Skip to main content

லவ் இன் தி டைம் ஆஃப் காலரா


காதலின் அளவற்ற ஆற்றலையும் அதன் வசீகர ஈர்ப்பையும் சொல்லும் மகத்தான நவீன செவ்வியல் படைப்பு, காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸின் ‘லவ் இன் தி டைம் ஆஃப் காலரா’. அவர் ஒரு பியானோ இசைஞனாக அளவற்ற காதலை நறுமண இசையாகப் பரப்பிய பிரத்யேகப் படைப்புதான் இந்நாவல்.

கவித்துவத்தின் இசைமையும் எந்தக் கலாச்சாரத்தவரும் உணரும் அன்றாடத் தருணங்களின் மீதான கூர்மையான அவதானிப்பும் கொண்டது. காதல் என்ற உணர்வுநிலை தரும் நோய்த்தன்மை, ஆறாத ரண உணர்வு ஆகியவற்றோடு அதன் வீண்தன்மையையும் ஆழமாகப் பேசுவது. காதலில் இருக்கும், காதல்கொள்ளப்போகும் ஆண், பெண் இருவரும் சேர்ந்து படிக்க வேண்டியது.

இந்த நாவலின் தொடக்கமே இப்படி இருக்கிறது. ‘அது தவிர்க்க முடியாதது: கசந்த வாதுமைகளின் வீச்சம் எப்போதும் நிறைவேறாத காதலுக்கு நேரும் விதியைத்தான் அவனுக்கு ஞாபகப்படுத்தும்.’ பிராயத்தில் பித்துப் பிடித்ததைப் போலத் தொடங்குகிறது நாயகன் ப்ளோரென்டினா அரிஸாவின் காதல். நாயகி பெர்மினா டாசா அவளது தந்தையால் வேறு ஊருக்கு அழைத்துச்செல்லப்பட்ட பிறகும், கவித்துவமான கடிதங்களால் பற்றியெரிகிறது. ஒருகட்டத்தில் பிள்ளைப் பருவக் கனவுதான் தனது காதல் என்ற முடிவுக்கு நாயகி வருகிறாள். நாட்டைக் காலராவிடமிருந்து காப்பாற்றிய தேசிய நாயகனான மருத்துவரைத் திருமணம் செய்வதுடன் அந்தக் காதல் தற்காலிகமான முடிவுக்கு வருகிறது.

ஆனால், ப்ளோரென்டினா அரிஸா, துக்கங்களுக்கு அணிந்துசெல்லும் கருப்பு உடையோடு அவளுக்காகக் காத்திருக்கிறான். சமீபத்தில், தமிழில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘96’ படத்தைப் போல அவனொன்றும் பிரம்மச்சாரியில்லை. அவன் வாழ்வில் நிறைய பெண்கள் வந்துபோகின்றனர். ஆனால், அந்தப் பெண்களில் யாரும் பெர்மினா டாசாவின் இடத்தை நிரப்பவேயில்லை. அவளுடனான உறவைத்தான் இதயபூர்வமான திருமணம் என்று நம்புகிறான். 70-களைக் கடந்து பெர்மினா டாசாவின் கரம் பற்றும்போது, தான் இன்னும் கன்னித்தன்மை உடையவன்தான் என்று சொல்கிறான் அரிஸா. அது பாதியளவில் உண்மையும்கூட. காதல் கதைகளிலேயே அவனது காத்திருப்புதான் மிக நீண்டதாக இருக்கக் கூடும். 51 ஆண்டுகள், ஒன்பது மாதங்கள், நான்கு நாட்கள் அவன் காத்திருக்கிறான்.

நீண்டகாலமாக நிலைத்திருக்கும் பெரும்பாலான திருமணங்களைப் போலவே பெர்மினா டாசாவின் திருமண வாழ்க்கையும் சந்தோஷ தருணங்கள் அரிதானதாகவும் நிலைத்த தன்மைக்கான உத்தரவாதம் கொண்டதாகவும் இருக்கிறது. பெர்மினா டாசாவின் கணவர் மருத்துவர் ஜூவனல் உர்பினோவுக்கு நடக்கும் அபத்தமான விபத்து, மரணத்துடன் நாவல் தொடங்குகிறது. சினிமாவின் கட் தொழில்நுட்பத்தைக் கதைசொல்லலில் வெற்றிகரமாகக் கையாண்ட நாவல் என்று இதைச் சொல்ல முடியும்.

