Skip to main content

பெரியாரைப் பற்றி ஏன் எழுதினேன்? சுகுணா திவாகருக்கு சில குறிப்புகள்


                                    பெரியாரைப் பற்றி எழுதப்பட்ட நவீன கவிதையைப் படித்திருக்கிறாயா சங்கர்? படைப்பைப் படிப்பதற்கு  https://www.shankarwritings.com/2020/12/blog-post_5.html

 அதிகமாகப் பொதுவாசகர்களை ஈர்க்காத எனது இணையப்பக்கத்தில் ‘பெரியாரைப் பற்றி எழுதப்பட்ட நவீன கவிதையைப் படித்திருக்கிறாயா சங்கர்?’ என்ற எனது வசன கவிதை தொடர்பில் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தகுந்த வாசிப்பும், எதிர்வினைகளும் கிடைத்த அனுபவம் அலாதியானது.

கவிஞர் யவனிகா ஸ்ரீராம், நண்பர் மணிமாறன் வழியாகப் பெயர் அறிமுகமாகி, சென்னைக்கு வந்து விகடனில் சேர்ந்தபிறகு நேரடியாக அறிமுகமான சுகுணா திவாகர், கொஞ்சம் தொலைவிலிருந்தபடியே பிரியத்துக்குரிய நண்பராகத் தொடர்பவர். எனது பெரியார் குறித்த படைப்பு குறித்து அவர் உடன்வினையாக 50-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதி, பெரியார் இறந்து 50 ஆண்டுகளைக் கடக்கும் தருணத்தில் வெளியிட்டுள்ளார். பெரியார் பற்றிய எனது படைப்பு எழுதப்பட்ட போதே, அதை ஒரு விவாதத்துக்கான மையமாகவே நேர்மறையாக அணுகி தனது விமர்சனக் குறிப்புகளையும் முகநூலில் அவர் வைத்தபோதும் அவரிடம் அலைபேசியில் அதுகுறித்து உரையாடினேன். பெரும்பாலான விமர்சனங்களின் தொனி, பெரியாரைப் பற்றி நீ யார் எழுத? என்ற அடிப்படையிலேயே இருந்ததால் குறிப்பிட்ட விளக்கங்கள் எதையும் அதுகுறித்துக் கொடுப்பதைத் தவிர்த்தேன். பெரியார் மீதான மரியாதையை வெளிப்படுத்துவதுதான் அந்தப் படைப்பு என்று வெளிப்படையாகச் சொல்வதை அவமதிப்பாக கருதியதால் அதைச் சொல்லவில்லை. தமிழின் பிரத்யேகமான துரதிர்ஷ்டம் அது. எல்லாவற்றையும் விளக்கிக்கொண்டே இங்கே இருக்கவேண்டும்.

சுகுணா திவாகர், தனது பெரியார் குறித்த 50க்கும் மேற்பட்ட கவிதைகளின் முன்னுரையில் எனது பெரியார் படைப்பு குறித்த மூன்று விமர்சனங்களை வைத்திருக்கிறார். அதை எதிர்கொண்டு உரிய பதில்களையளிக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

ஆதிமூலம் பெரியாரை வரையவில்லை என்று நினைவுகூர்ந்த எனக்கு தனபாலின் பெரியார் சிற்பம் ஞாபகம் வரவில்லை என்று கூறியிருக்கிறார். ஆமாம்! அது உண்மையே. மருதுவின் ஓவியங்களையும் நான் நினைவில் கொள்ளவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார். இப்போது நான் வீர. சந்தானம் ஓவியங்களையும் சேர்த்திருக்க வேண்டுமென்று நினைவுகூர்கிறேன்.‘பெரியாரைப் பற்றி எழுதப்பட்ட நவீன கவிதையைப் படித்திருக்கிறாயா சங்கர்?’ படைப்பு தனது தர்க்கங்களைத் தொகுக்கும் காரணங்களுக்காக என் மனம் ஒரு மறதிக்குள் போயிருக்கலாமென்றும் ஊகிக்கிறேன். அது விடுபடல்தான் சுகுணா!

