Skip to main content

லட்சியம் நலிவுற்ற வேளையில்…விஷால் ராஜாவின் சிறுகதைகள்



சிறந்த சிறுகதைகளையும் சிறுகதைக் கலைஞர்களையும் கொண்ட தமிழ் மொழியில் அந்தச் சாதனை குறித்த பிரக்ஞையும் அது ஏற்படுத்திய வரம்புகளை நகர்த்திப் பார்க்கும் திடமும் அந்தத் திடம் அளித்த நிறைவான வெற்றிகளும் விஷால் ராஜாவின் ‘திருவருட்செல்வி’ சிறுகதைகள்.

சிறுகதையோ, கவிதையோ, நாவலோ தமிழில் வந்து சேர்ந்திருக்கும் இடம், அது கடந்த சாதனைகள், அது உடைத்த வரம்புகள் பற்றிய பிரக்ஞை இல்லாமலேயே வெறும் தொழில்நுட்பமாக,வெறும் அலங்காரமாக, வெறும் பகட்டாக, வெறும் கலையாக, படைப்புகள் வார்த்தெடுக்கப்படுகின்றன. 

தங்கள் வடிவத்தில் குறிப்பிடத்தகுந்த சாதனைகளைச் செய்த மூத்த எழுத்துக் கலைஞர்களே, தங்கள் சாதனைகளே நகைக்கும்படியாக, உள்ளடக்கத்திலும் பார்வையிலும், நவீன தமிழ் இலக்கியம் வெகுகாலத்துக்கு முன்னர் கடந்த அரதப்பழசான இடங்களை நோக்கி வேகமாகச் செல்கின்றன. இன்றைய சிறுபத்திரிகை மொழியில் மறுபடைப்பு செய்யப்பட்ட பல இளம்படைப்பாளிகளின் கதைகளுக்குள் பழைய விகடன், மாலைமதி, அமுதசுரபி இதழ்களில் வந்த கதைகள் ஒளிந்திருக்கின்றன. அந்தக் கதைகளை நியாயப்படுத்துவதற்கு நமக்கு அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவ விமர்சனக் கருவிகளும் உதவிகரமாக விளங்குகின்றன. 

காதல் நலிவுறும்போது குழந்தைகள் பிறந்துவிடும் துரதிர்ஷ்டத்தைப் போல, லட்சியம் நழுவிவிட்ட காலத்தில் வடிவுகள் தினுசு தினுசான வார்படங்களாகப் பெருக்கெடுக்கும் நாட்கள் இவை. 

21-ம் நூற்றாண்டு, அது கொண்டுவந்திருக்கும் மாற்றங்களோடு, நம் தமிழ் வாழ்க்கை வந்துசேர்ந்திருக்கும் இடம், நம் மொழி வந்துசேர்ந்திருக்கும் இடம், அதுசார்ந்த விமர்சனப் பார்வை, ஓர்மை, விழிப்பு, பொறுப்பு ஆகியவை நலிந்து மெலிந்துகொண்டிருக்கும் பொழுதில், சிறுகதையும் கவிதையும் நாவலும் கலைகளும் பிரத்யேகமான மெய்யியல் சட்டகங்கள் என்பதை, நாம் திரும்பத் திரும்ப  நினைவுகூர வேண்டிய கடமைகொண்டவர்களாக ஆகிறோம்.

'கண்ணாடித் தனிமை' கதையில், காலத்துக்கு எதிராக அந்த அசைவின்மைக்குள்ளிருந்து வெறிக்கிறது அந்தக் குழந்தை. உடனேயே மூதாட்டியின் முகமாகவும் சுருக்கங்கள் நிறைந்து, ஆனால் அழகு தீராமல், மாறிவிடுகிறது.

படைப்பு என்னும் மெய்யியலும், அதனால்தான் எத்தனையோ அறிவுகள் இந்த இருப்பை, நாம் வாழும் எண்ணற்ற வாழ்க்கைகளைத் தீண்டியபிறகும் அழகாகவும், அதேவேளையில் முதுமை கொண்டதாகவும், ஆனால் எழில் குறையாமல் நம்மை வசீகரிக்கிறது.                 

