அகன்ற பள்ளத்தாக்கில்
விழுந்து பரந்து சுழித்தோடும்
நதி
திரும்பும் வழியில்
பக்கவாட்டுப் பாறையிலிருந்து
நீரோட்டத்தைத் தொட்டபடி
ஒரு மரம்
அங்கே இப்போது டினோசர்கள் இல்லை
குரங்குகளும் இல்லை
பார்த்த நானும் இல்லை
வாழ்வு உள்ளது அங்கே
கடலில் கலப்பதற்குக் கொஞ்சம் முன்னர்
நான் பார்த்துக் கடந்த ரயிலிலிருந்து
வெகு ஆழத்தில்
கோடையில் இன்னும் மிச்சமிருக்கும்
கரிய நீரில்
எருமைகள் வெயிலையும்
தண்ணீரின் சில்லிப்பையும்
அசைபோட்டபடி ஓய்வெடுக்கின்றன
அந்த மனமற்ற எருமைகளைப் பற்றிப் பகிர்ந்துகொள்வதற்கு
கழிமுகத்தினருகில் நடை போய்க்கொண்டிருந்த
ஜே. கிருஷ்ணமூர்த்தி இல்லை
வாழ்வு உள்ளது அங்கே
எல்லா அமைதியின்மைகளையும் கொலைத்துடிப்புகளையும்
இப்போதுதான் கொண்டுபோனது ஒரு ரயில்
அடுத்து வரப்போகிறது ஒரு ரயில்
வாழ்வு ரயில் நிலையத்துக்கு
000
நடுவில்
ஒரு இறகு பறக்கிறது
நடுவயதைக் கடந்த அவள்
ஆள்நடமாட்டமே அற்ற தெருவில்
உதிர்ந்த வேப்பிலைகளைப் பெருக்கி
ஒதுக்கிக் கொண்டிருக்கிறாள்
தெருவின் மறுமுனையிலிருந்து
வரத்தொடங்கியிருக்கும் இளம்வெயிலில்
ஒரு கோட்டுச் சித்திரமாக
நாய் வெளியேறிக் கொண்டிருக்கிறது
அதன் ஒரு கால் வளைந்திருக்கிறது
000
கோட்டைச் சுவர்களில் ஏறிக்குதிக்க
வீரர்களுக்கும்
சாகசக் காதலர்களுக்கும் உதவும்
உடும்புகளை
சைவ சித்தாந்த நூலக அலமாரியில்
மர நாற்காலிகளின் வாசனையினூடாக
முதலில் பார்த்தேன்.
உடும்பைக் கொண்டு
ஏறாத மதில்களில் ஏறினார்கள்
திட்டமிட்ட காரியம் முடிந்த பிறகு
உடும்பைக் கறியாக்கி
ஆரோக்கியத்துக்காகச்
சாப்பிட்டார்கள்.
உண்ட பிறகு அருவருப்பு தோன்றினால்
உடல் குணக்கி இறந்துவிடுவார்கள்.
நடுவயதைக் கடந்த என் கதையில்
முதல்முறையாக
முதுமலைக் காட்டில்
அடர்ந்த இறகுகள் கொண்ட
வசீகரக் காட்டுச்சேவலைப் பார்த்து
இரண்டு நிமிடங்களில்
புற்றுக்குள் செல்லவிருந்த
சாம்பல் வெள்ளை நிறம்கொண்ட
உடும்பு
நெளுநெளுப்பாய்
என்னைச் சந்தித்தது
பல்லிக் கண்கள் பாம்பின் கண்கள்
நுனியில் கொக்கியாக இரண்டு நாக்குகள்
வெகு நீளம்
அவை
தோன்றித் தோன்றி
மறைந்தன.
