Skip to main content

ம. இலெ. தங்கப்பா நேர்காணல்



அண்மையில் காலமான தமிழறிஞர் ம.இலே. தங்கப்பாவின் பங்களிப்புகளைத் தெரிந்து கொள்ள உதவும் நேர்காணல் இது. இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட சங்கத் தமிழ் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட 2013-ம் ஆண்டு காலத்தில் புதுச்சேரியில் உள்ள வீட்டில் சுந்தர புத்தனும், நானும் செய்த நேர்காணல் இது...தி சன்டே இந்தியன் இதழில் வெளியானது

உங்களுடைய ஊர் மற்றும் குடும்பப் பின்னணி பற்றி கூறுங்கள்? 

நான் பிறந்தது நெல்லை மாவட்டத்தில் தென்காசி அருகிலுள்ள குரும்பலாபேரி. எங்கள் குடும்பத்தில் எல்லோரும் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் படித்த குடும்பம். என் தந்தையார் தமிழாசிரியராக இருந்தார். உழவுத்தொழிலிலும் ஈடுபட்டுவந்தார். அருப்புக்கோட்டை, விருதுநகரில் கொஞ்ச நாட்கள் பணிபுரிந்தார்கள். பிறகு கோபாலசமுத்திரத்தில் வேலைபார்த்தார்கள். பெரும்பாலும் தனியார் பள்ளிகளில்தான் இருந்தார்கள். எனக்கு ஒரு தங்கை, ஒரு தம்பி. தங்கைக்குத் திருமணமாகி இருபத்தெட்டு வயதில் இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். தம்பி கல்லூரிப் பேராசிரியராக வேலைபார்த்து ஓய்வுபெற்றுவிட்டார். தற்போது மதுரையில் வசித்துவருகிறார். 

பள்ளிப்படிப்பு பற்றிச் சொல்லுங்கள்... 

எங்கள் ஊரில் தொடக்கப்பள்ளி படித்தேன். கீழப்பாவூர் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையில் படித்தேன். குரும்பலாபேரிக்கு மிக அருகில் இருக்கிற ஊர் அது. பிறகு அப்பா கோபாலசமுத்திரத்திற்கு ஆசிரியராகப் போனார். அங்கு பத்தாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையில் படித்தேன். தூய யோவான் கல்லூரி பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பு. ஆசிரியப் படிப்பை முடித்துவிட்டு பரமக்குடியில் ஒரு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியில் இருந்தேன். 

சிறுவயதிலேயே தமிழ்மீது ஆர்வம் வந்துவிட்டதா? 

அப்பா ஒரு தமிழாசிரியராக இருந்ததால் இயல்பாகவே தமிழ் மீது ஈடுபாடு வந்துவிட்டது. பள்ளியில் படிக்கும் நிறைய தமிழ்ப் பாடல்களை படித்திருக்கிறேன். தமிழின் சிறந்த நூல்களைப் படிக்கும் பழக்கமும் இருந்தது. அப்படியே அது படிப்படியாக வளர்ந்து வந்தது. 

தமிழில் கவிதை இன்றுவரை கடந்துவந்திருக்கும் பாதை பற்றி சுருக்கமாகக் கூறமுடியுமா?

சங்ககாலத்தில் கவிதை என்பது ஒரு செப்பமான வடிவமாக இருந்தது. வாழ்க்கையை அகமாகவும் புறமாகவும் பார்த்து எழுதினார்கள். அகப்பாடல் என்பது மனிதர்களின் அன்பை வெளிப்படுத்தக்கூடியது. புறப்பாடல்கள் அவர்களின் பெருமிதமான வாழ்க்கையை அரசர்களின் புகழை புலவர்களின் சிறப்பைப் பாடின. அதுவொரு செப்பமான இலக்கிய வடிவமாக திகழ்ந்தது. பிற்காலத்தில் சிலப்பதிகாரம், மணிமேகலை என்று காவியங்கள் வந்தன. செழுமையான தமிழில் நல்ல படைப்பிலக்கியங்களாக போற்றப்பட்டன. பிறகு சமய இலக்கியங்கள். அடுத்து புலவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டக்கூடிய சித்திரக்கவிதைகளையும் சிற்றிலக்கியங்களையும் படைத்தனர். இராமலிங்க அடிகளார் சமய உணர்வை நல்ல கவித்துவமான பாடல்களின் மூலம் ஏற்படுத்தினார். அதற்கடுத்து பாரதியார், பாரதிதாசன். மக்களுக்கு நேரடியாக சென்று சேரக்கூடிய பாடல்களை இருவரும் எழுதினார்கள். அவை மக்களுக்கு எளிதில் புரிந்தன. பெருந்சித்திரனார் போன்ற தமிழுணர்வுமிக்க மரபுக்கவிதைகளைத் தந்தனர். வானம்பாடிகளின் காலத்தில் புதுக்கவிதை எழுச்சியான ஓர் இடத்தை அடைந்தது. பலர் அதில் திறமைமிக்கப் படைப்பாளிகளாக இருந்தனர். 

