Skip to main content

விளையனூர் ராமச்சந்திரன் - நியூரான்களால் நீங்கள் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள்


எல்லாமும் எல்லாவற்றுடனும் தொடர்பில் உள்ளது’. மூளை நரம்பியலாளர், நரம்புசார் தத்துவவியலாளர், நரம்புசார் அழகியலாளர், கலை விமர்சகர் என்று பல பரிணாமங்கள் கொண்டவரும் நோபல் பரிசு பெறுவதற்கான வாய்ப்புள்ள இந்தியர்களில் ஒருவருமான விளையனூர் எஸ்.ராமச்சந்திரனின்தி டெல் டேல் ப்ரெய்ன்புத்தகத்தைப் படிக்கும்போது எனக்கு ஏற்பட்ட மனப்பதிவு இது (இந்தப் புத்தகம் தமிழில்வழிகூறும் மூளைஎன்ற தலைப்பில் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது).

ஜனவரி புத்தகக் கண்காட்சியில் தற்செயலாக ஒரு புத்தகக் கடைக்கு முன் விளையனூர் எஸ். ராமச்சந்திரனைப் பார்த்தபோது அது மேலும் உறுதிப்பட்டது. பரிணாமவியல் அறிஞரும் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளருமான ரிச்சர்ட் டாக்கின்ஸ் இவரை, ‘நரம்பியலின் மார்க்கோ போலோஎன்று குறிப்பிட்டுள்ளார். சென்னை ஸ்டான்லி கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தவர்; கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தை நரம்பியல், உளவியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் விளையனூர் சுப்ரமணியன் ராமச்சந்திரன் அவருடன் மருத்துவம் படித்த சகாக்களால்சென்னைப் பையன்என்று பிரியத்துடன் அழைக்கப்படுபவர். பார்வை உணர்வு, ஆட்டிஸம், பொய்த்தோற்ற உறுப்புகள் (ஃபேண்டம் லிம்ப்ஸ்) சார்ந்து தனது ஆராய்ச்சியின் மூலமும் சிகிச்சை வழியாகவும் இவர் முன்வைத்த கண்டுபிடிப்புகள் தனித்துவமானவை. மனித மனத்தின் செயல்பாடு குறித்து அசாத்தியமான உள்ளுணர்வும், புதிரான எண்ணற்ற நரம்பியல் நோயாளிகளை சிகிச்சை செய்த அனுபவங்களையும் பெற்றவர்.

ராமச்சந்திரனின்எமர்ஜிங் மைண்ட்’ (‘உருவாகும் உள்ளம்’, தமிழில் பாரதி புத்தகாலயம் வெளியீடு), ‘தி டெல் டேல் ப்ரெய்ன்ஆகிய நூல்கள் புகழ்பெற்றவை. எளிய வாசகர்களுக்கும் தீவிரம் குன்றாமல் அறிவியலைக் கடத்தும் மிக அரிதான எழுத்தாளுமைகளில் ஒருவர். இந்திய அரசமைப்பை எழுதிய குழுவினரில் ஒருவரான அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரின் பேரனான ராமச்சந்திரனுக்கு தற்போது 68 வயது. கர்நாடக இசை சீசனுக்காக சென்னை வந்திருந்தவரை , தற்செயலாக புத்தகக் கண்காட்சியில் ஒரு கடையின் முன்னர் நானும் சபரிநாதனும் பார்த்தோம். அவரது எழுத்துகளைப் படித்தபோது, தனது துறை சார் அறிவின் கரைகளையும் வரையறைகளையும் கடந்து கற்பனையாலும் கலாரசனையாலும் மானுடத்தைத் தழுவும் அறிதலின் வாத்சல்யத்தைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். அவரைப் பார்க்க வேண்டுமென்ற கனவு இப்படி நனவானது எனக்குக் கிடைத்த வாழ்நாள் பரிசுகளில் ஒன்று. சபரிநாதனும் விளையனூர் ராமச்சந்திரனால் ஈர்க்கப்பட்டிருந்தார். அவரை நேர்காணலுக்குச் சம்மதிக்க வைத்தோம். பொங்கல் பண்டிகை முடிந்து சில நாட்களுக்குப் பிறகு, ராஜா அண்ணாமலைபுரத்தில் அவர் வீட்டருகே இருந்த விடுதியில் நானும் சபரியும் விளையனூர் ராமச்சந்திரனை எனக்கு அறிமுகம் செய்த நண்பர் விஜய ராகவனும் இந்த உரையாடலைச் செய்தோம். விளையனூரிடம் எடுத்த நேர்காணலை ஒரு பிரதியாக ஒழுங்கு செய்வதற்கு நான்கு மாதங்கள் பிடித்தன. நண்பரும் கவிஞருமான ஆசைத்தம்பி, ராமானுஜம் ஆகியோர் பொறுப்பெடுத்து எடிட் செய்தனர். தக்கித் திக்கியே ஆங்கிலத்தில் உரையாடும் எனக்கு சபரியும் விஜியும் செய்த உதவி இந்த நேர்காணலில் மறக்க முடியாதது.


அறிவியல் மீதான உங்கள் ஈர்ப்பை நீங்கள்பிள்ளைப் பிராயத்து வசீகரம்என்று உங்கள் நூலில் சொல்லியுள்ளீர்கள் இல்லையா?

மனித குலத்தின் தோற்றம் குறித்த கேள்விகளால் அறிவியலாளர்கள் முதல் சமயவியலாளர்கள், தத்துவவாதிகள் வரை ஈர்க்கப்பட்டுள்ளனர். அந்தக் கேள்வியிலிருந்துதான் எனது தேடலும் தொடங்கியது. சென்னையில் எனது பள்ளிப் பருவத்திலேயே அறிவியலுடனான காதல் உறவு தொடங்கிவிட்டது. இயற்கை நிகழ்வுகள் மீது நான் தொடர்ந்த ஈடுபாடு கொண்டிருந்தேன். இதை விக்டோரிய அறிவியல்வாத ஆர்வம் என்று சொல்லலாம். அடிப்படை அறிவியலில்தான் எனக்கு ஈடுபாடு இருந்தது. எனது சிந்தனைப் பாணியிலும் எனது ஆய்வு நடத்தும் போக்கையும் அதுதான் நிர்ணயம் செய்தது. கருத்தாக்கரீதியில் எளிமையாக இருக்கும், வீட்டில் செய்து பார்க்கக் கூடிய எளிய பரிசோதனைகளில் ஈடுபாடு கொண்டிருந்தேன். எளிய கருவிகள், குறைந்த எண்ணிக்கை கொண்ட வழிமுறைகளாலான ஆய்வுகள் என்னை ஈர்த்தன. ஒரு சோதனையின் வழிமுறைகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. உயர் தொழில்நுட்பம் என்னை அலுப்படையச் செய்வது. எளிமையான கருவிகள், எளிமையான கேள்விகளால் நான் ஈர்க்கப்பட்டேன். கலிலீயோ கற்களை மேலிருந்துத் தூக்கிப் போட்டுப் பரிசோதனை செய்ததை, முப்பட்டகங்களைக் கொண்டு ஒளியின் இயல்பை நியூட்டன் பரிசோதித்துப் பார்த்ததை பள்ளியில் படிக்கும் எந்தச் சிறுவனும் சிறுமியும் செய்து பார்க்க முடியும். எனது அறிவியல் என்பது கேள்விகள் அடிப்படையிலானவை. கற்பனைதான் அறிவியலை உயிர்ப்புடன் வைத்திருப்பது. ஆனால் கற்பனையின் இடம் அறிவியலில் குறைந்துவருகிறது.

