Skip to main content

எனது கவிதைக்குள் ஆதிவாசிகள் எப்படி வந்தனர்

(மறுபிரசுரம்)

இதழியலும் இலக்கியமும் எங்கே பிரிகின்றன என்பதற்கு உலகின் சிறந்த புனைகதையாளரும் பத்திரிகையாளருமான மார்க்வெஸ் கொடுக்கும் துல்லியமான வரையறை இது. ஒரு புனைவில் ஒரேயொரு உண்மை அந்த ஒட்டுமொத்த கதைக்கும் நம்பகத்தன்மையைக் கொடுத்துவிடும். ஒரு செய்தியில் ஒரேயொரு பொய் கலந்துவிட்டால் அது ஒட்டுமொத்தத் தகவல்களையும் தப்பிதமாக்கிவிடும்  என்கிறார்.

பொய்யும் மிகையும் திரித்தலுமே செய்தி என்றாகிவிட்ட இன்றைய எதார்த்தத்தில் மார்க்வெஸின் கூற்று, உலகளவில் இதழியலுக்கென்று அர்த்தங்களும் அதற்கென்று பொறுப்புகளும் அதிகாரத்துக்கு முன்னால் உண்மை சொல்லவேண்டிய கடப்பாடும் சமநீதி, சமத்துவம் என்பதில் மிச்ச நம்பிக்கைகளும் இருந்த காலகட்டத்திலிருந்து வருவது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். ஊடகத் தொழில்நுட்பத்தின் உச்சம் என்று சொல்லப்படும் காலகட்டம் இது. ஆனால், இத்தனை தொழில்நுட்ப வசதிகள் இருந்தும், மத்திய அரசால் சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு, சகஜமான நடமாட்டம் கூட  பொதுமக்களுக்கு மறுக்கப்பட்டு ஆயுதப்படையினரின் தடுப்பரண்களுக்குள் இருக்கும் ஜம்மு-காஷ்மீரில் நிலவும் உண்மையான சூழ்நிலையை ஏழு மாதங்களுக்கு மேலாகியும் பெரும்பான்மை ஊடகங்களால் சுதந்திரமாக எழுதவோ வெளிப்படுத்தவோ முடியவில்லை. இந்தச் சூழலில்தான், மத ரீதியான வன்முறையைத் தூண்டும் வகையில் முதலமைச்சரும் உள்துறை அமைச்சரும் தேர்தல் பிரசாரங்களில் பேசிய பின்னரும், டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த சில மாதங்களாக நடந்துவந்த அமைதியான போராட்டம் இப்போது வெற்றிகரமாகச் சீர்குலைக்கப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் கலவரங்கள் குறித்த உண்மையான நிலையை பெரும்பாலான ஊடகங்களால் எழுதவோ வெளிப்படுத்தவோ முடியவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தவர்களால் இத்தனை அமைதியாக இத்தனை நாட்கள் போராட்டத்தைச் செய்ய முடிந்த நிலையில், அந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிப்பவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களால் ஏன் கலவரம் ஏற்படுகிறது?

இந்தக் கேள்வியைப் பொதுமக்களிடம் எழுப்புவதில் பெரும்பாலான ஊடகங்கள் தோற்றுள்ளன. இந்துப் பெரும்பான்மைவாதப் பயங்கரவாதத்தை ஊக்குவித்து, அதன் அடிப்படையில் வளரும் இணக்கமற்ற சூழலிலேயே அரசியல் அதிகாரத்தை நோக்கி உயர்ந்த பாஜக ஆட்சியாளர்கள் சொல்லும் கதையாடலை ஏன் ஊடகங்களும் கிளிப்பிள்ளை போல திரும்பக் கூறுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு, அந்தச் சட்டத்துக்கான ஆதரவாளர்கள் ஏன் தெருவுக்கு வரவேண்டும்?

ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆளும் அதிகார மையங்களும் அதிகாரத் தலைமைகளும் வசிக்கும் வீடுகளிலிருந்து சில கிலோமீட்டர்கள் தூரத்தில் ஒரு மசூதி தாக்கப்பட்டு அதன் மீது காவிக்கொடி அப்பட்டமாக ஏற்றப்படுகிறதென்றால் அதை ஏற்றிய குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுபவர்களின் உண்மை அடையாளம் என்ன? அவர்களின் உண்மை முகங்கள் ஊடகங்களிலும் பதுக்கி பதுக்கி மறைக்கப்படுகின்றன. அத்தனை தொழில்நுட்பத்தையும் நமது பாரம்பரிய ஊடகங்கள் டெல்லியில் இன்னொரு மூலையில் ட்ரம்புக்கு நடந்த திருவிழாவைக் காண்பிப்பதற்குத் தான் பயன்படுத்துகின்றன. பாரம்பரிய ஊடகங்கள் தார்மிக ரீதியாகத் தோற்றிருக்கும் வேளை இது. ஜனநாயகம் என்பதும் தோற்கும் இடமும் இது. 
       