நான் பெரியாரை இன்னும் ஒழுங்காகப் படிக்கவேண்டுமென்று சொல்லியிருக்கிறார் சுகுணா. அதையும் நான் ஏற்கிறேன்.

நவீன கவிதையில் மார்க்ஸ், பிராய்ட், நீட்சே ஆகியோர் கூட தீவிரமற்று கவிதைக்கான கச்சாப்பொருளாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று சுகுணா சொல்கிறார். அப்படிப் பொதுவாகச் சொல்லிவிட இயலுமா என்று தெரியவில்லை. ஆனால், ‘ஒரு மனித உயிரின் ஞாபகம்’ என்று கார்ல் மார்க்ஸ் பற்றிய யவனிகா ஸ்ரீராமின் கவிதையில் கார்ல் மார்க்ஸ் அவரது உள்ளடக்கத்துடன் கவித்துவமாகவே வெளிப்பட்டிருக்கிறார் என்று கருதுகிறேன்.

பெரியாரிடம் புழங்கிய எளிமையும் பகிரங்கமும் பெரியாரிடம் நமக்கு இருக்கும் எல்லாவிதமான அண்மைகளும் கூட அவரை பார்க்கவிடாமல் செய்திருக்கலாம் என்று கருதுகிறேன்.

மொழி, அறிவு, பண்பாடு, அதிகாரம், பாலுறவு சார்ந்த எல்லாப் புனிதங்களையும் கிழித்துப் பகிரங்கப்படுத்திய பெரியாரை எப்படி கவிதையில், கலையில் ரகசியப்படுத்துவது? என்ற கேள்வியிலிருந்தே அவர் நவீன கவிதையில் இல்லை, கலையில் இல்லை, ஓவியத்தில் இல்லை, இல்லை, இல்லை என்று ரகசியப்படுத்த முயன்ற படைப்பே எனது. ஜே. கிருஷ்ணமூர்த்தி, வரலாறு, ஞாபகம், பண்பாடு, சடங்குகள் எல்லாவற்றையும் நிராகரித்தாலும் கடைசியில் இயற்கை, அழகில் வந்து நின்றவர். அவருடனான பெரியாரின் சந்திப்பும் பதிவுபெறாதது ஏன்? என்ற எனது கேள்விக்கு ஆதாரமானதும் அதுவே.

கடவுள் ஒருகட்டத்தில் தேவையற்றவராக எனக்கு ஆகிவிட்டாலும் அதன் அருகிலேயே இருக்கும் பாத்திரமான அழகை என்னால் இன்னமும் கைவிட முடியவில்லை. அந்தப் பின்னணியிலிருந்து தான், பாகுபாட்டை விளைவிக்கும் அழகுக்கு எதிராக நின்ற பெரியாரை, எல்லாவிதமான உருவங்களை வழிபடுவதற்கும் எதிரான ஒரு கருத்துருவத்தை, என் கவிதைக்குள் ஸ்திரப்படுத்த முயன்ற விசாரணை தான் அந்தக் கவிதை.

உருவத்திலிருந்து தப்பித் தப்பிப் போய் அவர் உருவங்களாகவே நம்மிடம் எப்படிப் பல்கிப் பெருகுகிறார் என்பதைத் துலக்க முயன்ற அழகியல் மோதல் அந்தக் கவிதை. எனது கவிதையில் நான் கேட்ட கேள்விகளை சுகுணா திவாகர் தனது கவிதைகளிலும் சந்தித்திருப்பது எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. குறிப்பாக சுகுணா திவாகர் இதே புத்தகத்தின் முன்னுரையில் பெரியாரை கருந்துளை என்று நான் கூறியிருப்பதை மறுத்திருக்கிறார். ஆனால், படைப்பும் சூனியமும் சந்திக்கும் ஒருமுனை என்பதை தனது ‘கரும்பூதம்’ கவிதையிலேயே நெருங்கியிருக்கிறார். எனக்கு இது ஆச்சரியமான ஒரு விளைவாகத் தெரிந்தது.