இன்றைய அறிவியலில் கேள்விகளுக்கும் கற்பனைக்கும் முக்கியத்துவம் குறைந்து முறையியலுக்கு அதிக முக்கியத்துவம் வந்துவிட்டதா?

ஆமாம். முறையியல் அவசியம்தான். உதாரணத்துக்கு நுண்ணோக்கியின் கண்டுபிடிப்பையே எடுத்துக்கொள்வோம். நுண்ணுயிர்கள் என்னும் புதிய உலகத்தை அதுதான் நமக்கு அறிமுகப்படுத்தியது. தொலைநோக்கியின் அறிமுகம்தான் சூரியக் குடும்பத்தின் மையம் பூமி என்ற கருத்தையே மாற்றியது. முறையியல், உயர் தொழில்நுட்பங்கள் மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை. ஆனால் சிந்தனையின் இடத்தை, கற்பனையின் இடத்தை இடம்பெயர்க்கும் அளவுக்கு அதன் மீது அதிக அளவில் நாட்டம் தேவையில்லை என்றுதான் சொல்கிறேன். ஒரு எட்டு வயதுக் குழந்தையிடம் கத்தியைக் கொடுத்துப் பார்த்தால் என்ன செய்யும்? பார்க்கும் எல்லாவற்றையும் வெட்டும். இப்படித்தான் தொழில்நுட்பத்தைப் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள். நோயாளியின் மருத்துவ வரலாற்றை முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு அவரை முழுமையாகக் கவனியுங்கள் என்றே எனது மாணவர்களிடம் நான் சொல்கிறேன். நெருங்கிக் கவனிப்பதன் மூலமும், முறையாக உடலைப் பரிசோதிப்பதன் மூலமுமே ஒரு நோயாளிக்கு இருக்கும் பிரச்சினையை 90% அறிந்துகொள்ள முடியும். உங்கள் உள்ளுணர்வை நிரூபிப்பதற்கு வேண்டுமானால் ஆய்வகச் சோதனையைப் பரிந்துரைக்கலாம்.

துண்டிக்கப்பட்ட உறுப்புகளில் வலியை உணரும் நோயாளிகளுக்குத் தீர்வை அளிக்கும் விதத்தில் முகம் பார்க்கும் கண்ணாடிகள், காது குடையும் குச்சிகளை வைத்துபொய்த்தோற்ற உறுப்பு’ (ஃபேண்டம் லிம்ப்) என்ற எளிமையான சிகிச்சை முறையை உருவாக்கியுள்ளீர்கள் அல்லவா?

அழகியல்ரீதியாக எளிமையின் நேர்த்தி என்னைக் கவர்கிறது. ஷேக்ஸ்பியர் ஒரு வரியில் வாசகருக்குச் சொல்வதை, ஒரு சாதாரண எழுத்தாளர் வெளிப்படுத்துவதற்கு ஒரு புத்தகத்தையே செலவிட வேண்டியிருக்கும். அறிவியலின் அழகியல் அம்சம் தற்போதைய நாட்களில் மதிக்கப்படுவதேயில்லை.

மூளை நரம்பியல் துறையைப் பொருத்தவரை ஒரு வல்லுனரின் கண்டுபிடிப்பு அவரது காலத்திலேயே செயல்முறைக்கு வருவது மிகவும் அரிதான நிகழ்வு. உங்களது சில கண்டுபிடிப்புகள் உங்கள் காலத்திலேயே மூளை நரம்பியல் மருத்துவத்தில் சிகிச்சைக்குப் பயன்பட்டுவருகிகின்றன அல்லவா!

என்னுடைய சில கண்டுபிடிப்புகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்று சொல்வேன். என்னுடைய ஆராய்ச்சியின் செயல்திட்டங்கள் நான்கு. முதலாவது, மூளையில் நடப்பதாக நோயாளி சொல்வதின் நிலையைத் தெரிந்துகொள்வது. ஒரு மாயத்தோற்றமோ, ஒரு அழைப்போ, ஒரு குறைபாடோ உணரப்படுகிறதென்றால் அது என்னவாக நிகழ்கிறது என்பதை அறிந்துகொள்வது மூளையைப் பொறுத்தவரையில் அத்தனை எளிமையான விஷயம் அல்ல. இரண்டாவது, மூளையில் அது தொடர்பாக என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைக் கண்டறிவது. மூன்றாவது, அதன் விளைவுகள் என்னவென்பதைக் கண்டறிவது. நான்காவதுதான் அதற்கு என்ன சிகிச்சை என்பது.

மனிதக் குரங்கு நிலையிலிருந்து மனிதனாக ஆகும் நிலையில் ஒரு காலகட்டத்தில் மூளை அடைந்த வளர்ச்சியைப்பெரும் பாய்ச்சல்’ (கிரேட் லீப்) என்று குறிப்பிடுகிறீர்கள். மிகத் துரிதமான அந்த வளர்ச்சியைப் பற்றிச் சொல்லுங்களேன்

