எனக்கு 21 வயதில் திருநெல்வேலியில் பாதி இடிபாடுகளோடு இருந்த சிந்துபூந்துறை பழைய கம்யூனிஸ்ட் கட்சிக் கட்டடத்தில் நடந்த நூல் அறிமுகக் கூட்டத்தில் கோணங்கியுடன் சேர்ந்து எஸ். ராமகிருஷ்ணன் அறிமுகமானார். தாவரங்களின் உரையாடல் சிறுகதைத் தொகுப்பை காலை வெளியிட்டு மிகவும் தீவிரமான உரையாடல் நாள்முழுவதும் நிகழ்ச்சிக்குப் பிறகும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காலச்சுவடில் லக்ஷ்மி மணிவண்ணன், மனுஷ்யபுத்திரன் ராமகிருஷ்ணனை எடுத்திருந்த பேட்டியும் உதிரியாகப் படித்திருந்த சிறுகதைகளும் கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அப்படித்தான் அவருடன் பழக்கமும் உரையாடல்களும் ஆரம்பித்தது. திருநெல்வேலி, நாகர்கோவில் சுங்கான்கடை, கோயில்பட்டி, சென்னை என சில ஆண்டுகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவருடன் பேசும் வாய்ப்புகளைத் தேடி உருவாக்கிக் கொண்டிருந்தோம். சென்னை முகப்பேரில் புதிய வீடுகளைக் கட்டுவதற்காக பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டிருந்த மணலில் பல இரவுகளை தளவாயும் நானும் நண்பர்களும் எஸ்.ராவோடு பேசி நள்ளிரவுகளைக் கடந்திருக்கிறோம். இன்றும் என் கவிதை உலகின் சாரமாக ராமகிருஷ்ணன் உரையாடல்கள...