சென்ற நூற்றாண்டு பிறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னர் நான் யார் என்று கேட்டு வெங்கட்ராமன் என்னும் சிறுவன் வந்து நின்ற அதே கோயிலுக்குள் தான் அன்றிரவு வந்து நின்றேன். அவன் நுழையும்போது, வெளியில் உள்ள பித்தளைப் பாத்திரக் கடைகள் இருந்திருக்காது. நான் உள்ளே நுழைந்த பிறகும் வெளியில் உள்ள உலகமும் காலமும் மறைந்துபோய்விட்டது. கரையான்களும் எறும்புகளும் கடித்து மண்ணோடு மண்ணாக ஒட்டி அழுகிய தசையோடு, நிஷ்டையில் அந்தச் சிறுவன் இருந்த பாதாள லிங்கம் இருக்கும் ஆயிரம்கால் மண்டபம் தெரிகிறது. நான் பிரம்ம தீர்த்தக் குளத்தின் அருகே உள்ள மண்டபத்தின் முன்னர் நின்றேன். உள்ளே நுழைந்ததும் தென்பட்ட முருகனின் சந்நிதியில் விபூதியை நெற்றி முழுக்கப் பூசி எனது நோய் இங்கே இப்போதே குணமாகிவிட வேண்டுமென்ற உன்மத்த வெறியுடன் தான் இந்தக் கோயிலுக்குள்ளும் நுழைந்திருந்தேன்.
பிரிவு நேரும் என்று அறிந்தே வந்த உறவென்றாலும், உறவின் போது சந்தோஷமும் குற்றவுணர்வும் ரகசியமும் சுமையும் சேர்ந்து மூச்சு முட்டினாலும் அவளைப் பிரியும் கணத்தில் தான் பிரிந்தவளின் மகத்துவம் எனக்குத் தெரியத் தொடங்கியது. பிரிவு நோயாகியது. சேர்ந்திருந்த போது வெளியே குளிர்மையும் உள்ளே உஷ்ணமும் கொண்ட அருவியைப் போல அவள் என்னை மூச்சுமுட்டத் திணறடித்தாள். அவள் என் கையைவிட்டு நழுவத் தொடங்கிய போதுதான் அவளைப் பற்றுவதற்கான திட்டங்களையே யோசிக்கத் தொடங்கினேன். ஆனால், அவள் இது சரிப்படாது என்று நீங்கி விலகிப் போய்விட்டாள். இப்போது நோய் மட்டும் எனது. துயரம் மட்டும் எனது. அவள் நான் பார்க்கும் இடத்தில் இருந்தாலும், திரும்பி என்னைப் பிறகு அவள் பார்க்கவேயில்லை. இந்தத் துயரம் இந்த நோய் உன்னுடையது, உன்னுடையது மட்டுமே என்பதைப் போல அவள் கடந்தாள்; கடந்துகொண்டே இருந்தாள். அவள் என் நடுவயதுப் பருவத்தில் வந்தது ஆசிர்வாதம் என்றால் போனது குழப்படி என்று விளக்கமுடியுமா? வந்ததும் போனதும் குழப்படிதான் என்று அறிவு சொல்கிறது. நான் எப்படி அதை அர்த்தப்படுத்துவது?
எனக்கு அவள் கூட வேண்டாம். நான் இந்த நிலைமையை எப்படி அர்த்தப்படுத்துவது? நான் நிற்கும் இந்த அனாதைப் படியைப் பகிர இத்தனை கோடி ஆண்டுகளில் ஒருவர் கூட என்னுடன் இல்லையே.
நான் இப்போது வந்து நிற்கும் இந்தக் கோயில் ஐம்பதாவதாகவோ அறுபதாகவோ இருக்கலாம். காலை விழிப்பில் தொடங்கி எல்லா நினைவுகளும் எல்லா இடங்களும் எல்லாப் பொழுதுகளும் எல்லா இசையும் அவளாக ரணமாக இருந்தாள். காதல் பாடல்கள் முதல் பேருந்தில் இசைக்கும் விரகப்பாடல்கள் அனைத்தும் முட்களைப் போல தலையைக் கொத்திக் கிழித்தன. இருசக்கர வாகனங்களில் விரையும் அத்தனை ஜோடிகளிலும் அவளை, அவளின் சாயலைப் பார்த்து என் வண்டியை நாய் போல அந்த வாகனங்களின் பின்னால் துரத்தியிருக்கிறேன். ஜோதிடர்கள் பரிகாரமாகச் சொன்ன கோயில்களின் கருவறையில் நின்று அதிகாலையில் தேம்பித் தேம்பி கண்ணீராய் நின்றிருக்கிறேன்.
