பள்ளியெனவும் நூலகமெனவும் தொனித்த ஒரு பாழடைந்த மாளிகைக்குள் நுழைந்தேன். படிகளேயில்லாமல் நிர்மாணத்தில் உள்ள ஓர் அந்தரப்பட்டிணத்துக்கு ஏறிவந்து விட்டேன். பூமியில் உள்ள கட்டிடங்களை வாகனங்களை அலையும் மனிதர்களை எல்லாம் பார்க்கும் வகையில் கண்ணாடித் தளத்தில் அந்தரப்பட்டிணம் உருவாகிக் கொண்டிருந்தது. அந்தரப்பட்டிணத்தின் சுவர்கள் உயர்ந்துகொண்டிருந்தன. கல் தச்சர்கள், நவீன சிற்பங்களை தூசிப்புகை சூழ செதுக்கிக் கொண்டிருந்தனர். சிறு உணவங்கங்கள் அந்தரப்பட்டிணத்தில் மூலைகளில் தெரிந்தன. அந்தரப்பட்டிணத்துக்கு ஏறி வந்துவிட்டேன். ஆனால் இறங்கும் வழி தெரியவில்லை. கீழே குதிக்கும் அளவுக்கான உயரத்திலும் இல்லை. மதிய வெயில் ஏறியபோது மேற்பார்வையாளர்கள் கட்டுமானத்திலிருக்கும் அந்தரப்பட்டிணத்தைப் பார்வையிட வந்தனர். ஒரு தண்டனை போல, ஒரு திறந்த சிறையைப் போல அந்தரப்பட்டிணம் ஆகிவருவதை உணர்ந்தேன். அந்தரப்பட்டிணத்தின் தொழிலாளிகள் எல்லாரும் நேசபாவமின்றி அன்னியமாக அச்சமூட்டக்கூடியவர்களாகத் தெரிந்தனர். இருப்பதிலேயே சாமானியமாகத் தெரிந்த ஒரு தொழிலாளியிடம் தரையில் இறங்குவதற்கு வழி உண்டா என்று கேட்டேன். பீடி குடித்துக் கொண்டிருந்த அவரிடம் ரகசியத்தைக் கேட்கும் குழைவைச் சேர்த்தேன். இங்கே மேலேறி எளிதாக வந்துவிடலாம். எனக்குத் தெரிந்தவரை இறங்குவதற்கு வழியே இல்லை என்றார். வீட்டில் என் அம்மா தேடிக்கொண்டிருக்கும் ஞாபகம் உறுத்தலாக ஆரம்பித்தது. நான் அந்தரப்பட்டிணத்தில் வசமாக மாட்டிக்கொண்டுவிட்டேன். வீட்டுக்கு திரும்பிப் போகவேண்டும். அம்மா தூர தொலைவில் வீட்டில் என்னைக் கடிந்தபடி காத்திருக்கிறாள். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிதொலைந்து போகும் கனவுகளை வேறுவேறு விதமாக கண்டுவருகிறேன். தொலைந்துபோகும் எல்லா கனவிலும் அம்மா வீட்டில் காத்திருப்பது மட்டும் மாறாமல் தொடர்கிறது.
(நன்றி: அகழ் இணைய இதழ்)
Comments