Skip to main content

சல்மான் ருஷ்டி - மரணத்தை மறுத்த சொற்களின் கதை

 


ஒரு இலக்கியப் படைப்பு மீது 30 வருடங்களாகத் தீராத வன்மம் கொண்டு அலைந்த பழியின் வடிவம், கடைசியில் ஒரு கத்தியாக உருமாறி, அந்தப் படைப்பை எழுதிய எழுத்தாளனின் மீது, கிட்டத்தட்ட தன் பழியை நிறைவேற்றிக் கொண்டது. அந்தக் கத்தியிலிருந்து, உயிர்தப்பி மீண்ட நினைவுகளின் பதிவுதான் சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’. கருத்தியல் ரீதியான, கலாசார அடிப்படையிலான, அடையாள அடிப்படையிலான குறுகல்வாதங்களும் தூய்மைவாதங்களும் கூர்மையான கத்தியாக மாறிய பயங்கரத்தைத் தான் இந்நூல் விவரிக்கிறது.

சல்மான் ருஷ்டியின் புத்தகத் தலைப்பு கூறுவதைப் போலவே, கொலை முயற்சி மீதான ஆழ்தியானங்களே இப்புத்தகம். சல்மான் ருஷ்டி மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் சர்வதேச அளவில் குரோதம் ஏற்படுவதற்கும் கோமேனியின் மரண ஆணைக்கும் காரணமான ‘சாத்தானின் வசனங்கள்’ நூலை இரண்டு பக்கங்களுக்கு மேல், அவரைக் கத்தியால் குத்திய இளைஞன் ஹதி மதார் படிக்கவில்லை. சல்மான் ருஷ்டியை கொலை செய்வதற்கு அவனுக்கு அவரைப் பற்றிய இரண்டு யூ டியூப் காணொளிகள் போதுமானதாக இருந்திருக்கிறது.

சாத்தானின் வசனங்கள் நூல் பிரசுரமாகி 33 வருடங்கள் ஆகிவிட்டன. சல்மான் ருஷ்டியின் வாழ்க்கையிலும் உலக மக்களின் வாழ்க்கையிலும் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. சுதந்திரமான சிந்தனைகளுக்கும் அதை வெளிப்படுத்தும் கலைஞர்கள், சிந்தனையாளர்களுக்கும் பாதுகாப்பான இடமென்று கருதப்படும் அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணத்தின் வடகிழக்குப் பகுதியில் ஷெடாக்வ வட்டரங்கத்தில் பெரிய பாதுகாப்போ அச்சுறுத்தலோ இல்லாத அந்தரங்கமான சூழலில் ஹதி மதாரின் கத்தி தன்னை நோக்கி விரைந்துவருவதைக் கூர்ந்து சல்மான் ருஷ்டி பார்ப்பதன் வழியாக இந்த நினைவுப் பதிவு தொடங்குகிறது.

சல்மான் ருஷ்டி பல நொடிகளுக்கு முன்பாகவே தன்னைக் கொலைசெய்ய வருபவனைப் பார்த்துவிடுகிறார். ஆனால், முதுகைக் கூடத் திருப்பாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார். “சரி, நீதான் அது. இந்தத் தருணம்தானே உனக்கு வேண்டும், எடுத்துக்கொள். ஆக, இறுதியில் அது வந்துவிட்டது. மேன்மைமிக்க அந்த நிகழ்வு” என எதிர்கொள்கிறார்.

விதிவசப்பட்டது போல சல்மான் ருஷ்டி, அந்தக் கொலைமுயற்சியை எதிர்கொள்கிறார்.

 தாக்குதலுக்கு வந்தவன் தனது உடலில் இயங்கிய 27 நொடிகள் அந்தரங்கமானது என்கிறார். கத்திக்கு இருக்கும் அந்தரங்கம் துப்பாக்கிக்கு இல்லை என்றும் நம்மிடம் பகிர்கிறார்.

தாக்குதலைச் சற்று முன்னரே அறிந்திருந்தும் சல்மான் ருஷ்டி ஏன் செயல்படவில்லை என்று உறவினர்களும் நண்பர்களும் சம்பவத்துக்குப் பிறகு அவரிடம் கேட்கின்றனர். ஒரு திடமான நிச்சயமான எதார்த்தத்துக்குள் வன்முறை என்னும் நிகழ்ச்சி அரங்கேறும்போது அங்கேயிருப்பவர்களை புதிய எதார்த்தத்தை புரிந்துகொள்ள முடியாதவண்ணம் குழப்பிவிடுகிறது என்ற பதில் தவிர ருஷ்டிக்கு வேறெந்த பதிலும் இல்லை.