உலகத்தில் எத்தனையோ பிரிவுகள் இருக்கலாம். துயரங்கள் இருக்கலாம். இந்தத் துயரத்தை யாரும் அடையாளம் காணவோ பகிரவோ முடியாது. இதுதான் கூடுதல் துயரமாக இருந்தது எனக்கு. ஒரு குழிக்குள் சென்றுவிட்ட முயலைப் போல அவளைத் தொலைத்தேன். எத்தனையோ முறை கூப்பிட்டேன். வரவேயில்லை. இந்தத் தொலைத்தல் தான், எனக்கு இந்த வாழ்க்கையில் அளிக்கப்பட்ட மாபெரும் தண்டனை. அவளை ஈடுகட்ட, அவள் உடலை அவளது குரலை அவளது இதத்தை அவளது ஈரத்தை அவளது முகவடிவை ஈடுகட்ட யாருமே இல்லை. அவள் மேல்தான் அத்தனை அன்பு. அவள் என்னைத் திரும்பியும் பார்க்காமல் போனதால் அவளைக் கொலை செய்யும் அளவுக்கு வெறுப்பும். நான் இத்தனை அளவு நேசிக்கிறேன். உன்னை நல்லுயிரே என்று சொல்லி நெகிழ்ந்திருக்கிறேன். ஆனால், இத்தனை துயரை நீ தந்துகொண்டிருப்பதால், இந்த உலகிலேயே யாரையும் வெறுக்காத அளவு யாரையும் நிந்திக்காத அளவுக்கு உன்னை வெறுக்கிறேன் நிந்திக்கிறேன்.
உங்களுக்குள் தான் அவள் இருக்கிறாள். வெளியே இல்லை என்று மன நல ஆலோசகர் சொன்னார். அவரது குளிர்சாதன வசதி உள்ள அறையில் அவர் சொன்னது கணநேர ஆறுதலைத் தரும். வெளியே வரும்போது அத்தனையும் பதங்கமாகிவிடும். ஒற்றை இதயத்தின் வாசனையை நாடாதே என்று எனக்கு நெருக்கமான ஜே. கிருஷ்ணமூர்த்தி தனது தம்பியைத் தொலைத்த அனுபவத்திலிருந்து எழுதிய கவிதை எனக்குப் புரிகிறது. ஆனால், ஒற்றை இதயத்தின் வாசனை போல இந்த உலகில் வேறு எதுவும் இருக்கிறதா கிருஷ்ணமூர்த்தி.
அந்த ஒற்றை இதயத்தின் மகத்துவமான வாசனை எனக்கு ஏன் கொடுக்கப்பட்டு என்னிடமிருந்து பறிக்கப்பட்டது? அவள் பறிக்கப்பட்ட அவளைப் பிரிந்ததால் குதறி வலிக்கும் உடலுடன் நான் ஏன் இப்படி அலைய நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறேன். இது எதற்கு எனக்கு மட்டும்.
