Skip to main content

அப்பாவின் ஞானத்திலிருந்து சில பகுதிகள் - ஏ. கே. ராமானுஜன்

 


மைசூரில் கன்னடம், தமிழ், ஆங்கிலம் சரளமாகப் புழங்கிய குடும்பத்தில் 1929 ஆம் ஆண்டு பிறந்தவர் அத்திப்பட்டே கிருஷ்ணசாமி ராமானுஜன். கணிதம் மற்றும் புள்ளியியல் பேராசிரியராக இருந்த தந்தையார் அறிவுஜீவி வாழ்க்கைக்கான ஆதர்சமாக இருந்திருக்கிறார். அம்மா கல்லூரிப் படிப்புக்குச் சென்றிருக்காவிட்டாலும் தமிழிலும் கன்னடத்திலும் விரிவாக வாசித்தவர். ஆச்சாரமானவர்களாக பெற்றோர் இருந்தாலும், வைதீகம், சடங்குகள், இறுக்கமான நம்பிக்கைகளிலிருந்து ஏ. கே. ராமானுஜன் சிறுவயதிலேயே வெளியேறுவதற்கு அவர் கற்ற கல்வி உதவியிருக்கிறது. கிறிஸ்தவ திருச்சபை பள்ளிக்கல்வி மூலம் ஆங்கில வாசிப்பில் சிறுவயதிலேயே மூழ்கத்தொடங்கியதாகச் சொல்கிறார். தமிழின் சங்க கவிதைகள், கன்னட வசனகவிதைகளை சர்வதேச அளவில் சுவாரசியமாக மொழிபெயர்த்து அறிமுகப்படுத்தியவர் என்பது அவரது பிரபலமான அடையாளம். வாய்மொழிக் கதைகள், தாலாட்டுப் பாடல்கள், நாட்டார் பாடல்கள், பழமொழிகள் மூலம் ஒரு கலாசாரத்தை தீவிரமாக ஆராயமுடியும் என்று வெளியுலகத்துக்கு உணர்த்திய இந்திய அறிஞர்களில் முதன்மையானவர் ராமானுஜன். பேராசிரியர், ஆய்வாளர், மொழியியலாளர் என பல அடையாளங்களைத் தாண்டி முதன்மையாக ஏ.கே. ராமானுஜன் கவிஞர். கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் கவிதைகளை எழுதியவர். சென்ற நூற்றாண்டின் சிறந்த இந்தியக் கவிஞர்களில் ஒருவர் என்கிறார் கிரிஷ் கர்நாட். தமிழ், கன்னடம், ஆங்கிலம், சமஸ்கிருத தொல் இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் இரண்டின் தாக்கங்களையும் கொண்ட ராமானுஜனிடம் மரபு, ஒரு பண்பாட்டுக் குதிர் போல இறந்தகால ஏக்கவுணர்வு இல்லாமல் கவித்துவ பரிசீலனை மற்றும் விசாரணையாகத் தொழில்படுகிறது. அம்மா, அப்பா இருவரும் இவரது கவிதைகளில் தொடர்ந்து நினைவுகூரப்படுகிறார்கள். பார்வையில் நவீனம், உள்ளொடுங்கிய தன்மை, மௌனம், அசோகமித்திரனை ஞாபகப்படுத்தும் விலகிய தன்மையோடு வன்மையான காட்சி அனுபவங்களை அளிக்கும் கவிதைகள் ராமானுஜனுடையவை. தமிழில் அசோகமித்திரன், ஞானக்கூத்தன் தொடங்கி எம்.டி.முத்துக்குமாரசுவாமி வரை நேரடித் தொடர்பையும் நட்பையும் வைத்திருந்த ராமானுஜன், ஆத்மாநாம் பற்றி எழுதியிருக்கும் கவிதை அபூர்வமானது. எது எதுவெல்லாம் எது எதனோடோ தொடர்பில் இருப்பதை பார்த்து இணைக்கும் கண்கள் ராமானுஜனுடையது. சிகாகோ பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியராகப் பணியாற்றிய கவிஞர் ராமானுஜன் 64 வயதில், ஒரு அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில், அதைத் தாங்க இயலாமல் இறந்துபோனார்.