எழுத்தாளர்கள், வாசகர்கள் கூடியிருக்கும் மேடையில் உரை நிகழ்த்துவதற்காக காத்திருந்த சல்மான் ருஷ்டியின் உடல் மீதும் இப்படித்தான் வன்முறை ஏற்கெனவே இருந்த எதார்த்தத்தை நொறுக்கி முன்னேறியது.

சல்மான் ருஷ்டியின் வலதுபக்கத் தாடை அவன் கையால் முதலில் தாக்கப்படுகிறது. அடுத்து கழுத்தில் கத்தி இரண்டு முறை பாய்கிறது. அடுத்து மார்பில் காயம். நெற்றியில் காயம். கல்லீரலைக் கிட்டத்தட்ட சேதாரப்படுத்தி விட்டது. மூளையில் இன்னும் ஒரு மில்லிமீட்டர் கூடுதலாக இறங்கியிருந்தால் ‘கத்தி’ என்ற இந்தப் படைப்பே கிடைத்திருக்காது. வலது கண் நிரந்தரமாகப் பறிபோகும் அளவுக்கு கண்ணில் சேதம்.

மருத்துவமனையில் நினைவு திரும்பியவுடன் அந்தக் கொலையாளியுடன் அந்தரங்கமாகச் செலவிட்ட 27 நொடிகள் மீதான தியானத்தை நம்மிடம் பகிர்கிறார் ருஷ்டி. அந்த 27 வினாடிகளில் பரமண்டலங்களிலிருக்கும் எங்கள் பிதாவே என்ற மந்திரத்தைச் சொல்லிவிடலாம். மத ரீதியானதைத் தவிர்த்தால், சேக்ஸ்பியரின் 14 வரிக்கவிதைகளில் ஒன்றை எளிதாகப் படித்துவிடலாம். கொலைக்கு முயற்சித்த தாக்குதலாளியுடன் தான் செலவிட்ட அந்தரங்கத்தையும் தனக்கு நெருக்கமான வாசகன் தன் எழுத்தின் மீது செலுத்தும் அந்தரங்கத்தையும் நினைவுகூர்கிறார்.

கத்தியை ஒரு கருத்துருவமாக பல தூக்கமற்ற இரவுகளில் யோசித்துப் பார்த்திருக்கிறார் ருஷ்டி. மொழியும் ஒரு கத்திதான் ;அது உலகத்தை வெட்டி அதன் அர்த்தத்தை, அதன் அகத்தில் நடக்கும் வேலைகளை, அதன் ரகசியங்களை, அதன் உண்மைகளை வெளிக்காட்டக்கூடியது என்கிறார். படிப்பவர்களின் கண்களைத் திறந்து அழகை உருவாக்கக் கூடியது மொழி என்கிறார். அத்துடன் மொழிதான் என்னைத் தாக்கவரும் ஆயுததாரியுடன் சண்டையிடுவதற்கான கத்தி என்றும் குறிப்பிடுகிறார்.

போர்ஹேயின் சிறுகதை ஒன்றில் வருவதுபோல, கையில் வைத்திருப்பவனுடையதல்ல; ஆயுதத்திலேயே வன்மமும் பழியும் காலம்காலமாக உறைந்திருக்கிறதென்பதைப் போல, தனக்கென்று உயிர்வந்ததைப் போல, சல்மான் ருஷ்டியின் உடலின் மீது குத்தியும் வெட்டியும் தனது ஆட்டத்தை கத்தி நிகழ்த்திக் கொண்டிருந்திருந்ததாகச் சொல்கிறார் ருஷ்டி.