000

ஒரு எழுத்தாளனோ கலைஞனோ இந்த உலகில் பொருட்கள் உட்பட அனைத்துக்கும் உயிர்த்தன்மையைத் தருபவன். இதழியலாளன், தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளில் மனித அம்சத்தைக் கண்டறிந்து அதை சமூகத்துக்குத் தெரிவிப்பவன். இரண்டு பேருக்கும் கச்சாப்பொருள் என்பது எதார்த்தம் தான். இரண்டு பேருமே அதனோடு ஈடுபட்டு எதார்த்தத்தை அறியவும் உரைக்கவும் மொழிபெயர்க்கவும் அர்த்தப்படுத்தவும் செய்கிறார்கள். ஆனால் அறிதல் முறைகள் தான் வேறாக உள்ளது. ஒரு காலகட்டத்தில் ஒரு சமூகச் சூழலில் ஒரு பண்பாட்டுப் பின்னணியில் எழுதப்பட்ட கவிதையையும் சிறுகதையையும் வைத்து அப்போது நிலவிய எதார்த்தத்தையும் பொருள்சார் பண்பாடுகளையும் அப்போது புழங்கிய விலங்குளையும் தெரிந்துகொள்வது சிரமமானது. ஒரு அகப்பாடலைக் கொண்டு அக்கால எதார்த்தத்தை அறியமுயல்வது முயல்கொம்பே. என் கவிதைகளில் ஒன்றில் பாண்டி பஜார் நிறுத்தத்திலிருந்து 13-ம் எண் பேருந்தில் தீக்கோழி ஒன்று ஏறுகிறது. எதார்த்தம், புனைவு எங்கே இணைந்து எங்கே பிரிகிறது?

000

பள்ளியிலும் பின்னர் படித்த தொழில் பயிலகத்திலும் எனது தாய், தந்தையருக்கோ ஆசிரியர்களுக்கோ கல்வி சார்ந்து நான் எந்த உத்தரவாதத்தையும் கொடுத்ததில்லை. ஏழெட்டு வயதிலேயே எனது அம்மாவின் தூண்டுதலில் இயல்பாக சிறுவர் பத்திரிகைகள், வார இதழ்களின் பரிச்சயம் ஏற்பட்டது. அதில் தொடங்கி எனக்கு கல்வி என்பது பள்ளிக்கு வெளியில் தான் கற்பிக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்தத் தொலைவிலிருந்து தெளிவாகப் பார்க்க முடிகிறது. சம்பிரதாயக் கல்வியில் ஈடுபாடற்ற எனக்குள் வேறுவகைக் கல்வி வேறுவகையான அறிதலில் நாட்டம் இருந்திருக்க வேண்டும். அப்பா மறைவாக வைத்திருந்த சரோஜாதேவியும் அந்தக் கல்வியின் ஓர் அங்கம்தான். சுஜாதா, பாலகுமாரனின் கதைகளால் ஈர்க்கப்பட்டு அவர்களையே பாலமாக்கி ஜெயகாந்தன், அசோகமித்திரன், சூடாமணி, சுந்தர ராமசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரபஞ்சன் என எனது ஆசிரியர்களைக் கண்டடைந்த பயணம் அப்படித்தான் தொடங்கியது.

முறைசார்ந்த கல்வியை முடித்த இருபது வயதுகளின் துவக்கத்தில் நான் படித்த எந்திரப் பொறியியல் பட்டயப் படிப்பு தொடர்பிலான பணிகளுக்குச் செல்ல எனக்கு ஆர்வம் இல்லை. அதுதொடர்பில் பயிற்சி பெறுவதற்கான மனநிலையையும் பெற்றிருக்கவில்லை. பெற்றோர், உறவினர்கள் பரிந்துரையில் சென்ற சில வேலைகளிலும் ஒரு மாத காலம் கூட நீடிக்க முடியவில்லை. இப்படியான சூழ்நிலையில் சென்னை வந்து சேர்ந்த எனக்கு, என் வேலை மொழி சார்ந்தது என்ற தீர்மானம் மட்டுமே இருந்தது. சில கவிதைகளை எழுதியது தவிர வேறெந்த லட்சணங்களோ தகுதிகளோ அதற்குரிய பயிற்சிகளோ இல்லாதிருந்தவன் நான். ஊடகம் தொடர்பில் முறையான படிப்புகள் தொடங்கியிருந்த அக்காலகட்டத்தில் அதுசார்ந்த கல்வியையும் நான் பெற்றிருக்கவில்லை. தமிழ் உரைநடையும் சரளமாக  எழுதத் தெரியாதவனாகவே சென்னைக்குள் நுழைந்தேன். உரைநடை எழுதத் தெரியாதவன் கவிதை எழுதுவது என்பது ஒழுங்காக நடக்கத் தெரியாது, நடனம் நன்றாக ஆடுவார்னு  சொல்வதைப் போல என்று சுந்தர ராமசாமி கிண்டல் செய்வார். அதற்கு முற்றிலும் பொருத்தமானவனாகவே இருந்தேன்.

சென்னையில்  இருந்த சி. மோகனுக்கும் அவ்வப்போது வந்து போகும் கவிஞர் விக்ரமாதித்யன் போன்றவர்களுக்கும் இவன் என்ன செய்யப் போகிறான் என்ற திகைப்பை என் பெற்றோர்களுக்கு அளித்தது போல கொடுத்துக் கொண்டு இருந்தேன். இங்கே மேடையில் அமர்ந்திருக்கும் யூமா வாசுகியும் அந்த நிச்சயமற்ற காலகட்டத்தை என்னோடு பகிர்ந்துகொண்டவர்களில் ஒருவர். மொழி சார்ந்த பணி என்றால் அப்போது இதழியலைத் தவிர வேறெதுவும் உத்திரவாதமான துறைகளே இல்லை. பதிப்பகங்களில் க்ரியா தவிர ஊழியர்களை வைத்து பணியாற்று வசதி யாருக்கும் உருவாகியிருக்கவேயில்லை.   

