Skip to main content

‘நினைவுப் பாதையில் மஞ்சள் பூனை’ வீடியோ

இடது ஓரத்தில் அமர்ந்திருப்பது தி. ஜா. பாண்டியராஜன்


கோட்ஸ்டாண்ட் கவிதைகள் தொகுப்பின் வழியாக நகுலன் என்ற மொழியாளுமை எனக்கு அறிமுகமாகியிருந்த காலகட்டத்தில், திருநெல்வேலியில் வேலை எதுவும் இல்லாமல் படிப்பு, நண்பர்களைப் பார்பது என்று இருந்தபோது, பர்வதசிங்கிராஜா தெருவில் அப்போது பெற்றோருடன் வசித்துவந்த காஞ்சனை சீனிவாசன் வழியாகத்தான் கேளிக்கையைத் தாண்டிய வேற்றுமொழித் திரைப்படங்கள் தொடர்பிலான பரிச்சயமும், திரைப்பட இசை அல்லாத இசை வடிவங்களும், புகைப்படக் கலையும் அறிமுகமானது. ஆர் ஆர் சீனிவாசன் என்று தற்போது அறியப்படும் காஞ்சனை சீனிவாசனைப் பார்க்க வெவ்வேறு ஊர்களிலிருந்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் சந்திக்க வருவார்கள். அப்படியாக 1996-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாண்டியராஜன் தமிழ் சினிமாவில் வேலைசெய்த பரிச்சயத்துடன் எங்களுக்குத் திருநெல்வேலியில் அறிமுகமானார். அன்றோ அதற்கு முந்தினதினமோ திருநெல்வேலி அருணகிரி திரையரங்கில் ரிலீசாகியிருந்த ‘காதல் தேசம்’ திரைப்படத்தை செகண்ட் ஷோ போய்ப் பார்த்தோம். நகுலனின் அழியாத மொழி உருவத்துக்கு இணையாக அவரது எழுத்துகள் உருவாக்கும் அனுபவத்தையொத்த கருப்பு – வெள்ளைப் புகைப்படங்களை ஆர் ஆர் சீனிவாசன் 196-1997 காலகட்டத்தில் எடுத்தது தற்போது அவர் குறித்து மிச்சமுள்ள நல்ல ஆவணமாகும். அதற்கடுத்து நண்பர் பாண்டியராஜனும், கவிஞர் விக்ரமாதித்யனும், மறைந்த பாண்டிமுனியும் சேர்ந்து அப்போது திருவனந்தபுரத்தில் இருந்த கவிஞர் சுகுமாரன், நீல. பத்மநாபனின் உதவியுடன் உருவாக்கிய இந்த வீடியோதான் நகுலன் பற்றி இப்போது நமக்குக் கிடைக்கும் ஒரே காட்சி ஆவணமாகும். 2003- 2004 காலகட்டத்தில் இந்த வீடியோவை பாண்டியராஜன் எடுத்து முடித்துவிட்டாலும் இது வெளியாக கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் பிடித்திருக்கின்றன. பாண்டியராஜனின் மகன் வளர்ந்து பெரியவனாகி, புனே திரைப்படக் கல்லூரியில் ஒலிப்பதிவு தொழில்நுட்பத்தில் பயிற்சி, இந்தப் படத்துக்கு ஒலிரீதியாக சிறந்த பங்களிப்பைச் செய்திருக்கிறார். இந்த வீடியோ படத்தை நான் பல சந்தர்ப்பங்களில் வேறு வேறு வடிவங்களில் பார்த்திருக்கிறேன். அய்யப்ப பணிக்கர் இந்தப் படத்துக்காக பேசியதை நான் எனது ‘அருவம் உருவம் – நகுலன் 100’ தொகை நூலில் ஒலிபெயர்த்துக் கட்டுரையாகச் சேர்த்திருக்கிறேன். ‘நினைவுப் பாதையில் மஞ்சள் பூனை’ இப்போது யூட்யூப் வழியாக வெளியாகியுள்ளது மிக நிறைவான உணர்வை அளிக்கிறது. நகுலனின் நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையில் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணம் அது. 