சங்ககாலக் கவிதைகள் சாதரண மனிதனின் வாழ்க்கையைப் பற்றி பாடவில்லை. உயர்வர்க்கம் மற்றும் சாதியத்தை தூக்கிப்பிடித்த அந்தக் கவிதைகளை தமிழரின் இலக்கியம் என்று எப்படி சொல்லமுடியும் என்று பிரபஞ்சன் விமர்சித்துள்ளார். அதுபற்றி...    

தற்காலத்தின் சிக்கல்களை மனதில் வைத்துக்கொண்டு அதை பார்க்கமுடியாது. அந்தக் காலத்தில் புலவர்கள் தங்களின் அனுபவம், அதனால் உருவான உணர்வுகளை எழுதியுள்ளனர். கீழ்நிலை மக்களைப் பற்றி எழுதவில்லை என்று சொல்கிறார்கள். சாதி இருந்ததற்கான அடையாளமாக சில பாடல்கள் இருக்கின்றன. அன்றைய சூழல்தான் பாடல்களில் வெளிப்பட்டுள்ளன. இன்றைக்குள்ள அடக்கமுறை, ஒடுக்குமுறை எல்லாம் சங்கப்பாடல்களில் இல்லையே என்று தற்காலப் பார்வையில் அணுகமுடியாது. 

பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருந்து கல்லூரிப் பேராசிரியராக ஆனவர் நீங்கள். உங்கள் பார்வையில் ஆசிரியர்களின் தரம் இன்று எப்படி இருக்கிறது? 

இன்று ஆசிரியர்கள் இருக்கிறார்ளாவென்றே. நாங்கள் மாணவர்களாக இருந்த காலத்தில் எங்கள் எதிர்காலத்தில் அக்கறையும் கவனமும் காட்டிய ஆசிரியர்கள் இருந்தார்கள். அவர்களால்தான் நாங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைந்தோம். நான் ஆசிரியராக இருந்தபோதும் தமிழ்ப் பண்பாட்டைப் பற்றியும் ஒழுக்கத்தைப் பற்றியும் மாணவர்களுக்குக் கற்பித்தேன். அதுமாதிரியான கல்விமுறை சில காலம் இருந்து வந்தது. ஆனால் அது படிப்படியாக குறைந்து அறிவியல் வளர்ச்சியின் முக்கியத்துவம் கல்வி முறைக்குள் நுழைந்துவிட்டது. அதனால் இலக்கியம், கலை, பண்பாடு தேவையில்லை என்ற உணர்வு கூடுதலானது. அறிவியலுக்கு முதன்மை கொடுத்தால் போதும் என்று நினைக்கத் தொடங்கினார்கள். அதனால் இலக்கியம், ஒழுக்கம் போன்றவற்றிற்கெல்லாம் இடம்கொடுக்காமல் போய்விட்டார்கள். அடுத்து ஆங்கிலவழிப் பள்ளிகள். ஆங்கிலத்தை ஒரு மொழியாக கற்றுக்கொள்வதில் எந்தப் பிழையுமில்லை. அந்தவகையில் பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தைக் கற்றுக்கொடுக்கலாம். பயிற்றுமொழியாக ஆங்கிலத்தை வைத்திருக்கும்போது அது அவர்களுடைய சொந்த அறிவுக்குத் தடையாக இருக்கிறது. உலகில் எல்லா நாட்டைச் சேர்ந்தவர்களும் அவரவர் மொழியை பயிற்றுமொழியாக வைத்திருக்கும்போது நாம் மட்டும் ஏன் அப்படிச் செய்யவில்லை? தமிழகத்தில் மட்டும் ஆங்கிலத்தை பயிற்றுமொழியாக வைக்கிறார்கள் என்று எண்ணிப்பார்க்கும்போது, பல்வேறு நிலைகளில் வேலைபார்க்கவேண்டும் வெளிநாடுகளுக்குச்  செல்லவேண்டும் என்ற மனப்போக்குதான் அதற்குக் காரணமாக இருக்கிறது. ஆங்கிலக் கல்வியை கற்கவேண்டும் என்ற நோக்கமே உலகியல் நோக்கமாக போகிறது. உலகியல்தன்மையைத்தான் இன்றைக்கு ஆங்கிலக் கல்வி வளர்த்து வருகிறது. இங்கு பண்பாட்டுக்கு இடமே இல்லை.