கண்ணீர் பெருகிப் பெருகி உலர்ந்து போய் விட்ட நிலையில் தான் தீபாவளிப் பண்டிகைக்கு முந்தின தினம் பைத்தியம் போல இந்தக் கோயிலுக்கு வந்து சேர்ந்திருந்தேன். மலையின் சரிவை அனுசரிப்பது போல உள்ளே நுழைந்தது மேடாக ஆகிக் கொண்டே போகும் கோயிலின் அமைப்பும் பிரமாண்டமும் எனக்கு முப்பரிமாணத் திரைப்படத்தைப் போல கண்ணுக்கு கூடுதல் நெருக்கமாக விரியத் தொடங்கியது. நந்தி, பைரவர் எல்லாரும் பெரிதுபெரிதெனத் தெரிந்தார்கள். தீபாவளிக்கு முந்தின தினம் என்பதால் கோயில் எனக்காக மட்டுமே திறந்து தன்னை நிகழ்த்தியது. குடியானவன் கையில் நாற்றை வைத்து விதைப்பது போல ஆங்காங்கே இடப்பக்கமும் வலப்பக்கமும் லிங்கங்கள் என் கண்முன்னர் சுழல்கின்றன. அத்தனை பரபரப்புடன் என் கண்கள் முன்னர் சுழலும் லிங்கங்களையும் பறித்து மனக்கூடைக்குள் போட்டபடி இருந்தேன். ஆயிரம் கால் மண்டபத்தில் உள்ள பாதாள லிங்க சந்நிதியில், நெற்றி வலிக்க முட்டி கீழே விழுந்தேன். இந்தத் துயரத்தை இந்தப் பாதாளத்திலேயே புதைக்கும் எனது கோரிக்கையோடு நின்றேன். தீப தரிசன மண்டபம், 16 கால் மண்டபம், புரவி மண்டபம், ஏழாம் திருநாள் மண்டபம் கடக்கக் கடக்க எத்தனையோ லிங்கங்களும் கடந்தன. இந்தக் கோயில் இருக்கும் மலையே பெரிய லிங்கம். அண்ணாமலையார் சந்நிதியில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த கம்பிகளின் வழியாக ஓடத் தொடங்கினேன். அத்தனை லட்சணங்களையும் கொண்ட திருவுருவமாக பெரும் லிங்கம் வீற்றிருந்தது. உண்ணாமலை அம்மாவின் சந்நிதிக்குச் சென்று குங்கும வாசமே உடலாகத் தெரிய வெளியே வந்தேன். உண்ட முலை உண்ணாத முலை உண்ட முலை உண்ணாத முலை. பரந்து கிடந்த பிரகாரம், மாய வெளித்தட்டாக எனது கண்களின் முன்னால் சுழன்றது.
இங்கே நானும் யார்? எனது துயரங்களுக்குப் பொருளென்ன என்று கேட்டுத்தான் வந்திருக்கிறேன். இந்தக் கோயிலின் மையத்தில் கருவறையில் வீற்றிருக்கும் அண்ணாமலையார் லிங்கத்தைச் சொல்லமாட்டேன்; என் கண்கள் முன்னே சரியும் ஒரு காட்சி போல நெருக்கத்தைக் கொடுத்த இந்தக் கோயிலின் வெளியைப் போல, தற்காலிக நிம்மதியையும் ஆறுதலையும் கொடுத்த இடம் வேறு இல்லை. இனியும் அலைச்சல் இருக்கலாம்; துயரம் இருக்கலாம்; அவளது நினைவும் இருக்கலாம். ஆனால் குதறப்பட்டத்தின் நிணம் தந்துகொண்டிருந்த நெடுநாள் வாதை அந்த இடத்தில் இல்லை. பதினோறு மணிவரை கோயிலை அடைக்கும் ஏற்பாடுகளே தெரியவில்லை. அம்மாவின் கருப்பைக்குள், நள்ளிரவு ரயில் பயணத்தில் ஆடிக்கொண்டே உறங்கும் நிம்மதியை சிவகங்கை குளத்தின் மண்டபத்தில் உணர்ந்தேன்.
இந்தக் கோயிலைப் போல உலகில் வேறு எந்தக் கோயிலும் இருக்கமுடியாதென்று தோன்றியது. இந்தக் கோயிலை வேறு யாரும் என்னிடமிருந்து பிரிக்க முடியாது என்று தோன்றியது.
அப்போது தூணில் ஒரு சிற்பத்தைப் பார்த்தேன். அது தெய்வத்தின் சிற்பமோ புராணக் கதாபாத்திரங்களின் சிற்பமோ அல்ல. அவன் ஒரு குடியானவனாகவோ யாத்ரீகனாகவோ படைவீரனாகவோ இருக்கலாம். தலையில் முக்கோண வடிவிலான சாக்குப் பையையோ மூங்கில் கூடையையோ அணிந்திருந்தான். கண்களிலோ குறும்புச் சிரிப்பு. மூக்கின் கூர்மையும் சிரிக்கிறது. வாயிலும் மீசையிலும் சிரிப்பு நீள்கிறது.
