Skip to main content

பயம் பயம் பயம்




நிலவு ஒளிரும் ஒரு இரவில் யாருமற்ற சாலையில் முல்லா நடந்து சென்றுகொண்டிருந்த போது, அவர் குறட்டையொலியைக் காலடிக்கு மிக அருகில் கேட்டார். உடனடியாக அவரை பயம் பீடிக்க, ஓடத் தொடங்கினார். தரையில் குழிதோண்டி தவத்தில் இருந்த ஒரு துறவியின் மீது கால்பட்டு தடுக்கிவிழுந்தார்.

‘நீங்கள் யார்?’ என்று முல்லா நாக்கு குளரக் கேட்டார்.

‘நான் ஒரு துறவி, இதுதான் என்னுடைய தவம் செய்யும் இடம்.’

அப்படியா, உங்கள் குறட்டையைக் கண்டுதான் அலறிப் போனேன். உங்கள் இடத்தை எனக்கும் பகிருங்கள். என்னால் இனிமேலும் பயணத்தைத் தொடரமுடியாது. பயமாக இருக்கிறது.’ என்றார் முல்லா.

துறவி, முல்லாவிடம் தனது போர்வையின் மறுபகுதியைக் கொடுத்து அதைப் போர்த்தி உறங்குமாறு சொன்னார்.

நஸ்ரூதீன் உறங்கிப் போனார். அவருக்கு விழிப்பு வந்தபோது, மிகுந்த தாகமாய் இருந்தது. துறவியிடம் தனது தாகத்தைத் தெரியப்படுத்தினார்.

‘இதே சாலையில் வந்த வழியிலேயே நடந்து செல். அங்கே ஒரு ஓடை வரும்.’

‘என்னால் முடியவே முடியாது. எனக்கு பயம் போகவேயில்லை.’ என்றார் முல்லா.

முல்லாவுக்குப் பதிலாகத் தானே தண்ணீரை எடுத்துவந்து உதவுவதாக துறவி எழுந்து போனார்.
‘அய்யய்யோ, போகாதீர்கள். எனக்கே என்னைப் பார்த்து இப்போது பயம்.’ என்று தடுத்தார் முல்லா.

முல்லாவின் பயத்தைப் பார்த்த துறவி, தன்னிடமிருந்த கத்தியை முல்லாவிடம் அளித்தார்.

முல்லாவுக்கு அச்சம் மேலும் பெருகிவர, யாராவது எதிரி வந்துவிட்டால், அவரை எப்படி எதிர்கொள்வதென்று கற்பனை செய்து பார்த்தார். தனது கத்தியைச் சுழற்றுவதற்கான பயிற்சியில் இறங்கிவிட்டார்.

அப்போது தண்ணீரை எடுத்துவந்தார் துறவி.

‘கிட்ட வராதே, நான் உன்னைக் கொன்றுவிடுவேன்.’ என்று துறவியை மிரட்டினார் முல்லா.

‘நான் உனக்காகத் தண்ணீர் கொண்டுவரப் போன துறவி’

‘நீ யார் என்பது பற்றி எனக்கென்ன அக்கறை- நீ வேடம் போட்டுவந்த எதிரியாகக் கூட இருக்கலாம். அத்துடன் எனக்கு இடம் கொடுத்த துறவியைப் போன்றே தலையையும் இமைகளையும் மழித்து வேறு வந்திருக்கிறாய்’ என்றார் முல்லா.

‘நான் உனக்காக தண்ணீர் கொண்டு வந்திருக்கிறேன். உனக்குத் தாகமெடுத்தது ஞாபகத்தில் இல்லையா?’

‘நல்ல வார்த்தை சொல்லி மயக்கலாமென்று நினைக்கும் உன் பாச்சா பலிக்காது.’ என்றார் முல்லா.

‘எனது இடத்தில் தான் நீ இப்போது இருக்கிறாய்.’ என்றும் துறவி சொல்லிப் பார்த்தார்.

‘அது உன்னுடைய துரதிர்ஷ்டம். வேறு இடம் பார்த்துக் கொண்டு போ.’ என்று சளைக்காமல் பதிலளித்தார் முல்லா.
‘வேறென்ன செய்வது. ஒன்றுமட்டும் எனக்குப் புரியவில்லை. இதையெல்லாம் செய்யத் தூண்டுவது எதுவென்று தான் எனக்குத் தெரியவில்லை.’

‘ஒரே ஒரு விஷயம் மட்டும் உனக்குச் சொல்கிறேன். பயம் என்பது பல திசைகளில் செல்லக்கூடியது.’ என்று பக்குவமாகச் சொன்னார் முல்லா.

‘தாகத்தை விட, மன ஆரோக்கியத்தை விட, பிறரின் உடைமைகளைவிட பயம் என்பது வலிமையானது.’ என்றார் துறவி.

நீங்கள் துயர்படுவதற்கு அது உங்களிடம் இருக்கவேண்டுமென்ற அவசியம் கூட இல்லை.’ என்று அழுத்தமாகச் சொன்னார் முல்லா.

Comments