தமிழ் நவீன சமூக உருவாக்கத்தில் தமிழாசிரியர்களின் பங்கு பெரிதாக இருந்துள்ளது. தற்போதைய தமிழாசிரியர்கள் எப்படி உள்ளனர்? 

இப்போது அறிவியலுக்கு முதன்மை கொடுத்த காரணத்தால், அறிவார்ந்த நல்ல வாய்ப்புள்ள மாணவர்கள் எல்லாம் அறிவியலுக்குப் போய்விடுகிறார்கள். கீழ்நிலையில் உள்ளவர்கள், மேலே செல்லமுடியாதவர்கள் தமிழை அடிப்படையாகக் கொண்டு கல்வியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தமிழ் படிக்க வருகிற மாணவர்களின் தரம் மிகக்குறைவாக இருக்கிறது. யார் வேண்டுமானாலும் தேர்வை எழுதி தமிழாசிரியர்களாக வந்துவிடலாம். அந்தக் காலத்தில் புலவர்கள், வித்வான்களுக்கு நல்ல புலமையான படிப்பு இருந்தது. தமிழை நன்றாகக் கரைத்துக்குடித்தால்தான் வித்வான் என்றும் புலவர் என்றும் பட்டம் அளிக்கப்பட்டார்கள். யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்று தமிழ் இலக்கியப் படிப்பின் தரம் குறைந்துபோய்வி¢ட்டது. இரண்டாம் நிலை ஆசிரியர்கள், கைவினை ஆசிரியர்கள் தமிழ்த் தேர்வை எழுதி தமிழாசிரியர்களாக வந்துவிடுகிறார்கள். இலக்கியத்தைக் கற்றுக்கொடுப்பதற்கான ஆர்வமோ வலுவோ இருப்பதில்லை. அது வயிற்றுப்பிழைப்புக்கான பணியாக மாறிவிடுகிறது. இன்று தமிழாசிரியர்கள் தமிழ் ஆர்வமும் கொஞ்சமும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் உண¢மை. 

மரபுக்கவிதை பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் நீங்கள். உங்கள் பார்வையில் புதுக்கவிதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 


சிலர் தங்களுடைய எண்ணங்களை ஆழமாக வெளிப்படுத்த வேண்டும். அதற்கு ஒரு புதிய வழியை மேற்கொள்ளலாம் என்று புதுக்கவிதையைத் தேர்ந்தெடுத்தார்கள். கிரியேட்டிவிட்டி என்கிற படைப்புத்தன்மை மிக்கவர்கள் புதுக்கவிதை எழுதத் தொடங்கினார்கள். அவர்கள் வெற்றி அடைந்திருக்கிலாம். செந்தொடை என்று சொல்வார்கள். அதில் அடி வரையறை மட்டும் இருக்கும். எதுகை மோனை இருக்காது. மற்ற அணிகளும் எவையும் இருப்பதில்லை. அவர்களால் நல்ல செழுமையான மரபுக் கவிதைகளையும் எழுதமுடியும். புதுக்கவிதைக்கென்று தனி வடிவம் கிடையாது. எதுகை மோனை தேவையில்லை, மரபை படிக்கவேண்டியதில்லை என்று நினைக்கிறவர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுகிறார்கள். மரபில் நூறு பேர் எழுதுகிறார்கள் என்றால் அதை ஐம்பது பேர் சிறப்பாக எழுதக்கூடியவர்களாக இருப்பார்கள். ஆனால் இந்தப் புதுக்கவிதையில் நூறில் பத்து பேர் கூட தேறமாட்டார்கள். சரியான பாதையில் போனால் அதுவொரு வளர்ச்சியாக இருக்கும். 