கடவுளோ மதமோ ஏதுமற்ற வேசிமகன் என்று தன்னைப் பற்றிக் கேலியாக விவரிக்கும் சல்மான் ருஷ்டி, மரணத்தின் முனையில் இயற்கையை மீறிய எந்தப் புலன்கடந்த அனுபவமும் நிகழவில்லை என்று கூறுகிறார். “என் உடல் இறந்துகொண்டிருந்தது, தன்னோடு என்னையும் எடுத்துக்கொண்டு போகிறது. உடல் சார்ந்த தீவிரமான உணர்வு அது.” என்றே குறிப்பிடுகிறார். ஆன்மாவின் அழிவின்மையில் நம்பிக்கை இல்லாதவனான தனக்கு இந்த கொலைமுயற்சி சம்பவம் அதை உறுதிப்படுத்தியதென்றும் கூறுகிறார். உடலும், ‘நானும்’ மரணத்தின் விளிம்பிலேயே அந்தச் சம்பவத்தில் இருந்ததாக ருஷ்டி குறிப்பிடுகிறார்.

அற்புதங்கள் என்று எதிலுமே நம்பிக்கை இல்லாத சல்மான் ருஷ்டி தனது மறுபிழைப்பு ஒரு அற்புதம் என்று சொல்லப்படுவதை முரண்நகையாகத் தெரிந்தாலும் நம்புகிறார்.

கலையும் எழுத்தும் தொடர்ந்து வைதீகத்துக்கு சவால் விட்டு வெல்லும் அற்புதம் என்கிறார். தனது மறுபிறப்பை தான் எழுதிய சொற்களின் வெற்றி என்றும் தனது விஜயநகரம் நாவலின் கதாபாத்திரத்தைச் சுட்டிக்காட்டிக் குறிப்பிடுகிறார்.

“காலம் ஒப்புக்கொண்ட கருத்துகள் தன்னுடைய எதிரிகள் என்பதைக் கலை அறியும். ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்துகள் என்பவை அர்த்தமிழந்த தேய்வழக்குகளே. அவற்றைப் போன்றவையே சித்தாந்தங்களும். கண்ணுக்குத் தெரியாத வானத்துக் கடவுள்களின் ஒப்புதலைச் சார்ந்தவை, அப்படிச் சாராதவை என்று அவை இரண்டு வகைகளில் உள்ளன. சிந்திக்கவும் ஒன்றைப் புதுக்கிளர்ச்சியோடு பார்க்கவும் நம்முடைய உலகத்தைப் புதுப்பிக்கவுமான நமது திறன், கலை இல்லாவிட்டால் வாடி உதிர்ந்துவிடும்”

அந்தக் கொலைத் தாக்குதல் நடைபெற்று சுற்றியிருந்த விருந்தினர்கள் பார்வையாளர்களால் தாக்குதலுக்கு வந்தவன் தடுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் தரையில் சல்மான் ருஷ்டி கிடக்கும்போது சத்தம்போட்டு அழுததை எல்லாரும் பார்த்திருக்கின்றனர். ஆனால், மருத்துவமனையில் தனக்கு நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தை நினைவுகூரும் ருஷ்டி, உடல் வலி எதையும் உணராத தன்மை தனக்கு இருந்ததாகக் குறிப்பிடுகிறார். தனது நினைவில் வலியின் பதிவு மட்டும் இல்லாமல் போனதை விந்தையோடு குறிப்பிடுகிறார்.

கொலை மூர்க்கத்தோடு கத்தியால் தாக்கிக் கொண்டிருப்பவனை நிராயுதபாணிகளாக இருந்த விருந்தினர்களும் பார்வையாளர்களும் பாய்ந்து பின்விளைவு எதையும் பொருட்படுத்தாது தடுத்த நடவடிக்கையை மாபெரும் வீரச்செயல் என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். கூட்டத்துக்குப் பாதுகாவலாக வந்த முன்னாள் தீயணைப்புப் படை வீரர், ருஷ்டியின் கழுத்திலிருந்து வழியும் ரத்தத்தை தனது கட்டைவிரலால் பொத்தி அடைக்கிறார். கழுத்து தமனியிலிருந்து வெளியே பாயும் ரத்தம் உயிர் ரத்தம் என்பதை உணர்ந்து அந்தக் காரியத்தைச் செய்கிறார். அவரை ருஷ்டி, திரு.கட்டைவிரல் என்று நன்றியுடன் நினைவுகூர்கிறார்.

நவீன உலகின் மகத்தான ஆயுதங்களோடு உலகம் முழுவதும் மற்றமை மீது உயிர் பெற்றிருக்கும் மாபெரும் வெறுப்புக்கும் அதை முறியடித்த பயன்கருதாத நேசத்துக்கும் இடையில் மீட்கப்பட்ட ஒரு எழுத்துக் கலைஞனின் கதைதான் ‘கத்தி’.

