அரூப் கே. சாட்டர்ஜி
ஆங்கிலேயரின் முதல் தேநீர் சுவைப்பு அனுபவம் மிகவும் தாமதமானது. ஆனால், சீனர்கள் 2000 ஆண்டுகளாகத் தேநீரைச் சுவைத்துவந்திருந்தனர். ஆங்கிலேயத் தினசரிதையாளர் சாமுவேல் பெப்பிஸ், 1600 செப்டம்பர் 25 அன்று, தான் எழுதிய டைரிக்குறிப்பில் ‘ச்சா’(Tcha) என்று குறிப்பிட்டு, “மருத்துவர்கள் அங்கீகரித்ததும் பிரமாதமான சுவையுள்ளதுமான சீன பானம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
1635-லிருந்து அரைக் கிலோ தேயிலை ஆறு முதல் பத்து பவுண்டுக்கு விற்கப்பட்டுள்ளது. அன்றைய விலைவாசியுடன் ஒப்பிடும்போது இது மிகவும் உயர்ந்த தொகை. 1662-ம் ஆண்டு இரண்டாம் சார்லஸ் மன்னர், போர்த்துக்கீசிய இளவரசி கேத்தரினை மணமுடித்த போது, ஒரு பெட்டகம் அளவுக்குத் தேயிலையையும் வரதட்சிணையாகப் பெற்றார்! அத்துடன் வருடாந்திரக் குத்தகைத் தொகையாக வெறும் பத்து பவுண்டுக்கு பாம்பே தீவையும் வரதட்சிணையாகப் பெற்றார். அந்தக் குத்தகைத் தொகை, அன்றைய இங்கிலாந்தில் அரைக் கிலோ தேயிலைக்கான விலை! போர்த்துக்கீசிய அரசவையில் மாலையில் தேநீர் பருகும் வழக்கம் கேத்தரினுக்கு இருந்தது. இங்கிலாந்தில் தனது முதல் மிடறுத் தேநீரை அவர் 1662 மே மாதம் பருகினார். அதே மாதத்தில்தான் அவருக்குத் போர்ட்ஸ்மவுத்தில் திருமணம் நடைபெற்றிருந்தது.
பதினெட்டாம் நூற்றாண்டில், பிரிட்டனின் உயர்குடி மக்களுக்கு அவசியத் தேவையாகத் தேயிலை இருந்தது. அதே நேரம் தேவைப்படும் அளவு தேயிலையைக் கிழக்கிந்திய கம்பெனி விநியோகிக்க முடியாத நிலையில், அந்தத் திறனின்மையைப் பயன்படுத்தி டச்சு நிறுவனமான ஜே.ஜே வூட் அண்ட் சன்ஸ் ஆங்கிலேயர்களைச் சுரண்டியது. ஆண்டுதோறும் 36 லட்சம் கிலோ தேயிலையை பிரிட்டனுக்குக் கடத்திக் கொண்டுவந்து விற்றது. இருந்தபோதும் மோசமான, பயன்படுத்தத் தகுதியில்லாத தேயிலைப் பொருட்களைச் சுட்டும் பொதுப்பெயராக, அந்த டச்சு நிறுவனத்தின் பெயர் விரைவிலேயே மாறிவிட்டது. இந்த இடைவெளியில், பிரிட்டிஷ் இந்தியாவின் வர்த்தக வேராக மும்பை மாறியிருந்த நிலையில் போர்த்துக்கீசிய, டச்சு வியாபார நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி சீனாவுடனான தங்கள் வர்த்தக உறவுகளைக் கிழக்கிந்திய நிறுவனம் வலுப்படுத்திக்கொண்டிருந்தது. இருந்தாலும், 18-ம் நூற்றாண்டில் நடைபெற்ற ஆங்கிலேய- டச்சுப் போர்களால் வளம் குறைந்துபோனதால், தேயிலைக்கு விலையாக சீனர்கள் கேட்ட வெள்ளியை ஆங்கிலேயர்களால் போதுமான அளவு தர முடியவில்லை. கடத்தப்பட்டு கொண்டுவரப்படும் தேயிலை வியாபாரத்தைத் தடுக்கவும் மற்றொரு பக்கம் சீனர்களின் வெள்ளித் தேவையை எதிர்கொள்ளவும் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஓபியம் பயிரிடத் தொடங்கினார்கள். வங்கம், பாட்னா, வாராணசி, மால்வா பீடபூமி ஆகிய பகுதிகளில் ஓபியம் வளர்க்கப்பட்டு சீனாவுக்குக் கடத்தப்பட்டது. தாங்கள் விரும்பிய பானத்துக்கு அவர்கள் அதை பண்டமாற்று செய்துகொண்டனர்.