1. அப்பாவின் ஞானத்திலிருந்து சில பகுதிகள்…

      கேசத்தைப் படிய சீவிக்கொள்.
      நிராசையால் கவலையை அதிகப்படுத்திக் கொள்ளாதே.
      நிராசை என்பது வினோதமான வியாதி.
      நிராசை
      மரங்களுக்குக்கூட நிகழ்வதாக
      எனக்குத் தோன்றுகிறது.
      000
      பகல்தான் தன்னைப் புதுப்பித்தபடி உள்ளது
      புராதன காலங்களிலும்
      இரவு
      புராதனமாகவே இருந்தது.
      000
      காதலில் பாதுகாப்பாக இருக்க நீ விரும்பினால்
      ஒரு கடல்கன்னியுடன் கூடு.
      அவள்தான் ஒற்றைத்தொடைக்காரி.
      000
      மற்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதும்
      பேய்கள் கல்லுடன் புணர்வதற்கு
      சிற்பம்தான் ஒரே நிரூபணம்.
      000
      நகரக் குளத்தில்
      ஒருவன்
      தன்னுடைய முழு ஆடைகளோடு
      தற்கொலை செய்துகொண்டான்:
      சில நபர்களே மரணத்துக்காக
      முழுக்கவும் உரிக்கிறார்கள்.
      000
      விபத்து கூட
      விபத்துக்கு வாய்ப்புள்ளவர்களையே
      நாடுகிறது.
      சூதாட்டத்தின் பாக்கிகள் கூட
      மூதாதையரின் எலும்பிலேயே வளர்க்கப்படுகிறது.
      000
      எல்லாமே இந்த நாள்களில் அம்மணமாகத் தெரிகின்றன
      மரங்கள், நைலான் சேலைகளில் வெளிப்படும் பெண்கள்
      செங்கல் கட்டிடங்களில்
      பட்டைகளாக மட்டுமே சிமெண்ட் தெனபடுகிறது.
      மேலுறையே இல்லாமல் வரும் மென் அட்டை நூல்கள்:
      குணங்களும் கூட
      நாய்களையும் பசுக்களையும் போல நிர்வாணமாக நடந்துபோகின்றன.
      000
      வறுமை எளிதாகத் தாங்க இயலக்கூடியதல்ல.
      உடம்பு அவ்வளவு எளிதாக அணியக்கூடியதல்ல.
      அதனால் பிறக்காத எனது குழந்தைகளை எச்சரிக்கிறேன்
      இதைச் சொல்லாதபோது அவர்கள் பிறப்பை
      தேர்ந்தெடுத்துவிடுகின்றனர்.

      2. பிம்பங்கள்

        ஒரு பிரபலத்தை சந்தித்தபின்னர்
        நான் அவன் மனத்தில்
        ஒரு பிம்பம்
        கண்ணாடியைக் கடப்பதைப் போல
        கழியப்போகிறேன்.

        அதற்குப் போய்
        ஏன்
        இத்தனை சாமர்த்தியம் காண்பித்தேன்?

        3. சில நாட்கள்

          நடப்பது
          ஒளியின் ஓர் வீச்சு;
          நடப்பதென்பது
          முகமற்ற பரிச்சயங்களின்
          ஆலங்கட்டி மழை.

          4. பூனா ரயில் ஜன்னலிலிருந்து

            நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன்.

            ஒரு மனிதன் இரண்டு பாறைகளுக்கிடையே வெளிக்குப் போவதையும்
            ஒரு காக்காயையும்.