 சினிமாவும் கேளிக்கை எழுத்தும் குற்றப் புலனாய்வும் மட்டுமே அச்சு ஊடகத்தில் ஆதிக்கம் செலுத்திய தொன்னூறுகளின் காலகட்டம் அது. தீவிர இலக்கியம், நுண்கலைகள், கோட்பாடு, தீவிர சினிமா சார்ந்து இயங்கியவர்கள் வெகுஜனப் பத்திரிகைகளில் வேலை பார்த்தாலும் அந்த அடையாளங்களை மறைத்துக் கொண்டு தலைமறைவாகத் தங்களுக்கு ஆத்மார்த்தமான பணிகளைப் பார்க்க வேண்டிய சூழல் இருந்தது. இலக்கியவாதி என்பவன் கேலிச் சித்திரமாக, நடைமுறை இதழியலுக்கு உதவாதவன் என்ற மனநிலை திட்டவட்டமாக நிலவியது. வெகுஜன இதழியல், சிறுபத்திரிகை இதழியல் இரண்டும் இருவேறு கரைகளாகப் பிரிந்திருந்தது. இரண்டையும் இணைப்பதற்காகச் செய்யப்பட்ட மாற்று இதழியல் முயற்சிகளான புதுயுகம் பிறக்கிறது, இனி, சுபமங்களா, புதிய பார்வை போன்ற பத்திரிகைகளும் வந்து நின்றுபோயிருந்த காலகட்டம் அது. இரண்டாயிரத்துக்குப் பிறகு தீவிர இலக்கியம், நுண்கலைகள், மாற்று அரசியல், மாற்றுப் பண்பாட்டு விவாதங்களை உருவாக்கிய தீராநதி, தடம் போன்ற இதழ்கள் குமுதம், விகடன் குழுமங்களிலிருந்து வரும் என்று யாராவது அப்போது ஆருடம் கூறியிருந்தால் அவர்களைப் பார்த்து கோட்டிக்காரன் என்று சொல்லக்கூடிய நிலைமைதான் அப்போது இருந்தது.

தமிழ் இதழியலின் மைய நீரோட்டம் சார்ந்த முழுமையான பத்திரிகையாளன் என்று இப்போதும் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது. ஏனெனில் குழந்தை இலக்கியம் சார்ந்து சுட்டி விகடனில் தான் எனது பணி பத்திரிகையாளராகத் தொடங்கியது. அதற்குப் பின்னர் குமுதம் நிறுவனத்திலிருந்து இணையப் பத்திரிகை தொடங்கப்பட்ட போது அதன் இலக்கியப் பகுதியை நான் பார்த்துக் கொண்டேன். அப்போது நான் அதற்கு வைத்த பெயர்தான் ‘தீராநதி’. அப்போதும் குமுதம் வார இதழில் நான் எழுதிக் கொடுத்த கட்டுரைகள் அங்குள்ள ஆசிரியர் குழுவின் மேஜையிலேயே புதைக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன. என் அப்போதைய மொழி, பார்வையின் பலவீனமே அதற்கு முற்றிலும் காரணம்.

தமிழ் பத்திரிகை ஏதாவதொன்றில் வாழ்வாதாரத்தை நகர்த்திக் கொள்வதற்கு ஒரு வேலை, அதன் ஆதரவில் நமது இலக்கியப் பணி என்ற நோக்கத்தைத் தவிர துவக்கத்தில் ஏதுமில்லாத எனக்கு இதழியலில் என்ன செய்யவேண்டுமென்ற தெளிவையும் அக்கறைகளையும் கருத்துநிலைகளையும் உருவாக்கியதில் எம் டி முத்துக்குமாரசுவாமி நடத்திய நாட்டார் வழக்காற்றியல் உதவி மையமும் மதுரையில் நான் பணியாற்றிய பீப்பிள்ஸ் வாட்ச் மனித உரிமை நிறுவனமும்தான் காரணம்.

நாட்டார் வழக்காற்றியல் மையம், நாட்டார் கலை, கலாசாரம் சார்ந்த ஆய்வுப் பணிகளைச் செய்யும் நிறுவனமாகும். பீப்பிள்ஸ் வாட்ச் மனித உரிமைகள் சார்ந்து சமூகத் தளத்தில் இயங்கிய நிறுவனம். வேறு வேறு நிலவியல்கள், வேறு வேறு கலாசாரங்கள், வாழ்க்கை முறைகள், சமூகத்தினரின் கலைவடிவங்களை ஆவணப்படுத்தும் வேலைக்காக ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களுக்குப் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெற்றேன். கவ்வாலிப் பாடல்களின் தாயகமான அஜ்மீரில் உள்ள ஹாஜா மொகைதீன் சிஷ்டி உறைந்திருக்கும் தர்கா, சூபித்துவத்துக்கான தேவையையும் இன்றியமையாமையையும் எனக்கு உணர்த்தியது. இந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து வாழ்ந்த போதும்  தங்கள் வேறுபாடுகள் முரண்பாடுகள் அவர்கள் செய்துகொண்ட மோதல்களின் அனுபவத்தில் இந்துவையும் இஸ்லாமியனையும் பிணைக்கும் நூலிழையை, வரலாற்று ரணங்களை ஆற்றும் மருந்தை சூபி மரபே இன்றும் வழங்கிவருகிறது. அதனால்தான் சூபி மரபையும் தர்கா வழிபாட்டையும் வைதிக இஸ்லாம் தனக்கு எதிரிடையாகப் பார்த்து வருகிறது.

