இகவடை பரவடை” கவிதை நூலினை கவிஞர் தாமரை பாரதி விமர்சனபூர்வமாக அணுகி அகழ் தளத்துக்கு ஒரு கட்டுரை அனுப்பியிருந்தார். அக்கட்டுரை குறிப்பிட்ட நூல் பற்றியதாக மட்டும் இருக்கவில்லை. “குறுங்காவியம்” எனும் வடிவத்தை நவீன கவிஞர்கள் கையாளும் விதம் பற்றியும் அதில் விமர்சனங்கள் இருந்தன. எனவே கட்டுரையை நூலாசிரியர் ஷங்கர்ராமசுப்ரமணியனுடன் பகிர்ந்து அதையொட்டி ஓர் உரையாடலும் நிகழ்த்தினோம். அவருக்கும் கட்டுரை அனுப்பிய தாமரைபாரதிக்கும் நன்றி.
-அகழ் ஆசிரியர் குழு
கவிஞர் தாமரை பாரதியின் விமர்சனத்தைப் படிப்பதற்கு : https://akazhonline.com/?p=5817
கேள்வி: “இகவடை பரவடை” நூலுக்கு ஏன் குறுங்காவியம் என்று அடைமொழி சூட்டினீர்கள்?
பதில்: சிறுவனாக இருந்து பெரியவனாக ஆகும் ஒருவனின் படம் இதன் கதை இழையாக உள்ளது. இரண்டு நகரங்கள், இரண்டு மனுஷிகள், சில பருவங்கள், சில பிராணிகள், தாவரங்கள் இவையெல்லாம் நில, மனப்பரப்பாக இதில் விரிந்துள்ளன. தனிநபர் ஒருவனின் அறிவுத் தோற்றமும், ஒரு கலாசாரத்தின் அறிவுத்தோற்றமும், கால, விழுமிய, அரசியல் மாற்றங்களின் சித்திரங்களும் உள்ளன. எனது கவிதை உள்ளடக்கம் சார்ந்த பார்வையை உருவாக்கிய கவிஞர் கலாப்ரியாவின் ‘எட்டயபுரம்’ தொகுதியை அவர் குறுங்காவியம் என்றே குறிப்பிடுகிறார். இகவடை பரவடை-யை அதன் தொடர்ச்சியென்றும் கருதுவதால் அதை ‘குறுங்காவியம்’ என்று குறிப்பிடலாமென்று நினைத்தேன்.
கேள்வி: இந்த நூலில் பல பகுதிகள் இருக்கின்றன. அவற்றை வாசகர்கள் தனித்தனி கவிதையாகவும் படிக்கலாம். இந்த நூலை அப்படி படிப்பதற்கும் மொத்தமாக ஒரு நீண்ட சித்திரமாக வாசிப்பதற்கும் என்ன வேறுபாடு இருக்கும் என நினைக்கிறீர்கள்?
பதில்: ஆமாம். இதைத் தனித்தனியாகப் படிப்பதற்கான சௌகரியமும் உண்டு. இந்தப் புத்தகத்தை பிரியத்துக்குரிய கவிதை ஆசிரியர்களில் ஒருவரும் நண்பருமான தேவதச்சனுக்கு அனுப்பியபோது, தனித்தனியாகவே எனக்கு கவிதையைப் படிக்க முடிகிறது என்று சிரித்துக்கொண்டே சொன்னார். தனித்தனியாகத் தானே நாம் எல்லாவற்றையுமே படிக்கிறோம் என்று ஜாலியாகவே பதிலளித்தேன். ஆயிரம் சந்தோஷ இலைகள் பற்றிய கட்டுரையில் அந்தப் புத்தகத்தை ஒட்டுமொத்த சித்திரமாகவே படித்தேன் என்று ஜெயமோகன் கூறியதை நினைவுகூர்கிறேன். சிறந்த கவிதையோ, சராசரிக் கவிதையோ அதை எழுதும் ஆளுமை அதற்கு ஒரு பின்னொட்டையும் ஒரு தொடர் இழையையும் தருவதாகவே எண்ணுகிறேன். “நிழல், அம்மா” வரை நான் எழுதிய கவிதைத் தொகுதிகளைக் கணக்கில் கொண்டு இகவடை பரவடை என்ன வித்தியாசம் என்று பிரதிபலித்துப் பார்க்கிறேன். இதில் ஒரு த்வனியும் மெல்லிய கதை இழையும் ஒரு உணர்வுச் சரடும் இருப்பதாக உணர்கிறேன். தொடப்படாமலேயே பல புத்தகங்கள் கடக்கப்படும் நிலையில் தனியாகப் படித்தாலும் ஒட்டுமொத்தமாகப் படித்தாலும் ஆசிரியனுக்கு அது மகிழ்ச்சியானதே.