            ரயிலில் கிடைக்கும் தேநீரைக் குடிக்கிறேன்.
            ஒரு மைல்கல் புதிதாக
            ஆரஞ்சு மற்றும் கருப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது
            எண்கள் அதன் பக்கவாட்டுகளில்.

            செவிடாக்கும் சத்தத்துடன்
            கடந்துபோகும் ஒரு ரயில்
            பிறகோ நிசப்தம்.

            குன்றுகள் எழுந்து வீழ்கின்றன
            இரண்டு ஜோடி ஜன்னல்களில்
            முகங்கள்
            ஒரு கொத்துக் குழந்தைகள்
            சிகப்புத் தலைப்பாகையில்
            வெள்ளிநரைமுடிகள்.

            எனது தேநீரைப் பருகுகிறேன்.
            மூன்று பெண்கள் தலையில் கூடைகளுடன்
            குன்றின் அடிவாரத்தில் மெதுவாக ஏறுகின்றனர்
            அவர்களில் ஒருத்தி
            ஒருசாய்த்து நடந்தபடி
            சரிவையும் தலையிலுள்ள கூடையையும்
            சமன்செய்கிறாள்
            பின்வயது கர்ப்பம்.
            எருமைகள் வால்களால் ஈக்களை விரட்டிக்கொண்டிருக்கின்றன.

            ஆறு புறாக்கள். தேநீர்
            களைத்துப்போன பயணியின் சிறுநீரைப் போல
            கறுத்துவிட்டது.
            ஆறு புறாக்கள் அப்படியே உட்கார்ந்திருக்கின்றன.

            புதிதாக இடப்பட்ட ஆறுமுட்டைகள்
            புல்லில்
            உள்ளே மேலே அருகிலே
            தண்ணீரில்.

            நான் அவனைப் பார்த்தேன்
            இரண்டு பாறைகளுக்கிடையே.
            மனித பிருஷ்டங்களின்
            சீர்மை
            குறித்து நான் யோசிக்கிறேன்.

            5. ஆகஸ்ட்

              ஆகஸ்ட் உஷ்ணமாக இருந்தது
              அதுபோலவே செப்டம்பரும்.
              எனது சகோதரர்களில் மூன்று பேரும்
              எனது சகோதரிகளில் இருவரும்
              ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில்
              பிறந்தவர்கள்.

              நவம்பர் மிகவும் குளிரானது.
              டிசம்பரோ சில்லிடுவது.
              அம்மா நவம்பரில் இறந்தாள்
              அப்பாவுக்கு டிசம்பரில் பக்கவாதம் தாக்கியது.

              துவாரபாலகர்களைப் போல
              ஜனவரி
              முன்னாலும் பின்னாலும் பார்த்தபடி இருக்கிறது
              உள்ளே கோடையாகவும்
              வெளியே குளிர்காலமாகவும்: முதல் காதல்
              மற்றும் காதலர்களின் சண்டைகள்.

              அடுத்த மூன்று மாதங்கள்
              கிராமத்திலிருந்த பாட்டியின்
              வீட்டுக்காப்பி போல சூடற்றது.
              கரடிகளுக்கு நீளுறக்கங்கள்
              மற்றும் பூனைக்கும் எலிக்கும் திருமணம்.

              நொண்டிப் பெண் கால்கள் வேண்டி
              அணைக்காது எரியவிட்ட
              கோவில் தீபத்தைப் போல
              ஏப்ரலில் ஜூன் வரை
              இரவும் பகலும் எரிந்தன.

              ஜூலையோ போரில் இறங்கிவிட்டது.
              தலைக்கு மேலே வெடிகுண்டுகள் பறந்தன
              எலும்புவரை எரித்த நாபாம் கனல்கள்
              விவாகரத்து காகிதங்களின்
              திடீர் வெள்ளத்தில்
              குழந்தைகள் கிட்டத்தட்ட அமிழ்ந்துவிட்டன.