 நாட்டார் வழக்காற்றியல் உதவி மையம், பீப்பிள்ஸ் வாட்ச் இரண்டிலும் நான் பெற்ற பயண அனுபவங்களும் அங்கு கிடைத்த நூல்கள், பத்திரிகைகள், இந்தியாவில் நிலவும் வர்க்க ரீதியான சாதிய ரீதியான ஏற்றத் தாழ்வுகளை நோக்கி என் கண்களைத் திறந்தன. வெறும் இலக்கிய வாசிப்பின் வரம்புகள் எவ்வளவு குறுகியதென்று உணர்ந்த காலகட்டம் அது.  வெவ்வேறு வகையான எதார்த்தங்களோடு ஈடுபடும் கல்வி அங்கேதான் கிடைத்தது. மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் நூலகத்தில் தான் டெகல்கா இதழ்களைத் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன்.  இந்திய இதழியல் பதித்த முத்திரைகளில் ஒன்று என்று டெகல்காவைச் சொல்வேன். குஜராத் இனப்படுகொலைகள் பற்றி ஆண்டுக்கணக்கில் புலனாய்வில் ஈடுபட்டு குற்றவாளிகளின் வாக்குமூலங்களுடன் வெளியான சிறப்பிதழ் எனக்கு இன்றைக்கும் ஞாபகத்தில் உள்ளது.

காந்தியின் மகன் ஹரிலால் பற்றி சந்துலால் பகுபாய் தலால் எழுதிய ஆங்கிலப் புத்தகமும் மக்கள் கண்காணிப்பகத்தில் தான் எனக்குப் படிக்கக் கிடைத்தது. எண்கவுண்டரில் கொல்லப்படுபவர்கள் குறித்த உண்மையறியும் அறிக்கைகளை அப்போது தொகுக்கும் பணி எனக்கு இருந்தது. அப்போதுதான் இந்தியாவில் மோதல் சாவுகளில் அதிகம் இறப்பவர்கள் ஏன் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாகவும் சிறுபான்மையினராகவும் ஏழைகளாகவும் இருக்கிறார்கள். விபத்துகளிலும் பேரிடர்களிலும் இறப்பவர்களின் விகிதத்திலும் இதை நீட்டித்துப் பார்க்க முடியும். இலக்கியம் என்பது வெறும் மொழி ஆபரணத் தொழில் அல்ல, அது நீதியை நோக்கிய அறைகூவல் என்பதும் அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசும் சிக்கலான வெளிப்பாடுகளில் ஒன்று என்பதும் புரியத் தொடங்கியது. இந்தக் காலகட்டத்தில்தான் ராமானுஜம் மொழிபெயர்த்த சாதத் ஹசன் மண்டோவின் கதைகளை முழுமையாகப் படித்தேன்.

ஒரு முற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நான் அந்தப் பின்னணியில் பிறந்தது தற்செயல் எனினும் அந்தப் பின்னணிகள் கொடுக்கும் சௌகரியங்கள் கொடுத்த பிரக்ஞையும் அந்த சௌகரியங்களைப் பெற்றிராத கோடிக்கணக்கான மக்களின் மீது நான் காட்டும் பாராமுகம் என்பது என்னை எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதற்குத் தகுதியானதல்ல என்பதும் இந்தக் காலகட்டத்திலேயே எனக்குப் புரியத் தொடங்கியது. இத்தோடு டெகல்கா கொடுத்த உத்வேகமும் சேர்ந்து ஒரு லட்சிய தமிழ் பத்திரிகை எவ்வாறு இருக்க வேண்டுமென்ற உருவகம் எனக்கு உருவாகிவிட்டிருந்தது.

