Skip to main content

நிகழை மறுத்த ஸ்ரீ ரங்கம் கண்ணன்


டி. கண்ணன் இறந்தபின்னால் சமீபத்தில் ஒரு கனவு. 

‘திருநெல்வேலியில் பழைய வீடுகளை இன்னும் கொண்டிருக்கும் தெருக்களில் ஒன்றான தெற்கு புதுத் தெருவில், நானும் கண்ணனும் போய்க்கொண்டிருக்கிறோம். அவரது மரணத்துக்குப் பிறகு முகநூலிலும் வாட்ஸப்பிலும் நண்பர்கள் பகிர்ந்த ஒரு புகைப்படத்தில் அணிந்திருந்த அழகிய ஜிப்பாவை அணிந்திருக்கிறார். கந்தர்வன் போல எழில்குறையாமல் நடந்துவருகிறார். ஒரு பழைய பாணி கட்டடத்துக்குள் நுழைகிறோம். பகல்வேளையிலும், நித்தியமான ஒரு சாயங்காலத்தை உருவாக்கும் மஞ்சள் கண்ணாடிக்கூண்டு விளக்குகளோடு, அந்த கட்டடத்தின் பிரதான அறை இருந்தது. அதன் ஒருபக்கத்தில் பெண்கள் பெரிய பெரிய கண்ணாடி குடுவைகளுக்குப் பின்னால் பலகாரங்களை அடுக்கிக் கொண்டிருக்கின்றனர். “இது அருமையான பட்சணக் கடைப்பா” என்று சொல்லி, புராதனமானதாகவும் மனதுக்கு இதமாகவும் தோன்றும் மர மேஜை நாற்காலிகளில் ஒன்றில் உட்கார வைத்தார். அந்த அறையில் தைலம் போல வழிந்துகொண்டிருந்த பொன்னொளியில் கண்ணனைப் பார்த்தபடி இருக்கிறேன்.’

இந்தக் கனவின் உள்ளடக்கத்தோடு தொடர்புடைய பண்பு உள்ளவர் டி.கண்ணன். நிலையான வேலையோ இருப்பிடமோ அமையாத சூழலில், குடி, உணவு, பலதரத்திலான நட்புகள், வாழ்க்கை முறைகளை சென்னை சார்ந்து அறிமுகப்படுத்திய முக்கியமான நண்பர்களில் ஒருவர் கண்ணன். 

ஒரு நபரைப் பார்த்தவுடன் நட்பு பாவத்துடன் உடனடியாக வசீகரிக்கக்கூடியவராக கண்ணன் இருந்தார். குற்றாலம் கவிதைப் பட்டறை, கோவையில் விஜயா பதிப்பகம் நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கு ஆகியவற்றில் சந்தித்ததினூடாக கண்ணனிடம் பரிச்சயமும் நட்பும் தொடங்கிவிட்டது. வயது, அந்தஸ்து, வர்க்கம் எவற்றையும் பார்க்காமல் நக்கல் செய்யும் சுபாவம், நகைச்சுவை, அந்தரங்கமாய் உணரக்கூடிய வாஞ்சை, லௌகீக வாழ்க்கை குறித்து கவலையே படாத அலட்சியம், இதெல்லாம் கண்ணனின் குணங்கள்.

சிறுவயதிலேயே சிறுபத்திரிகை வட்டத்துக்குள் வந்துவிட்ட எனக்கு கண்ணனின் ஆளுமை பிறர் சொல்லிய கதைகள் வழியாகவும் வளர்ந்தது. நான் சென்னைக்கு வந்து நின்று தரிக்கத் தொடங்கியபோது, கண்ணன் ஸ்ரீரங்கத்துக்குத் திரும்பியிருந்தார். சென்னைக்கு வந்துபோகும் நபராகவே இருந்தார். பிரமிள், சுந்தர ராமசாமி, ஜெயமோகன் போன்ற ஆளுமைகளுக்கும், நாகார்ஜூனன், எம்.டி முத்துக்குமாரசாமி, பிரேம் - ரமேஷ் போன்ற கோட்பாட்டெழுத்தை அறிமுகப்படுத்திய இளம் துருக்கியர்களுக்கும் மோதல் வெடித்த களமான குற்றாலம் கவிதைப் பட்டறை நிகழ்வில், ‘காலம் அழிக்கும் முதல் பெயர் போர்ஹே’ என்று ஜெயமோகன் உரைக்கிறார். ‘காலத்துக்கான அத்தாரிட்டியை உனக்கு யார் கொடுத்தது?’ என்று கேட்டு கண்ணன் சண்டை செய்தது, அவரைப் பற்றி நான் கேள்விட்ட செய்திகளில் ஆதியானது. 