              6. கசாப்புக்காரனின் தாவோ

                சீனாவில் உள்ள கசாப்புக்காரன்
                எருதைப் பார்ப்பதற்கு முன்னர்
                அந்த எருதினைத் தீவிரமாக வெறிக்கிறான்
                அந்த விலங்கு எப்படி இணைக்கப்பட்டிருக்கிறதென்று.
                அதன்பிறகு
                தனது கத்தியை இடைவெளிகளில் நகர்த்துகிறான்
                எருதின் மீது
                கையை நகர்த்தியபடி தன்னிச்சையாக அறிந்துவிட்டான்.
                அவனுக்கு இப்போது எருது
                இடுப்புச்சதையாக
                விலா எலும்புப்பகுதியில் உள்ள மென்சதையாக
                முதன்மை விலா எலும்பாக
                நாய் விரும்பும் எலும்புத்துண்டாக
                திருமணங்கள் அல்லது சீப்புகள் செய்வதற்கு
                இரண்டு கொம்புகளாக
                பாதசாரி குடியானவனுக்கு செருப்புகளாக
                குதிரைக்கான சேணம், கடிவாளமாக
                தோல்வாராக

                சூரிய கிரணம் பிடிக்காமலிருக்க
                ஊர்வலங்களில் பேய்களைத் தவிர்ப்பதற்காக
                விருந்துகளுக்காக ஊரழைப்பு செய்யவும்
                நண்பர்களையும் எதிரிகளையும்
                சண்டைக்கு அழைக்கவும் உதவும்
                முரசுகளுக்குத் தோலாக

                இளம்பிள்ளை வாதம் வந்த குழந்தைகள் மேல்
                தெளிப்பதற்காகவும்
                கிராம எல்லைகளைப் பாதுகாப்பதற்காகவும்
                ரத்தம் வாளியில் தயாராக.

                7. ஒரு ருசி

                  பால்குடியை மறக்காத குழந்தைகளுக்கு
                  வேப்பங்கொட்டைகளை அரைத்து
                  தாய்மார்கள்
                  முலைக்காம்பில் பூசுகின்றனர்
                  பிற்கால வாழ்க்கையின் கசப்புக்கு
                  ஒரு மாதிரியாக.

                  8. சேரி பூண்டுச்செடிகள்

                    பனியைக் குத்திக்கொண்டு
                    நீலமும் மஞ்சளுமாக
                    பூண்டுச்செடியின்
                    மலர்கள் முளைக்கின்றன
                    அப்போது சேரிகள்கூட
                    பாராமுகம் காட்டுவதில்லை.

                    9. ஆவது

                      பெண்களின் சுருக்குப்பைகளைப் போலவும்
                      முதலைத்தோல் ஷூக்களைப் போலவும்
                      பளபளவென்று மினுங்கும்
                      பாம்பும் கீரியும் சூரிய ஒளியில் உறங்குகின்றன.
                      ஆனாலும்
                      பூனைகள் மற்றும் பருந்துகள்
                      குறித்து
                      பயத்துடன்தான்.

                      10. விடை

                        அம்மா விடைகொடுக்கும்போது
                        பேச்சே கிடையாது
                        கண்ணீரும் கிடையாது
                        ஒரு ஆழ்ந்த பார்வை
                        உடல்மீது
                        மேலிருந்து கீழ்வரை நகர்ந்தது.

                        ஒவ்வொரு செவ்வாய்கிழமையும்
                        எண்ணெய்க் குளியல்
                        எடுக்க மறக்காதே
                        என்ற அறிவுரையுடன்.
                        நீ அமெரிக்காவுக்குச் செல்லும்போது!

                        11. பல்

                          எனது இடது கடைவாய்ப் பல்லில்
                          வலி
                          என் அம்மா இறப்பதற்கு
                          ஒரு வாரத்துக்கு முன்னால்
                          கடவாய்ப் பல்லில்
                          மீண்டும்
                          வலி ஏற்பட்டிருப்பதாகச் சொன்னாள்.

