Skip to main content

கழுதை நான்


காவிய காலத்தில்

ஒரு கழுதை

எப்படி இருந்ததோ

அதிலிருந்து

ஒரு செல்

ஒரு உறுப்பில்

கூட

பரிணமிக்காத

கழுதை

நான்.


உங்கள் அலங்காரப் பாண்டங்களுக்கு

எது சட்டகமோ

அந்தப் புராதன எலும்புதான்

நான்.


ஆபரணங்களோ

தளவாடங்களோ

கருவிகளோ

அழகோ

அன்போ

உள்ளும்

புறமும் ஏறாத

உழைப்பு என

நீங்கள் மொழிபெயர்க்கும்

வெறும் கழுதைதான் நான்.


இம்மலைவாசஸ்தலத்தின்

தடுப்பணை

கவர்னர் மாளிகை

மலர் தோட்டம்

படகு இல்லம்

பங்களா வீடுகள்

தேவாலயங்கள்

கோயில்கள்

தேயிலைத் தொழிற்சாலைகள்

தொழிலாளர் குடியிருப்புளைக் கட்ட

என் முதுகில்

மண்சுமந்து

சிற்றாறுகளை

சிறுகுன்றுகளை

ஒற்றையடித் தடங்களை

தடங்களே உருவாகாத சிறு வனங்களை

கடந்தேன் நான்

என்றாலும்

ஒரு நினைவகமோ

சிலையோ

சதுக்கமோ

ஏதுமற்ற

கழுதைதான் நான்.


என்னை ஓட்டிச்செல்லும் எஜமானன்

என் ஆறாத காயங்களை உலரக்கூட விடுவதில்லை

மழையிலும் வெயிலிலும்

நீர்வழிகளிலும்

என்னை அடித்து

வழிநடத்துபவன் அவன்

மலை ஆற்றில் இறங்கும்போது

அவன் கழற்றும்

அழுக்கேறிய லுங்கியை

அரைக்கால் சட்டையை

அதில் உள்ள பீடியைக்

கழித்துப் பார்த்தால்

அபரிமிதமோ உபரியோ

சதையில் கூட தங்காத

சக மிருகங்கள்தாம்

நாங்கள்.


எனக்கென்று தனிக்கதைகள் இல்லை

எந்தப் புராணக் கடவுளரின் வாகனமாகவும்

நான் இடம்பெறவேயில்லை

உச்சைஷ்ரவஸ் போன்ற மகத்துவமான பெயர்

வரலாற்றில்

என்னைத் தீண்டக்கூட இல்லை.


நான் யார் ?

நீங்கள் கேட்ட சுமைகொண்ட

கேள்வி

என்னுடையதல்ல.


எனினும்

புதிய விடுதியொன்றின் கட்டுமானத்துக்காக

ஈரம் சொட்டச் சொட்ட

ஆற்றுமணல் பொதியுடன்

அவன்

கைப்பிரம்பு

என் உடம்பை

நெருங்கிக் கொண்டிருக்கும்

அவகாசத்தில்

கற்பூர மரத்தின் கீழ்

சற்றே நின்று இளைப்பாறி

கேட்டுக் கொள்கிறேன்.


நான் யார்?

(கவிஞர்கள் யவனிகா ஸ்ரீராமுக்கும், கல்பற்றா நாராயணனுக்கும்)

(நன்றி: அகழ் இணைய இதழ்)

Comments