நகுலனை நேரடியாகப் பார்த்த வாய்ப்பிருந்தவர்களுக்கு நகுலன் இந்த வீடியோவில் உரையாடும் முறை ஒரு பரிச்சயத்தை அளிக்கும். வயதுடன் சேர்ந்து மூளைத் தேய்மானம் காரணமாக இயல்பான உரையாடலை அவரிடம் எதிர்பார்க்க இயலாது. கோணங்கியும் நீல பத்மநாபனும் சுந்தர ராமசாமியும் விக்ரமாதித்யனும் அவரால் அடையாளம் காணக்கூடியவர்களாக இருந்தனர். மற்றவர்கள் யாரையுமே அவர் ஞாபகம் வைத்திருக்கவில்லை. ஆனால் உரையாடல் என்ற தன்மையில்லாமலேயே நகுலனின் ‘தனிமை மொழி’ மிகுந்த படைப்பூக்கத்தையும் கண்டுபிடிப்புகளையும் கொண்டதாகவும் அவருடைய உடனிருப்பு நமது இருப்பின் அவிழ்க்க முடியாத அபத்தத்தை உணர்த்துவதாகவும் இருந்துள்ளன. அவருடனான எனது இரண்டு சந்திப்புகளை நான் தனியாக எழுதியிருக்கிறேன். கௌடியார் ரோட்டில் உள்ள கோல்ப் லிங்ஸ் பகுதியில் பணக்கார வீடுகளுக்கு நடுவில் சற்றே பள்ளத்தில் வாழை மரங்கள் சூழ்ந்த அவர் வீட்டில் இரண்டு இரவுகள் இரண்டு பகல்கள் நான் கழித்திருக்கிறேன். 

அவரது பேச்சும் அவரது உடனிருப்பும் அவரையொட்டி விழிப்புகொண்ட அந்த வீட்டின் சூழலும் அதனால் ஏற்படும் அமைதியும் வளமான ஒரு நினைவாக உள்ளன. நகுலனைச் சந்திக்காதவர்களுக்கு ‘நினைவுப்பாதையில் மஞ்சள் பூனை’ காணொளி அந்த அனுபவத்தை அளிக்கும். நகுலன் நம்மைப் பார்த்துச் சிரிப்பது மறைந்துபோய்விடவில்லை. 

வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருந்ததே இல்லை என்று கூறியபிறகும் சிரிக்கிறார் நகுலன். நாமும் நகுலனின் சிரிப்பில் தொற்றிக்கொண்டால் இந்த உலகம் அத்தனை கனமாகத் தெரியாது. நகுலனின் இல்லத்துக்கு இந்த வீடியோ வழியாக உங்களைக் கூப்பிடுகிறேன் நம்பிக்கையுடன். இங்கு, இருப்பது, இங்கு மட்டும்தான் எல்லாம் இருப்பது என்று நம்பும் இருப்பிலிருந்து, இங்கைப் பற்றி இங்கிருப்பதைப் பற்றிப் பிடித்திருக்கும் மகா நம்பிக்கையிலிருந்து, நம்மை விடுவிப்பதற்காக, நம்மைத் தளரச்செய்வதற்காக நகுலனும் நகுலனின் எழுத்துகளும் காத்திருக்கின்றன, நம்பிக்கையுடன். இப்போது காஃப்காவைப் போன்றே நகுலனும் கூடுதல் பொருத்தப்பாடுடையவராக ஆகிவருகிறார். 

நமது தூல வாழ்வு எத்தனை உண்மையோ, அதேவகையில் சூட்சும வாழ்வும் உண்மை என்பதை சூட்சும வாழ்க்கை மேல் முழுக்க விசுவாசம் குறையத் தொடங்கி இருபதாம் நூற்றாண்டில் காண்பித்தவர் நகுலன். அந்த சூட்சும வாழ்க்கையுடன் இடையறாது உரையாடிக் கொண்டிருந்தவை அவரது எழுத்துகள்.

இலங்கையே அதிகாரத்திலும் போதையிலும் தன்மிதப்பிலும் மிதந்துகொண்டிருக்கும் போது வீடணன் மட்டுமே சுயபோதையிலிருந்து விடுபட்ட விழிப்பை உடையவனாக இருந்தான். அதனால்தான் அது ‘வீடணனின் தனிமொழி’ ஆனது. நகுலனின் தனிமையிலிருந்து பிறந்த தனிமொழி அப்படித்தான் உள்ளது. கவிஞர் விக்ரமாதித்யனின் சுமையற்ற சிரிப்புச் சத்தமும் இந்த வீடியோவில் சேகரிக்கப்பட்டுள்ளது அபூர்வமானது. 

‘நினைவுப் பாதையில் மஞ்சள் பூனை’ வீடியோவைப் பார்க்க`:Comments

pandiaraju said…
அன்பு சங்கர் நன்றி .
சில நாட்களுக்கு பிறகு திரும்ப இப்போது வாசிக்கையில் கூடி வரும் அமைதி மகிழ்ச்சியாகிறது. எழுதி எழுதி மேற்செல்லும் கரங்கள் வாழ்க .