Skip to main content

சி.மோகன் - 60



தமிழ்நூல் உலகில் இன்று நடந்துகொண்டிருக்கும் ஆஃப்செட் புரட்சியுடன் ஒப்பிடும்போது சி.மோகன் எழுதியுள்ள நூல்களின் எண்ணிக்கை மிகச் சொற்பமானது. நவீனத்துவம் களைப்பையும், அதிகாரப் பகிர்வையும் பெற்று அரசின் ஒரு பகுதியாகி வரும் காலகட்டத்தில் எதிர்நவீனத்துவவாதியாய்த் தன்னை அடையாளம் கண்டவர். அந்த அடையாளங்கள் தாங்கிய தனித்துவமான 33 கவிதைகள் கொண்ட தொகுதியாக தண்ணீர் சிற்பம் வெளியானது. இத்தொகுப்பு, மோகனின் பிரக்ஞை மேற்கொண்டிருந்த பயணத்தொலைவைக் காட்டுகிறது.

மோகனின் சிறுகதைகள், விமர்சனங்கள், மொழி பெயர்ப்புகளைத் தொடர்ச்சியாகப் பின்தொடரும் வாசகன் என்ற முறையில் பொதுவில் விலக்கப்பட்ட இரவுப் பிராந்தியத்தின் சாத்தியங்கள் குறித்துப் பேசுவதாய் அவரது உலகம் உள்ளது. சாப்ளினின் 'சிட்டி லைட்ஸ்' படத்தில் ஒரு பணக்காரச் சீமான் இரவில் குடிபோதையில் இருக்கும்போது தெருவில் அலைந்து கொண்டிருக்கும் சாப்ளினைப் பார்த்துத் தனது மாளிகைக்கு அழைத்துச் செல்வார். காலையானவுடன் தன்போதம் வந்து சாப்ளினைப் பணியாளர்களை வைத்துத் துரத்திவிடுவார்.

விலங்குகளின் உலகமும் உதிரி ஒருவனின் இடமும், கலை சார்ந்தவனின் இடமும் இரவுதான் என்ற உண்மையை உணர்த்தும் காட்சி அது. இரவு என்பது நமது ரகசிய விழிப்புநிலைகளுடன் பேசும் வல்லமை பெற்றதாய் இருக்கிறது. மயானக்கொல்லைக்குச் செல்லும் தேவதைகள் இரவிலேயே தெருக்களில் உலாவுகின்றனர். விலங்குகள் நிலவினிலிருந்து பெற்ற காமத்தில் அமானுஷ்யத் தருணங்களில் குலவுகின்றன. வௌவால்கள், பூனைகள், பாம்புகள், எலிகள், புழுப்பூச்சிகள், சிங்கங்கள், கவிதைகள், கனவுகள் போன்ற விலங்குகள் அந்த இரவு உலகினை வெற்றிகொள்கின்றன.
மோகனின் படைப்புவெளியை உடலின் இரவுப் பிராந்தியத்தைப் பேச்சின் ஒளியால், பேச்சற்றதன் இருட்டால் துலக்க முயல்கின்றன எனத் தற்காலிகமாய் இட்டுப்பார்க்கலாம் ஒரு தூண்டிலை. அல்லது நங்கூரத்தை. ஆடும் தூண்டிலைத் தொடரும் சிந்தனை அழுத்தி நிலைக்க வைக்கவேண்டும். நங்கூரமாக்கிவிட்டால் கவிதை சுமையாகிவிடும். சிந்தனையை ஏற்று நங்கூரத்தையும் தூண்டில்போல் ஆடச்செய்யும் அழகு மோகனின் கவிதைகளில் சாத்தியமாகியுள்ளது.

உடலின் இரவு எனச் சொல்லும்போது, பார்க்கப்படாதது என்பதே இங்கு உரைக்கப்படுகிறது. 'அசையும்போது படகு அசையாதபோது தீவு' என்னும் தேவதேவனின் கவிதை வழியாக inertia-நிலை மீது மோகனின் விழிப்புநிலை உள்ளது. தி.ஜானகிராமன் பற்றிய மோகனின் வாசிப்பில், பெண் கதாபாத்திரங்கள் தேர்வு செய்யும் மடத்தனத்தின் மீது மோகன் வைக்கும் கண்டுபிடிப்பு முக்கியமானது.
இந்த நிலைமையே உடலின் இரவு என ஒரு தருணத்தில் இங்கு குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையின் நீட்சியே 'ஒப்புக்கொடுப்பது' என்ற தேர்வு.
மோகன் தன் முன்னுரையில் தனது கவிதைகள் காலத்தின் தனிமையிலும், காலமற்ற தனிமையிலும் எழுதப்பட்டிருப்பதாய் ஓர் அறிதலை வெளிப்படுத்தியுள்ளார். இது படிக்கும்போது முதலில் சிறுபத்திரிகைகளில் பயன்படுத்தப்படும் அலங்கார சொல்லாட்சி எனத் தோன்றக்கூடும். ஆனால் மோகனின் கவிதைப் பின்னணியில் இந்தக் கண்டுபிடிப்பு பிரக்ஞை முக்கியத்துவம் உடையது. காலத்துக்குத் தன் பழக்கத்தில் எதிர்வினையாற்றிக் கொண்டும், காலமற்ற ஒரு ஸ்தலத்தில் மறுகிக் கொண்டிருப்பதுமான இரண்டு குதிரைகளில் பயணிப்பதுதான் மனம்.
சி.மோகனின் பாதையில் அவர் வசப்படுத்தியிருக்கும், தேர்வு செய்திருக்கும், வெளிச்சப்படுத்தியிருக்கும் இடம் என்று கூட இதைச் சொல்ல முடியும்
ப.சிங்காரம், சம்பத் போன்ற எழுத்தாளர்கள் குறித்து படைப்பூக்கம் கொண்ட அறிமுகங்களையும், விமர்சனங்களையும் எழுதியதன் மூலம் அவர்களை தமிழ் சூழலுக்கு மீண்டும் நினைவூட்டியதில் இவரது பங்கு முக்கியமானது. நடைவெளிக் குறிப்புகள் மற்றும் காலம்,கலை,கலைஞன் போன்ற நூல்கள், எழுத்து மற்றும் கலைச்சூழலுக்குள் நுழைபவனுக்கு சரியான திசைகாட்டிகள். தற்போது வுல்ப் டோட்டம் என்றொரு நாவலை மொழிபெயர்ப்பு செய்துவருகிறார்.
எங்களது ஆசானும், இனிய நண்பரும், தீராக்காதலனுமான சி.மோகனுக்கு இன்று 60 ஆவது பிறந்த நாள்.. 

Comments

Anonymous said…
an exact piture of mohan's world, nice article
நல்ல கட்டுரை.

உங்கள் புகைப்படத்தை பார்த்ததில் சில எண்ணங்கள் தோன்றியது.

1.வணிகராக இருப்பாரோ!

2.சட்டென்று சண்டைக்கு வந்துவிடுவார் என்பது போல!

3.உங்கள் தலையை கொடுத்தால் 10லட்சம் கொடுப்பார்களாம் , ஆளுக்கு இரண்டாக பிரித்துகொள்ளலாம் என்று சாதுர்யமாக பேசி சம்மதிக்க வைத்து விடுபவரை போல!