இரண்டு முறை தற்கொலைக்கு முயன்று, நண்பர் சி.மோகன் அவரைத் தேற்றி ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பிய கதையும் எனக்குத் தெரியும். சி. மோகன் ஆழமான அன்பைக் காட்டிய நண்பர்களில் முதன்மையானவர் டி. கண்ணன். தமிழ் இலக்கிய சூழலில் மிகவும் தேய்ந்துவிட்ட சொல்லாக நிறைய பேரால் பாவிக்கப்படும்‘பிரமாதம்’ என்ற சொல்லை சி.மோகனுக்குக் கொடுத்தது டி.கண்ணன்தான் என்பது என்னுடைய பதிவு. ஒரு பழைய பாடலை அறிமுகப்படுத்தும்போதும், நல்ல உணவை மெச்சும்போதும், “பிரமாதமா இருக்குண்டா” என்றுதான் சொல்வார் கண்ணன். கிரிக்கெட், சீட்டாட்டம் (வார இறுதி நாள்களில் இரவு பகலாக மேன்சனில் ரூம் போட்டு ஆடுவார்கள்), சுடோகு, இந்திப் பாடல்கள், பழைய தமிழ் சினிமா பாடல்கள், இந்துஸ்தானி, மேற்கத்திய செவ்வியல் இசையில் ஈடுபாட்டுடன் இருந்தவர்.

டெல்லியில்தான் டி. கண்ணனுக்கு லத்தீன் அமெரிக்கப் படைப்புகள் மற்றும் சர்வதேச சினிமாக்கள் அறிமுகமாகியுள்ளன. சாரு நிவேதிதாவுடன் டெல்லியில்தான் அவருக்கு நட்பு தொடங்கியதென்று ஞாபகம். ஒரு அருங்காட்சியகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் எதிராளி குடும்பத்தின் மீது வன்மத்தை வைத்திருக்கும் போர்ஹேயின் கதையை எனக்குச் சொல்லியிருக்கிறார். வாளைப் பிடித்தவுடன் அந்த அருங்காட்சியகத்துக்கு பார்வையாளராக வந்த அந்த வாளை வைத்திருந்த பரம்பரையைச் சேர்ந்தவனுக்கு வன்மம் வந்துவிடுவதை ரசமாகச் சொல்லியிருக்கிறார். தமிழில் வண்ணநிலவன், மௌனி, ந.முத்துசாமி, ஞானக்கூத்தன் ஆகியோர் அவரைக் கவர்ந்தவர்கள். கல்வெட்டுச் சோழன் சிறுகதை நூலை வண்ணநிலவனுக்கும் கோணங்கிக்கும் சமர்ப்பணம் செய்திருந்தார். 

ஒரு பெருநகரத்தில் வாழ காசெல்லாம் பெரிய தேவையில்லை. நட்புகள் இருந்தால் போதும்; நிலைத்து நின்றுவிடலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தவர் கண்ணன். சென்னைக்கு வந்த 1997-ஆம் வருடத்து டிசம்பர் மாதம். பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-க்கு முந்தைய தினம், சென்னை முழுவதும் போலீஸ் கெடுபிடிகளாக இருந்தன. டி.கண்ணனின் நண்பர் வாசுதேவன் என்பவருக்கு நடைபெறும் திருமணத்தை ஒட்டி திருவல்லிக்கேணியில் நடக்கும் ஒரு பெரிய விருந்துக்கு கலந்துகொள்ளுங்கள் என்று சி.மோகனிடமிருந்து தகவல் வந்திருந்தது.