இந்தியத் தேயிலை பிரிட்டனைச் சேர்ந்த வர்த்தகர்கள் சீனத் தேயிலையையும் தேயிலைச் செடி வளர்ப்பு நுட்பங்களையும் இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் ஆர்வமாயிருந்தனர். சீனாவிலிருந்து தேயிலை நாற்றுகளைக் கொண்டுவரும் ஆலோசனையை ‘தி ராயல் சொசைட்டி ஆப் ஆர்ட்ஸ்’ 1788-ல் முன்னெடுத்தது. அதேநேரம் அசாமில் ராபர்ட் ப்ரூஸ், மணிராம் திவான் ஆகியோர் 1824-ல் தேயிலைச் செடியைக் கண்டறிந்தனர். தொடர்ந்து அசாம், டார்ஜிலிங் பகுதிகள் தேயிலைத் தோட்டங்களாக விரிவடைய ஆரம்பித்தன. ராயல் சொசைட்டியில் 19-ம் நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட உரையொன்றில் கல்கத்தாவில் உள்ள சீனர்களின் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தச்சர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் டார்ஜிலிங், அசாம் தேயிலைத் தோட்டங்களுக்கு அனுப்பப்பட்ட விவரம் உள்ளது. தேயிலை வளர்ப்பிலும் தேயிலைத் தூள் உற்பத்தியிலும் ஒவ்வொரு சீனரும் நிபுணர் என்ற நம்பிக்கையே, இப்படி அனுப்பப்பட்டதற்கான அடிப்படைக் காரணமாக இருந்திருக்கலாம் ஆனால், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு தேயிலை நாற்றைக்கூடத் தங்கள் வாழ்நாளில் பார்த்திருக்கவேயில்லை.
1833-ல் இயற்றப்பட்ட சார்ட்டர் சட்டத்தால் சீனாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஏகபோகம் தகர்ந்தது. வில்லியம் பென்டிங்க் தலைமையில் 1834-ல் ‘தி டீ கமிட்டி’ உருவாக்கப்பட்டது. அப்போது அவர் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்தார். 1834-ல் ஜார்டைன் மேத்சன் நிறுவனம் சார்லஸ் குட்ஸ்லாப், ஜார்ஜ் கோர்டன் ஆகிய இருவரையும் சீனாவுக்கு ஓபியம் யாத்திரை மேற்கொள்ளப் பணித்தது. அந்தப் பயணத்தில் தேயிலை விதைகள், தேயிலைத் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் ஆதாரவளங்களையும் கொண்டுவரத் திட்டமிடப்பட்டது. ஆனால், அந்தத் திட்டம் பெரிதாகப் பலிக்கவில்லை.
ஒரு தசாப்தம் கழிந்தது; ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தோட்டக்கலை வல்லுநரான ராபர்ட் பார்ச்சூன், சீனாவின் தேயிலைத் தோட்டங்களை ஆராய்வதற்காகப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அவரது பயணத்துக்கு ‘ராயல் ஹார்ட்டிகல்சுரல் சொசைட்டி’ நிதியுதவி செய்தது. ஓபியம் வர்த்தகம் தொடர்பான ‘பர்ஸ்ட் ஓபியம் வார்’ 1842-ம் ஆண்டு முடிந்த நிலையில் கையெழுத்தான `நான்கிங்' ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேயிலைத் தாவர மாதிரிகள், தாவரவியல் அறிவு இரண்டையும் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணம் இது.
