யாரோ ஒருவன் என் வீட்டில் வசிக்கிறான்
இரவில் அவன் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து
கோடையின் கொத்துமல்லியை முகர்கிறான்
நங்கா பர்பாத் மலைமீது
கடந்த வருடம் ஏறியவர்களைத் தேடும் பணி
கைவிடப்பட்டதை
ரேடியோ காஷ்மீர் அறிவிப்பதைக் கேட்டுக்கொண்டிருக்கிறான்
அண்டைவீட்டார் துக்கம் கேட்டுவர
என் வீடு நொறுங்குகிறது
இது அவனது தருணம்
எனது அறையில்
மேஜையில்
எனது கையெழுத்தைப் பயின்று
எனக்கான கடிதங்களுக்கு
பதில் எழுதுகிறான்
எனது திரும்புதலுக்காக
அம்மா பின்னிவைத்திருந்த
ஸ்வெட்டரை அவன் அணிந்திருக்கிறான்
வீட்டின் கண்ணாடியோ
எனது முகத்தை
அவனுக்குக் கொடுத்திருக்கிறது
அவன் என் அம்மாவை
எனது குரலில் அழைக்கிறான்
அவள் திரும்பிப் பார்க்கிறாள்
நான் இல்லவே இல்லாத
அவள் கதைகளைச் சொல்வதற்கு
திகைத்து நிற்கிறான்.
Comments