தகவல் எனக்கும் தளவாய்க்கும் சொல்லப்பட்டாலும் அப்போது சி.மோகனின் தலைமையின்கீழ் ஒரு படையாகவே சென்னையில் அலைந்த யூமா. வாசுகி, அஜயன் பாலா, ஆட்டோ நண்பர் சிவதாணு, தளவாய், நான் எல்லோரும் ராயப்பேட்டை மருத்துவமனை நிறுத்தத்தில் இறங்கி, திருவல்லிக்கேணி மார்க்கெட்டில் உள்ள மேன்ஷனுக்குப் போய்ச் சேர்ந்தோம். யாரென்றே தெரியாத ஒரு நண்பரின் திருமணம் சார்ந்த ஒரு விருந்திலும் இடத்திலும் மூன்று நாள்களுக்கு மேல் பத்து பைசா துணையில்லாமல் கழித்தோம். இலக்கியவாதிகளான எங்களைப் போன்றவர்களுக்குத் தனி அறையும், கோட்பாட்டாளர்களான எம்.டி. முத்துக்குமாரசாமி, சாரு நிவேதிதா, ராஜன் குறை போன்றவர்களுக்கும் தனித்தனியாக அறைகளும் ஒதுக்கப்பட்டிருந்தன. ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ நாவல்தான் அப்போது பெரிய பேசுபொருளாக இருந்தது. குடியும் போதையும் ஒரு சிறு எறும்புக்கடியைப் போன்று மன எழுச்சியைத் தூண்டவே அப்போது தேவையாக இருந்தது. இலக்கிய ஆகிருதிகளைப் பார்ப்பதும் பேசுவதும் கூடுதல் போதையைத் தந்தது. 

வேலையும் பணமும் அற்ற நாள்களில், கவிஞர், விமர்சகர் ராஜமார்த்தாண்டனின் கருணையில் தங்கியிருந்த நாகராஜ் மேன்ஷன் அறையில், திடீரென்று முற்பகல்களில் தோன்றுவார் டி.கண்ணன். அறை இருந்த மாடிச்சந்தில், “சங்கரு” என்றபடி வருவார். எனது இல்லாமையெல்லாம் துச்சமாகிவிடும். அவருடன் உடனடியாக வெளியே கிளம்பி விடுவேன். ஆட்டோ ஒரு ரதமாக ஆகிவிடும். அப்படித்தான் வாசுதேவன், திருமணமாகி இளம் தம்பதியராக குடியிருந்த கேகே நகர் சிவன் பூங்காவுக்கு பக்கத்திலிருந்த அடுக்குமாடி குடியிருப்புக்குப் போயிருக்கிறோம். அப்போது பழைய நடிகைகள் பற்றி பேச்சு வந்தபோது, “எனக்கு ஜமுனாவை மிகவும் பிடிக்கும்” என்று சொன்னேன். “அதைத்தான் நீ போனவாரம் தி இந்துவில் கொடுத்த இன்டர்வியூவில் சொல்லியிருந்தியேப்பா” என்று தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு கண்ணன் என்னை கேலி செய்தார். இன்றும் அந்த கேலியை மற்றவர்களிடம் மாற்றிச் செய்கிறேன். 

ஒரு தீபாவளி நாள். திருநெல்வேலிக்குப் போகவில்லை. கண்ணனும் நானும் திருவல்லிக்கேணி மதுக்கடைக்குள் காலையிலேயே புகுந்துவிட்டோம். டிரிங்கை கண்ணன் ஆர்டர் செய்தபிறகு, சர்வரிடம் வெங்காயத்தை நிறைய போட்டு முட்டை பொடிமாஸ் வைப்பதற்கு பக்குவம் சொன்னேன். “சங்கர், குடிக்க வந்தியா, திங்க வந்தியா இங்க” என்று கண்ணன் கேட்டு நான் சிரித்தது இன்றைக்கும் ஞாபகத்தில் உள்ளது. 

கண்ணன் வழியாகவே நெட்டை முத்துக்குமார் என்று நாங்கள் அழைக்கும் ஆர். முத்துக்குமார், துறையூர் சரவணன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி இல்லம் எல்லாம் அறிமுகமானது. 

ஒருநாள் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு எங்கள் வீட்டுக்குப் போயிருந்தபோது, அலைபேசி எதுவுமே இல்லாத காலத்தில், நள்ளிரவில் வீட்டுக்கு வந்து வாசலில் நின்றுகொண்டிருந்தார். எனது அப்பா, யாரோ என்னைத் தேடிவந்திருப்பதாகச் சொல்லி எழுப்பினார். இருமல் மருந்து குடித்து ஒரு கலங்கலான நிலையில் எழுந்துவந்தேன். கண்ணன் வீட்டுக்குள்ளேயே வரவில்லை. வாசல் கதவுக்கு வெளியே நின்றபடியே, “எப்படிப்பா இருக்க…லெனா. குமார் வீட்டுக்கு வர்றியா” என்று கேட்டார். நான் சட்டையைப் போட்டுவிட்டு உடனே அவருடன் பர்வதசிங்கிராஜா தெருவுக்கு கிளம்பிவிட்டேன்.