பட்டவர்த்தனமாக எல்லா ரகசியங்களையும் புனிதங்களையும் கலைத்து, தோன்றியதைப் பேசித் திரிந்த அந்த உருவத்தை, மர்மப்படுத்துவதற்கு எனது வாசிப்புக்குட்பட்ட வகையில் தெரிந்த பெரியாரை வைத்து அந்தக் கவிதையில் நான் முயன்றேன். பழ. அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் நூல் அந்தக் கவிதைக்கு உந்துதலாக இருந்தது.  பெரியார் மிகுந்த பிரியத்துடனேயே என் கவிதையில் என் கைபிடித்து என்னுடன் அமர்ந்திருக்கிறார்.

வைக்கம் முகம்மது பஷீர் ஒரு பெருங்கூட்டத்தில் காந்தியைத் தொட்டுவிட்டுக் கூட்டத்தால் தள்ளப்பட்டு விலகியதைப் போல, பெரியாரில் கொஞ்சத்தைப் பிடித்து என் படைப்பில் வைத்திருக்கிறேன்.  

பெரியார் ஏன் நவீன கவிதையில் இடம்பெறவில்லை? அந்த விடுபடல் ஏன் நேர்ந்தது? என்பதை விசாரிப்பதற்கு வசன கவிதையாகவே எழுதிப் பார்த்த முயற்சிதான் அந்தப் படைப்பு.

சுகுணா திவாகர் பெரியார் பற்றிய எழுதிய கவிதையிலேயே உரைப்பதுபோல, அவருக்கு கடந்த காலம் என்பது இல்லவே இல்லை. எதிர்காலத்தை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தவர் அவர். மொழி சார்ந்தும் அதன் வடிவம் சார்ந்தும் புழங்குபவன் என்ற வகையில் அவர் உடைத்துக் கொண்டேயிருக்கும் சிலைகளையும் அதிலிருக்கும் அவரது தீவிரத்தன்மையையும் ரசிக்கும் இடைவெளியிலிருந்து உரைக்கப்பட்டதை ‘கரும்பூதம்’ கவிதையின் வழியாக சுகுணா கொஞ்சம்போல என்னை அனுசரித்திருக்கிறார் என்றே கருதுகிறேன்.

பெரியாரின் ஆளுமை, வாழ்க்கை, சிந்தனை முறையிலிருந்து நவீன கவிதை இன்று ஆகிவந்திருக்கும் வடிவத்தில் சுகுணா திவாகர் எழுதியிருக்கும் கவிதைகளில் ‘அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்’, ‘கரும்பூதம்’, ‘நகர்வு’, ‘அறம்’,’விடுதலை’, ‘துறவி’, ‘இருகோப்பை தேனீர்’ ஆகிய கவிதைகள் எனக்கு அனுபவத்தை அளித்தவை.

உதயநிதி குறித்து எழுதப்பட்ட கவிதையான ‘நெருப்பு விளையாட்டு’ போன்றவை செய்யப்படும் தன்மையின் விபத்துகளாகவும் உள்ளன.

விமர்சிக்கும் படைப்பை, விமர்சிக்கும் படைப்பாளியை சிறுமைப்படுத்தாமல் எளிமைப்படுத்தாமல் எதிர்கொண்டு அதன் விளைவாக பெரியார் தொடர்பில் 50க்கும் மேல் கவிதைகளையும் தந்திருக்கும் சுகுணா திவாகரின் இந்தக் கவிதைகள் நூல் படித்து விவாதிக்கப்பட வேண்டும். சுகுணா திவாகருக்கு எனது அன்பும் வணக்கமும் நன்றியும்.  

சுகுணா, நானும் அங்கிருந்து இங்கே வருவதற்கு முயன்றுகொண்டிருப்பன்தான். ☺

அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்,

சுகுணா திவாகர்

கருப்புப் பிரதிகள் வெளியீடு


Comments