கேள்வி: நவீன கவிஞர்கள் மீது முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு – “அவர்களுக்கு மரபு சார்ந்த பரிச்சயம் இல்லை” என்பது. தமிழ் கவிதையில் அரிதாகவே “இகவடை பரவடை” போன்ற காவியத்தை ஒத்த முயற்சிகள் நிகழ்கின்றன. இது அந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிறதே?
பதில்: க.நா.சு காலத்திலிருந்து இந்தக் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் அப்போதும் மரபு சார்ந்து ஆழமான அறிவுள்ள நவீன கவிஞர்களாக நகுலன், சி. மணி, க. நா. சு, பிரமிள்,விக்ரமாதித்யன், ந. ஜயபாஸ்கரன் வரை நல்ல கவிஞர்களாக இருந்திருக்கிறார்கள். மரபுடன் அதிக பரிச்சயம் இல்லாத பசுவய்யா, ஆத்மாநாம், சுகுமாரன் ஆகியோரும் நவீன கவிதை வரலாற்றில் சிறந்த முன்னோடிகளாக, கவிஞர்களாக நிலைபெற்றுவிட்டார்கள். தற்போதுள்ள நவீன கவிதைச்சூழலில் எனக்குத் தெரிந்து கவிஞர்கள் கண்டராதித்தன், ஸ்ரீ நேசன், ராணி திலக், இசை, இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் மரபை நன்கு தெரிந்தவர்கள். அவர்கள் அளவுக்கு எனக்கு மரபிலக்கியத்தில் பரிச்சயம் உறுதியாக இல்லை. மரபே தெரியாமல்தான் நவீன கவிஞன் இருக்கமுடியும் என்பதும் எனது தரப்பு அல்ல. மரபு என்பது அவனுக்கு மொழிவளத்தையும் தனது மொழிசார்ந்த வளமான கலாசார மூலகத்தையும் கொடுக்கும். ஆனால் தனியான கவிதைப் பார்வையையும் கவிதை ஆளுமையையும் மேதமையையும் அவன்தான் தனது சமகால அனுபவங்கள் வழியாக, பார்வைகள் வழியாக, தர்க்க, குதர்க்கங்களின் வழியாக அடைகிறான் என்பது எனது கருத்து. அதற்கும் மரபுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இகவடை பரவடையை கேள்வியிலேயே முயற்சி என்றுதானே சொல்கிறீர்கள். வாசகர்களும், கண்ணுக்கே தெரியாமல் அரூபமாக இருக்கும், ஆனால் தொடர்ந்து தெளிவான நீதிபதியாகக் கருதப்படும், காலமும்தான் இந்தப் படைப்பு குறித்து முடிவுசெய்ய வேண்டும்.
கேள்வி: மரபைக் கையாள்வதில் ஒரு நவீன கவிஞருக்கு இருக்கும் சவால்கள் என்ன?
பதில்: மரபு என்று எதைக் குறித்துப் பேசுகிறோம் என்பதை இப்போது வரையறுத்துக் கொள்ளலாம். நூற்றாண்டுகளாக ஒரு மொழியில் செயல்படும் படைப்பு மற்றும் அதன் நினைவின் தொடர்ச்சியை நாம் மரபு என்று குறிக்கிறோம். யாமம் என்ற எஸ். ராமகிருஷ்ணனின் நாவல் தலைப்பைப் படிக்கும்போது ‘நள்ளென்றன்றே யாமம்; சொல் அவிந்து இனிது அடங்கினரே மாக்கள்’ என்ற குறுந்தொகை பாடல், மரபு தெரிந்தவனுக்கு ஒரு தொடர்ச்சியின் ஞாபகத்தைத் தருகிறது. பிரமிளின் வண்ணத்துப் பூச்சியும் கடலும்’ கவிதையைப் படிக்கும்போது மாணிக்கவாசகரின் கோத்தும்பீ பாடல் மரபு தெரிந்தவருக்கு கூடுதல் கிளர்ச்சியையும் தொடர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. பாரதி வழியாக மரபு, எனக்கு தாயுமானவரையும் வள்ளலாரையும் செங்கோட்டை ஆவுடையக்காளையும் கொண்டுவந்துவிடுகிறது. தாயுமானவரை கொஞ்சம் கவனம் கொடுத்து வாசிக்கையில் மௌனியின் உரைநடைக்குத் தொடர்பு இருப்பது எனக்குத் தெரிகிறது. ஒரு நூற்றாண்டாகிவிட்ட புதுக்கவிதைகளின் நினைவு சேகரமும் இன்று சமகாலத் தமிழில் இயங்கும் தமிழ் கவிஞனுக்கு மரபுதான். மரபு ஒருவரிடம் வெறுமனே மேலோட்டமான அறிவுச்சேகரமாக, அலங்காரமாகச் செயல்படுகிறதா? ஆழ்நினைவாக உள்ளதா? என்ற கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ளலாம்.