இப்படித்தான் திருவல்லிக்கேணியிலிருந்து, பேருந்து ஏறி பெசண்ட் நகரில் போய் இறங்கினோம். வெங்கடேஷ் சக்கரவர்த்தியை இலக்கிய, சினிமா திரையிடல் நிகழ்ச்சிகளிலேயே பார்த்திருக்கிறேன். அன்றுதான் சக்கரவர்த்தியை அவர் வீட்டில் பார்க்கிறேன். மாலை 5.30 இருக்கும். சக்கரவர்த்தி கண்ணனைப் பார்த்ததும் குஷியாகிவிட்டார். மாருதி 800 கார் வைத்திருந்தார். விச்ராந்தி உணவகம் தற்போது இருக்கும் இடத்துக்கு அருகே தனியார் மதுக்கடை ஒன்றில் போய் இறங்கினோம். ஒரு முழு பாட்டில் ஓல்ட் மாங்க் வாங்கிய வெங்கடேஷ் சக்ரவர்த்தி, டி. கண்ணனுடன் பேசும் சுவாரசியத்தில் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார். நான் அவர்களுக்குப் பின்னால் ஓடிப்போய் ஓட்டிவந்த காரை ஞாபகப்படுத்தினேன். சக்கரவர்த்தி திரும்பி வண்டியை எடுத்துக்கொண்டு வந்தார். 

சக்கரவர்த்தியின் வீட்டில்தான் டி. கண்ணன் செய்த மோர்க்குழம்பையும் வெண்டைக்காய் வருவலையும் முதலில் சாப்பிட்டேன். சோறை வேகவிடுவதிலிருந்து குழம்பு, ரசம், பொரியல், உசிலி எல்லாவற்றையும் நேர்த்தியாகவும் ருசியாகவும் செய்வார். சமையல் செய்யும்போது கைகளைப் பார்த்து ரசித்தது இரண்டு பேரிடத்தில். ஒருவர் டி.கண்ணன், இன்னொருவர் மிஷ்கின்.

வெங்கடேஷ் சக்கரவர்த்தியும் கண்ணனும் பரிமாறிய உரையாடலில் என்னால் ஈடுபட இயலவில்லை. வெங்கடேஷ் சக்கரவர்த்தியின் இரண்டாவது மகள் தூங்காமல் இருந்தாள். நான் ரம்முடன் மோர்க்குழம்பை சைட் டிஷ்சாகப் பயன்படுத்துவதைப் பார்த்து அவளுக்கு வியப்பு. அவளுக்கு அப்போது 12, 13 வயது இருக்கலாம். சக்கரவர்த்தியும் கண்ணனும் என்னை மறந்து உரையாடலில் இருந்தபோது, அந்த ஹாலில் துணையாக பேசிக்கொண்டிருந்தது அவள்தான். 

நண்பர் ஸ்ரீ குமார் இருந்த லஸ் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் கண்ணன் சில மாதங்கள் தங்கியிருந்தபோதுதான் கண்ணனின் கைப்பாகத்தை முழுமையாக அனுபவித்தேன். பெருங்காயம் அவரது சமையலில் முக்கியப்பங்கு வகிக்கும். பெருங்காயத்துக்கான ருசியை அவரிடமே தெரிந்துகொண்டேன். சாதாரணமாக மோரையும் மஞ்சள் பொடியையும் போடுவது போலத்தான் இருக்கும்… அப்படியே அது கடகடவென்று மாறும். 

ஸ்ரீரங்கத்துக்கு என் பெற்றோரோடு ஒருமுறை, மனைவி மகளுடன் ஒருமுறை போயிருந்தாலும், ஸ்ரீரங்கத்தின் அடையாளம் எனக்கு கண்ணன்தான். மேல உத்தர வீதியும் சாயங்காலங்களில் குளிக்க அழைத்துச் சென்ற கொள்ளிடமும் அதையொட்டி தோப்பிலிருந்த பம்பு செட்டும் என பல்வேறு காட்சிகள் எப்போதும் நினைவில் இருக்கும். 