சாத்தானின் வசனங்கள் மீதும் அதை எழுதியவன் மீதும் வைக்கப்பட்ட அவதூறைப் பற்றி அவர் சொல்லும்போது, நகைச்சுவை உணர்வு கொண்டவர்களுக்கும் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களுக்கும் இடையேயான சண்டை என்று குறிப்பிடும் ருஷ்டி, தன்னைக் கொலை செய்தவனுக்கு சிரிக்கத் தெரியாததனாலேயே கத்தியை எடுத்து கொல்ல முயல்வது சாத்தியமானது என்று விமர்சிக்கிறார்.

“கலை, தன்னை ஒடுக்குபவர்களைக் கடந்து அது நீடித்து நிற்கிறது. கவிஞர் ஓவிட், அகஸ்டஸ் சீஸரால் நாடுகடத்தப்பட்டார்; ஆனால் ஓவிட்டின் கவிதை ரோம சாம்ராஜ்யத்தைக் கடந்து வாழ்கிறது. கவிஞர் மாண்டல்ஸ்டாமின் வாழ்க்கையை ஜோசஃப் ஸ்டாலின் சிதைத்தார்; ஆனால் அவருடைய கவிதை சோவியத் யூனியனைத் தாண்டி நிற்கிறது. ஜெனரல் ஃபிராங்கோவின் அடியாட்களால் கவிஞர் லோர்கா கொலை செய்யப்பட்டார்; ஆனால், அவருடைய கலை ஃபிராங்கோவின் அரசியல் கட்சியான ஃபலாஞ்சின் பாசிசத்தைத் தாண்டி நிலைத்திருக்கிறது.”

நாம் கதைகள் ஒன்றுக்கொன்று நடத்தும் உலகப்போர் காலகட்டத்துக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம் என்று ருஷ்டி உரைக்கிறார். எதார்த்தம் குறித்த மாறுபட்ட விளக்கங்களுக்கிடையிலான போர் என்று வலியுறுத்தும் ருஷ்டி அதனுடன் எப்படி போராடுவது என்பதை நாம் பயிலவேண்டிய அவசியமுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.



ரஷ்யாவில் ஒரு கொடுங்கோலன் தோன்றி உக்ரைனை அந்தக் கொடூரம் பாதித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். உக்ரைன் மக்களை நாஜிக்கள் என்று குற்றம்சாட்டுமளவுக்கு அந்த கதை சென்றுவிட்டது. அமெரிக்காவோ மத்திய கால மனநிலைக்குச் சென்று கருப்பின மக்கள், பெண்களின் உடல் மீது வல்லாதிக்கத்தைச் செலுத்த தொடங்கியுள்ளதைக் குறிப்பிடுகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய மதவெறுப்புக் கருத்துகளை இந்தக் கதைகள் நியாயப்படுத்துவதைக் குறிப்பிட்டு, இந்தியாவில் எழுச்சிபெறும் இந்து மதவாதம் மற்றும் அதன் அரசியல் சர்வாதிகாரம், வன்முறை மூலம் ஜனநாயகத்தை படிப்படியாகச் சிதைத்து வருவதையும் சுட்டிக்காட்டுகிறார். இந்திய வரலாறு இதனால் பொய்யான கதைகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளதைத் துயரத்துடன் குறிப்பிடுகிறார்.

சர்வாதிகாரிகள், ஜனரஞ்சகத் தலைவர்கள், முட்டாள்கள் சொல்லும் கதைகளை எப்படி எதிர்கொள்வது?

அவர்கள் சொல்லும் கதைகளை செல்லாமல் போகச் செய்யும் வலுவான கதைகளை நாம் சொல்ல வேண்டும். மனிதர்கள் வாழ விரும்பும் கதைகளை நாம் சொல்லவேண்டும்.

சல்மான் ருஷ்டி தன் மீது நடந்த கொலைமுயற்சிக்கு முன்பு டிஷானி  தோஷிக்குக் கொடுத்த நேர்காணலொன்றின் வழியாக நம் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் இன்னொரு நெருக்கடியையும் சுட்டிக்காட்டுகிறார்.

(நன்றி: அகழ் இணையத்தளம்)

Comments