பிரிட்டனுக்குத் திரும்பிய பார்ச்சூன், சீனாவின் வடக்கு மாகாணங்களில் மேற்கொண்ட மூன்றாண்டு பயணம் குறித்த தகவல்களை வெளியிட்டார். இத்தகவல்களைப் படித்து ஆச்சரியமடைந்த டாக்டர் ஜான் போர்ப்ஸ் ராயல், தனது நிறுவனத்தின் தகவலாளராக பார்ச்சூனை நியமித்தார். பிரிட்டனின் தேயிலைப் புதையல் வேட்டை பொறுப்பாளர் அவரே. இந்தப் பணிக்காக 500 பவுண்டுகளை ஆண்டுக் கட்டணமாக அவர் பெற்றுக்கொண்டார். அவரது முந்தைய வருவாயைவிட ஐந்து மடங்கு அதிகத் தொகை அது. தேயிலை தவிர்த்த வேறு ஏதாவது தாவர மாதிரிகளை அவர் கடத்திவந்தால், அதற்கான வர்த்தக உரிமைகளும் அவருக்கே தரப்பட்டன. புதிய தாவர மாதிரிகள், நாற்றுகள் மேல் ஆர்வம் கொண்ட ஆங்கிலேய உயர்குடியினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பெரும்சந்தையைப் பயன்படுத்துவதற்கான ஆயுட்கால வாய்ப்பு அது. அதேநேரம், பிரிட்டனின் தேயிலைத் தொழில் துறையையே பார்ச்சூன் மாற்றப்போகிறார் என்பதை, அப்போது யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
1848-ம் ஆண்டின் இலையுதிர் காலத்தில், மிகப் பெரிய உளவுவேலைத் திட்டத்துக்காகத் தனது பணியாளர் வாங் உடன் இணைந்து சீனாவில் பார்ச்சூன் நுழைந்தார். அதேநேரம், தனது குறிப்புகளில் வாங்கைக் கூலி என்றே அவர் குறிப்பிடுகிறார். பார்ச்சூன் தனது தலையை மொட்டையடித்துக் கொள்ளப் பணிக்கப்பட்டிருந்தார். சீனர் போன்ற தோற்றத்தைக் கொடுப்பதற்காகவே இந்த ஏற்பாடு. வுயி ஷான் மலையில் உள்ள தொழிற்சாலைக்கு இருவரும் பயணித்தனர். ஹங்ஸோ வழியாக ஷாங்காய் சென்று, அங்கிருந்து ஸேஜாங், அன்ஹுய் தேயிலைத் தோட்டங்கள் எனத் தொடர்ந்த மூன்று மாதத் தேடல் அது.
சீனாவின் மலைப்பகுதிகளில் இரண்டாயிரம் ஆண்டு காலத் தேயிலைத் தயாரிப்பு நடைமுறைகளை ஆய்வுசெய்த பின்னர், 1849-ல் ஷாங்காய்க்கு பார்ச்சூன் வந்துசேர்ந்தார். அங்கிருந்து லண்டனில் இருந்த தன் முதலாளிகளைத் தொடர்புகொண்டார். “உங்களிடம் இந்தச் செய்தியைச் சொல்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நான் பெரிதளவில் சேகரித்திருக்கும் விதைகள், இளம்நாற்றுகள் இந்தியாவுக்குப் பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்படுமென்று நம்புகிறேன்” என்பதுதான், அவரது கடித வாசகம்.
ஐரோப்பாவுக்கு அனுப்பும் பசுந்தேயிலையில் தேவையான நிறத்தை ஏற்றுவதற்காக சீனர்கள் பெரிக் பெர்ரோசயனைடு (புருஸ்ஸியன் ப்ளூ), ஜிப்சம் உப்பைச் சேர்ப்பதாகவும் பார்ச்சூன் கண்டறிந்து கூறியது, ஐரோப்பியர்களை ஈர்த்தது. “அதில் அதிசயம் ஒன்றும் இல்லை. மேற்கத்திய மக்களைச் சீனர்கள் காட்டுமிராண்டிகளாகக் கருதியதே இதற்குக் காரணம்” என்று எழுதியிருக்கிறார். இப்படியாகச் சீனர்கள் தங்களை அறியாமலேயே ஐரோப்பாவுக்கு நஞ்சூட்டிக்கொண்டிருந்தனர். கிரீன் டீயையும் பிளாக் டீயையும் தருவது ஒரே புதர் தாவரமான கமிலியா சினென்சிஸ்தான் என்பதும் பார்ச்சூன் கண்டறிந்த ஆச்சரிய உண்மை. பிளாக் டீயைக் கூடுதல் காலம் நொதிக்கவைக்க முடியும் என்பது கூடுதல் தகவல்.