புதுக்கவிதையை கவனித்துவரும்போது அதில் யாராவது முக்கியமாக தோன்றியிருக்கிறார்களா? 

வானம்பாடி கவிஞர்களைச் சொல்லலாம். அதில் தமிழ்நாடன், நீலமணி, இன்குலாப் போன¢றவர்கள் ஞாபகத்துக்கு வருகிறார்கள். 

திராவிட இயக்கம் ஆட்சி அதிகாரம் பெற்ற பிறகு தமிழ்மொழி வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்புகள் செய்யவில்லை என்ற விமர்சனம் உள்ளது. அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்புகள் செய்யவில்லை என்பதுதான் என்னுடைய எண்ணம். எந்த ஆட்சியாக இருந்தாலும் தாய்மொழிக்கு முதன்மை கொடுத்தே ஆகவேண்டும். உலகில் எந்த நாட்டையும் பாருங்கள். அவரவர் தாய்மொழியைத்தான் எல்லா நிலைகளிலும் பயன்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இங்கு தாய்மொழியை பின்னே தள்ளிவிட்டு ஆங்கிலத்துக்கும் மற்றவற்றுக்கும் முதன்மை கொடுக்கும்போது அது சரியான வளர்ச்சிக்குரியதாக இல்லை. தமிழ்த்தாயக்குக் கோயில்கள் கட்டுவது, வள்ளுவர் கோட்டம் கட்டுவது, மாநாடுகள் நடத்துவது என்று மேல்பூச்சு வேலைகள் செய்கிறார்களே தவிர, தமிழை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்திருக்க வேண¢டும். தமிழை ஆட்சிமொழியாகவும் பயிற்றுமொழியாகவும் ஆக்கியிருக்க வேண்டும். அது அடிப்படை. தமிழில் படிப்பது கட்டாயமில்லை என்று ஆக்கிவிட்டார்கள். தமிழ்நாட்டில் தமிழை படிக்காமலே இருக்கலாம் என்ற நிலையும் இருக்கிறது. அரசு சார்பில் எந்த வளர்ச்சியும் தமிழுக்கு ஏற்படவில்லை. ஆனால் தனிப்பட்ட புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களால் தமிழ் வளர்ந்திருக்கிறது.

சங்க இலக்கியக் கவிதைகளை மொழிபெயர்த்த அனுபவம்... 

எழுபதுகளில் சங்கப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஹியுஸ் அண்ட் ஹார்மொனிஸ்... ப்ரம் ஆன் ஏன்ஸியன்ட் லேண்ட் என்று சிறு வெளியீடாக நாங்களே வெளியிட்டோம். அந்த சொற்றொடரே ஷெல்லியின் பாடல் வரியிலிருந்து எடுக்கப்பட்டது. ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு அந்த நூல் மிகவும் பிடித்திருந்தது. புலவர் கோவேந்தன் மூலம் எனக்கு அறிமுகமான நண்பர் அவர். மேற்கொண்டு நல்ல முறையில் செய்யலாம் எனறு சொன்னார். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக செய்துவந்த பணிக்கு சலபதியின் தூண்டுகோலே காரணம். அதற்கடுத்து முத்தொள்ளாயிரத்தை மொழிபெயர்த்தேன். அது பென்குயின் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இப்போது நாலடியாரை மொழிபெயர்த்து முடித்துள்ளேன். 

இந்த மொழிபெயர்ப்புப் பணியில் உங்களுக்கு ஏற்பட்ட நிறைவு என்ன? 