ஆமாம். ஹோமினிட் பேரினத்தைச் சேர்ந்த ஆஸ்ட்ரலோபிதிகஸ் வகையுடன் ஹோமோ எரக்டஸ், ஹோமோ சேப்பியன்ஸின் மூளையை ஒப்பிடும்போது இரண்டிலிருந்து மூன்று மடங்கு மூளையின் வளர்ச்சி நான்கு மில்லியன் ஆண்டுகளில் நடைபெற்றது. பரிணாம கதியில் இந்தக் காலகட்டம் மிகவும் குறுகியதாகும். இது மொழி, கணிதத் திறன், தன் உடல் பற்றிய உணர்வுகள், இடம் சார்ந்த அறிவு தொடர்புடையது. இந்த அபாரமான வளர்ச்சிக்கு அறிவியலாளர்கள் பல காரணங்களைக் கூறுகின்றனர். பருவநிலை மாறுதல், புரதச் சத்துள்ள உணவுப் பொருட்களைக் கண்டறியும் திறன் கிடைத்தது ஆகியவை காரணமாகக் கூறப்படுகிறது. பிராணிகளைப் போல நான்கு உறுப்புகளாலும் தவழ்ந்துகொண்டிருந்த நிலையிலிருந்து உயர்ந்து இரண்டு கால் உயிராக மாறியதால் கைகளைப் புதிய திறன்களுக்குப் பயன்படுத்த முடிந்ததெல்லாம் காரணமாகக் கூறப்படுகிறது. அதற்கு முன்னர் பல லட்சம் ஆண்டுகளில் நடைபெறாத வளர்ச்சி அது. மனிதப் பரிணாமத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் முக்கியமான அந்த நிகழ்ச்சி அவன் மூளையில் நடந்தது. கருவிகளை உபயோகப்படுத்துவது, தீ பயன்பாட்டுக்கு வருவது, வசிப்பிடங்களின் தேவை உணரப்படுவது, மொழி, சக மனிதனின் மனநிலையை உணர முயற்சிப்பது, விளங்கிக்கொள்வது போன்றவை மனிதக் கலாசாரத்தில் திடீரென்று தோன்றுகின்றன. ஒரு மரத்திலிருந்து விழுந்து கிடக்கும் வாதுமை மேல் ஒரு கல் விழுந்து அது உடைவதை, மனிதக் குரங்கு ஒன்று பார்த்திருக்க வேண்டும். கல் வந்து விழுந்து உடையும் வரை காத்திருக்காமல் அது ஒரு கல்லைக் கருவியாகப் பயன்படுத்த ஆரம்பிக்கும்போதுதான், நாம் இன்று பார்க்கும் மூளையின் வளர்ச்சி தோன்றியிருக்க வேண்டும். பரிணாமத்தில் இது முக்கியமான கட்டம் என்று நினைக்கிறேன். ஒருவர் செய்வதைப் பார்த்து திரும்பச் செய்யக்கூடிய, குரங்கின் மூளையிலேயே காணப்பட்ட ஆடி நியூரான்கள், மேலும் மேம்பட்ட தகவமைப்பை வேகமாக அடைந்தன என்று கருதுகிறேன். சிக்கலான திறன்கள் தேவைப்படும் வேலைகளைப் பார்த்துக் கற்றுக்கொள்ளத் தொடங்குவதிலிருந்துதான் நாகரிகத்தின் அடிப்படை அலகான கலாசாரம் என்பது தோன்றுகிறது. இப்படியாக அறிவு, பிரக்ஞையின் வளர்ச்சி மரபணுக்கள் வழியாக செங்குத்தாகவும் நிகழ்கிறது; கலாச்சாரம் வழியாக மக்கள் திரளுக்குள் அறிவின் பரிணாம வளர்ச்சி, பக்கவாட்டாகவும் நடக்கிறது. இப்படித்தான் நாம் கலாச்சார விலங்குகளாக மாறினோம். மனித மரபணுக்களில் அந்த நடத்தை பதிவாவதற்கு ஒரு லட்சம் ஆண்டுகள் பிடிக்கும் என்பதே வித்தியாசம். ஒருவர் செய்வதை இன்னொருவர் பார்த்துச் செய்வதன் வழியாக ஒரு திறனோ புரிதலோ நடத்தையோ வேகமாக மனிதர்களுக்குள் பரவுகிறது. இந்தியா போன்ற தேசம், கூடுதலாக கலாச்சாரரீதியான சாதகம் கொண்டது என்று அதனால்தான் சொல்கிறேன். ஊழல், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், வறுமை என எல்லாப் பிரச்சினைகளையும் மீறி அதன் கலாச்சார மரபு என்பது வலுவானது. மொகஞ்சதாரோ, ஹரப்பா, அஜந்தா-எல்லோரா ஓவியங்கள், ஹரிகதை போன்ற நிகழ்த்துகலை வடிவங்கள், கர்நாடக இசை போன்றவை நாம் அடைந்த பரிணாம வளர்ச்சிக்கான அடையாளங்கள். மதத்தின் நேர்மறையான பரிணாமம் இது என்றும்கூட சொல்வேன். ஒரு இந்தியனின் அன்றாட வாழ்வில் உட்பொதிந்திருக்கும் கலாச்சார அமைவு சமய நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது. அது வளமானதும் வண்ணங்கள் மிகுந்ததாகவும் உள்ளது. ஒரு வெளிநாட்டவருக்கு இந்து மதம் குறித்துப் புரிந்துகொள்வதற்கு ராமாயணம், மகாபாரதத்தைப் படிக்கச் சொன்னால் போதும். அந்த அடிப்படையில் மதம் என்பதன் எதிர்மறை அம்சங்களான மூர்க்கத்தனம், மூடநம்பிக்கைகளை விட்டுவிட்டு அதன் ஆன்மிக, கலாச்சாரப் பரிணாமத்தைத் தக்கவைக்க வேண்டியது அவசியம். ராமாயணம், மகாபாரதத்தை நான் சிறுவயதில் படித்திருந்திருக்காவிட்டால் நான் மிகவும் வறியவனாக இருந்திருப்பேன் என்பதை மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும். என்னைப் பொறுத்தவரை அவைதான் நமது தங்கச் சுரங்கம்.

கலாச்சாரம், நடத்தைகள், நாகரிகம் பக்கவாட்டில் பரவுகிறதென்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படி எங்கெங்கே தொடங்கிப் பரவியது என்பதற்கான தரவுகள் உள்ளனவா?

பரிணாமம் அடைந்த மனிதர்களின் தோற்றம், பரவல் குறித்த புரிதல் அறிவியல்ரீதியாக நமக்கு உருவாக்கப்படவேயில்லை. திருவள்ளூர் அருகில் கண்டுபிடிக்கப்பட்ட கற்காலக் கருவிகளைப் பார்த்தோம். 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் செய்யப்பட்ட மேம்பட்ட கருவிகள் அவை. ஆதிமனிதர்கள் தங்கள் வேலைக்கேற்ற வடிவில் இயற்கையாகவே இருக்கும் கற்களை முதலில் தேர்ந்தெடுக்கத் தெரிந்துகொள்கின்றனர். அடுத்த நிலை, தங்களுக்கேற்ற வகையில் ஒரு கல்லைக் கருவியாக வடிவமைப்பது; கற்பனையின் அடுத்த பரிணாமம் அது. கூர்மையாக்குவது, தேய்ப்பது, இன்னொரு வடிவத்துக்குக் கொண்டுவருதல் போன்ற திறன்கள் பயிலப்படுகின்றன. அடுத்த நிலையில் அந்தக் கருவியைக் கயிற்றில் கட்டத் தெரிந்துகொள்தல் நிகழ்கிறது. மனிதன் திடீரென்று மொழியைப் பயிலத் தொடங்கியதுபோலவே இதுவும் மனிதப் பிரக்ஞையின் பரிணாமத்தில் அற்புதமாகும். ஏனெனில் ஒரு கருவியின் எதிர்கால உபயோகத்தைக் குரங்கால் கற்பனையே செய்ய முடியாது. மனிதனிடம் மொழி வந்து சேர்ந்ததைப் போன்ற வளர்ச்சி அது. அதனாலேயே தலையின் இடப்பக்கமுள்ள உச்சிபக்க மடல் (இன்ஃபீரியர் பரைட்டல் லொப்யூல்) குரங்குகளைவிட ஏழு மடங்கு அதிகமாக மனிதனிடம் வளர்ந்துள்ளது.

இந்தப் பூமியில் வாழும் உயிர்களிலேயே மனித உயிரியின் சிறப்பம்சமான மொழி அவனிடம் வந்த சேர்ந்ததைப் பற்றி மொழியியலாளர்கள் வந்திருக்கும் கருத்துகளோடு பரிணாமவியல் அடிப்படையில் உங்களுக்கென்று கருதுகோள்கள் உள்ளன. அவற்றைச் சுருக்கமாகக் கூற முடியுமா?