எனது கல்லூரி நண்பன் தளவாய் சுந்தரம் அப்போது அச்சு இதழாக வெளிவரத் தொடங்கியிருந்த ‘தீராநதி’ க்குப் பொறுப்பேற்றிருந்தான். பொருள்சார் பண்பாடு, நாட்டார் வழக்காற்றியல், இசை, பண்பாட்டு அரசியல், வெகுஜன கலாசாரம் குறித்த நுட்பமான அவதானிப்புகளைக் கொண்ட ஒரு இதழைக் கொண்டுவர வேண்டுமென்ற திட்டத்தைப் பேசிக் கொண்டே இருந்தோம். காலச்சுவடும் உயிர்மையும் தமிழ் சூழலில் வேர்விட்டிருந்தன. எங்கள் கனவுளில் சிலவற்றை தீராநதியில் இருவரும் செய்தும் பார்த்திருக்கிறோம். சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிய நடனக் கலைஞர் சந்திரலேகாவின் விரிவான நேர்காணலைச் செய்தது அப்படிப்பட்ட முயற்சிதான். அவர் குறித்து தமிழில் உள்ள ஓரளவு விரிவான ஆவணம் அதுவே. ஆங்கில வாசிப்பும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் திறனும் ஒரே நேரத்தில் வலுக்கொண்டது. நக்சலைட் வர்கீசை உயரதிகாரிகளின் வற்புறுத்தலால் சுட்டுக்கொன்று பின்னர் அந்த உண்மையைக் கேரளச் சமூகத்துக்கு அம்பலப்படுத்தி அதனாலேயே சொந்த வாழ்க்கையில் பல தொந்தரவுகளுக்குள்ளாகி உண்மையை வெளியிட்ட நிம்மதியுடன் இறந்துபோன ராமச்சந்திரன் நாயரின் நூலை தமிழில் ‘நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி’ என்ற பெயரில் வெளியிடுவதற்கான ஏற்பாட்டை அக்காலகட்டத்திலேயே நான் ஒருங்கிணைத்தேன். குளச்சல் மு. யூசுப் அதை மொழிபெயர்த்தார். மக்கள் கண்காணிப்பகம் வெளியிட்டது. மக்கள் கண்காணிப்பகத்தில் நான் பெற்ற அனுபவமும் உருவான கருத்துநிலைகளுமே பின்னர் தி சன்டே இந்தியன் இதழில் பணியாற்றிய போது  தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் சந்திக்கும் சூழ்நிலைகள் குறித்த விரிவான கட்டுரையை எழுதத் தூண்டியது. தலைமைச் செயலகத்துக்காகக் கட்டப்பட்டு தற்போது மருத்துவமனையாக இயங்கிவரும் அந்தக் கட்டிடம் தான் புலம்பெயர் தொழிலாளர்கள் சென்னையில் திரளாகச் சேர்ந்து எழுப்பிய முதல் கட்டுமானமாகும். புலம்பெயர் தொழிலாளர் என்ற சுட்டு முதலில் வெகுஜன இதழியலில் பிரபலமானது அந்தக் கட்டுரையின் வாயிலாகத்தான். பீகார் மற்றும் வடகிழக்கும் மாநிலங்களிலிருந்து  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாள்தோறும் இறங்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஐநூறாக இருந்தபோது எழுதப்பட்ட கட்டுரை அது. இன்று அவர்கள் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் சிற்றூர்களிலும் விவசாயப் பணிகள், உணவகங்களில் பரவியுள்ளனர்.

தி இந்து தமிழ் நாளிதழின் இணைப்பிதழ் பிரிவில் பணியாற்றத் தொடங்கிய போதுதான், டெகல்கா இதழ் சார்ந்து வகுத்துவைத்திருந்த பணிகளில் சிலவற்றை என்னால் செய்ய முடிந்தது. பிரேதப் பரிசோதனை நிபுணரான டேகாலின் நேர்காணல் எனது இதழியல் பணிகளில் முக்கியமானது. கொலை, தற்கொலை போன்ற மரணங்களில் தடயவியல் சார்ந்து பிரேதப் பரிசோதனை வகிக்கும் முக்கியத்துவத்தையும் ஆனால் உள்கட்டுமானம் வசதிகள் சார்ந்து சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து அத்துறை புறக்கணிக்கப்பட்டிருப்பதைப் பற்றியும் விரிவாகச் செய்யப்பட்ட நேர்காணல் அது. ஒரு மருத்துவமனையின் கடைக்கோடி மூலையில் யாரும் பார்க்காதபடி இருக்கும் பிரேதப் பரிசோதனை அறையின் அகத்தையும் புறத்தையும் தமிழ் வாசகன் பார்க்க வைத்த நேர்காணல் அது. இன்றுவரை இந்தியாவில் பிரேதப் பரிசோதனைப் பிரிவுக்கு மருத்துவர்கள் உயர்சாதிகளிலிருந்து வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மூளை நரம்பியல் வல்லுனரும் நோபல் பரிசுக்கு வாய்ப்புள்ள தமிழர்களில் ஒருவரான விளையனூர் எஸ். ராமச்சந்திரன் நேர்காணலையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.       

வாழ்க்கையின் முடிவு வரை கற்றுக்கொண்டே இருப்பதற்கும் கற்பதைப் பிறரோடு பகிர்ந்து தெளிவதற்கும் வாய்ப்பு கொடுக்கும் மிகச் சில பணிகளில் ஒன்றாக இதழியல் வேலை உள்ளது. ஒரு சராசரி சிறுபத்திரிகை ஆர்வலனாக, தக்கித் தக்கிக் கவிதைகளை எழுதுபவனாக எனது இருபதுகளில் இருந்த எனது ஈடுபாடுகளையும் அக்கறைகளையும் விஸ்தரித்திருப்பதில் இதழியல் பணியும் அது கொடுத்திருக்கும் அவகாசமும் முக்கியப் பங்கை வகித்திருக்கிறது.  இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம், சுற்றுச்சூழல், அரசியல் என எனது கல்வி பள்ளி, கல்லூரிக்கு வெளியில், தொடர்ந்து நிகழ்வதற்கான ஆற்றலையும் உற்சாகத்தையும் இதழியல் தான் எனக்குத் தந்துள்ளது.

இதழியலை ஒப்பிடும்போது இன்னொரு எல்லையாகத் தெரியும் எனது கவிதைக்கு உற்சாகத்தையும் நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கும் இதழியல் அவசியமானதாக உள்ளது. புனைவு எங்கே தொடங்குகிறது செய்தியின் வரம்பு என்ன என்பதைத் தெரிந்துகொள்வதும் ஒரு விளையாட்டாக மாறியுள்ளது. மீண்டும் மார்க்வெஸ்சையே உதாரணத்துக்கு இழுக்கிறேன்.