படித்தவர்களும் பெங்குயின் புத்தகம் வந்த பிறகு எழுதிய மதிப்பாளர்களும் நன்றாகப் பாராட்டியுள்ளார்கள். நிறைய மொழிபெயர்ப்புகள் இருந்தாலும் ஆங்கில முறைப்படியான மொழிபெயர்ப்புகள் மிகக் குறைவு. ஏற்கெனவே ஏ.கே.ராமானுஜம் செய்திருக்கிறார். திருக்குறளை சுத்தானந்த பாரதியாரும் ஜி.யு.போப்பும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். படிக்கக்கூடிய ஆங்கிலம், மரபுசார்ந்த ஆங்கிலம் என்று சொல்லும்போது படிக்கக்கூடிய ஆங்கிலத்தில் என் மொழிபெயர்ப்பு இருக்கிறது. பாரதியார் அழகாக ஆங்கிலத்தில் எழுதக்கூடியவர்.  தனது கவிதைகள் சிலவற்றை மிக அழகாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவற்றை நான் படித்திருக்கிறேன். 


இலக்கியம் தவிர உங்களது ஆர்வங்கள் வேறென்ன.... 

வாழ்க்கையே ஓர் ஆர்வம்தான். வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று வாழ்க்கை அறிவியல் என்று புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். நமக்கு அன்புதான் தேவை. தமிழ்நாட்டில் தமிழ்தான் முதன்மையான இடத்தில் இருக்கவேண்டும் என்பதில் ஈடுபாடு இருக்கிறது. தாய்மொழியில் கல்வி இருந்தால்தான் இயல்பான ஒரு முன்னேற்றம் ஏற்படும். அதற்காக நான் பல போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறேன். தெளி தமிழ் என்ற இதழை நடத்திவருகிறேன்.  

சிறுவர் பாடல்கள் எழுதியுள்ளீர்கள். உங்களுடைய பங்களிப்புகள் என்ன?

அழ. வள்ளியப்பா குழந்தைகளுக்கான இயல்பான பாடல்களை எழுதியிருக்கிறார். பெரும்பாலும் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்லும் பாடல்களையே எழுதியிருக்கிறார்கள். தேசத் தலைவர், நாட்டுப்பற்று என அறிவுசார்ந்து எழுதுகின்றனர். குழந்தைகள் மகிழ்ச்சியுடன ஆடிப்பாடும் நிலையில் யாரும் எழுதுவதில்லை. இயற்கை சார்ந்த வாழ்க்கையை விட்டு விலகிப்போவதால்தான் நாம் பல பிரச்னைகளைச் சந்தித்துவருகிறோம். அதில் எனக்கு ஆர்வம் அதிகம் உண்டு. எனவே இயற்கையைப் பற்றி அறிவை குழந்தைகளிடம் ஏற்படுத்தவேண்டும். அதுபோன்ற பாடல்களை நான் எழுதியிருக்கிறேன். குழந்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டக்கூடியதாக என்னுடைய பாடல்கள் இருக்கும். எல்லோரும் ஒன்றாக கூடும்போது கொண்டாட்டமாகப் பாடவேண்டும் என்ற அடிப்படையில் என் பாடல்கள் அமைந்திருக்கும். ஒரு சில கதைகள் எழுதியிருக்கிறேன். பாடல்கள்தான் அதிகம்.

தற்போது சிறுவர் இலக்கியத்தின் நிலை எப்படி இருக்கிறது? 

சிறுவர் கதைகள் நிறைய எழுதப்படுகின்றன. குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைச் சொல்லிக்கொடுக்கும் கதைகளை எழுதுகிறார்கள். நல்ல படைப்புத்தன்மையோடு அது இருக்கவேண்டும். அறிவுரைப் பாடல்கள் அதிகமாக இருக்கின்றன. குழந்தைகள் ஆடிப்பாடுகிற வகையில் அந்தப் பாடல்கள் எழுதப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். என்னுடைய குழந்தைப் பாடல் நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றிருக்கிறேன். 

திருக்குறள் மொழிபெயர்ப்பு தொடங்கி இன்றுவரை தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள் சர்வதேச அளவில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பற்றி கூறமுடியுமா? 

வெளியுலகில் என்ன தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஆங்கில மொழிபெயர்ப்புகள் பற்றிப் பேசும்போது திருக்குறள் பலராலும் வரவேற்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. ஏ.கே.ராமானுஜம் மூலமாகத்தான் சங்க இலக்கியம் வெளியுலகில் அறிமுகமானது. என¢னுடைய பென்குயின் புத்தகங்கள் என்ன விளைவை ஏற்படுத்தியிருக்கின்றன என்று இதுவரைக்கும் தெரியவில்லை. 