                          12. வலி

                            ஒருத்தன்
                            வலியைப் பற்றிப் பேசும்போது
                            சிறப்பைப் பெறுகிறான்
                            அவன் வலியை முரண்நகையோடு
                            பேசமுடியும்போது
                            அதிலிருந்து நகரவும் முடியாமல் நிலைக்கும்போது
                            அவன் கவிஞர்கள் செய்வதையே செய்யவேண்டும்
                            செய், அவ்வாறே…ஒரு கவிதையை.

                            13. பூஜ்ஜியம்

                              மாயன்களிடம் பூஜ்ஜியத்துக்கு வரிவடிவம் உண்டு
                              என்றான் அவன்

                              இந்துக்கள் பூஜ்ஜியத்தைப் புனிதமாக நினைத்தார்கள்
                              நான் சொன்னேன்

                              யூதர்களின் கடவுள் 1
                              பௌத்த கடவுளோ 0
                              என்றான் அவன்

                              பூஜ்ஜியத்திலிருந்து பூஜ்ஜியத்தை எடுத்தாலும் பூஜ்ஜியம்தான் மிஞ்சும்
                              நான் சொன்னேன்

                              பூஜ்ஜியத்துக்கு முன்னால் ஒரு எண் இல்லாமல்
                              அதற்கு எந்த மதிப்பும் கிடையாது
                              அவன் சொன்னான்

                              உன்னைப் போல
                              என்னைப் போல
                              இந்த உரையாடலைப் போல
                              என்றேன் நான்.

                              14. எனக்கு ஆத்மாநாம் அல்லது ஆத்மாநாமுக்கு நான்

                              பத்து நூற்றாண்டுக்கு முன்னர்
                              என் குறித்து எச்சிந்தையுமின்றி
                              சிவனைப் பற்றிப் பாடிய துறவிகளின் கவிதைகளை
                              இருபது ஆண்டுகளுக்கு முன்னர்
                              நான் மொழிபெயர்த்தேன்.
                              மெட்ராஸைச் சேர்ந்த இளைஞன் ஒருவன்
                              பத்து வருடங்களுக்கு
                              முன்னால்
                              இரவும் பகலும்
                              தன் கரத்தில் மாத்திரைகளோடு விளையாடிக்கொண்டே
                              எனது சொற்கள் வழியாக
                              அவற்றைப் படிப்பான்
                              என்பதையும் நான் எண்ணிப் பார்க்கவில்லை.
                              சக்கரத்தில் வண்ணங்கள்
                              அவன் கண்களில் சுழல
                              மாத்திரைகளை
                              கவிதைகளோடு அவன் விழுங்கிக் கொண்டிருந்தான்.
                              அவனைப் பற்றிய எண்ணமில்லாதவை அந்தக் கவிதைகள்
                              நானும் அவனைப் பற்றி எண்ணிப் பார்த்திடவில்லை

                                இருப்பதற்கும் இல்லாமல் போவதற்கும் இடையே
                                பகலுக்கும்
                                மணிக்கட்டில் குத்தப்பட்டிருந்த ஊசிகளுக்கும்
                                இடையே
                                பனிமூட்டத்தில் மூச்சுத் திணறியபடி,
                                அவனைப் பற்றிய
                                எந்த எண்ணமும்
                                இல்லாதிருந்த எனக்கு
                                வாசிப்பதற்கும்
                                இந்த வாரம்
                                அவற்றை எடுத்து மொழிபெயர்ப்பதற்கும்
                                அவனது கவிதைகளை
                                விட்டுச் சென்றான்.

