Skip to main content

முதல் இந்துக் கடவுளாக ராமன் - சீனிவாச ராமாநுஜம் (மறுபிரசுரம்)




இந்தியாவின் முதல் இந்துக் கோயில் உதயமாகப்போகிறது. ராமர்தான் மூலவர். கோயில் என்று நாம் எதை அர்த்தப்படுத்தினாலும், இந்த இந்துக் கோயில் தெய்விகத்தை அடையாளப்படுத்தவில்லை; அடையாளப்படுத்தவும் முடியாது.இந்தக் கடவுளான ராமன், நவீன தேசியஅரசுமூலதனத்தின் அவதாரம். மிக நெடுங்காலமாக உருவாக்கத்திலிருந்த கடவுள் இவன். இந்தியா என்று நாம் இப்போது அழைக்கும் நிலத்தில் குறுக்கும் நெடுக்குமாகப் பல நூற்றாண்டுகளாக அலைந்த ராமனிலிருந்து வேறுபட்டவன் இந்த ராமன். அவனைப் பற்றி ஏற்கெனவே இருக்கும் கதைகளுடன் புதிய சேர்க்கையாகச் சேர்பவன் அல்ல இந்தப் புதிய ராமன். இவன் ஒரு புதிய கதையை உருவகிப்பவன். 

இந்து என்று தயாராகிவருகிற ஒரு சமயத்தின் கடவுள் இவன். இவனுக்கு இறந்தகாலமோ எதிர்காலமோ இல்லை. இவனுக்கு நிகழ் மட்டுமே உண்டு. சீதா அல்லது லக்ஷ்மணன் அல்லது அனுமனை இவனது இப்பக்கத்தில் துணைகளாக்க முடியுமா என்று சந்தேகம்கொள்கிறேன். இவன் தசரத மன்னனின் மகனும் அல்ல. இவன் ராமன்; இறந்த காலமோ எதிர்காலமோ இல்லாத தனி ராமன். விஷ்ணுவின் பதினொன்றாவது அவதாரம் இவன். இன்னமும் அவதரிக்காத பத்தாவது அவதாரமாகவும் இருக்கலாம். அத்துடன் இந்தப் புதிய அவதாரம் ராமன்-2 ஆகிறது. உபரி ஏதுமற்று நீண்டகாலமாக ராமன்-1 இருந்துகொண்டிருக்கிறது. இல்லை, நான் சொல்வது தவறு. நம்மிடையே ஒரு ஆன்மா உலவிக்கொண்டிருந்தது. அவர் பெயர் காந்தி. ராமன்-1ல் உபரி உண்டு என்றும், தேசத்தையும் அதன் மக்களையும் வரையறுப்பதற்கு அதைப் பயன்படுத்தலாம் என்றும் அவர் நம்பினார். அந்த ராமனுக்கு இறந்தகாலமும் எதிர்காலமும் உண்டு. அவன் பரிவு கொண்டவன். அவன் மனிதன். அவன் தேவனோ கடவுளோ அல்ல. அந்த ராமன் வைஷ்ணவன். இந்த ராமன் ஒரு இந்து. ராமன்-2 இந்து பரிவாரத்தையும் நவீன அரசையும் சார்ந்திருக்கத்தான் வேண்டும். காந்தியின் ராமனோ அரசைச் சார்ந்தவன் அல்ல. அவன் மக்களைச் சார்ந்திருப்பவன். அவன் மக்கள் வழியே அர்த்தம்கொள்பவன்.