உர்பினோவின் மரணத்தில் தொடங்கி அவர்களுக்கு இடையிலான நீண்ட திருமண வாழ்க்கையை அதன் ஆரம்பக் கவர்ச்சி, உல்லாசங்கள், தொடங்கும் எந்திரத் தனங்கள், சோகங்கள், அவ்வப்போது கைப்பற்றும் நேசம், ஆறுதல், நிறமிழத்தல் என விவரிக்கிறது. நீண்ட காலம் நீடிக்கும் திருமண உறவில் ஏமாற்றங்கள், துரோகங்கள், சந்தோஷங்கள், துயரங்களைக் கடந்து வேறு யாரொருவராலும் நிரப்ப முடியாத ஒரு இடமாக பரஸ்பரம் கணவனும் மனைவியும் மிஞ்சிவிடுகின்றனர் என்பதைத்தான் மார்க்வெஸ் சொல்லவருகிறார்.

கவிஞனும் இசைக் கலைஞனுமான ப்ளோரென்டினா அரிஸா, தனது கவித்துவ மொழியைத் தான் வேலைபார்க்கும் உறவினரின் படகுப் போக்குவரத்து நிறுவனத்தின் அலுவல் கடிதங்களிலும் தொடர்கிறான். நேசத்தைத் தேடித் தேடி அதன் பக்கவிளைவுகளாகப் பெருந்திணையில் திளைக்கிறான். பெர்மினா டாசாவுக்காக உடைபட்டு ஆழ்கடலில் மூழ்கிய கப்பலில் புதையலைத் தேடிப்போனதுபோல, அவன் பற்கள் விழுந்து போலிப்பல் கட்டிய பிறகும் தொடர் வாதையுடன் நேசத்தைச் சாகசத்துடன் தேடிக்கொண்டிருக்கிறான். ஒருநிலையில் ப்ளோரென்டினா அரிஸா லட்சியபூர்வமாகவும் இன்னொரு நிலையில் கேடுகெட்டவனாகவும் நமக்குத் தென்படுகிறான்.

காவியத்தன்மை வாய்ந்த ஒரு காதல் கதை என்ற பொறிக்குள் காதல், திருமணம் இரண்டையும் தீவிரமாக விசாரிக்கும், கிண்டல்செய்யும் நாவல் இது. காலராவுக்கு நிகராக ஒரு பெருவியாதியைப் போன்ற தீவிர பீடிப்பைத் தரக் கூடிய, இடர்களைக் கொடுக்கக் கூடியது காதல் என்றும் காப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ் எச்சரிப்பது போல உள்ளது. ஆனால், அத்தகைய இடர்களுக்கு வேறு தகுதியானது எதுவும் இந்த உலகத்தில் இல்லை என்பதையும் சேர்த்தே மார்க்வெஸ் கூறுகிறார் என்றும் தோன்றுகிறது.

மரணத்தைத் தவிர அடுத்த படகுத் துறை என்று எதுவுமே இல்லாத முதுமையில் ப்ளோரென்டினா அரிஸாவும், பெர்மினா டாசாவும் கரம்பற்றி, அணைக்கும்போது பெர்மினாவின் எலும்புகளை அரிஸா உணர்கிறான். அப்போதுதான், ‘கடலும் கிழவனும்’ நாவல் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. வயோதிக மீனவன், கடைசியில் சுறாவை வென்று கரைக்குக் கொண்டுவந்துவிடுகிறான். ஆனால், அது எலும்பாகத்தான் கரைக்கு வந்துசேர்கிறது. தனது குருவான எர்னஸ்ட் ஹெமிங்வேக்கு ‘ஆம்’ என்று மார்க்வெஸ் சொன்ன பதிலாகக்கூட இருக்கலாம் இந்தச் சித்திரம். சுகுமாரனின் ஒரு கவிதையில் வருவதுபோல அடைந்த பிறகு உயரத்தில் ஏற்படும் துயரம், தனிமை.