பார்ச்சூன், 13 ஆயிரம் தாவர மாதிரிகளையும் 10 ஆயிரம் விதைகளையும் கண்ணாடிக் குப்பிகளில் வைத்து ஹாங்காங் வழியாக கல்கத்தாவுக்குக் கொண்டு வந்தார். இப்படிக் கொண்டுவரப்பட்ட புதிய தாவரங்களின் வாயிலாக, பிரிட்டிஷ் தோட்ட உரிமையாளர்கள் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் தேயிலையைப் பயிரிட்டுக் காலூன்ற ஆரம்பித்தனர். தங்கள் தேயிலைப் பொருட்களை கரீபிய அடிமை நாடுகளிலிருந்து வந்த சர்க்கரையுடன் சேர்த்து தேயிலை நிறுவனங்களும் விளம்பரதாரர்களும் சந்தைப்படுத்தத் தொடங்கினார்கள்.
சீனாவில் பார்ச்சூன் மேற்கொண்ட பெரும் கொள்ளைப் பயணமும் அதைத் தொடர்ந்து விக்டோரிய தேயிலை வர்த்தகத்தில் ஏற்பட்ட ஏற்றமும் சாரா ரோஸ் எழுதிய ‘ஆல் தி டீ இன் சைனா’ என்ற நூலில் விரிவான வகையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தேயிலை நாற்றுகளை குப்பிகளில் கொண்டு வந்திருந்த கையோடு, விஷத்தன்மை கொண்ட தேயிலைச் சாயங்களைத் தனது மேலங்கியில் அவர் பதுக்கிக் கொண்டு வந்திருந்தார். 1851-ல் நடைபெற்ற கிரேட் எக்ஸிபிஷன் என்ற கண்காட்சியில் இது காட்சிப்படுத்தப்பட்டது. “புனைகதைகள், ரகசியங்களின் நிழலில் இருந்து விடுபட்டு பிரிட்டனின் தேசிய பானமாகத் தேயிலை ஆன நிகழ்வு இது” என்று இதுகுறித்து சாரா ரோஸ் குறிப்பிடுகிறார்.
பார்ச்சூனின் கண்டுபிடிப்புக்கு முன்னரே, ஜார்டைன் மாதிசன் என்பவர் அசாம் தேயிலையை லண்டனில் வெற்றிகரமாக விற்க முடியுமென்பதை உறுதிப்படுத்தியிருந்தார். சீனத் தோட்டக்கலை வல்லுநர்களின் இந்திய வருகையையும் சீன ஓபியம் கடத்தலுக்கான வலுவான வலைப்பின்னல்களையும் நிர்வகித்த மாதிசனுடைய வர்த்தக மாதிரி, அதன்பிறகு இந்திய, இலங்கைத் தேயிலை நிறுவனங்கள் சீனத் தோட்டக்கலை வல்லுநர்களைப் பணியமர்த்துவதற்கு முன்மாதிரியாக அமைந்தது. 1840-கள்வரை இந்த நடைமுறை வெற்றிகரமாகத் தொடர்ந்தது. முதல்முறையாகப் பெரிய அளவில் 1838 டிசம்பர் மாதத்தில் லண்டனுக்கான கப்பலில் இந்தியத் தேயிலை ஏற்றப்பட்டது. லண்டன் இந்தியா ஹவுசில் 1839 ஜனவரி 5 முதல் ஒரு பவுண்டு எடைகொண்ட தேயிலை ஏலம் விடப்பட்டபோது 34 ஷில்லிங்குகளுக்கு விலைபோனது. இந்தியத் தேயிலைத் தோட்டத்தில் விற்கப்படும் விலையைவிட 34 மடங்கு அதிக விலையுடன் முதல் தரத் தேயிலை விற்கப்பட்டது.