சி. மணி ஆங்கிலத்திலும் தமிழிலும் அறிஞர். தமிழ் புதுக்கவிதையில் முன்னோடி. ஆனால், அவரது கவிதைகளில் செயல்பட்ட மனம் மிகவும் பழைய மனம் என்றே கருதுகிறேன். புதுக்கவிதை வடிவத்தில் நீள்கவிதை உட்பட பல முயற்சிகளைச் செய்தவர். ஆனால் பார்வை அரதப்பழசானது. மரபு என்பது இப்படியும் ஒருவரை ஆட்கொள்ளலாம் என்பதற்காக சி. மணியைச் சொல்கிறேன். அவரது கவிதைகளை இப்போது படித்துப் பார்க்கும் வாசகர்களிடம் சி. மணி பொருத்தப்பாடுடையவராகவே படமாட்டார். மரபிலக்கியத்தில் இயல்பான ஈடுபாடும் அறிவும் உள்ள நவீன கவிஞர்கள் சிலரிடமேக்கூட மரபு வாசிப்பானது வார்த்தைகளாகவும் தொடர்களாக எடுத்தாளப்படும் விபத்தையும் பார்க்க இயல்கிறது.
கேள்வி: தமிழ் நவீன கவிஞர்களிடம் ஓர் அபரிதமான சுய முக்கியவத்துவம் இருப்பதாக தொடர்ந்து சொல்லப்படுகிறது. சமூகம், கலாச்சாரம் இவையெல்லாம் இருந்தாலும் அடிப்படையில் ஒரு தனிமனிதனின் பயணமாகவே “இகவடை பரவடை”யும் நீள்வதனால் அதன்பேரிலும் இந்த விமர்சனத்தை சொல்லலாமா?
பதில்: குழந்தைகளுக்குத் தனிப்பெயர்களை வைக்கத் தொடங்கி சில நூற்றாண்டுகளே ஆகியுள்ளன. ஆங்கிலேயர் வந்த பின்னர், பள்ளிக்குச் சென்றபின்னரும்தான் அது நடக்கிறது. சங்க கவிதைகளில் பெயர்கள் இல்லை. தனிமனிதன் – தனிமனுஷி, குடிமகன் – குடிமகள் என்ற பிரக்ஞையின் தொடர்ச்சியாகவே பெட்டிக்கடை நாராயணன் என்ற சாதாரணன் பாடல்பெறும் நாயகனாக ந. பிச்சமூர்த்தியில் ஆகிறான். எழுத்து தொடங்கி கசடதபற வரை சுயமுக்கியத்துவமாக கவிதைகள் இருந்தன என்பது குற்றச்சாட்டாக இருக்கலாம். 90-களுக்குப் பிறகான கவிதைகளை சுயங்கள், பன்மைகளின் குரல்கள் வளமாக வெளிப்பட்ட, வெளிப்படும் காலம் என்றே சொல்லலாம். ஆழமாக உணரப்படும் தனித்துயர்தான் பொதுத் துயரமாக மாற இயலும். ஜே. கிருஷ்ணமூர்த்தியிலிருந்து காந்தி வரை தனித்துயரத்திலிருந்து பொதுத்துயரத்தை விசாரிப்பதை நோக்கி உயர்ந்தவர்கள்தான்.
கேள்வி: இதுவரையிலான உங்கள் மொழி மற்றும் வெளிப்பாட்டிலிருந்து “இகவடை பரவடை” வேறுபட்டிருக்கிறது. ஓர் எழுத்தாளர் வெற்றிகரமான தன் மாதிரியைவிட்டு விலகி அப்படி பரீட்சார்த்தம் செய்யும்போது “பழைய மாதிரி இல்லை” என்று எதிர்வினை வரக்கூடும். அது சார்ந்த சந்தேகங்கள் எழுதும்போது உங்களுக்கு இருந்தனவா?
பதில்: பரிட்சார்த்தம் என்ற பிரமாண்ட கற்பனை எனக்கு இல்லை. இதுவரை எழுதிய கவிதைத் தொகுப்புகள் சார்ந்து ஒரு போதாமை இருந்தது. குரைத்துக் கொண்டே இருக்கிறோம். நம்மால் கடிக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. அதற்கான முயற்சிதான் இகவடை பரவடை.