வேண்டும் - வேண்டாம், உண்டு - இல்லை, பயன் - வீண் என்று அத்தனை இரட்டைகளையும் நம்மேல் தீவிரமான நாடகங்களாக ஏவிவிட்டுப் பரிதவிக்கச்செய்கிறார் மார்க்வெஸ். தேர்வுசெய்வதற்குக் கஷ்டமாக இருக்கும் இந்திரஜாலமாகத்தானே நமக்கும் வாழ்க்கை இருக்கிறது - தாயுமானவர் சொல்வதுபோல. அனைத்துத் துயரங்களுடனும் சேர்ந்து வண்ணமயமாகத் தொடர்கிறது வாழ்வு, மார்க்வெஸின் இந்த நாவலில். 19-ம் நூற்றாண்டின் இறுதி 20 ஆண்டுகளிலும் 20-ம் நூற்றாண்டில் முதல் கால்பகுதி வரையிலும் கொலம்பிய நிலப்பகுதி போன்ற ஒரு நிலப்பரப்பில் கதை நிகழ்கிறது.

அரசியல், சுற்றுச்சூழல், கலாச்சார, வெகுமக்கள் ஊடகங்கள் என இந்த 50 ஆண்டுகளில் நடக்கும் எல்லா மாற்றங்களையும் ஒரு சிம்பனி இசை நாடகத்தைப் பார்ப்பதுபோல இந்த நாவலில் பார்க்கிறோம். முதலைகள் நதிப் படுகைகளின் கடைசி வண்ணத்துப்பூச்சியைச் சாப்பிட்டுவிட்டன. பெண்களைப் போல கேவும் கடற்பசுக்கள் மறைந்துபோகின்றன. கிளிகள், குரங்குகள், கிராமங்கள் எல்லாம் காணாமல்போகின்றன.

தமிழ், இந்தியப் படைப்பாளிகளுக்கு இருக்கும் லஜ்ஜை கொண்ட கண்கள் மார்க்வெஸிடம் கிடையாது. லஜ்ஜையற்றது இதயம், லஜ்ஜையற்றது மனம், லஜ்ஜையற்றது காதல் என்ற திண்மையுடன் சரளமாக ஆண்கள், பெண்கள், கிழவர்கள், கிழவிகளின் உள்கூடங்களுக்குள்ளும் சகஜமாகப் புழங்கிப் பிரதிபலிக்கும் கண்கள் மார்க்வெஸினுடையது. எத்தகைய சத்தமுமின்றி கதைக்குள் அமிழ்ந்திருந்து, அவ்வப்போது தன் பார்வையைப் பகிரும்போது அத்தனை கூர்மையாக, அத்தனை பொதுமையுணர்வையும் நமக்குத் தருகிறது.

லாபத்தையே அடிப்படையாகக் கொண்ட சந்தையும் வெகுஜன ஊடகங்களும் ‘பாதுகாப்பும்’ ‘சவுகரியமுமான’ சந்தோஷ அம்சத்தைப் பற்றி மட்டுமே எப்போதும் சொல்கிறது. ஆனால், காதலின் இன்னொரு அம்சத்தையும் வாழ்தலின் இன்னொரு பரிமாணத்தையும் தீவிரமாக இந்நாவல் பேசுகிறது. இதைப் படிப்பவர்களுக்குக் காதல் மீது கூடுதல் மதிப்பும் வாழ்க்கை தொடர்பாகக் கூடுதல் புரிதலும் வரக்கூடும்.

நாவலின் கடைசி வாக்கியம் முடிவதுபோல, இப்படியே எத்தனை காலம் வந்துபோய்க்கொண்டிருப்பது என்று படகின் கேப்டன் கேட்கும் கேள்விக்கு நாயகனைப் போல நாமும் தெளிவாகப் பதில் சொல்லலாம்.

‘எப்போதைக்குமாக’ என்று.


Comments