1853-ம் ஆண்டு வெளியான ‘பிரேஸர்’ இதழ் தேயிலைச் செடியின் தாயகம் இந்தியாதான் என்றும், சீனா அல்லவென்றும் கூறியது. 1888-ல் இந்தியத் தேயிலை ஏற்றுமதி 3.9 கோடி கிலோவானபோது, அது சீனாவின் 3.6 கோடி கிலோவைத் தாண்டியது. தேயிலையின் வரலாறு குறித்துப் பேசும் இன்னோர் அற்புதமான நூல் ‘எ தேர்ஸ்ட் ஃபார் எம்பையர்’ (2017). இதில், தேயிலையை உற்பத்தி செய்யும் இந்தியத் தேயிலைத் தோட்டக்கலை வல்லுநர்களைப் பற்றியும் இந்தியத் தேயிலை குறித்தும் விக்டோரிய கால லண்டனின் உயர்குடியினர் மத்தியில் நயமாகவும் கவனத்துடனும் பேசப்பட்டது குறித்து எழுதப்பட்டுள்ளது. கலப்படம் செய்யப்பட்ட சீனத் தேயிலை பெட்டி பெட்டியாகப் பறிமுதல் செய்யப்பட்டு தேம்ஸ் நதியில் தூக்கி எறியப்பட்ட செய்திகளும் உண்டு.
இந்தியத் தேயிலை குறித்து லண்டனில் அந்தக் காலத்தில் வெளியிடப்பட்ட விளம்பரங்களில் ஒன்று: இந்தியத் தேயிலை தூய்மையானது. இந்தியத் தேயிலைப் பொருட்கள்தாம் அதிக நறுமணம் மிக்கவை. இந்தியத் தேயிலைதான் `ஸ்ட்ராங்'கானது. இந்தியத் தேயிலை விலை குறைந்தது. இந்தியத் தேயிலை முழுமையானது. மொத்தத்தில், சீனத் தேயிலையைவிட அனைத்து வகையிலும் சிறந்தது இந்தியத் தேயிலைதான்.
இந்தியத் தேயிலைத் தயாரிப்புகள் 1880-களில் லண்டனை அடிமைப்படுத்தியது மட்டுமின்றி அயர்லாந்து, ஸ்காட்லாந்து என விரிவடைந்து ஐரோப்பாவைத் தாண்டி, அமெரிக்காவரை பரவின. ஆக்ஸ்போர்டு தெருவில் ‘தி இந்தியன் டீ ஸ்டோர்’ 1883-ல் அமைக்கப்பட்டதையடுத்து, அதன் நகல்களும் நகரெங்கும் விரைவாக முளைத்தன. டேராடூன், சிம்லா, ரங்கூன் ஆகிய பகுதிக் காடுகளில் பெறப்பட்ட தாவரங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட இந்திய, இலங்கைத் தேயிலைப் பொருட்கள் வசீகரமான டப்பாக்களில் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இந்தியாவில் வளர்ந்த தேயிலை வர்த்தகம், 1878-ல் திறக்கப்பட்ட டார்ஜிலிங் இமாலய ரயில்வேயுடன் உயிரோட்டமான தொடர்பைக் கொண்டிருக்கிறது. இந்தியத் தேயிலையை உலக அளவில் பிரபலப்படுத்துவதற்காக 1881-ல் தொடங்கப்பட்ட இந்தியத் தேயிலைக் கழகத்தின் முதல் பெரிய பரிசோதனை, இந்திய ரயில்வே மூலமாகத்தான் தொடங்கியது. இந்தியாவில் 1901-க்குள் தேயிலைக்கு மிகப் பெரிய சந்தை உருவாகிவிட்டிருந்தது. தேயிலை ஏற்றுமதிக்கான தீர்வை வரியை முறைப்படுத்த 1903-ல் ‘டீ தீர்வை மசோதா’வுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
முதல் உலகப் போருக்குப் பின்னர் ஸ்டவ், கெட்டில்கள் மூலம் வங்கம், பஞ்சாப் எல்லைப்புற மாகாணங்களில் உள்ள ரயில் நிலையங்களில் இந்தியா, யுரேசியாவைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர்கள் தேநீரை விற்கத் தொடங்கினார்கள். அப்போது, “ரயில்களில் உள்ள முதல் வகுப்பு உணவகப் பெட்டிகளில் கிடைப்பதைவிட நடைமேடைத் தேநீர் கடைகளில் விற்கப்படும் பானம் சிறப்பானது” என்று இந்தியத் தேயிலைக் கழகம் பெருமைப்பட்டது. தேயிலைப் பொருட்களைக் கொண்டு விதவிதமான தேநீரை உருவாக்கும் செய்முறைகளோடு கூடிய விளம்பரத் தட்டிகளும் சுவரொட்டிகளும் அனைத்து இந்திய மொழிகளிலும் ரயில்வே நடைமேடைகளில் அமைக்கப்பட்டிருந்தன. வங்காளத்தில் பால்லிகங்கே, டம்டம், நைஹாட்டி, பங்காவோன், சாந்திபூர், ரானாகட் ஆகிய ரயில் நிலையங்களில் இன்னமும்கூட அந்தப் பழைய விளம்பரங்களின் எச்சங்களைக் காணமுடியும்.