அவரது சிறந்த பத்திரிகை கட்டுரையான ‘அன் அண்டர்ஸ்டேன்டபிள் மிஸ்டேக்’-கில் வார இறுதியில் குடிக்கத் தொடங்கி தொடர்ந்து குடித்து செவ்வாய்கிழமை காலையில் விழிக்கும் ஒரு இளைஞன், தன் அறையின் நடுவில் மீன் ஒன்று துள்ளிக்கொண்டிருப்பதைப் பார்த்து, தொடர் குடியின் பீடிப்பால் பதற்றத்துக்குள்ளாகி மாடியிலிருந்து குதித்து விபத்துக்குள்ளாகிறான். அந்தச் செய்தியை மறுநாள் மருத்துவமனைக் கட்டிலில் ஒரு தினசரியில் படிக்கிறான். அவன் கண்ட மீன் பிரமையா, உண்மையா என்று அவனுக்கு விடுபடாத நிலையில், அதே தினசரியில் இன்னொரு பக்கத்தில், ஊருக்கு நடுவில் நூற்றுக்கணக்கான வெள்ளிநிற மீன்களை நகரத்தெருவின் நடுவில் பார்த்ததாக வந்த செய்தியையும் படிக்கிறான். தனிநபருக்கு ஒரு அற்புதம் நடக்கும்போது அது எப்படி புனைவாகிறது என்பதையும், கூட்டத்துக்கு நடக்கும்போது எப்படி செய்தியாகிறது என்பதையும் மார்க்வெஸ் இங்கே புரியவைத்துவிடுகிறார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஒரு நீதிபதியின் ஒரு நாள் அனுபவம் பற்றி எழுதப்பட்ட கட்டுரையிலிருந்தே எனது நல்ல கவிதைகளில் ஒன்றை எழுதினேன். அந்தக் கவிதைக்குத் தேவையான குறைந்தபட்ச நம்பகத்தன்மைக்கு அந்தக் கட்டுரையிலிருந்தே தகவல்களை எடுத்துக் கொண்டேன். இன்று இந்து நாளிதழில் வெளியாகியிருக்கும் அந்தமான் குறித்த கட்டுரையின் மொழிபெயர்ப்பு என்னுடையது. ஆயிரக்கணக்கில் எண்ணிக்கையில் அந்தமான் தீவுக்கூட்டங்களுக்குள் வனங்களில் இருந்த பத்து வகையான ஆதிவாசிகளில் இன்று நான்கு பிரிவினரே சில நூறு எண்ணிக்கைகளில் நீடித்து வருகின்றனர். ஜப்பானும் பிரிட்டிஷ்சாரும் இந்திய அரசும் செய்த மாபெரும் இன அழித்தொழிப்பு அது. அவர்களோடு அழிமானத்துக்குள்ளானதில் சில மொழிகளும் அடக்கம். அந்தமானுக்குச் சென்ற ஆண்டு சென்றிருந்தபோது கிடைத்த இதழியல் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றைப் படித்த பின்னர் தான், அத்தனை அழகான தீவுக்கூட்டங்களுக்குப் பின்னால் எந்தத் தடையமும் இல்லாமல் ஒரு கூட்டம் அழிக்கப்பட்ட கதை எனக்குப் பரிச்சயமானது. மது, புகையிலை என எந்த நவீன வஸ்துகளும் இல்லாமல் இயற்கையின் பின்னணியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தனி வீடு என்ற அமைப்பைக் கூட வைத்திருக்காமல் வேட்டைச் சமூகமாகச் சுதந்திரமாக வாழ்ந்த அந்த ஆதிவாசிகள் எனது கவிதை ஒன்றின் மூலையில் இடம்பெறுகிறார்கள்.

அந்தத் தீவில்
கொலைகள் நடப்பதில்லை
தவறவிடப்பட்ட பொருட்கள் அங்கேயே
கிடக்கின்றன
குடியேறிகளின் வீடுகள்
அவர்களின் கால்நடைகள்
உணவு விடுதிகள்
ஆலயங்கள்
தெய்வங்கள்
பாத்திரங்கள்
உணவுகள்
எங்கோ பயணத்திலிருக்கின்றன
இங்கே இருள் சீக்கிரமே வந்துவிடுகிறது
பகலில் மட்டுமே விமானங்கள்
இறங்குகின்றன.
தேனிலவுக்கு வந்திறங்கும்
புது மருதாணிப் பெண்கள்
சருகு ஆடைகளாக மாறிவிடுகின்றனர்
இரண்டு நட்சத்திர விடுதி ஒன்றின்
ஜன்னல் கதவுகள்
கடல்பஞ்சாய்
திறந்து திறந்து
படபடக்கின்றன
அந்தக் குட்டித்தீவில்
ஆதிவாசிகளைத் தவிர
வேறு யாரும்
இரவில் பறப்பதில்லை
வளைவுகளும் நெளிவுகளும் மிகுந்த
மலைப் பாங்கான தெருக்களில்
காற்று மெதுவாக நுழைகிறது
மதியம் பெய்த மழைக்குப் பிறகு
தூய்மையாக
நீர் ஓடும் வடிகால் பாசிச்சுவரில்
நிற்கும் பெரணிச் செடிகள்
நோவாவுடையது
கப்பல் அல்ல
கப்பல் அல்ல என்று
என்னிடம் கிசுகிசுத்தன.

அந்தமான் ஆதிவாசிகளின் நிலையைத் தெரிந்தவர்களுக்கு, இந்தக் கவிதையில் பறக்கும் ஆதிவாசிகள் வேறுமாதிரித் தெரிவார்கள். இதுதான் எனக்கும் எனது கவிதைக்கும் இதழியல் கொடுத்திருக்கும் நம்பகத்தன்மை.