மேல உத்தரவீதி அக்கிரகாரத்தில் அவரது வீடு, ஒடுங்கிய நீளக்குழாய் போல அடுத்த தெருவரை நீண்டிருக்கும். கண்ணனின் கவிதைகளில் சதா இடம்பெறும் இடம் அந்த வீடு. மேல்மாடியில் தங்கியிருந்த எனக்கு மேலேயே சாப்பாடு வந்துவிடும். அபூர்வமாக கீழேபோயும் சாப்பிட்டிருக்கிறேன். கண்ணன் கூட்டிப்போய் காட்டிய ஸ்ரீரங்கம் தனி அழகு. ஒரு நாள் காலை 11 மணிக்கு, கோயிலுக்கு வாசல் பகுதி மூலையில் இருந்த மதுக்கடையில், கோயில் காரியம் செய்யும் அய்யர்களும் கண்ணனோடு சகஜமாக பேசியபடி குவார்ட்டரை அருந்திய காட்சியைப் பார்த்தேன். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சகஜமாய் இருந்த அந்தக் காட்சி இன்றைக்கு சாத்தியமில்லை.

ஒருநாள் வீட்டில் அனைவரும் ஊருக்குப் போயிருந்த நிலையில் கீழ்தளத்திலேயே மதியவேளையில் மது அருந்தியபோது, பிளாஸ்டிக் டம்ளர் இல்லாமல் வீட்டிலுள்ள செப்பு குவளையில் பிராந்தியை ஊற்றித் தந்தார். பிராந்தியின் கசப்பையும் மீறி உலோக கசப்பை என்னால் இன்றைக்கும் நாக்கிலிருந்து தொண்டைக்கு இறக்கவே இயலவில்லை. அந்தச் செப்புப் பாத்திரத்தின் ஞாபகச் சுமைதான் நிகழ்காலத்தின் மேல் கண்ணனை மிக கசப்பாக்கிவிட்டது என்றும் தோன்றுகிறது.

அன்றைக்கு போதையின் சுவாரசியத்திலோ, நொறுக்குகளைத் தின்னும் வேகத்திலோ நாக்கை பலமாகக் கடித்துக் காயப்படுத்திவிட்டேன். அன்று கண்ணன் வீட்டின் கீழ்தளத்தில் உறங்கி நடு இரவில் திடீரென்று விழித்தேன். அந்த குறுகிய செவ்வக அறைகளின் சுவர்கள் என்னை நெரித்து மூச்சுமுட்ட வைத்துக் கொன்றுவிடும் என்ற அச்சம். கண்ணன் எழுந்து, “தூங்குப்பா, தீங்கனவு ஏதாவது வந்திருக்கும்” என்று ஆறுதல் சொன்னார்.

ஸ்ரீரங்கத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை கடந்தபோது, கண்ணனோடு ஸ்ரீரங்கமும் தொலைந்துவிட்டதை உணர்ந்தேன்.