மீனின் துடுப்புகளிலிருந்து நெடும் காலப்போக்கில் மனிதருக்குக் கால்கள் வந்ததைப் போல, செதில்களிலிருந்து தலைமுடி பரிணமித்ததைப் போல மொழி வெறும் ஒரு இயற்கைத் தேர்வென்று டார்வினின் சமகாலத்தவரான ஆல்ப்ரெட் ரஸல் வாலஸ் சொல்கிறார். கடவுளால் மூளையில் மொழி என்பது வைக்கப்பட்டது என்று எளிமையாகச் சொல்லிவிடுகிறார். ஆனால், அதை அறிவியலாளர்களால் பரிசோதித்துப் பார்க்க முடியாது. நவீன மொழியியல் அறிஞர் நோம் சோம்ஸ்கி இன்னொரு கருத்தைச் சொல்கிறார். மொழி என்ற சிக்கலான விரிவான அமைப்பை இயற்கைத் தேர்வு மட்டுமே உருவாக்கியிருக்க முடியாது; பத்தாயிரம் கோடி நரம்பு செல்கள் இத்தனை குறுகிய இடத்தில் பொதியப்பட்ட நிகழ்வை அவர் அற்புத நிகழ்வுக்கு ஒப்பாகச் சொல்லிவிடுகிறார். அந்த இடத்தில் அவர் வியப்பில் போய் நின்றுவிடுகிறார். ஸ்டீபன் ஜே கூல்ட் கூறுவதுடன் எனக்கு உடன்பாடு உள்ளது. அவர் மொழியின் பரிணாம வளர்ச்சியில் மர்மமோ புதிரோ இல்லை என்கிறார். மூளைத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்ட பிரத்யேகச் செயல்முறை என்பதாக மொழியை அவர் பார்க்கவில்லை. தொடர்புக்கான தேவையின் அடிப்படையில் தற்போது மொழி உள்ளது. ஆனால், அந்தத் தேவையின் அடிப்படையில் மொழியின் பரிணாமம் துவக்கம் கொள்ளவில்லையென்று அவர் கூறுகிறார். இந்தக் கருத்தோடு எனக்கு உடன்பாடு உள்ளது. ஒரு தேவைக்காக உருவாகிய அமைப்பை வேறுவகைத் திறன்களுக்குப் பயன்படுத்துவது பரிணாமவியலில் நடப்பதுதான். ஊர்வனவற்றுக்கு அவை பிடித்துண்ணும் பெரிய உடல் கொண்ட உயிர்களைக் கடித்து அரைக்க கீழ்த்தாடையின் பின்புறமுள்ள இரண்டு எலும்புகள் உதவின. ஆனால் ஊர்வனவற்றிலிருந்து பாலூட்டியாகப் பரிணாமம் பெற்றபோது அந்த எலும்புகள் மிகச் சிறிய காதுமையச் செவி எலும்புகளாக மாறின. ஒலியைப் பெருக்க உதவும் எலும்புகளாக அவற்றில் இரண்டு மாற்றமடைந்ததற்குக் காரணம் அவை வாகான இடத்தில் சரியான சமயத்தில் அமைந்திருந்ததுதான். மொழியின் பரிணாமமும் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும். அமைப்பாகவும் செயல்பாட்டு அடிப்படையிலும் மெல்லுவதும் கேட்பதும் சுயேச்சையானவை; அதே நேரத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவையும்தான். பின்னது முன்னதிலிருந்து பரிணமிக்கிறது. அதன் வளர்ச்சிப் படிநிலைகளைக்கூட நம்மால் தெளிவாகச் சொல்ல முடியும். அதே போன்றுதான், சொல்லும் பொருளும் சுயேச்சையாகவும் அதேவேளையில் ஒன்றுக்கொன்று அங்கங்களாகவும் செயல்படுகின்றன. சிந்திக்கும் செயல்பாடும் முழுக்கத் தனித்துவச் செயல்பாடே- மெல்லுவதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட செயலாக கேட்பது இருப்பது போன்றதே. கருவி உபயோகம் அல்லது சிந்திக்கும் திறனைப் போன்றே மொழிச் செயல்பாடுகளில் ஒன்று இன்னொன்றிலிருந்து பரிணமித்திருக்கலாம். ஆதிமனிதர்களின் தாடைகள், காது எலும்புகளுக்கு தொல்படிமங்கள் கிடைப்பதுபோல மொழியின் தொல்படிமங்கள் நமக்குக் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இந்த நிகழ்ச்சி என்று சரியாகச் சொல்ல முடியவில்லை.

பார்த்தல் மற்றும் அறிதல் என்ற தலைப்பில் நீங்கள் எழுதியுள்ளதில், உலகத்தை நாம் பார்த்துப் புரிந்துகொள்வது என்பது மிகவும் சுலபமான விஷயம்போலத் தோன்றுகிறதென்று சொல்கிறீர்கள். மூளையில் விபத்தோ சேதமோ நடக்கும்போதுதான் ஒரு பெரிய ஒழுங்கில் சிக்கல் நேர்கிறது. மூளைப் புறணியில் உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் ஒருங்கிணைப்பு நடக்கும்போதுதான் காட்சி என்பது நம்மில் நிகழ்கிறது. இப்பின்னணியில் பார்க்கும்போது, இத்தனை பெரிய ஒழுங்கில்தான் நமது வளர்ச்சி நடந்துள்ளது என்பது விந்தை இல்லையா?

பிரச்சினைகளோ விபத்துகளோ நேர்ந்தவர்களின் மூளைகள்தான், இயல்பான மூளையில் என்ன நடக்கிறதென்பதை நாம் தெரிந்துகொள்ள உதவுகின்றன. உதாரணத்துக்கு, மூளையில் சேதமுற்ற ஒருவர் தனது புஜங்களை இன்னொருவருடையது என்று உணர்கிறார். அப்போதுதான் பிரக்ஞையின் செயல்பாடுகள் எத்தனை படிகளைக் கொண்டதென்பதையும் அது எத்தனை சிக்கலாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்கிறோம். எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருக்கும் வரை கச்சிதமாகத்தான் தெரிகிறது.

முழுமையடைந்த ஒரு தயாரிப்பாக (ஃபினிஷ்டு புராடக்ட்) மனித வளர்ச்சியைப் பார்க்கும்போது மிகவும் விந்தையாகத்தான் இருக்கிறது. ஆனால், ஒரு அறிவியலாளனாக இதன் பின்னணியில் கடவுள் இருக்கிறார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிரசவ வலியில் இருக்கும் பெண்ணையோ ரத்தப் புற்றுநோய்ப் பிரிவில் இறந்துகொண்டிருக்கும் குழந்தையையோ பார்த்த அனுபவம் கொண்ட யாரும் இந்த உலகம் நமது நன்மைக்காகவே படைக்கப்பட்டது என்று நம்ப மாட்டார்கள். ஆனாலும், மனித உயிர்களாக நாம் பணிவோடு ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும். மூளையையும் மூளை உருவாக்கும் பிரபஞ்சப் பெருவெளியையும் எத்தனை ஆழமாக நாம் புரிந்துகொண்டாலும், நமது தோற்றம் குறித்த கேள்விகள் அனைத்தும் மனிதரிடம் மட்டுமே எஞ்சியிருக்கும் என்பதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

தன்னுணர்வுதான் மனிதனுடைய சிறப்புப் பண்பு என்கிறீர்கள்?