என்னால் இப்போது நடக்கவும் முடியும். நடனமாடவும் அவ்வப்போது பறக்கவும் முடியும் என்று சுந்தர ராமசாமியிடம் சொல்ல முடியும்.

 000

மொழி, இனம், சமயம், சாதி, அரசியல் சார்ந்த இன்று அடையாள முரண்பாடுகள் கூர்மை பெற்றிருக்கின்றன. இந்து ஆட்சியதிகாரம் சார்ந்து பெரும்பான்மைவாதத்தின் அடக்குமுறையும் அடையாளம் சார்ந்த கருத்தியலும் அடிப்படைவாதமும் உச்சத்தை அடைந்துள்ளது.  பாதுகாப்பின்மை, அச்சத்தின் அடிப்படையில் சிறுபான்மை அடையாளம் சார்ந்த அரசியலும் அடிப்படைவாதமும் வைதிங்களும் வலுப்பெற்றிருப்பதை என்னுடைய தனிப்பட்ட பத்திரிகை ரீதியான அனுபவங்களின் வாயிலாக உணர்கிறேன். பிறரை அஞ்சும் பிறரை வெறுக்கும் பிறரை ஒதுக்கும் பிறரை சந்தேகமுறும் முத்திரை குத்தும் மனோபாவங்களை இடதுசாரிகளிடம் மிக வெளிப்படையாகக் கண்டுவருகிறேன்.

தெற்காசியாவைப் பொருத்தவரை சுயத்தின் வெறுப்பை ஒழித்துவைப்பதற்கான முகமூடிகள் தான் கருத்தியல் என்று அசீஸ் நந்தியின் கூற்று மிகச் சரியாகப் பொருந்தும் காலம் இது. மொத்த உடலுக்கான முழுமையான மருத்துவர் என்று இருந்த காலம் போய் ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனி சிறப்பு மருத்துவர்கள் பெருகிவிட்ட காலமும் இது. வெறுப்பு, தீண்டாமை, ஒதுக்கல், பாகுபாடு காண்பிப்பதில் வலதுசாரிகளுக்கு இடதுசாரிகளும் சளைத்தவர்கள் இல்லையென எனது சொந்த அனுபவங்கள் உணர்த்தியுள்ளன. எல்லா கருத்தியல்களும் ஆதிக்கம் மற்றும் வன்முறையின் ரகசிய ருசியைக் கொண்டவையே. மதங்களுக்கு ஈடான கொலைகளை சென்ற நூற்றாண்டில் மார்க்சியம்தான் செய்துள்ளது.

நீதி என்பதோ அறம் என்பது வெறும் பதாகையோ வீட்டின் வாயிற்பலகையோ அல்ல; அது சாகும் வரை தினசரி ஏற்றுக்கொண்ட கடினத்துடனும் போராட்டத்துடனும் பின்தொடர வேண்டிய பொறுப்பு என்பதை எனக்குக் கற்றுக்கொடுத்து வருவதில் இதழியலுக்கும் இலக்கியத்துக்கும் பங்குண்டு. இடதுசாரி, வலதுசாரி என்ற திட்டமான அடையாளங்கள் எனக்குப் பொருந்தாது. இந்தியாவில் பிறக்கும் மனிதன் ஒவ்வொருவனும் சாதியின் சுமையையும் அதன் பெருமை இழிவுகளையும் சுமக்கிறான். சாதிப் பெருமிதமும் வர்க்கப் பெருமிதமும் அறிவுசார் பெருமிதமும் கருத்தியல் பெருமிதமும் வேறல்ல என்பதை உணர்த்திக் கொண்டிருப்பதில் இதழியலுக்குப் பங்குண்டு. அந்த வகையில் சாதியையும் சேர்த்து சாகும்வரை  தினசரி மலம் போலக் கழுவுவது மட்டும் தான் ஒரு இந்தியத் தன்னிலையாக என்னால் செய்ய முடிவது. பழக்கமாகவிட்ட வெறுப்பிலிருந்து அன்பை நோக்கி, பழக்கமாகி விட்ட அச்சத்திலிருந்து அச்சமின்மையை நோக்கி, பழக்கமாகிவிட்ட விலக்குதலிலிருந்து இணக்கத்தை நோக்கி எனது யாத்திரை தினசரி தொடர்கிறது. எனது இடதும் வலதும் இதுதான்.



பிறிதின் மீதான அச்சமும் பிறரின் மீதான வெறுப்பும் தான் நம்மை இன்று கொடுங்கனவுகளாகத் துரத்திக் கொண்டிருக்கிறது. மாற்றங்களின் மீதான நம்பிக்கையின்மையும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி பிடித்துவைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கைதான் மதவாதிகளையும் மதம், கலாசாரத்தின் பேரால் அரசியல் செய்பவர்களையும் பீடித்து வைத்திருக்கிறது. அந்த இடத்தில்தான் சரித்திரத்தை புராணங்கள் இடம்பெயர்க்கின்றன.  பழக்கம் தான் இயல்பு என்று நமக்குச் சொல்லி வைக்கப்பட்டிருக்கிறது. 

இந்தச் சூழ்நிலையில் இடதுசாரி, வலதுசாரி என்ற கருத்தியல் எல்லைகளில் நில்லாமல் மாறும் எதார்த்தங்களை உண்மைகளைப் பார்ப்பதற்கான அவாவையும் துணிச்சலையும் வளர்த்துக் கொள்வதில் எனக்கு இதழியல் தொடர்ந்து உதவிகரமாக உள்ளது.