வாணியம்பாடியையொட்டி உள்ள ஜவ்வாது மலையில் 2002 ஆம் ஆண்டு நகுலனுக்கு கருத்தரங்கு ஒன்றை காவலூர் அரசு விருந்தினர் மாளிகையில் வெளி. ரங்கராஜனும் புது எழுத்து மனோண்மணியும் சேர்ந்து நடத்தினார்கள். நகுலனின் எழுத்துகள் மீது ஒவ்வாமை கொண்டிருந்தாலும், அப்போது திருவல்லிக்கேணி மேன்ஷனில் தினசரி பார்த்து பேசிக்கொண்டிருந்த காலத்தில் யவனிகா ஸ்ரீராம், டி. கண்ணன், அஜயன் பாலா, தளவாய், ராஜகோபால் ஆகியவர்களோடு என்னையும் வாணியம்பாடிக்கு அழைத்துச்செல்லும் பொறுப்பை ஏற்று சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெளி. ரங்கராஜன் வரச்சொல்லியிருந்தார். பயணச்சீட்டுக்கே வசதியில்லாத காலகட்டம் அது. கண்ணன், ரயில் கிளம்பும் நேரம் வரை, ரயிலடியில் உள்ள டாஸ்மாக்கில் எங்களையும் சேர்த்து இருக்கவைத்து, வெளி. ரங்கராஜனை கடைசிவரை பதற்றத்தில் வைத்திருந்தார். ரயில் ஏறி இரவு வாணியம்பாடி விருந்தினர் மாளிகையில் நண்பர்கள் ஸ்ரீ நேசன் உள்ளிட்டவர்களோடு சேர்ந்து தங்கி ஒரு மலைவாசஸ்தலத்தில் கருத்தரங்கில் கலந்துகொண்டது அபூர்வமான அனுபவங்களில் ஒன்று. திரும்பும்போது ஆம்பூர் சுரேஷ் விருந்தோம்பலில் ஒரு தாபாவுக்கு சென்று, கண்ணன் ஆரம்பித்துவைத்திருந்த டம்ப்சரேட்ஸ் (Dumb Charades) விளையாட்டை ஆடியது மறக்கவே இயலாதது. வாய் பேசாமல், சைகைகள் மூலம் சினிமா தலைப்புகள் அல்லது வார்த்தைகளை நடித்துக் காட்டி எதிர்க்குழுவினரை கண்டுபிடிக்க வைக்கும் விளையாட்டு அது. குடியமர்வுகளிலும் உரையாடல்களிலும் பழைய பாடல்கள், சினிமா நகைச்சுவை, டம்ப்சரேட்ஸ் என தன் போக்கில் எல்லோரையும் திசைதிருப்பிவிடும் தன்மையும் தீவிரத்தைக் கவிழ்க்கும் தன்மையும் உள்ளவர் கண்ணன் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். இந்த நிகழ்ச்சியை எனக்கு தற்செயலாக திரும்ப ஞாபகப்படுத்தி வைத்தவர் அஜயன் பாலா. இந்த விளையாட்டால் திரும்ப பால்யத்துக்குள் சென்றுவந்த நாள்கள் என்று அதை அஜயன் நினைவுகூர்கிறார்.  

000

சிதைந்த மேற்குக் கோபுர வாசலில், ஒரு உடைந்த தேரின் கீழே, பெட்டிக்கடையில், மதியம் குடித்த போதை தலையில் இன்னும் இருக்க, அந்தி சாயும் மஞ்சள் இருட்டையும் சேர்த்து சிகரெட்டுடன் உறிஞ்சியிருக்கிறேன். மௌனியின் சாயங்காலத்தைத் திரும்ப எட்ட முயல்கின்றன டி.கண்ணனின் கவிதைகள். உடைந்த காலத்தின் மனோரதங்கள் நிகழ்காலத்துடன் அபத்தமாக மோதுவதுதான் அவரது படைப்புகள் என்று இப்போது தோன்றுகிறது.

இசையில் தோய்ந்த நாடகத் தன்மை வாய்ந்த மொழியை கவிதைகளில் கண்ணன் பயன்படுத்தியிருக்கிறார். நிகழ்வுகளை காட்சிகளை அடுக்கும்போது அபத்தம் கார்வையாக நீண்டு ஒலிக்கும் குரல்தான் அவர் கவிதைகள் நிகழ்த்தும் பொது அனுபவம். நிகழ்காலத்தில் தரிக்க விரும்பாத, நிகழ்காலத்தை அழிக்க விரும்புகிற, நிகழ்காலத்தை சின்னச் சின்னப் புனைவுகளால் கேலிகளால் திருக முயலும் படைப்புகள் அவருடையவை. மௌனி, ந.முத்துசாமி, ஞானக்கூத்தன் உலகங்கள் டி.கண்ணனின் ஒட்டுமொத்த எழுத்துகளை வாசிக்கும்போது ஞாபகத்துக்கு வருகின்றனர். ஆனால், அவர்கள் தங்கள் மூலகங்களால் மட்டுமே நினைவுகூரப்படுபவர்கள் அல்ல. ஆழ்ந்த விமர்சனப் பண்போடு தங்கள் மூலகங்களை நிகழ்காலப் பிரக்ஞையோடு மோதுவதற்கு அனுமதித்தவர்கள். கண்ணனின் கேலியும் அவர் உண்டாக்கும் அபத்தமும் ஆழமான விமர்சனமாக ஆகாதபோது, நினைவேக்கத்தின் கருத்த படங்களாக பெரும்பாலான படைப்புகள் ஆகிவிடுகின்றன. அப்படி நிகழ்காலத்துக்கு முகம்திருப்பிவிட்டதைத்தான், ‘மர்மம் அழிந்துவிட்டது’ என்று அர்த்தப்படுத்துகிறார் ‘மர்மத்தின் மரணம்’ கவிதையில்.