நாங்கள் பார்க்காத யானைகள்
பார்த்த மான்கள் பாறைகளைப் போன்று
வெயிலில் காய்ந்து
சோர்ந்திருந்த மரங்களின் பின்னணியில்
சரடென வெளிப்பட்டு
மறைந்த உடும்பின் நாக்கு
எனக்குள்ளும் துடித்துக் கொண்டிருக்கிறது
எங்கே
000
தூரிகை பிரஷ்கள்
பட்டு சேலை கட்டி கூந்தலில்
தூசியேறிய ரப்பர் பொம்மை
சென்ற ஆண்டு பாடப்புத்தகங்கள்
நோட்டுகள்
வண்ண க்ரேயான்கள்
மைத்தீற்றல்கள்
நீ வரைந்திருக்கும் நீல உடை முதியவளிடம்
உனது கண்கள் எப்படி வந்தன
அம்மாவுக்கு ஒரு நெடுங்கவிதை
இந்த அப்பாவுக்கு ஒரு சிறிய கவிதை
இதயத்தின் வடிவத்தில் வெட்டப்பட்ட சிவப்பு வண்ணக் காகிதத்தில்
அறை மூலையில்
உனது மேஜையில்
உள்ளவை எல்லாவற்றிலும் உனது தடங்கள் உள்ளன
விடுமுறைக்கு ஊருக்குப் போயிருக்கும்
உன்னை எண்ணியபடி
உனது மேஜையைக் கோதி
அங்கிருந்த பேனாக்கூட்டிலிருந்து
சின்னக் கத்திரியை எடுத்து
எனது நெஞ்சில் நெடுநாளாக
வளர்ந்து நிற்கும்
முதல் நரைமுடியை வெட்டுகிறேன்
என் சிறுமகளே
உன்னைத் தவிர வேறு யாரிடம்
இதைப் பகிர்ந்துகொள்வேன்.
000
நேற்று தான்
எனது பற்குழி
இரண்டாவது உலோகத் தொப்பியை
அணிந்தது
விடுமுறையின் காலையென்பதால்
ஒரு தேநீர்
ஒரு உளுந்தவடை எனத் தொடங்கியது
இந்த நாளின் உற்சவம்.
பலகாரங்கள் இருக்கும்
கண்ணாடிப் பெட்டியில்
புஷ்டியாகவும் பளபளப்பாகவும்
குவிந்திருக்கும்
சமோசாக்களில் ஒன்றை ஆசையோடு
எனதில் ஒருவன்
பார்க்கிறான்
எனது பையில் இன்னும் பணம் தீரவில்லை
ஆனால் அவனை
சமோசாவிலிருந்து பிரித்து
இழுத்துக் கொண்டு போகிறேன்
சமோசாவே சமோசாவே
பசியையும் தாண்டி
அடக்கம் நீங்கிய
இச்சையின் வடிவே
உனக்கும் எனக்கும் தான்
எத்தனை இடைவெளி.
000
செத்தவர்
தெருவுக்கு வந்து
அறிவிக்கவியலாது
சங்கும் சேகண்டியும் வந்து
ஒருவரின் இறப்பைச் சொல்ல வேண்டிய
பெருநகரம் அது
மரணம் உரைக்கும் அந்த ஒலியை
நானும் காகமும் தான் முதலில்
கேட்டோம்
வாகனங்கள் வந்தன
சடலத்தைப் பார்த்துவிட்டு வெளியே
வந்த ஆண்கள்
சிறிது நேரம்
இடுப்பில் வைத்த கையை எடுக்கவேயில்லை
காம்பவுண்ட் சுவரில்
பூமாலைகள் பெருகின
வெயில் உறைத்தது
பக்கத்து அடுக்குமாடிக் குடியிருப்பின்
வாசல் சரிவில்
எல்லா வயதிலும்
பெண்கள் அமர்ந்து இளைப்பாறினர்
எங்கிருந்து வந்து சேர்ந்தனர்
எப்படிச் சேகரித்தனர்
என்று தெரியவில்லை
சிறிதும் பெரிதுமாக குழந்தைகள்
பிளாஸ்டிக் சொப்புச் சாமான்களை
ஒரு மஞ்சள் பையிலிருந்து எடுத்துப் பரப்பினர்
அம்மாக்களின் காலடி இதத்தில்
தங்கள் சமையலைத் தொடங்கினர்
மரணம் யாருக்கு
எந்த வயதில்
எனக்குத் தெரியவேயில்லை.
000
Comments