இந்தப் பின்னணியில் நம்பிக்கை கொள்வதற்கான ஆளுமைகளும் முகாந்திரங்களும் இல்லாமல் இல்லை. அந்த அடிப்படையில் கர்நாடக இசை ஆளுமையும் எழுத்தாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான டி. எம். கிருஷ்ணாவின் சமீபத்திய நூலான ‘செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்’ ஆங்கில நூலை முக்கியமாகக் குறிப்பிடுவேன். கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்தியாவில் கலை, பண்பாட்டுத் தளத்தில் செல்வாக்கு பெற்ற கர்நாடக இசையில் தனக்கும், தான் சார்ந்த சமூகத்துக்கும் தான் வகிக்கும் அந்தஸ்துக்கும் அச்சுறுத்தலான கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுவரும் கிருஷ்ணா அப்படியான கேள்விகளை ‘செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்’ நூலிலும் எழுப்பியுள்ளார். ஒரு கலைஞன் தனது இசைக்கான ஆதாரங்களையும் அதுதொடர்பில் மறைக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பங்களிப்பையும் அது கொண்டிருக்கும் கல்வியையும் வெளிப்படுத்த அவன் இதழியலாளன் ஆக மாறிய அபூர்வ வெளிப்பாடு அது. கர்நாடக இசைக் கச்சேரிகளுக்கு ஆதாரமாக உள்ள தோல் கருவிகள் எவ்வாறு செய்யப்படுகின்றன? அவற்றைச் செய்யும் மக்களின் அறிவுப் பாரம்பரியம் என்ன? அவர்களின் பங்களிப்பு நியாயமான அளவுக்கு ஏன் அங்கீகரிக்கப்படவில்லை? என்ற கேள்விகளின் அடிப்படையில் தோல் வாத்தியக் கருவிகளைச் செய்பவர்களைத் தேடிப் பயணிக்கிறார். அந்தப் பயணத்தில் தமிழகம், கேரளம், ஆந்திரா வரை நூறு மனிதர்களை அவர்களது பின்னணியை அவர்களது பாரம்பரியத்தை அவர்களுக்கும் கர்நாடக இசைக்கும் அவர்களுக்கும் கர்நாடக இசைக் கலைஞர்களுக்கும் உள்ள உறவை நோக்கி நகர்கிறது. உயிருள்ள பசு மாடுகளைப் பக்குவமாகத் தேர்வு செய்து கொன்று தோலெடுக்கப்பட்டு செய்யப்படும் தோல் வாத்தியங்கள் தான், இன்னொரு தளத்தில் மாடுகளைப் புனிதமாகக் கருதும் ஒரு பின்னணியில், சாதியைச் சேர்ந்த இசைக் கலைஞர்களால் பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மையை நோக்கி கிருஷ்ணா அந்தப் புத்தகம் வழியாக வருகிறார். உண்மை என்பது என்னவென்று தேடும் பயணம் நீதியை நோக்கியது.  பின்னணியில் இருக்கும் உண்மைக்குத் திரைபோட்டு அதைத் தெரிந்துகொள்ள விரும்பாமல் மறைப்பதையே புனிதம் காலம்காலமாகச் செய்துவருகிறது. ஒரு இடத்தில் புனிதம் குவியும்போது, அதன் தோற்றத்தில் அதன் மூலாதாரத்தில் அதைப் பிரசவிப்பதில் பங்குபெற்றவனும் அவனது பங்களிப்பும் மறைக்கப்பட்டு விடுகிறது. அப்போது அவனுக்கான அங்கீகாரமும் அந்தஸ்தும் கூலியும் பங்கப்பட்டு விடுகிறது. அந்தப் புனிதத் திரையைக் கிழித்துப் போட்டு தோல் வாத்தியங்களின் உற்பத்தி தலத்தை நோக்கிய பயணத்தை கிருஷ்ணா செய்ததன் வழியாக ஒரு மத்தளத்துக்கு ஒரு மிருதங்கத்துக்கு அதன் இசைக்கு ஒரு முழுமையை அளித்து விடுகிறார். ஒரு மிருதங்கத்தின் வாழ்க்கைப் பாதைக்குப் பங்களித்த அனைத்து மனிதர்களும் முகங்களோடு அங்கீகாரத்தை சரித்திரத்தில் பெறும் முதல் தருணம் அது. இங்கேதான் இதழியல் கிருஷ்ணாவுக்கு உதவியிருக்கிறது.

தன் சுயத்துக்கு எதிராக, தன் சாதிக்கு எதிராக, தன் வர்க்கத்துக்கு எதிராக, தனது அந்தஸ்துக்கு எதிராக தனது அனுகூலங்களுக்கு எதிராக இயங்கும்போது மட்டுமே நீதிக்கு சில பருக்கைகளை ஈந்தவர்கள் ஆவோம். அந்த உணர்வைத் தூண்டிக் கொண்டே இருப்பதுதான் இலக்கியமும் இதழியலும்.
   
(ராஜபாளையத்தில் கடந்த 2020, பிப்ரவரி 23-ம் தேதி நடைபெற்ற சுதந்திரச் சிந்தனை அமைப்பு நடத்திய கூட்டத்தில் படிக்கப்பட்ட கட்டுரையின் சற்றே விரிவாக்கப்பட்ட வடிவம் இது)

Comments

shabda said…
மனதுக்கு அன்பாகவும் ஆனந்தமாகவும் இருந்தது
shabda said…
you are writing beautifully