அதுதான் நம்மை மனிதனாக்குகிறது. அத்துடன் வெறுமனே மனிதனுக்கும் மேலாக ஆகும் ஆசைகொள்ள நம்மைத் தூண்டுவதும் தன்னறிவுதான். அறிவியல் நம்மை வெறும் விலங்குகள் என்கின்றன. ஆனால், நம்மால் அப்படியே அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாம் விலங்குகளின் உடல்களுக்குள் மாட்டிக்கொண்ட, என்றென்றைக்குமாக அந்த நிலையைக் கடப்பதற்கு ஏங்கும் தேவதைகளாக உணர்கிறோம். மனிதனின் ஆதாரமான இக்கட்டு அதுதான்.

மனம் மனம் என்று பேசுகிறீர்களே அது எங்கே இருக்கிறது என்று யு.ஜி. கிருஷ்ணமூர்த்தி தன் உளவியல் பேராசிரியரிடம் கேட்டிருக்கிறார்ஒரு நரம்பியலாளராக உங்களைக் கேட்கிறேன். மனம் என்பது எங்கே இருக்கிறது?

மனம் என்று மூளையைத்தான் சொல்கிறோம். இதயத்தை உணர்ச்சிகளின் களனாகப் பார்க்கிறோம். கால்சியம் அயனிகள், பொட்டாசியம் அயனிகள், பத்தாயிரம் கோடி நியூரான்களின் பரிவர்த்தனையால் உணர்வுவினைகள் நடக்கும் மூன்று பவுண்டே எடையுள்ள கொழகொழப்பான ஜெல்லியில்தான் மனித வாழ்க்கையின் அத்தனை வண்ணமிக்க நாடகங்களும் நடக்கின்றன. மனம், இதயத்தையும் (இதயம் என்ற உறுப்பை அல்ல) உணர்ச்சிகளையும் வண்ணங்களையும் நுண்ணுணர்வுகளையும் உள்ளடக்கியுள்ளதென்று சொல்லலாம். அடிப்படையிலும் அடிப்படையான கேள்விகளுக்குப் போகும்போது புதிரே மிஞ்சுகிறது. பொருள் என்பது எதிர் மின்னணு, நேர் மின்னணு, நியூட்ரான்களால் ஆனது. எதிர் மின்னணு என்பது என்ன? ஏதோ ஒரு புள்ளியில் கைவிடத்தான் வேண்டியிருக்கிறது. நரம்பியல், உளவியல் துறைகளைப் பொறுத்தவரை மனம், பொருளிலிருந்து தனியான ஒன்றா என்று கேட்பது முதிர்ச்சியான கேள்வி அல்ல. இன்னொரு பின்னணியில் ஸ்டீவன் ஹாக்கிங்ஸ் கேட்பது போன்றதுதான் அது. வடதுருவத்தில் வடக்கு என்பது என்ன? பூமி உருண்டை என்று தெரியாத ஆதிகால மாலுமி ஒருவனுக்கு அந்தக் கேள்வி அர்த்தபூர்வமானதுதான்.

வைரஸ் உயிருள்ளதா, உயிரற்றதா? உயிருள்ளவற்றின் சில பண்புகளையும் உயிரற்றதின் சில பண்புகளையும் கொண்டுள்ளன. மனமும் அப்படித்தான் என்று சொல்வேன். மூளைக்கும் மனத்துக்கும் உள்ள உறவைச் சொல்வதற்கான மொழி இல்லாததுதான் பிரச்சினை. அதனால்தான் அந்த உறவை நம்மால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை. அதனால்தான் ஆழ்மனம், நனவிலி என்றெல்லாம் பிரித்துப் பிரித்துப் பேச வேண்டியிருக்கிறது. வலி, நனவிலி நிலையில் நிகழாமலிருப்பதேன்? நாம் ஏன் வலியால் துயரப்படுகிறோம்? வலிக்கும் பரிணாம வளர்ச்சிக்கும் தொடர்பு இருப்பதாகவே நினைக்கிறேன். வலி ஆத்திகர்கள், நாத்திகர்கள் இரண்டு பேரையுமே ஏன் வருத்த வேண்டும்?

போலச்செய்யும் அதே ஆடி நியூரான்கள்தான் பிறரைப் பார்த்து அனுதாபம் கொள்ளவும் பரிணாமம் பெற்றனவா?

செயலுக்கு ஒரு நியூரான் படை செயல்படுவதைப் போல, ஸ்பரிசத்துக்கும் ஒரு நியூரான் படை இருக்கிறது. யாரோ ஒருவர் என்னைத் தொட்டால் மூளையின் புலனுணர்வுத் தொகுதிப் புறணியில் இருக்கும் நியூரானில் மத்தாப்பூ போல எரியும். நாம் பார்க்க இன்னொரு நபரை யாரும் தொட்டாலும் அதே நியூரான் எரியும். இன்னொரு நபர் தீண்டப்படும்போதும் அதை அந்த நியூரான் உணர்கிறது. ஆனாலும், தீண்டப்படுவது இன்னொரு நபர் என்ற தெளிவும் இடைவெளியும் நமக்கு இருக்கிறது. ஏனெனில், நமது தோலில் தொடுதலையும் வலியையும் உணரும் அறிமானிகள் நமது மூளைக்கு, ‘கவலை வேண்டாம். தொடப்படுவது இன்னொரு நபர். அதனால் பரிவுணர்வு கொள்என்று தகவல் தந்துவிடுவதால் நாம் குழம்புவதில்லை. ஆனால் நீங்கள் எனது கரத்தை அகற்றிவிட்டீர்களென்றோ, வெறுமனே என் கரத்தை ஊசி போட்டு மரக்கச் செய்துவிட்டீர்களென்றோ வைத்துக்கொள்ளுங்கள். அப்போது உங்கள் கையில் ஒருவர் ஊசி வைத்துக் குத்துவதைப் பார்த்தால் போதும் நான் அலறுவதற்கான சாத்தியம் உண்டு. ஏனெனில் அங்கே நான்-நீங்கள் என்ற பேதம் போய்விடுகிறது. அப்படி அலறவைக்கும், இன்னொருவரின் மீது பரிவு கொள்ளவைக்கும் நியூரான்களை நான்காந்தி நியூரான்கள்’, ‘தலாய் லாமா நியூரான்கள்என்றும் அழைக்கிறேன்.

எல்லாமும் எல்லாவற்றுடனும் தொடர்பில் இருக்கிறதென்று சொல்கிறீர்களா?