                                அவன் என்னைப் பற்றி
                                என் சொற்கள் வழியாகப் பேசிய அந்தத் துறவிகள் பற்றி
                                சிந்தித்திருந்திருக்கிறான்.
                                ஆனாலும் அவர்கள்
                                எதுவொன்றையும்
                                எதுவொன்றையும்
                                அவனுக்கு உரைக்கவேயில்லை.

                                15. சுயசித்திரம்

                                  நான் எல்லாருடைய சாயலிலும் இருக்கிறேன்
                                  என்னைத்தவிர.
                                  சிலசமயங்களில்
                                  கடை கண்ணாடிகளில்
                                  பார்க்கும்போது
                                  நன்றாகத் தெரிந்த பார்வையியல் விதிகளையும் மீறி
                                  ஒரு அன்னியனின் சித்திரம் தெரிகிறது
                                  தேதி தெரியவில்லை,
                                  மூலையில்
                                  அடிக்கடி
                                  என் அப்பா இட்ட கையெழுத்துடன்.

                                  16. திரும்புதல்

                                    சுட்டெரிக்கும் பிற்பகலொன்றில் வீடு திரும்பி
                                    அவன் அம்மாவை எல்லா இடத்திலும் தேடினான்
                                    அவள் சமையலறையில் இல்லை
                                    அவள் புழக்கடையில் இல்லை
                                    அவள் எங்குமே இல்லை.
                                    அவன் தேடினான்
                                    தேடினான்
                                    பதற்றத்தில்
                                    படுக்கைக்கு அடியிலும் தேடினான்
                                    பழைய ஷூக்கள் மற்றும் தூசி தும்புகள்தான் இருந்தன
                                    அம்மா இல்லை.
                                    வீட்டுக்கு வெளியே ஓடிப்போய் அம்மா என்று கத்தினான்
                                    நீ எங்கே இருக்கிறாய்?
                                    நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்!
                                    பசிக்கிறது!
                                    ஆனால் பதிலே இல்லை
                                    சூரிய ஒளியில் எரிந்துகொண்டிருக்கும்
                                    ஆளரவமற்ற தெருவில்
                                    ஒரு எதிரொலி கூட இல்லை.
                                    அவனுக்கு தற்போது 61 வயது
                                    என்று நினைவு திடீரென்று வெட்டியது
                                    அத்துடன்
                                    அவனுக்கு அம்மா இல்லாமலாகி 40 ஆண்டுகள் ஆகிவிட்டதும்.

                                    17. பகுத்தறிவுவாதி

                                      ஒய்ஜா 1பலகையில் உங்கள் கையை வைப்பது
                                      எப்போதும் அடியில் பாய்ந்துகொண்டிருக்கும்
                                      ஆழ்நதியில் மூழ்குவதைப் போல.

                                      வாழும் உடம்பிலிருந்து ஒரு சதைத் துணுக்கை
                                      நுண்ணோக்கியின் கீழே
                                      கண்ணாடிச் சில்லில் வைப்பதற்காக
                                      வெட்டுவதைப் போல.

                                      சந்தைக்கடைகளுக்கு நடுவே திடீரென்று
                                      நின்று
                                      மனத்தில் என்ன நடக்கிறதென்று பார்ப்பதற்கு ஒப்ப.

                                      இமாலயத்தில் ஆண்மையை அதிகரித்துக்கொள்வதற்காக
                                      காண்டாமிருகத்தைத் தேடி
                                      குளிர்காலப் பூக்களின் நீலக்கொத்துகளை எதிர்கொள்வது.

                                      பறக்கும் குருவியுடனேயே பறந்து
                                      அதன் நாடித்துடிப்பைப் பார்ப்பது.

                                      ஒய்ஜா பலகையில் கையை வைத்து
                                      யாருமே அறிந்திராத
                                      அம்மாவுடைய
                                      பூர்வப் பெயரை எழுதுவது.

                                      000

                                      1. ஒய்ஜா – ஆவிகளிடம் பேசுவதற்காகப் பயன்படுத்தப்படும் பலகை

                                      Comments