Skip to main content

இக்பால்

ஆமாம் இல்லை ஆனால்

நாம் இக்பாலை தொலைத்தேவிட்டோம்

இக்பால்

விதைநெல்லைப் போல

சினைப்பையை

விதைப்பையைப் போல

இக்பால் 

நம்முடன் இருப்பதும்

நம்மிடமிருந்து விலகி வெளியேறிச் செல்வதும்

நம் பொறுப்பிலிருக்கிறதா?

நம் இதயத்தில் எப்போதோ சுடர்ந்திருந்த அருள் அல்லவா

இக்பால்.

குழந்தைகளின் கன்னங்களில் கைவைக்கும்போது

உணரும் சில்லென்ற மென்மை அல்லவா

இக்பால்.

இருக்கும்போது இக்பாலை சமாதானத்தோடு வைத்திருக்கத்

தெரிந்ததா நமக்கு?

நமது அகத்தையும் கழுவிப்போன

நேற்றைய இரவின் மழைதான்

இக்பால்

இன்று நிழலிலும் பாதவிரல்

சுடக்கூடிய வறட்சியில்

கையெல்லாம் புழுதி 

உடம்பெல்லாம் ததும்பும் வெம்மையுடன்

எதற்காகக் காத்திருக்கிறோம் என்பதே மறந்துபோய்

எதற்கோ காத்திருக்கிறோம்

இக்பால் என்பது

அவனா

அவளா

அதுவா?

Comments