புதிய ராமன் அரசுக்காக, அரசால், அரசின் வழியாகத் தன் அர்த்தம் பெறுபவன். இவன் மக்களிடமிருந்து கடவுளாக மிகத் தொலைவில் இருப்பவன். புதிய சமயத்தின் பெயரான ஹிந்துவையும், அதன் புதிய கடவுளான ராமா-2வையும் இந்து பரிவாரமும் அரசும்தான் பராமரிக்க வேண்டும். மக்களால் அவனைப் பரிபாலிக்க முடியாது. அவனால் மக்களின் மனங்களையும் இதயங்களையும் நிரப்பவே முடியாது. மக்கள் இன்னமும் இறந்தகாலமும் எதிர்காலமும் கொண்ட ராமனை வணங்குகின்றனர். புதிய ராமனால் பழைய ராமனின் இறந்த காலத்தையும் உன்னதத்தையும் கையகப்படுத்த முடியாது. காந்தி படுகொலை செய்யப்பட்டதுபோல பழைய ராமன் மீண்டும் திரும்ப முடியாதவாறு அழிக்கப்படுவான். புதிய ராமனால் பவுத்த ராமனாக, சமண ராமனாக, முஸ்லிம் ராமனாக, கம்பனின் ராமனாக, வால்மிகியின் துளசிதாசனின் ராமனாக ஆக முடியாது. இந்தோனேசியாவில், தாய்லாந்தில் இன்னும் பிற நாடுகளில் காணப்படும் ராமனாகப் புதிய ராமனால் ஆகவே முடியாது. இந்துக்களின் இந்திய ராமனாகவே இவன் ஆக முடியும். இந்த ராமனுக்கு வகைமையோ பன்மையோ கிடையாது. இவனுக்குப் பல வடிவங்களும் கிடையாது. இவனுக்குப் பல இறந்த காலங்கள் கிடையாது. இவனுக்குப் பல எதிர்காலங்களும் இருக்க முடியாது. இவன் இறக்க மாட்டான். இவன் திருமணம் செய்துகொள்ளாமல் போகலாம்; குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல் போகலாம். இவன் ஒரு கருத்துருவம், இந்து ராஷ்டிரத்தின் கருத்துருவம் இவன். இந்திய அரசு, இந்து தேசியத்தின் கருத்துருவமாக இருப்பான். இவனுக்கு எந்த அறமும் இருக்காது. பழைய ராமனோ அறத்தில் வழுவியவன். ஏனெனில், அவன் பிழைகளைச் செய்யும் மனிதன். புதிய ராமனோ தோற்க முடியாது. ஏனெனில், அவனுக்கென்று எந்த அறமும் கிடையாது. நவீன இந்திய அரசு, இந்து தேசியவாதம், இந்து பரிவாரத்தின் நார்சிசம் ஆகியவற்றின் தேவைகளே அவனது தேவைகளும். இவனால் மக்களுக்கு வழிகாட்ட முடியாது. இவனால் அறத்தின்வழி செயல்பட முடியாது. மனிதர்கள் செய்யும் தவறுகளை இவன் செய்ய முடியாது. இவன் அரசு, இவன் தேசம். அதுதான் ஹிந்துக்கள் என்னும் சமயம்.


இந்த ராமன் என்னுடைய ராமன் அல்ல. இந்த ராமன் காந்தியின் ராமனாக இருக்க முடியாது. இந்த ராமனால் பவுத்தர்கள், சமணர்கள், இஸ்லாமியர்களின் ராமனாக இருக்கவே முடியாது.

அதேசமயம், நம்மிடையே நமது ராமனை நாம் வைத்துக்கொள்ள முடியும். தன்னை வித்தியாசப்படுத்துவதை மட்டுமே அவன் விரும்புகிறான். வித்தியாசப்படுத்திக்கொள்வோம் என்று நம்புவோமாக.


வைஷ்ணவ ஜனதோ- நரசிங்க மேத்தா


வைணவன், மற்றவர்களின் வலியை அறிபவன்
தன் மனத்துக்குள் பெருமிதத்தை நுழையவிடாமல்
மற்றவர்களுக்கு நன்மைகளைச் செய்பவன்
வைணவன், முழு உலகத்தையும் மரியாதை செய்பவன்
மற்றவர்கள் குறித்து தீங்காகப் பேசாதவன்
தனது உறுதிமொழிகளையும் செயல்களையும் சிந்தனைகளையும்
தூய்மையாகப் பராமரிப்பவன்
அப்படிப்பட்ட ஆத்மாவைப் பெற்ற தாய் ஆசிர்வாதத்துக்குரியவள்

வைணவன், எல்லாரையும் சமமாகப் பார்ப்பவன் எதற்கும் ஏங்காதவன்
பேராசைப் படாதவன்
தன் தாயை மரியாதை செய்வதுபோல
ஒவ்வொரு பெண்ணையும் நடத்துபவன்
அவனது நாக்கு களைப்புற்றாலும் பொய்யே சொல்லாதவன்
மற்றவர் சொத்தைத் தீண்டாதவன்.
வைணவன், உலக பந்தங்களுக்கு ஆட்படாதவன்
காமம் குரோதங்களைத் துறந்தவன்

கவிஞன் நர்சி சொல்கிறான்: அப்படி ஒரு ஆன்மாவைச் சந்திக்க இயன்றால் நான் நன்றிக்குரியவன். அவனது நல்லொழுக்கம் ஒட்டுமொத்த பரம்பரையையும் விடுதலை செய்யும்.

தமிழில் : ஷங்கர்

Comments