உங்களை பாதித்த முன்னோடிகள் பற்றிச் சொல்லுங்கள்?

தமிழுணர்வைப் பொறுத்தவரையில் பாரதிதாசனின் எண்ணங்கள் என்னைக் கவர்ந்தவை. பொயட்டிக்ஸ் என்று சொல்லக்கூடிய கவித்துவம் பாரதியாரின் குயில்பாட்டில் மிகுதியாக இருக்கிறது. நான் ஆந்தைப் பாட்டு என்று எழுதியிருக்கிறேன். குயில்பாட்டால் கவரப்பட்டு நாமும் எழுதவேண்டும் என்ற ஆர்வத்தில் எதிர்நிலையாக ஆந்தைப் பாட்டு எழுதினேன். தமிழ் இலக்கியப் பரப்பில் திருவிக, மு.வ போன்றவர்கள் பிடித்தமானவர்கள். மறைமலையடிகளின் தமிழ்ப் பணியும் இராமலிங்க அடிகளின் பாடல்களும் மறக்கமுடியாதவை. இன்றைக்கு தமிழர்கள் அடைந்திருக்கிற சீர்திருத்த எண்ணத்திற்கு விழிப்புணர்வுக்கு பெரியார்தான் காரணம். பெரியாருடன் எனக்கு நெருக்கம் இருக்கிறது. எப்படியென்றால் என்னுடைய முழுப்பெயர் லெனின் தங்கப்பா. என் அப்பாவுக்கு பெரியாரிடம் மிகுந்த ஈடுபாடு உண்டு. சோவியத் நாட்டுக்கு பெரியார் போய்வந்தபோது நான் பிறந்தேன். அப்போது குடியரசு இதழில் ரஷ்யா பற்றியும் லென¤ன் பற்றிய எழுதினார். அதை அப்பா படித்ததால் எனக்கு லெனின் என்று பெயர்சூட்டியிருக்கிறார். அப்பா ஒரு தமிழாசிரியராக இருந்தபோதும் மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, கலப்பு மணத்தின் தேவை, மதவாதிகள் கடவுளின் பெயரால் மக்களைப் பிரிக்கிறார்கள் என்று அவர் பேசுவதை சிறு வயதில் நான் கேட்டிருக்கிறேன். நான் பகுத்தறிவு எண்ணங்களைத்தான் அடிப்படையாகக் கொண்டு வளர்ந்திருக்கிறேன். 

இந்தி எதிர்ப்புப் போர் தொடங்கி முள்ளிவாய்க்கால்வரை பல்வேறு வளர்ச்சிகளையும் பின்னடைவுகளையும் சந்தித்து வந்திருக்கிறது. உங்களை பாதித்த சம்பவம் பற்றிச் சொல்லுங்கள்... 

முள்ளிவாய்க்கால் சம்பவம்தான் என்னை கடுமையாக பாதி¢த்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழர்கள் வெற்றியடைந்தார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். அது ஒரு உக்கிரமான போராட்டமாக வெடித்தது. இப்போது மனதை பாதித்த பெருந்துயரம் என்றால் ஈழத்தமிழர்கள் சந்தித்த பேரழிவுதான். இன்னும் என் மனதில் ஓர் அமைதியை ஏற்படுத்தாமல் இருப்பது அதுதான். யாருக்கும் நடக்கக்கூடாத கொடுமை. வல்லாதிக்க வலிமையை வைத்துக்கொண்டு வலிமையில்லாதவர்களை அழித்துவிட்டார்கள். அதை எண்ணிப்பார்க்கும்போது எனக்கு மனம் ஆறவில்லை. 

பழந்தமிழ் இலக்கியத்துடன் ஈடுபாடு உடையவர்கள், கற்றுக்கொடுப்பவர்கள் குறைந்துவரும் சூழல் இது. ஒரு கட்டத்தில் பழந்தமிழ் இலக்கியத்திற்கும் தமிழர்களுக்கும் இடையில் பெரிய இரும்புத்திரை விழுந்துவிடும் என்று கருதுகிறீர்களா? 