உங்களை இன்னொரு நபரிடமிருந்து வேறுபடுத்துவது உங்களது தோல்தான். அந்தத் தோலை அகற்றிவிடும்போது, உங்களுக்கும் இன்னொரு நபருக்கும் இடையேயான இடைவெளி அகன்றுவிடுகிறது. கீழைத்தேயத் தத்துவங்களின் அடிப்படையே இதுதான். அதாவது சுதந்திரமான தனித்த சுயம் என்ற ஒன்று கிடையாது. ஒரு நபர் இன்னொருவரின் வலது கையைத் தொடுகின்றபோது, வலதுகையை இழந்த ஒரு மனிதரின் செயற்கை அங்கத்தில் அந்தத் தொடுகையை உணர முடிகிறது. இதைச் சாத்தியப்படுத்துவது தோல் என்ற இணைப்புதான். நீங்கள் இணையம் மூலமாக, ஃபேஸ்புக் மூலமாக மட்டும் இணைப்பில் இருக்கவில்லை. நியூரான்களால் நீங்கள் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். இந்த அறையில் நியூரான்கள் சங்கிலித் தொடராக தங்களுக்குள் ஒரு உரையாடலை நடத்திக்கொண்டிருக்கின்றன.

ஆட்டிஸத்துக்குக் காரணம் இந்த ஆடி நியூரான்களின் பற்றாக்குறைதான் என்பது உங்களது கருத்து இல்லையா?

ஆட்டிஸம் என்ற வார்த்தைக்கான அர்த்தம்தனிமை’. ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சமூக வாழ்க்கையிலிருந்து உள்ளிழுத்துக்கொண்ட நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிறர் மீது உணர்வுரீதியான பரிவு இருப்பதில்லை; இன்னொருவரின் கருத்துநிலையை அவர்களால் ஏற்றுப் புரிந்துகொள்ள இயலாது. குழந்தைகளுக்கே தனித்துவமான குணமான பாவனை விளையாட்டு, ஆட்டிஸ குழந்தைகளுக்குச் சாத்தியமானதல்ல. ஒரு கரடி பொம்மையை மாணவராக்கி, டீச்சர் விளையாட்டை ஆட்டிஸ குழந்தைகள் விளையாட முடியாது. அதற்கு அந்தக் குழந்தைகள் தங்களை ஆசிரியராகப் பாவித்துக்கொள்ளுதல் அவசியம். இவையெல்லாம் ஆடி நியூரான்களுடன் தொடர்புடையவை. சீராகப் பேச முடியாத குறைபாட்டையும் ஆட்டிஸ குழந்தைகளிடம் நாம் காண முடியும். இப்படித்தான் ஆடி நியூரான்களில் இருக்கும் குறைபாடு ஆட்டிஸத்துக்கு அடிப்படையாக இருக்கலாம் என்ற புரிதலுக்கு வந்துசேர்ந்தோம். ஆடி நியூரான் அமைப்பு முற்றிலும் குறைபட்டுவிட்டதா, அதன் செயல்பாடுகள் கொஞ்சம் இன்னும் மிச்சமிருக்கிறதா, என்பதே கேள்வி. அப்படியாக அதன் செயல்பாடு கொஞ்சம் மிச்சம் இருக்கும் நிலையில், ஆட்டிஸ குழந்தைகளிடம் இருக்கும் தன்னிச்சையான உடல் செயல்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் வழியாக, ஆடி நியூரான்களின் செயல்பாட்டைத் துரிதப்படுத்த முடியுமா என்று பார்க்கலாம். ஆனால், இவையெல்லாம் இன்னும் சோதனை நிலைமையிலேயே இருக்கின்றன.

மனிதர்கள் மட்டுமே உணரக்கூடிய தனித்துவம் கொண்ட சுயம் என்பது தனக்கென்று ஒரு வாழிடமோ, ஒரு பெயரோ இல்லாத ஒன்றுமற்ற வெளியல்ல என்பதை ஆட்டிஸம் நமக்கு நினைவூட்டுகிறது. சுயம் தன்னுடைய தனியிடத்தையும் சுதந்திரத்தையும் வலுக்கட்டாயமாக உரிமைகோருகிறது. அத்துடன் மற்றவர்களுடனான பரிவர்த்தனைகளின்போதும், தான் பதியப்பட்டிருக்கும் உடலுடனான பரிவர்த்தனைகளின்போதும்தான் சுயம் தோன்றுகிறது. சமூகத்திடமிருந்து தன்னை உள்ளிழுத்துக்கொள்ளும்போதும், தான் வசிக்கும் உடலிலிருந்தே பின்வாங்கிக்கொள்ளும்போதும் அந்தச் சுயம் காணப்படுவதில்லை. மனித உயிர்களாக நமது இருப்பை வரையறுக்கும் முதிர்ந்த சுய உணர்வில் அப்போது அது இருப்பதில்லை. அந்த அடிப்படையில்தான் சுய-உணர்வு (தன்னிலை) நிலையில் ஏற்படும் குறைபாடு என்று ஆட்டிஸத்தைச் சொல்ல வேண்டும். இந்தக் குறைபாட்டைப் பற்றிய ஆராய்ச்சி, பிரக்ஞையின் இயற்கையைப் புரிந்துகொள்வதற்கும் உதவியாக இருக்கும்.

உளவியலை நரம்பியல் இடம்பெயர்க்கும் வாய்ப்பு உள்ளதா?

நரம்பியலால் உளவியல்ரீதியாக மனத்தில் நடக்கும் பல்வேறு அம்சங்களைப் பற்றி மேலும் விளக்க முடியும். வலி ஏன் இருக்கிறதென்பது இதுவரை விளக்கப்படவேயில்லை. ஏன் வலி என்பது வலியுணர்வைத் தர வேண்டும். உங்கள் கையில் நான் குத்தினால் ஏன் அது தகவலாக மூளைக்குச் சொல்லப்படக்கூடாது? ‘அனுபவம் ’, ‘அனுபவம் பிஎன்று ஏன் வெறும் தகவலாக மூளைக்கு அது பரிமாறப்படவில்லை.

நரம்பியல்ரீதியாக மூளைக் குறைபாடுகளைத் தீர்ப்பது இன்று எந்த அளவுக்குச் சாத்தியமாகியுள்ளது?

மருந்துகள் வழியாக, மருத்துவத் தலையீடு வழியாக சிலவற்றைக் குணப்படுத்த முடிகிறது. வாத நோய் வந்தவர்களில் சிலருக்குக் கண்ணாடிப் பெட்டி சிகிச்சை வழியாக மறுநிவாரணம் அளிக்க முடிகிறது. பெரும்பாலான நோயாளிகளுக்கு அந்தச் சிகிச்சை பலனளிப்பதில்லை. பாதிக்கப்பட்ட மூளையில் உள்ள சில இணைப்புகளைத் தற்காலிகமாக சரிசெய்ய முடிகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட மொத்த பகுதியைச் சரிசெய்வது இன்னமும் சாத்தியமாகவில்லை. எனினும், எதிர்காலத்தில் இதையெல்லாம் சரிசெய்வதற்கான பெரும் வாய்ப்புள்ளது.

ஒரு காலகட்டம் வரை கலையும் அறிவியலும் இருவேறு துருவங்களாகப் பார்க்கப்பட்டிருக்கின்றன. மனித மூளையில் கலை அனுபவம் எப்படி நிகழ்கிறது என்பதை நரம்பியல்ரீதியாக விளக்குபவர் நீங்கள். அந்தப் பின்னணியைச் சொல்லுங்கள்?