மர்மம், க்ஷணம் தோறும் அவிழ்ந்தபடியும் பிறந்தபடியும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதைப் பார்க்கும் கண்களின் நிதர்சனத்தில் வைதீகமோ, மௌடீகமோ குந்தியிருக்க இயலவே இயலாது.

அதிரும் வீணையின் தந்திகளில் தூசி குந்தாது என்று அதைத்தான் பிரமிள் சொல்கிறார். எரியும் தீயில் கொசுவும்தான் தரிக்க இயலாது. அதையும் பிரமிள் உரைத்துவிட்டுத்தான் போயிருக்கிறார். 

தமிழில் லத்தீன் அமெரிக்க இலக்கியம் அறிமுகமான பின்னர், அதிலுள்ள புதிர்த்தன்மையையும் கவர்ச்சியையும், நேர்கோட்டுத்தன்மையில்லாத எழுத்துநடையையும்தான் டி.கண்ணன் தன் அகத்தில் ஈர்த்து அனுமதித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. இதற்கு இன்னொரு மாபெரும் உதாரணம் கோணங்கி. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் அரசியல், புனைவுகளுக்குள் உக்கிரமாக உணர்த்தப்படும் அந்த சமூகத்தின் எதார்த்தம், விமர்சனப் பண்புகளை, அதனால் தாக்கமுற்ற தமிழ் எழுத்தாளர்களிடம் காணமுடியாமல் போனது துரதிர்ஷ்டம்தான். ஒரு நினைவேக்கத்தைப் பகிர்வது என்பதைத் தாண்டி, சுய விமர்சனம், நிகழ்காலம், மாறும் எதார்த்தங்களை நோக்கித் திரும்பியிருந்தால் கண்ணனின் படைப்புகள் இன்னும் கனத்தை அடைந்திருக்கும். லத்தீன் அமெரிக்கப் படைப்புகளை வாசித்தாலும் கோட்பாட்டு எழுத்துகளின் ஆழமான அறிமுகம் இருந்தாலும், வைதீகத்தின், சாதிப் பெருமிதத்தின் ஆலம் விதை விழுந்து முளைத்துவிட்டால், அது எப்படிப்பட்ட கோபுரத்தையும் விரிசல் காணச் செய்துவிடும் என்பதற்கு தமிழில்தான் நமக்கு எத்தனை உதாரண ஆளுமைகள். பா. வெங்கடேசன், பிரம்மராஜன் போன்ற பேராளுமைகள் அடைக்கலம் கொள்ளவேண்டிய இடமா அது? 

கோயில், அரசவை சார்ந்த ஒரு வாழ்க்கையின் அபரிமிதமான சொற்களனும் நினைவுகளும் கொண்ட படைப்புகள் டி. கண்ணனுடையவை. ஸ்ரீரங்கத்தின் கோபுரம் தலைமீது வீழ்ந்துவிட்ட ஒரு தலைமுறையின் நினைவேக்கத்தின் சாயல்களும் இருட்டும் பிரீதியும் உள்ளே புதைக்கப்பட்டிருக்கின்றன. ஊழி, பிரளயம், அழிவின் சித்திரங்கள் அதிகமாக வரும் கவிதைகள் மேற்சொன்ன அடிப்படையிலிருந்து எழும், மரணத்துக்கான கவிசுயத்தின் விருப்பங்களோ என்றும் வாசித்துப் பார்க்கலாம். 

எலி பாஷாணம் அப்படியே இருக்கிறது

கரப்பை அழிக்கும் தைலம் காலாவதியாகாமல் கிடக்கிறது

குடும்பத்தின் கூரிய சவரக்கத்தி அலமாரியில்

படுத்துறங்குகிறது

சாயல்பாடி முரட்டு மணிக்கயிறு மூட்டை கட்டக்கூட

பயன் படுத்தப் படவில்லை

அவன் ஏனோ குடியைத் தேர்ந்தெடுத்தான். 