சீனாவிலிருந்து பிரிட்டிஷ் பேரரசுக்கு பார்ச்சூன் கொள்ளையடித்து அளித்த பரிசு, உள்ளூர் தேநீர் விற்பனையாளர்கள் மூலமாக அதிக அளவில் பாலும் சர்க்கரையும் கலக்கப்பட்ட புதிய பானமாக தேநீரை விற்க ஆரம்பித்தனர். 1930-களில் ஆங்கிலேயர்களின் தேயிலை உற்பத்தி மையமாகவும், அதேநேரம் தேநீர் விற்பனைச் சந்தையாகவும் இந்தியா மாறியிருந்தது. 21-ம் நூற்றாண்டைத் தொடுவதற்குள் இந்தியாவில் பயிராகும் மொத்தத் தேயிலையில் 70 சதவீதம் உள்நாட்டிலேயே நுகரப்படும் நிலை உருவாகிவிட்டது. ஒருகட்டத்தில் சிறுநகர ரயில் நிலையங்களிலிருந்து முதல் வகுப்புப் பெட்டிகள்வரை மண்குவளைகள், கண்ணாடிக் குவளைகள், தேநீர்விற்பனையாளர்கள் எனத் தேநீரும் அதன் துணைக் கதாபாத்திரங்களும் ரயில் பயணத்தின் இன்றியமையாத அடையாளங்களில் ஒன்றாக மாறிவிட்டன.
“வட இந்தியாவில் ரயில் பயணம் செய்யும்போது ஒரு பயணி காலையில் விழித்தவுடன் முதலில் கேட்கும் குரல் ஒரு தேநீர்விற்பனையாளருடையதே. ஒரு கையில் உலோகக் கெட்டில் தொங்க, இன்னொரு கையில் கண்ணாடிக் குவளைகளோடு `சாய், சாய், சாய்' என்ற குரல் ஒவ்வொரு பெட்டியாக ஏறி இறங்குவதைக் கேட்க முடியும்” என்று வரலாற்றாசிரியர் லிஸ்ஸி காலிங்ஹாம் எழுதுகிறார்.
`சாய், சாய்' என்று சத்தமாகக் கூவியபடியே ரயிலின் ஜன்னல் இருக்கை வழியாக விற்கப்படும் ஒரு குவளைத் தேநீரை வாங்க நேரிடும்போது, ஏதோ ஆதி காலத்திலிருந்தே தேநீர் குடிப்பவர்கள் என்ற நம்பிக்கைக்குள் தள்ளப்பட்டு விடுகிறோம். அந்தத் தேநீர்நமக்குத் தரும் திருப்திக்கு அசாம், டார்ஜிலிங் சமவெளிகளில் ஒரே நேரத்தில் நிகழ்த்தப்பட்ட கண்டுபிடிப்புகளுக்கும், 170 ஆண்டுகளுக்கு முன்னர் சீனர்களைப் போல மொட்டை அடித்துக்கொண்ட பார்ச்சூன் சீனாவின் உயரமான மலைப்பகுதிகளில் ரகசியமாக ஏறியதற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.
(இந்தக் கட்டுரையை எழுதியவர் ஓ.பி. ஜிண்டால் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் கற்பிப்பவர். The Purveyors of Destiny: A Cultural Biography of the Indian Railways நூலின் ஆசிரியர்.)
Comments