Skip to main content

ஜோஸே ஸரமாகோவின் அறியப்படாத தீவின் கதை




போர்ச்சுகீசிய எழுத்தாளர் ஜோஸே ஸரமாகோ எழுதிய ‘அறியப்படாத தீவின் கதை’ நெடுங்கதையை பத்தாண்டுகளுக்கு முன்னர் புது எழுத்து இதழில் படித்தபோது அடைந்த மனப்பதிவு வேறு. காலச்சுவடு வெளியீடாகப் புத்தகத்தில் படித்து முடித்தபோது, பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்தக் கதை என்னச் சித்திரத்தைக் கொடுத்தது என்பதை நினைவுகூர முயன்றேன். நான் இப்போது அடைந்த உணர்வு, மனப் பிம்பம், அனுபவம் வேறு. ஜோஸே ஸரமாகோ இந்தக் கதை குறித்து அடைய நினைத்த இலக்குக்குப் பக்கத்தில் இப்போதுதான் என்னால் செல்ல முடிந்திருக்கிறது என்றும் சொல்லலாம்.

‘அறியப்படாத தீவின் கதை’ முற்றிலும் உருவகக்கதை. இதன் தொடக்கத்தில் ஒரு மனிதன், அரசன் ஆட்சி நடத்தும் இடத்தின் கதவைத் தட்டி ஒரு விண்ணப்பம் செய்கிறான். அவன் மாலுமி இல்லை. கடல் பயணத்தில் அனுபவம் கொண்டவனும் அல்ல. ஆனால், அவன் அறியப்படாத தீவு ஒன்றைக் கண்டுபிடிக்க அரசனிடம் ஒரு கப்பலைக் கேட்டு விண்ணப்பம் செய்கிறான். அந்த அரண்மனையில் விண்ணப்பம் கேட்க ஒரு கதவும், சலுகைகளுக்கான ஒரு கதவும் உள்ளது. ஆனால், அரசன், வழக்கம்போல சலுகைகளுக்கான கதவிலேயே சஞ்சரிக்கிறான். விண்ணப்பம் செலுத்தும் கதவைத் திறப்பவள் அதிகாரத்தின் கடைசி நிலையிலான அரண்மனை சுத்தம் செய்யும் பணிப்பெண்ணாக நமக்கு அறிமுகமாகும்போது ஒரு காஃப்கா தன்மையான அனுபவம் என்று கருதுகிறோம்.

ஆனால், மூன்று நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு, அந்த மனிதன் தனக்கு வேண்டிய படகைப் பெற்ற பிறகு, காஃப்கா அந்த இடத்திலிருந்து மறைந்துபோகிறார்.  

அது படகு அல்ல. சின்னப் பாய்மரக் கப்பல். கடல் பறவைகள் எச்சமிட்டு முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும் இடமாக நிறைய நாட்கள் பயன்படுத்தாத நிலையில் பாய்மரத் துணிகள் கிழிந்த நிலையில் உள்ளது.

அறியப்படாத தீவு என்பது ஒன்றும் பூமியில் இல்லை; அது பைத்தியக்காரத் தனமென்று அரசன் நினைத்தது போலவே, அந்த மனிதன் துணைக்கழைத்த மாலுமிகளும் வர மறுக்கின்றனர்.

ஆனால் ஒரு பெண் சம்மதிக்கிறாள். அரசனின் கடைசி வாயிலில் நின்ற பணிப்பெண்தான் அவள். அவனும் அவளும் சேரும்போதெல்லாம் ஒரு பிரபஞ்சம் உண்டாகிவிடுகிறதல்லவா? இனி கப்பலைச் சுத்தம் செய்ய வேண்டும். உணவை ஏற்படுத்த வேண்டும். அவள் வந்தபிறகு கனவும் காணவேண்டுமல்லவா.

கனவில், துறைமுகத்தை விட்டே இனிமேல் தான் நகர இருக்கும் அந்தச் சிறுகப்பல் நோவாவின் சிறுபேழை ஆகிறது. தானியங்கள், மணல் எல்லாம் வந்து சேர்கிறது.

அந்தக் கப்பலே ஒரு அறியப்படாத தீவு என்ற உணர்வை அளிக்கிறது.

அறியப்படாத தீவு எங்கே இருக்கிறது? அதற்கு வெளியே போகவேண்டுமா? ஆமாம். ஆனால் வெளியில் என்பது எங்கே? அதற்கு அழகான ஒரு பதில் இந்த நீள்கதையில் கிடைக்கிறது. ‘உன்னை விட்டு வெளியில் காலடி எடுத்துவைக்காமல் நீ யார் என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாது’ என்கிறார் ஸரமாகோ.

அதற்குப் பிறகு என் படகென்று என் தீவென்று எதுவும் இருக்கமுடியாது. ‘விரும்புவதுதான் அனேகமாக சொந்தம் கொண்டாடுவதின் சிறந்த முறை, சொந்தம் கொண்டாடுவதுதான் விரும்புவதின் மிக மோசமான வழி’ என்று தெரிந்த மனிதன் அவன். மாலுமியாக இருக்க வேண்டியதன் முன் அனுபவம் அவனுக்கு தேவை இல்லைதான்.

அங்கே அவன் இருக்கிறான்; அவள் இருக்கிறாள். அறியப்படாத தீவை நோக்கிப் பயணம் தொடங்கிவிடுகிறது.  

Comments