முல்லா நஸ்ரூதின் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார். வீட்டிலிருந்து அவசரமாகத் தந்தி ஒன்று வந்ததால் அவசர அவசரமாக பெட்டி, படுக்கைகளைக் கட்டி, ரயிலைப் பிடிக்க தரைத்தளத்திற்கு வந்தார். கட்டணத்தைச் செலுத்தி ரசீதை வாங்கியபிறகு, காரில் ஏறப்போகும்போதுதான் அவருக்கு தன் குடையை அறையிலேயே தவறவிட்டு வந்தது தெரியவந்தது.
முல்லா நஸ்ரூதின் விடுதிக்குள் நுழைந்து லிப்டில் ஏறி தனது அறைக்குச் சென்றார். 14-வது மாடி அது. முல்லா தங்கியிருந்த அறை ஏற்கனவே ஒரு புதுமணத் தம்பதிகளுக்கு ஒதுக்கப்பட்டிப்பதாக தகவல் தெரிய முல்லா தன் அறையின் முன்னால் என்ன செய்வதென்று தெரியாமல் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தார்.
ரயிலுக்குச் சீக்கிரமே கிளம்பவேண்டிய நெருக்கடி இருப்பினும் முல்லாவால் சபலத்தைக் கைவிட முடியவில்லை. அறையின் கதவுத் துவாரம் வழியாக உள்ளே நடப்பதைப் பார்க்கத் தொடங்கினார்.
அவர்கள் புதுமணத் தம்பதிகள். திருமணச் சடங்குகளால் மிகவும் களைப்படைந்து, விருந்தினர்கள் உறவினர்களின் தொல்லையில்லாமல் அப்போதுதான் தங்களைப் பரஸ்பரம் அறியத் தொடங்கியிருந்தனர். அர்த்தமற்ற சல்லாபப் பேச்சில் ஈடுபட்டிருந்தனர்.
இளங்கணவன், தன் புதிய மனைவியின் முகத்தைப் பிடித்து உனக்கு எவ்வளவு அழகிய கண்கள் என்றான்.
மனைவியோ, “உனக்குத்தான் அவை” என்றாள்.
“உனது கைகள் எவ்வளவு மென்மை” என்றான். எல்லாம் உனக்குத்தான் உனக்குத்தான் என்றாள் அந்த இளம்மனைவி பிரியத்துடன்.
இப்படியே பட்டியல் நீண்டுகொண்டிருந்தது.
முல்லா தந்தியை மறந்தார். ஊருக்குப் போகும் ரயில் தவறிவிட்டதை மறந்தார். தனக்காக டாக்சி கீழ்தளத்தில் காத்துக்கொண்டிருப்பதை மறந்தார்.
மனைவியைப் புகழ்ந்து அந்த இளம் கணவன் போட்ட பட்டியல் அனைத்தும் நிறைவுக்கு வர இருந்தது. முல்லாவோ, வெளியிலிருந்து பதற்றத்துடன், “ அந்த மஞ்சள் குடை மட்டும் என்னுடையது,என்னுடையது” என்று சப்தமிட்டார்.
Comments