தமிழ் ஆட்சிமொழியாகவும் பயிற்றுமொழியாக மாறும்போது அந்தத் திரை விலகும். இப்போது ஆட்சிமொழி என்று சொல்கிறார்களே தவிர அது நடைமுறையில் இல்லை. அதை பயிற்றுமொழியாக ஆக்கும்போதுதான் தாய்மொழியுடன் ஓர் உயிர்ப்பான தொடர்பு ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து தமிழ் மரபு, பண்பாடு, அறிவு எல்லாவற்றின்மீது ஆர்வம் ஏற்படும். உலகில் எந்த நாட்டு இளைஞர்களிடம் போய், அந்த மொழியின் சிறந்த நூல், சிறந்த படைப்பாளி யார் என்று கேட்டால் விடை சொல்வார்கள். இங்கே தமிழ்ப் பிள்ளைகளிடம் கேட்டால் அதற்கு விடை கிடைக்காது. தமிழ் இலக்கியம் பற்றிய ஆர்வமும் இருக்காது. தமிழை பயிற்றுமொழியாக ஆக்காதவரையில் இந்த இரும்புத்திரை விழுந்தபடிதான் இருக்கும். அது விலகவே விலகாது. 

திராவிட இயக்கம் தமிழுக்கு என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழை பயிற்றுமொழியாக ஆட்சிமொழியாக ஆக்கியிருக்க வேண்டும். கடைகளின் தெருக்களின் பெயர்கள் தமிழில் இருக்கவேண்டும். எல்லா நிலைகளிலும் தமிழை பயன்பாட்டில் வைத்திருக்கவேண்டும். ஆங்கிலத்தை ஒரு மொழியாக இல்லாமல், அதன் பயன்பாட்டை அதிமாக்கும்போது அது வணிகமாக மாறிவிடுகிறது. ஆங்கிலப் பள்ளி நடத்துகிறவர்கள் வலிமையானவர்களாக மாறிக்கொண்டு தமிழுக்குத் தடைக்கல்லாக இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் அவர்கள் பின்னால் செல்கிறார்கள். நாம் தாய்மொழிக்குரிய இடத்தைக் கொடுத்திருந்தால் இந்த நிலையை நாம் மாற்றியிருக்கலாம். 

ஏ.கே.ராமானுஜம் செய்தி மொழிபெயர்ப்புக்கும் உங்கள் அணுகுமுறைக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

ஆங்கிலத்தில் நல்ல புலமைமிக்கவர் ஏ.கே.ராமானுஜம். ஆனால் அவருக்கு தமிழ் தாய்மொழியாக இருந்தாலும் சங்கப் பாடல்கள் மொழிபெயர்ப்பில் சில இடங்களில் பிழை இருக்கிறது. ஆங்கிலம் அளவுக்கு தமிழில் அவருக்கு பரிச்சயமில்லை. கருத்தை தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் மக்களிடத்தில் எடுத்துச் செல்லக்கூடிய பொயடிக்ஸ் என்கிற கவித்துவத் தன்மை தேவைப்படுகிறது. என்னுடைய மொழிபெயர்ப்பில் தமிழ்த்தன்மை குறையாமல் இருக்கிறது. 

நெல்லையில் பிறந்த நீங்கள் புதுச்சேரியில் வாழ்ந்துவருகிறீர்கள். ஏன் இங்கேயே தங்கிவிட்டீர்கள். 

நெல்லையில் இருக்கும்போது பாரதிதாசன் பிறந்த ஊர் இது என்பது தெரிந்தது. அவரைப் பற்றியும் நிறைய தெரிந்துகொண்டிருந்தேன். தற்செயலாக புதுச்சேரியில் ஆசிரியர்களாக வேலைபார்த்தவர்களைச் சந்தித்தபோது, இங்கே வேலைவாய்ப்பு இருப்பதாகவும் சொன்னார்கள். எனவே இங்கு வந்துவிட்டேன். 1951 இல் இங்கு வந்தேன். இரண்டு முறை பாரதிதாசனைச் சந்தித்திருக்கிறேன். 

சுந்தரபுத்தன், ஷங்கர்ராமசுப்ரமணியன் 

Comments