அப்புறம் இசை, சிற்பம், பாடல் எல்லாவற்றுக்கும் தீர்க்கமான மரபின் நினைவும் அடையாளமும் பின்னணியும் உள்ளது. எனது கவிதைக்கு என்ன மரபு என்ற கேள்வியும் விமர்சனமும் எனக்கு எழுந்தது. திருநெல்வேலியில் பிறந்ததிலிருந்து எனது அனுபவம், எனது படிப்பு, என் மீது படிந்திருக்கும் மொழிச் சாயல்கள், என் மீது தாக்கம் ஏற்படுத்திய தனிவாழ்க்கை, இலக்கிய, தத்துவ ஆளுமைகளின் சாயல்கள், அறிவுத்தாக்கங்கள் ஆகியவற்றை என்னால் முடிந்தளவு இகவடை பரவடை வழியாக வெளிப்படுத்தியிருக்கிறேன். ஒருவகையில் இந்த தாக்கங்கள், சாயல்கள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டால் இகவடை பரவடை என்ற படைப்பில் நான் என்பதே இல்லை என்பதே என் துணிபு. அதுவே எனது நோக்கமும் கூட. என் அம்மாவோ, என்னைப் பிரிந்துபோனவளோ, ப்ரௌனியோ, லக்ஷ்மி மணிவண்ணனோ, சுந்தர ராமசாமியோ, நகுலனோ, விக்ரமாதித்யனோ, தேவதச்சனோ, சார்லஸ் சிமிக்கோ, ழாக் ப்ரெவரோ, ஜே. கிருஷ்ணமூர்த்தியோ, வள்ளலாரோ, ரமணரோ, காந்தியோ, குர்ஜிஃபோ, லாவோட்சுவோ இல்லையென்றால் நான் கிடையாது என்பதைச் சொல்வதற்கே இகவடை பரவடை.
கேள்வி: “இகவடை பரவடை” வாசக சூழலில் எப்படி உள்வாங்கப்பட்டிருக்கிறது என கருதுகிறீர்கள்?
பதில்: வாசக சூழல் என்பது தமிழ் நவீன கவிஞர்களைப் பொறுத்தவரை ஒரு பிரமாண்டமான கருதுகோள். வழக்கம்போல எனது நண்பர்களாகவும் சக கவிஞர்களாகவும் இருப்பவர்கள் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். கண்டராதித்தன், வண்ணதாசன், எஸ். ராமகிருஷ்ணன் தொடங்கி எனது நண்பர்கள் இன்பா, செல்லப்பா, செல்வ. புவியரசன், ரஞ்சனி வரை பகிர்ந்துகொண்ட குறிப்புகள் இப்படைப்பு தொடர்பில் நம்பிக்கையை அளித்தன. அண்ணாச்சி விக்கிரமாதித்யன் நூல் வெளிவருவதற்கு முன்பே படித்து அதை வெளியிடலாம் என்ற ஊக்கத்தை வழங்கினார். வே. நி. சூர்யாவும், ந. ஜயபாஸ்கரனும் எழுதும்போதே உடனிருந்தவர்கள்.
காலம் என்பது எவ்வளவு அரூபமோ, வாசக சூழல் என்பதும் இங்கே அரூபம்தான். எனது நண்பர்கள் வட்டத்துக்கு வெளியே விமர்சனக் குறிப்பாக வந்துள்ள முதல் கட்டுரை தாமரை பாரதியுடையதுதான் என்பதை நன்றியுடன் சொல்லிக்கொள்கிறேன். நிறைய வாசிக்கப்பட்ட நல்ல படைப்புகளுக்கே ஒரு சில தீவிரமான கட்டுரைகள் கூட நம்மிடம் இல்லை. படித்தாலும் அதை வெளிப்படுத்திவிடக்கூடாது என்ற நற்பண்பைத் தொடர்ந்து பாராட்டி வருபவர்கள் நாம். இகவடை பரவடை வந்து குறுகிய காலத்தில் எனது நண்பர்களில் நிறைய பேர் படித்திருக்கிறார்கள். எதிர்வினைகளும் பதிவுகளும் செய்திருக்கிறார்கள் என்பதே நிம்மதி. குறுங்காவியம் என்ற பின்னொட்டைச் சேர்த்திருக்காவிட்டால் இந்தக் குறைந்தபட்ச கவன ஈர்ப்பையாவது எனது தொகுப்பு பெற்றிருக்குமா என்பதும் சந்தேகம் தான். ஆனால் அதுவே விமர்சனங்களையும் உருவாக்கியிருக்கிறது. இதுதான் Paradox.
000
Comments