Skip to main content

அருவியை மௌனமாக்கும் சிறு செடி கவிதை




உலகின் வெவ்வேறு தேசங்கள், கலாசாரம், அழகியல், அரசியல் பின்னணிகள் கொண்ட கவிஞர்களையும் கவிதைகளையும் அறிமுகம் செய்து எஸ். ராமகிருஷ்ணன் தடம் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘கவிதையின் கையசைப்பு’. இதில் 12 கவிஞர்களும் அவர்கள் கவிதைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். ஒரு மாத இடைவெளி கொடுத்து அந்தந்தக் கவிஞர்களையும் அவர்களது கவிதைகளையும் வாசிப்பதற்கான அவகாசம் தேவைப்படும் அளவுக்கு திடமான அறிமுகங்கள் இவை.

ஒரு ஜப்பானியக் கவிஞரையும் ஒரு ரஷ்யக் கவிஞரையும் அவர்களது கவிதைகளையும் எனக்கு ஒரு நாளில் குறிப்பிட்ட இடைவெளியில் படிப்பது மூச்சுமுட்டுவதாக இருந்தது. ஒரு கோள் இன்னொரு கோளுடன் மோதுவது போல மூளையில் கூப்பாட்டையும் ரப்ச்சரையும் உணர்ந்தேன்.

எஸ். ராமகிருஷ்ணன், ஒவ்வொரு கட்டுரையிலும் அவனது உலகத்தை அறிமுகப்படுத்தும் போது, கவிதை குறித்த அந்தந்தக் கவிஞர்களின் சிந்தனைகளையும் தனது எண்ணங்களையும் சேர்த்தே தொடுத்துச் செல்கிறார்.

000

ஒரு கவிதையை எப்போதும் அகத்தில் சமைப்பவனாக, கவிதை ரீதியில், படிமங்கள், உருவகங்களின் அடிப்படையிலேயே சிந்திப்பவனாகவும் பேசுபவனாகவும் இருக்கிறேன். ஆனால், கவிதை என்றால் என்னவென்று சொல் என்று யாராவது கேட்டால் எப்போதும் திகைப்பாகவே இருக்கிறது. என் பத்தொன்பது வயதில் கவிதை என்ற வடிவம் என்னைத் தேர்ந்து கொண்டபோது, கவிதை என்பது சத்தியமாக வெளிப்படுவது என்பதுதான் என்னுடைய எளிமையான பதிலாக இருந்தது. கவிதையில் எந்த உண்மையையும் சொல்லலாம் என்ற எளிய நம்பிக்கை அது. இப்போது சத்தியமென்றால் என்னவென்பதற்கான வரையறை அத்தனை எளிதாக என்னிடம் இல்லை;

எனது தேசத்தில் இப்போது பொய் என்று சொல்லப்படும் மக்கள் இல்லை; பொய் எனும்போது சந்தேகமாக இருக்கிறது. அப்படி அறுதியிட முடியுமா பொய்யை பொய்யென்று?
சிறிய உண்மைகள், பெரிய உண்மைகள், குள்ள உண்மைகள் மட்டுமே இங்கே குடிமக்கள்.   

அந்தந்தக் கணத்தின் உண்மையை எதிர்கொள்வதில் தலையீடு செய்வதில் கவிதைதான் இந்த உலகத்திலேயே முதன்மையான வடிவாக இருக்கிறது. மாறுதலுக்குப் பக்கத்தில் மாறுதலை அதிகபட்சம் புரிந்துகொள்ளும் வடிவமாகவும் உள்ளது.

இந்த நூலில் அறிமுகப்படுத்தப்பட்ட ராபர்டோ ஜூரெரோஸ் கவிதைகளைப் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் உரைப்பது போல செங்குத்தாக கவிதை உயிர் இருக்கிறது. தரையில் மனிதனைப் போல கிடைமட்டமாகத்தான் உணவுண்ணுகிறது. கிடைமட்டமாகத்தான் மனிதனைப் போலப் புணர்கிறது. ஆனால், அது தனக்கான உயிராற்றலை, கற்பனையை, புரிதலை, நேசத்தை அது செங்குத்தாகவே பெறுகிறது.