கண்ணனைப் பொறுத்தவரை தமிழ் வாழ்க்கை, வேறு ஒரு நூற்றாண்டுக்குள் உறைந்து முடிந்துவிட்டது. அங்கேயிருந்து அவர் வெளியே நகராமல் இருப்பதற்கான தர்க்கங்கள் எல்லாவற்றையும் தன் வாழ்க்கையிலும் படைப்புகளிலும் வைத்திருந்தார். சமீபத்தில் ஏ.கே. ராமானுஜன் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்தும் மொழிபெயர்த்தும் கொண்டிருக்கிறேன். ராமானுஜனின் தந்தையார் கணிதம் மற்றும் புள்ளியியலைக் கற்றுக்கொடுத்த பேராசிரியர். வீட்டில் வைதீகமான சூழ்நிலையில்தான் வளர்க்கப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் கற்ற மேற்கத்திய கல்வி, வாழ்ந்த அமெரிக்க வாழ்க்கை, தனது மரபை விலகிநின்று அவரைப் பார்க்க வைத்திருக்கிறது. வீட்டில் நிலவிய வைதீகமும் அவர் உடம்பில் படிந்திருக்கும் மரபும் அவருக்கு யோசிக்கவும் பரிசீலிக்கவும் கூடிய ஒரு பழைய நெல் குதிர் போலத்தான் இருந்திருக்கிறது. அதுவே அவரை ஒரு உலகளாவிய மனமாக ஆக்குகிறது. 

கண்ணனின் கடைசி 20 ஆண்டுகள் நண்பர்களிடமிருந்து படிப்படியாக ஒதுங்கி ரகசியத் தனிமைக்குள் சென்றுவிட்டவை. கண்ணனின் கேலியும் அங்கதமும் கரிப்பால் நிரம்பி குத்தலாக மாறியதை உணர்ந்தபின்னர் படிப்படியாக எங்கள் உறவில் சீர்மை குலைந்து பார்ப்பதும் நின்றது. கண்ணன் வாழ்க்கையைச் சுற்றி நடந்ததாக நான் கேள்விப்பட்டவை சங்கடமானவை. நான் அறிந்திராத கண்ணனின் உக்கிரமான இடம் அது. பெரும்பாலும் தொலைபேசி உரையாடல்களாகவே சுருங்கி, அதுவும் ஒரு கட்டத்தில் நின்றுவிட்டது.

எனது ‘இகவடை பரவடை’ நூலைக் கேட்டு எனக்கு முகவரி அனுப்பினார். நானும் அனுப்பிவைத்தேன். படித்துவிட்டு, “நல்ல தீவிரமான இடங்களுக்குப் போயிருக்கு சங்கர்” என்று கூப்பிட்டுச் சொன்னார். அத்தனை சங்கடங்களுக்கிடையிலும் அவர் அந்தப் புத்தகம் குறித்து சொன்னது எனக்கு ஆசிர்வாதம்தான்.

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நண்பர்களோடு மசினக்குடியில் ஐந்தாறு நாட்கள் தங்கியிருந்தபோது டி.கண்ணன் கூப்பிட்டார். “உடம்பு தேறிவிட்டது. குடிப்பதில்லை. நல்லாயிடுவேன்னு நினைக்கிறேன்” என்று சொன்னார்.

மசினக்குடியின் மலையடிவாரத்தில் ஒரு நற்காலையில் அவர் பேச்சைக் கேட்டதுதான் கடைசி. 

படைப்பு

ஆற்றின் பிரவாகத்தில் சலசலக்கிறது கரையோர சிலையின்

நிழல்

இனம் முற்றிலும் அழிந்துபோன பறவையொன்றின்

சிலையாம் அது

முகமும் பெயரும் காலத்துள் தொலைத்த சிற்பி வடித்த

அச்சிலையின் நிழல்

முக்காலத்திலும் ஆற்றில் படிகிறது

(பின்னணியில் சுடுகாட்டுப் பனி)


படித்துறை சிதைத்த பெரும்பெருக்கிலும்

கொடியோவென நதியில் இறங்கும் நிழல் ஸ்பரிசித்த

மச்சங்களின் சுவாசம்

பெரும் கோடையின் ஆறதன் போக்கு மாறும்

ஆடு மணல் கானல் திரைகளில் தன் நிழல் பதிக்கும் சிலை

தேமலென தன்மேல் படியும் சிலையதன் நிழல் விரட்ட

ஊழிக்காய் காத்திருக்கிறது நதி


அதுவரை…

மண்டிய கரையோர நாணல் புதரருகே சிறுஸ்தூபி மேல்

வீற்றிருக்கிறது சிலை. 

(டி.கண்ணன் நினைவு மலருக்காக எழுதப்பட்டது, இதன் சுருக்கம் அம்ருதா மாத இதழில் வெளியானது)



Comments