ஜோதிடனின் கிளி, எனக்குரிய சீட்டை எடுத்துக் கொடுத்தது போலப் பற்றிக் கொண்டேன் அந்தக் கதாபாத்திரத்தை. இந்தப் பூமியில் கட்டப்பட்ட எல்லா ஆலயங்களிலும் உள்ள சிலைகளில் வெவ்வேறு கதாபாத்திரங்கள் ஒளிந்துள்ளன. அந்தச் சிலையைக் கண்டுவிட்டால் அவனை/அவளைக் கண்டுவிடக்கூடலாம். உடைந்த லிங்கம், பாழ் லிங்கம், சின்ன லிங்கம், பெரிய லிங்கம், எல்லா திருக்களையும் ஒருங்கே கொண்ட மையலிங்கத்தையெல்லாம் கடந்தபிறகே, அந்தக் குடியானவனின் வேடிக்கை பார்க்கும் கண்களைக் காண்பதற்கு எனக்கு வாய்த்தது.
இன்னும் அந்தக் கோயில் என் கற்பனையில் சுழன்றுகொண்டிருக்கிறது.
திருவண்ணாமலைக் கோயிலுக்குச் சென்று வந்தபின்னர், இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஹான்ஷான் எழுதிய சீனக்கவிதைகளைப் படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. அந்தக் கவிதையில் மீண்டும் அந்த யாத்ரீகனை அடையாளம் கண்டேன். இவையெல்லாம் நிமித்தம் என்று நம்புவதிலிருந்து என்னால் மீளமுடியவில்லை.
அதியற்புதம் மிகுந்த மலைகள், ஓடைகள்
மேகங்களுக்குள் சிறைபட்டுக்கிடக்கும் பசும்நீல
மந்தாரமென
இம்மலை குறித்துக் கதை பல கூறலாம்
என் மெல்லிய தொப்பியை மூடுபனி ஈரத்தால் ஒற்றியெடுக்கும்.
வைக்கோல் பின்னலாலான என் மேலாடையை
பனித்துளிகள் நனைத்திடும்.
யாத்ரீகனின் காலணிகளை என் பாதங்களில் அணிந்துள்ளேன்,
பழைய பிரம்புக்கழியொன்றை என் கைகளில் ஏந்தியுள்ளேன்.
புழுதிநிறைந்த உலகை மீண்டுமொருமுறை குனிந்து பார்க்கிறேன்,
ஆனால் அந்தக் கனவுலகில் இனி எனக்கென்ன வேலை?
அந்தக் குடியானவனும் அந்த யாத்ரீகனும் எத்தனையோ துயரங்களை என்னைப் போலப் பார்த்துவிட்டுத் தான் இப்போது கண்களில் குறும்புடன் பார்த்துச் சிரிக்கிறார்கள் போல. புழுதி நிறைந்த உலகை மீண்டுமொருமுறை குனிந்து பார்த்து சிரிக்க இத்தனை துயரத்தைக் கடக்க வேண்டுமா என்ன? அப்படிப்பட்ட ஒரு கதையைத் தான் ஹான்ஷானின் குளிர்மலை போல எனக்குத் திருவண்ணாமலை கோயிலும் சொல்லியது.
திருவண்ணாமலை கோயிலின் மையக் கருவறைக்குப் பின்னால் வருபவர்கள் கண்ணுக்கு அதிகம் தெரியாத ஒரு சிறிய சந்நிதி இருக்கிறது. அதன் பெயர் தூல சூட்சும சந்நிதி. அந்தச் சந்நிதியின் விக்கிரகம் பூட்டிக் கிடந்த கம்பிக் கதவின் வழியாகத் தெரியவில்லை. தூல சூட்சும சந்நிதி தூல சூட்சும சந்நிதி தூல சூட்சும சந்நிதி.
Comments