இனிப்பெல்லாம் கசந்து போகும், சேர்ந்ததெல்லாம் பிரியும், பழங்கள் எல்லாம் அழுகும். இன்பமெல்லாம் துன்பமாகும் என்ற புரிதலை அடைந்த புத்தனுக்குப் பக்கத்தில் நிற்கவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது நமது காலம். அதனால், கவிதை என்ற வஸ்துதான், புத்தனுக்கு அருகில் நிற்க மேலான தகுதியுள்ள வடிவமும் ஆகும். அறிவு, வளர்ச்சிக்கென்று படைக்கப்பட்ட தொழில்நுட்பங்கள், தத்துவம், சிந்தனைகள் எல்லாம் வெறும்புழுதியாக கட்டிடக் குப்பைகளாக பிறனை வெறுப்பதற்கும் ஒதுக்குவதற்கும் அழிப்பதற்குமான தளவாடங்களாக மாறிவிட்ட நிலையில், கவிதையைக் கொண்டுதான் நாம் நேசிக்க முடியும்.

நாம் வாழும் காலத்தில் யார், எமது துக்கத்தை உணர்ந்து பரிசீலிக்கிறானோ, யார் எமது துக்கத்தை அதிகபட்ச புரிதலால் நெருங்குகிறானோ, அவனே எமது காலத்தின் சத்தியத்தை உண்மையை, மெய்மையை நெருங்குபவன் ஆகிறான். அதனால்தான் வரலாற்று இடிபாடுகள், மனிதகுலம் ஒட்டுமொத்தமாக அடைந்த தோல்விகள், அவனது சரிவுகள் அனைத்தின் சாயலோடு பிரதிபலிப்புகளோடு கவிஞன் இந்தப் பூமிக்கு உயிராற்றலை, கனவை, நம்பிக்கையைத் தரும் உரமாகிறான்.

அதனால்தான் முழுமை, முக்தி, மெய்யறிதல், பூரண விடுதலை, அமைதி என்னும் பேருந்து டிப்போவுக்கு முந்தைய நிலையத்தில் கவிஞன் இறங்கிவிடுகிறான். 

இயற்கை, காதல், காமம் எல்லாம் அநித்தியம் என்றாலும் அவனுக்கு வெளியில் இருக்கும் அழகுகள் வேண்டும். அவை தோன்றி மறையுமென்றாலும் அந்த க்ஷணத்தில் அவன் மட்டுமே கிட்டத்தட்ட அந்த அழகுகளோடு பொருட்களோடு விஷயங்களோடு முழுமையான உறவை மேற்கொள்கிறான்.

வான்கோவைப் போல அவன் உதிரும் மலர்களுக்கும் நரைக்கும் தனது காதலிகளுக்கும் இறவா நிலையைத் தருகிறான். பூமியிலிருந்து பறித்த மலர்களை விண்ணகத்துக்குக் கொண்டுபோய் சேர்ப்பவன் கவிஞன்.

000

நான் எனக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்து யானைகளைப் பார்த்து வருகிறேன். ஆனால், சுந்தர ராமசாமியைப் பார்த்த பிறகு சுந்தர ராமசாமியைப் படித்த பிறகு பார்த்த யானை தான் துல்லியமான பார்வை. கலையும், கவிதையும் இயற்கையை கண்ணாகவும் காதாகவும் நெருங்கிச் செவிகொடுக்கும் கல்வியைத் தருகிறது. அந்தக் கல்வியைப் போதித்த ஆசான் சுந்தர ராமசாமி. சுந்தர ராமசாமியின் யானை எப்போதும் பிரமிளுடையது போல வனத்திலிருந்து வரும் யானை அல்ல. அவருடைய யானை வளர்ப்பு யானை. அதன் கழுத்தில் அழகிய மணி உண்டு. அதற்கு கிணுகிணுவென்ற சத்தமுண்டு.

இயற்கையைப் பார்க்கப் பழகும்போது, குழந்தைகளைப் பார்க்கப் பழகுகிறோம். காதலரின் முகத்தில் நம் எண்ணங்கள் மறைந்து அவளாய் அவனாய் காதலாய் அதுவாய் ஆகும் கலையைப் பழகுகிறோம். ஒரு மரத்தின் பட்டைகளையொத்த ஒரு கூழாங்கல்லின் ரேகைகளைப் போல, வாழ்ந்து கனிந்திருக்கும் முதியவர்களின் முகத்தை உற்றுப் பார்க்கும்போது, எண்ணங்கள் அற்று நிச்சலனமாக முடியும். அதைக் கவிதையும் கலைகளும் தான் கற்றுத் தருகிறது.