நடத்தைசார் நரம்பியல், பார்வை, காட்சி நோக்கு ஆகியவற்றில்தான் முதலில் எனது ஈடுபாடு இருந்தது. 1994-ம் ஆண்டு வரை காட்சிக் கலைகளை நான் தீவிரமாக அணுகியதில்லை என்றே சொல்வேன். அழகிய படங்களை, சிற்பங்களைப் பார்த்துக் கடந்திருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். கலை வரலாற்றியலாளர் ஜூலியா கெண்டி எடுக்கும் வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கிய பின்னர் காட்சி அழகியல் தொடர்பாக ஆழமாக ஆராயத் தொடங்கினேன். அதன் பிறகு சென்னைக்கு வந்து மூன்று மாதங்கள் தங்குவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த மூன்று மாதங்களில் சமயம் கிடைக்கும்போதெல்லாம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போனேன். எனது மேற்கத்தியக் கல்வி காரணமாக சிறுவயதில் நான் பார்த்த இந்திய கோயில் சிற்பங்களை சமயம் சார்ந்த கலையாகவே நான் அதுவரை பார்த்திருந்தேன். அவற்றை நான் உயர் கலையாகப் பார்க்கவில்லை. அந்தப் பார்வை சென்னைப் பயணத்தின்போது மாறியது. மேற்கு நாடுகளிலோ இதுபோன்ற சிற்பங்கள் அருங்காட்சியகங்களிலும் கலைக்கூடங்களிலும்தான் இருக்கும். ஆனால், இங்கேயோ அன்றாட வழிபாடு, இசை, நடனத்தோடு அந்த சிற்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. கலை எங்கே முடிகிறது, அன்றாட வாழ்க்கை எங்கே தொடங்குகிறதென்பதைக் கண்டுபிடிப்பது இங்கே சிரமம். நான் இங்கிலாந்து திரும்பிய பின்னர், நான் பார்த்த சிற்பங்களும் ஓவியங்களும் என்னைத் துரத்தத் தொடங்கின. சமயம் சார்ந்த படிமங்களாக அல்லாமல், கலையுச்சம் நிகழ்ந்த படைப்புகளாக அவை எனக்கு ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. சில படைப்புகள் மனித மூளையில் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான காரணம் என்னவென்று யோசிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் இந்திய ஓவியங்கள், சிற்பங்கள் பற்றி விக்டோரிய கலை விமர்சகர்களின் எதிர்வினையைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால செப்புச்சிலையான பார்வதி தேவியின் சிலையையே எடுத்துக்கொள்வோம். இந்தியப் பார்வையில் அவள் ஒட்டுமொத்தப் பெண்ணின் உருவகமாக இருப்பவள். சாந்தம், மேன்மை, செம்மையுடன் கிளர்ச்சியைத் தூண்டும் வனப்பையும் அந்தச் சிலை கொண்டிருக்கும். அதை முதலில் பார்த்த விக்டோரிய கலை விமர்சகர்கள் திகைத்து நின்றார்கள். யதார்த்தமாக ஒரு பெண்ணின் அங்கங்கள் இருப்பதுபோல இல்லை என்றார்கள். எனவே அது முதிர்ச்சியற்றது என்று எழுதினார்கள்.

பார்ப்பதை அப்படியே புகைப்படம் போலப் படைப்பது கலை அல்ல. ஒரு சிற்பத்தில், அற்புதமான ஓவியத்தில் யதார்த்தத்தை இன்னொரு விதமாக கலைஞன் மறுபடைப்பு செய்கிறான். உயர்வு நவிற்சி, மிகைப்படுத்தல், அலங்கரித்தலோடு உருச்சிதைவும் அந்தப் படைப்பாக்கத்தில் செயல்படுகிறது. இப்படியான ஒரு ஓவியத்தையோ சிற்பத்தையோ மேற்கத்திய விமர்சகர்களால் உயர்கலை என்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிக்காஸோ வரும்போதுதான் மேற்கில் அதை ஒப்புக்கொண்டனர். இந்த இடத்தில்தான் ஒரு கேள்வி எழுகிறது. ஒரு உருவத்தைப் படமெடுத்து அதைத் தாறுமாறாக உருச்சிதைவு செய்தால் அது கலையாகவோ ஓவியமாகவோ ஆகிவிடுமா? இல்லையென்பதுதான் பதில். மிகைப்படுத்தலும் உருச்சிதைவும் ஒரு விதிப்படிதான் செயல்படுகின்றன. அந்த விதிகள் மனித மூளையை மகிழ்ச்சியூட்டும் விதமாகவும் இருக்க வேண்டும். அப்போது என்ன வகையான உருச்சிதைவுகள் தாக்கம் செலுத்தக்கூடியவை? பிரக்ஞைபூர்வமாகவோ தன்னிச்சையாகவோ கலைஞர்கள் பின்பற்றும் விதிகள் இருக்கின்றனவா? அப்படி இருந்தால் அவற்றுக்கு ஒரு பொதுத் தன்மை இருக்க வேண்டுமில்லையா? இவைதான் என்னுடைய கேள்விகள். திபெத்தியக் கலை, ஐரோப்பிய மறுமலர்ச்சி காலக் கலை, சீனக் கலை, கிரேக்கக் கலை, ரோமானியக் கலை, இந்தியக் கலை எனப் பல்வேறு கலாச்சாரங்கள், காலகட்டங்கள் சார்ந்த பின்னணிகளில் பல்வேறு வகைமைகளில் கலைகள் இருக்கின்றனதான். ஆனால், அவற்றின் பொதுத் தன்மையைத்தான் நான் எட்டு விதிகளாக வகுத்தேன். கோயில் வளாகம் ஒன்றில் பித்துப்பிடித்த நிலையில் தாளில் குறிப்பெடுத்தவை அவை. எட்டு என்பது வரையறுக்கப்பட்டதல்ல. நமது மூளையில் அழகியல் அனுபவம், படைப்புச் செயல்பாடு நிகழ்வது குறித்துப் பரிசீலிக்க ஆரம்பிப்பதற்கு இவற்றிலிருந்து தொடங்கலாம்.

கலை, படைப்புச் செயல்பாட்டில் அறிவியல்பூர்வமான அம்சம் பத்து சதவீதம் உள்ளது. அந்தப் பகுதியைத்தான் என்னைப் போன்ற நரம்பியலாளர்கள் விளக்க முயல்கிறோம். நரம்புசார் அழகியல் (நியூரோஏஸ்தடிக்ஸ்) என்று அதைக் குறிப்பிடுகிறோம். கலையின் விதிகள் அல்ல அவை என்பதை இங்கே தெளிவுபடுத்திவிடுகிறேன்.

செயற்கை அறிவுத்திறன் துறை மேம்பாடடையும் நிலையில் மூளையை இறந்துபோகாமல் எப்போதைக்குமாக வாழவைப்பது சாத்தியமா?

