேசுவதைக் கவனிப்பதையே பிரச்சினையாக மாற்றிவிட்டீர்கள். அதுதான் உங்களை நான் பேசுவதையே கேட்க விடாமல் ஆக்குகிறது.

 நாம் தொடும் எதுவும் பிரச்சினையாகி விடுகிறது. ஒரு பிரச்சினை வேறு பல பிரச்சினைகளைப் பிரசவிக்கிறது. பிரச்சினைகள் உருவாகாமல் இருக்க சாத்தியமுள்ளதா?

“அப்படியிருந்தால் அற்புதமாகத்தான் இருக்கும். ஆனால் அந்த நிலை எப்படி வரும்?”.

‘எப்படி’ என்ற கேள்வி வரும்போதே, ஒரு குறிப்பிட்ட நிலையை அடைவதென்பது வந்துவிடுகிறது. அப்போதே இன்னொரு பிரச்சினை தொடங்குகிறது. நாம் பிரச்சினைகள் உருவாகாமல் இருக்கும் நிலையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். மனம் ஒரு பிரச்சினையை உருவாக்கும் நிலையைப் பற்றி நீங்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். நீங்கள் பரிபூரணமாகக் கேட்கும் நிலையை அடைய விரும்புகிறீர்கள். வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், நீங்கள் கேட்பதில்லை. நீங்கள் அந்த நிலையை அடைய விரும்புகிறீர்கள். அப்படியான சூழ்நிலையில் எந்தவொரு நிலையை அடைவதற்கும் காலமும் ஆர்வமும் அவசியமாகிறது. காலம், விருப்பம் ஆகியவற்றுக்கான தேவைதான் பிரச்சினைகளை உருவாக்குகிறது. ஒழுங்காகக் கேட்க முடியவில்லை என்பதை நீங்கள் உணர்ந்தே இருக்கிறீர்கள். அதை அறியும் போது, நீங்கள் கேட்காமல் இருப்பதென்பதே தனிப்பட்ட செயல்பாடாகிறது; ஒரு விஷயத்தின் அடிப்படையில் உண்மை செயல்படும்போது, நீங்கள் அந்த விஷயத்தின் அடிப்படையில் செயல்படுவதேயிலை.

நீங்களோ அந்த விஷயத்தின் மேல் வினைபுரிய, மாற்ற, அதற்கு எதிர்மறையானதை வளர்த்தெடுக்க, விரும்பத்தக்க நிலையைக் கொண்டுவர என்னவெல்லாமோ முயற்சிக்கிறீர்கள்.

ஒரு விஷயத்தின் அடிப்படையில் செயல்படுவதற்கான முயற்சி பிரச்சினைகளை உற்பத்தி செய்யும். ஆனால் ஒரு விஷயத்தின் பின்னுள்ள உண்மையைக் காண ஆரம்பிக்கும்போது அது விடுதலையைக் கொண்டுவரும் ஒன்றாகி விடுகிறது. உங்கள் மனம் முயற்சி செய்துகொண்டும் ஒப்பிட்டுப் பார்த்தபடியும், நியாயப்படுத்தியபடியோ, கண்டனம் செய்தபடியுமிருந்தாலோ உங்களால் உண்மையை அறிந்துகொள்ளவே முடியாது. தவறைத் தவறாகவும் பார்க்கவே முடியாது.

ஒன்றுக்குச் செவிகொடுப்பதும் கேட்பதும் முற்றுமுழுமையான செயலாகும்; சுத்தமாகக் கேட்பதென்பதே சுதந்திரத்தைக் கொண்டுவரக்கூடியது. ஆனால் உங்களுக்கு உண்மையிலேயே கவனித்துக் கேட்பதைப் பற்றி கவலையிருக்கிறதா? அல்லது உள்ளிருக்கும் கொந்தளிப்பை இன்னொன்றாக மாற்ற விரும்புகிறீர்களா?

உங்களது மோதல்கள், முரண்பாடுகளை நன்கு அறிந்த உணர்வுடன், குறிப்பிட்ட எண்ணப் போக்குகளுக்குள் அவை தள்ளப்படாமல் இருந்தால், உங்களால் செவிகொடுக்க முடியும், ஐயா. அப்போது உங்கள் உள்ளிருக்கும் கொந்தளிப்பும் மறைந்துவிடக்கூடும்.

இதுவாக, அதுவாக, ஒரு குறிப்பிட்ட நிலையை அடைய, ஒரு குறிப்பிட்ட அனுபவத்தைப் பெறவோ அல்லது விலக்கவோ நாம் முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம். அதனால்தான் மனம் ஏதோவொன்றுடன் தொடர்ந்து ஆக்கிரமித்தபடி உள்ளது; தன்னுடைய போராட்டங்கள், வலிகள் போடும் கூச்சல்களைச் செவிகொடுத்துக் கேட்குமளவு மனம் அமைதியாகவே இல்லை.

அதனால் ஐயா, சாதாரணமாக இருங்கள், எதுவாகவும் ஆகவோ ஒரு குறிப்பிட்ட அனுபவத்துக்கோ முயற்சிக்காதீர்கள்.

(ஜே. கிருஷ்ணமூர்த்தியின் ‘Commentaries on Living’ நூலிலிருந்து)

Comments