ஒரு கப்பல் பயணத்தின் போது நடந்த சம்பவம் இது. கப்பலில் இருந்த கிளி மிகவும் சலிப்புற்றுப் போயிருந்த சமயத்தில் அங்கு ஒரு குரங்கும் இருப்பதைக் கண்டு சந்தோஷப்பட்டது. பொழுதைப் போக்கும் எண்ணத்துடன் குரங்கிடம்,“ஒளிந்து விளையாடு விளையாட்டில் ஈடுபடலாமா?” என்று கிளி கேட்டது.
கிளி விளக்கிச் சொன்னது. “மிகவும் எளிய விஷயம் அது. கண்களை மூடிக்கொண்டு சுவரைப் பார்த்தபடி நின்று நூறுவரை எண்ண வேண்டும். அந்த நேரத்தில் நான் எங்காவது சென்று ஒளிந்து கொள்வேன். எண்ணி முடித்த பிறகு நீ என்னைத் தேடிப்பிடிக்க வேண்டும்.
அவர்கள் விளையாட்டில் ஈடுபட்ட சமயம் கப்பல் வெடித்து விட்டது. குரங்கு நூறு என்று எண்ணி முடித்தபோது கப்பல் வெடித்தது. கடலில் மிதந்த ஒரு மரப்பலகையில் சென்று கிளி அமர்ந்து கொண்டது.
குரங்கு அந்தப் பலகையை நோக்கி நீந்தி வருவதற்கு முயன்று சோர்ந்து போனதைக் கிளி கவனித்தது. பலகை மீது ஏறிய குரங்கு கிளியைப் பார்த்து,“என்ன முட்டாள்தனமான விளையாட்டு இது? ” என்று சீறியது.
நாம் வாழும் வாழ்க்கை எத்தனை முட்டாள்தனமானது என்பதைக் குறிப்பிட ஓஷோ சொன்ன கதை இது.
இந்தக் கதையில் வரும் குரங்கோடும் கிளியோடும் நம்மையும் அடையாளம் கண்டால் அந்தக் கதைக்குக் கூடுதலாக சில மடிப்புகள் சேர்வதை என்னால் உணரமுடிகிறது.
ஆண்கள் அந்தக் குரங்கை ஆணாகவும் கிளியைப் பெண்ணாகவும் மாற்றிப் பார்க்கலாம். பெண்கள் கிளியை ஆணாகவும் தன்னைக் குரங்காகவும் அடையாளம் காணலாம். ஒருவரே கிளியாகவும் குரங்காகவும் இருந்த சம்பவங்கள் நினைவுக்கு வரலாம்.
வேட்கை கிளியாகவும் அதைத் தொடருபவனோ தொடருபவளோ குரங்காகிப் போவதற்கு இந்தக் கதையில் இடம் உண்டு.
கப்பலில் குரங்கு, கிளியுடன் பயணித்த மனிதர்களின் கதை என்ன? கப்பல் ஏன் வெடித்தது?
“என்ன முட்டாள்தனமான விளையாட்டு இது? ” என்று சீறுவதற்கும் தன் கோபத்தைக் காட்டுவதற்கும் கிளி எதிரிலாவது இருக்கிறது இக்கதையில்.
“என்ன முட்டாள்தனமான விளையாட்டு இது? ” என்று சீறுவதற்கு குரங்கு உயிர்தப்பியிருப்பதும் இக்கதையின் அதிசயம் தான். வெளியே அதற்கான சாத்தியங்கள் குறைவு.
கிளியும் தொலைந்த குரங்கும் இல்லாமல் போன உலகம் தானே கதைக்கு வெளியே வலியோடு இருக்கிறது.
இந்தக் கதையைப் பொருத்தவரை குரங்கும் கிளியும் கப்பல் இல்லாமல் போனாலும் இருப்பது இந்த உலகத்தில் வசிப்பதற்கான ஆறுதலாக இருக்கிறது.
ஆனால் இந்தக் கதை கேட்ட எந்தக் குரங்கும் கிளி கண்ணாமூச்சி விளையாட்டுக்குக் கூப்பிட்டால் கண்ணை மூடவே மூடாது.
“என்ன முட்டாள்தனமான விளையாட்டு இது? ”
Comments