காஃப்காவின் நுண்மொழிகள் போல மிகச் சிக்கனமான வெளிப்பாட்டில் அபூர்வமான மெய்மைகளைத் தீண்டுவதாகவும் கவித்துவமான அறிதல் தரும் திகைப்பையும் விசித்திர உணர்வையும் தருபவை விஷால் ராஜாவின் ‘கண்ணாடித் தனிமை’ கதை. விழிப்பும் ஓர்மையும் லட்சியமும் தோல்வியுமாக, இருப்பின் இன்னும் தெரியவராத மொழிக்குள் வராமல் அடம்பிடிக்கும், உயிர்வேதியியல் கொந்தளிப்பையும் கொண்டுவர எத்தனிக்கும் விஷால் ராஜாவின் கனவுகள் இந்தக் கதையில், ஆழ் உணர்வுகளாகச் சுழித்துக்கொண்டிருக்கிறது. தன்னைச்சுற்றி நிகழ்வது குறித்த தீவிரமான பரிசீலனையும் விமர்சன உணர்வும் கேள்விகளும் சுழித்து அழைக்கும் அந்தப் பாதாளத்தை உற்றுப் பார்ப்பதற்கான வலுகொண்ட படைப்பாளிகள் அரிதாகவே தென்படுகின்றனர்.

புத்தரிடமிருந்து நீங்கி அதனால்தான் ஆற்றின் எண்ணற்ற குரல்களைத் தேடிப் போகிறான் ஹெர்மன் ஹெஸ்சின் சித்தார்த்தன். 

‘சித்தார்த்தன் கேட்டான், ஊன்றிய சிந்தையுடன் இப்போது அவன் கேட்டான், முற்றும் ஈடுபட்டு, நிதானமாய், ஒவ்வொன்றையும் வாங்கிக் கொண்டு கேட்டான். இப்பொழுது கேட்கும் கலையாத்தான் முற்றிலும் கற்றுவிட்டதாக உணர்ந்தான். இதையெல்லாம் ஆற்றின் இந்த எண்ணற்ற குரல்களையெல்லாம் முன்பே அவன் கேட்டிருந்தான். ஆனால், இன்று அவை வேறாக ஒலித்தன. இப்பொழுது ஒப்பாரியிலிருந்து உல்லாசக் குரல், மனிதக் குரலிலிருந்து மதலையின் குரல் இப்படி வேறுபட்ட குரல்களை அவன் பிரித்துணர முடியவில்லை. தவிப்போரின் ஓலம், அறிஞனுடைய நகைப்பு, கோபக்குரல், சாகின்றவனின் புலம்பல் ஒவ்வொன்றும் மற்றொன்றினுடையதாயிருந்தன. அவை யாவும் ஒன்றோடொன்று பின்னியும் பிணைந்தும் கிடந்தன. ஓராயிரம் விதங்களில் ஒன்றுடன் ஒன்று அவை இறுக்கி முடிச்சிடப்பட்டிருந்தன. எல்லாக் குரல்களும் எல்லா லட்சியங்களும் எல்லா தாபங்களும் எல்லா துயரங்களும் எல்லா இன்பங்களும் எல்லா நன்று தீதுகளும் அனைத்தும் ஒன்றுசேர்ந்தே உலகமாக இருந்தது. அவை யாவும் ஒன்று சேர்ந்தே நிகழ்ச்சிப் பெருக்காய், உயிரின் இசையாய் இருந்தது.’

சித்தார்த்தனைப் போலவே கண்ணாடித் தனிமை சிறுகதையிலும் காலம் என்பது கேள்விக்குள்ளாகிறது. 

விஷால், சித்தார்த்தனைப் போலவே, இன்னும் ஆற்றின் எண்ணற்ற குரல்களைக் கேட்பதற்கும் அதற்கேயுரிய வதைகள் மற்றும் சந்தோஷங்களுக்கு உள்ளாக வேண்டுமென்றும் வாழ்த்துகிறேன்.

Comments