இன்னும் பத்தாயிரம் ஆண்டுகளில் அது சாத்தியமாகலாமென்றே நினைக்கிறேன். மனித மூளையின் நுட்பமான பின்னல், செயல்பாடுகள் அத்தனையையும் நாம் தெரிந்துகொள்ளும்போது அது நடக்கும். ஒரு நரம்பியலாளர், நமது மூளையை, அதற்கான சத்துப்பொருட்கள் அடங்கிய ஒரு தொட்டிக்குள் இட்டு இறவாமல் பராமரிக்க முடியலாம்.

ஆயிரக்கணக்கான மின்வாய்கள் (எலெக்ட்ரோட்) மற்றும் குறிப்பிட்ட குணத்திலான மின் பாவனைகள் வழியாக, நமது மூளையைச் சிந்திக்க வைக்கவும் நிஜமான அனுபவங்களுக்குள்ளாவது போன்ற உணர்வுகளை ஏற்படுத்தவும் முடியும். அப்படிப் பாவனையாக்கம் செய்வது சரியான காலப்பிரமாணத்திலும் திட்டமிட்டபடியும் நிகழ்ந்தால் மூளையால் தனது முழு வாழ்க்கையும் கற்பனை என்பதை உணரவே முடியாமல் வாழக்கூடிய சாத்தியம் வரலாம். மூளை தனது சொந்த நினைவுகள், அடையாளத்தைப் பேணிக்கொண்டே, ஐன்ஸ்டைன் போலவும் காந்தி போலவும் சிந்திக்கவும் அனுபவிக்கவும் அப்போது முடியும்.

மூளைக்கு இப்படியான சாத்தியம் முழுவதையும் அளித்த பிறகு, மனிதர்களிடம் உனக்கு, தொட்டிக்குள் கிடக்கும் சாவாத மூளை மூலம் வாழும் வாழ்க்கை வேண்டுமா, அல்லது நிஜமாகப் பிறந்து நிஜமாக இன்ப, துன்பங்களுக்கு உள்ளாகி, வரையறுக்கப்பட்ட காலத்துக்குள் இறக்கும் வாழ்க்கை வேண்டுமா என்று கேட்டால் எதை மனிதன் விரும்பக் கூடும் என்பதுதான் எனது கேள்வி.

பெரும்பாலான மனிதர்கள், நிச்சயம் எதுவுமே இல்லாத நிஜ வாழ்க்கையைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். இதுதான் தர்க்கத்துக்கப்பாற்பட்டது. இது தத்துவார்த்தமான, இறையியல்ரீதியான கேள்வியாகும். உண்மைதான் உண்மை; உண்மையல்லாதது உண்மையில்லை என்ற உணர்வு நம்மிடம் ஆழ்மனத்தில் இருக்கிறது.

சர் ஆர்தர் கானன் டாயல் உருவாக்கிய ஷெர்லாக் ஹோம்ஸ் உங்களுக்குப் பிடித்த கதாபாத்திரம். நீங்கள் விரும்பிப் படிக்கும் பிற எழுத்தாளர்கள் யார் யார்?

அறிவியலைப் பொறுத்தவரை எனக்கு பீட்டர் மேடவாரை மிகவும் பிடிக்கும். அவரது சிறந்த படைப்பானப்ளூட்டோஸ் ரிபப்ளிக்என்னில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அறிவியலின் வரலாற்றையும், அறிவியலின் ஆன்மா பற்றியும் அவர் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்திய ஓவியம், சிற்பக் கலை மரபு பற்றிய நூல்கள் எனக்குப் பிடிக்கும். ஹென்ரிச் சிம்மர், ஆனந்த குமாரசாமி போன்றோர் எனக்கு ஆதர்சமானவர்கள். எனது சகோதரர் ரவி வழியாக சேக்ஸ்பியர் என்னை எனது பத்து வயதிலிருந்து தொடர்ந்துகொண்டிருக்கிறார்.

மூளை என்ற அற்புதமான இன்னும் முழுமையாக அறியப்படாத ஒரு பிரதேசத்தில் ஆய்வு செய்பவர் நீங்கள். உங்களை ஆச்சரியமூட்டும் அம்சம் எது?

வலியின் உண்மையான இயல்பு பற்றித்தான் எனக்கு மிகுந்த வியப்பு உள்ளது. தற்போதைய நிலையில் என்னால் தீர்வு காண முடியவில்லை. உடல்ரீதியாக ஊறுபடுத்தப்படும்போது வரும் வலி ஒரு நிலை. பிரிவு, நேசம், பரிவு ஆகியவற்றால் உணரும் துன்பமும் வலியை உணரும் அதே மூளை இணைப்பிலிருந்துதான் நடக்கிறது. உணர்வுரீதியான வலி, அடிப்படையான வலியை உணரும் இடத்திலிருந்துதான் பரிணமிக்கிறது. அங்கு சமூகரீதியான பரிணாமம் சேர்கிறது. இடத்துக்கு ஏற்றவாறு அதன் வெளிப்பாடு வேறாக இருக்கிறது. அதுதான் வடிவெடுத்த அறிதிறன் (எம்பாடீட் காக்னிஸன்ஸ்) எனப்படுகிறது. மொழியின் படிமத் தளங்கள் செயல்படுவதும் அப்படித்தான். மூளையில் இடது ஆங்குலர் கைரஸ் சேதமடைந்த ஒரு நோயாளியிடம்மின்னுவதெல்லாம் பொன்னல்லஎன்ற மரபுத்தொடரைச் சொல்லி அர்த்தம் கேட்டோம். அவர் நகைக்கடைகளில் நகை வாங்கும்போது கவனமாக இருக்க வேண்டுமென்று அர்த்தம் என்று பதில் சொன்னார்.

இளம் அறிவியலாளர்களுக்கு, இளம் விஞ்ஞானிகளுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

பலன்களை எதிர்பார்க்காமல் வேலையைச் செய்துகொண்டேயிருங்கள். விளையாட்டுத்தன்மையையும், தாகத்தையும் விடாதீர்கள். வெற்றிகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நகைச்சுவையுணர்வைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்று சொல்லப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு வேண்டவே வேண்டாம். நீங்கள்தான் உங்களை அதிகபட்சமாக அங்கீகரித்துக்கொள்ள முடியும். வெளியில் அங்கீகாரத்தைத் தேட வேண்டியதில்லை. ஆனால் அதுதான் இங்கே நடக்கிறது. உங்களுக்கு உண்மையாக இருங்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களோ மூத்தவர்களோ ஏற்காத நிலையிலும் நீங்கள் ஒன்றைப் புதிதாகக் கண்டுபிடித்தால் அதை நிரூபிக்கும் வரை தொடர்ந்து வேலை செய்வது அவசியம். தற்சார்பற்ற அணுகுமுறையுடன், தங்கள் பணியை நேசிக்கும் மனிதர்களுடன் பழகுங்கள். வெறுமனே உங்கள் துறை சார்ந்த நூல்களை மட்டுமே படிக்காமல் விரிவாக வாசியுங்கள். வெவ்வேறு துறை சார்ந்தவர்களுடனும் இறங்கிப் பழகுங்கள். எதிர்மறையான மனநிலை உள்ளவர்களோடு இருக்க வேண்டாம்.

Comments