எதையும் ரசிக்க எதையும் அனுபவிக்க அதைச் சொந்தம் கொண்டாடுவது அவசியமல்ல என்ற உணர்வு அப்போது தான் ஏற்படுகிறது. விரும்புவதுதான் அனேகமாக சொந்தம் கொண்டாடுவதின் சிறந்த முறை, சொந்தம் கொண்டாடுவதுதான் விரும்புவதின் மிக மோசமான வழி. என்று ஜோஸ் சரமாகோ சொல்வது உண்மைதான். வெளியே உள்ள எதைப் பாராட்டும்போதும், அங்கே நமது சுயத்தைச் சற்றே விலக்கிவிடுகிறோம். நாம் அதுவாக மாறும் தற்காலிக விந்தை அங்கே நிகழ்கிறது. சுயத்திலிருந்து நாம் மேலே எழுகிறோம். இப்படித்தான் சுயம் சுயமற்ற பொருட்களால் விஸ்தரிக்கப்படுகிறது.  

மஞ்சள் ரோஸ்
என்று
தயங்காமல்
அவளை அழைத்துவிடு
அவள் தானாகவே
ஒரு மஞ்சள் ரோஸ்
ஆகிவிடுவாள்
இல்லையென்றாலும்
கவலை இல்லை
அவளை
ஆக்கிவிடலாம்.

என்று ஒரு கவிதையை எழுதியிருக்கிறேன். இது பெண் தொடர்பானது மட்டுமல்ல. ஆணுக்கும் எல்லாருக்கும் பொருந்துவதுதான்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு யோகா முகாமுக்குச் சென்றபோது, ஒரு புதிய பயிற்சியை அறிமுகப்படுத்தினார்கள். குத்தவைத்து அமர்ந்து காக்கா போல நடங்கள் என்று சொன்னார்கள். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உட்பட நடந்தோம். ஒரேயொரு நடுத்தர வயதுக்காரர். அவர் ஐடியில் வேலை செய்பவராக இருக்க வேண்டும். அவர் நகரவேயில்லை. என்னவென்று கேட்டேன். காக்கா எப்படி நடக்கும் என்று கேட்டார். அப்படி நடக்கப் பயிற்சி இல்லை என்றார். காக்கா, காக்காவைப் போல நடக்கும்; நீங்களும் காக்கா போல நடங்கள் என்று சொன்னேன். கிட்டத்தட்ட நாங்கள் எல்லாரும் நடந்துகொண்டிருந்தோம் காகமாய். அங்கே நான் இறந்து காகம் பிறக்கிறது.   

நான் அவராகும், நான் அதுவாகும் கலைதான் கவிதை.  தமிழில் அதைக் கோட்பாடாக இல்லாமல் கவிதைகளாக நிகழ்த்தியதில் ஆத்மாநாம் மிகப்பெரிய முன்னோடி. ஆத்மாநாமை முன்வைத்து ‘வேறொருவராகும் கலை’ என்று பிரம்மராஜன் கண்டுபிடிக்கிறார். ஆத்மாநாமின்  ‘என்ற கேள்வி’  கவிதையைப் படிக்கிறேன். கலை என்பது என்ன என்பதற்கான சிறந்த வரையறையும் கூட இந்தக் கவிதை…

பார் அந்த முதலை
அதன் பளிச்சிடும் ஒளியில்
ஒழுகுங்கள் சிறிது நேரம்
அதன் வர்ணங்கள் ஒவ்வொன்றும்
அதனதன் இடத்தில் உள்ளது
ஒரு மரம் என்றால்
அது பெயர்த்தெடுத்து வந்து
வைத்த மாதிரி இருக்க வேண்டும்
இங்கே
காலம் அகாலம் என்ற பேச்சே கிடையாது
நிஜம்
அதுதான் நமக்கு வேண்டும்
அதன் கற்பனைகள் வேண்டும்
வடிவங்களில் மாற்றமிருக்கலாம்
பொருளில் மாற்றம் கூடாது
முற்றும் முழுதான பொருள் வேண்டும்
இது சாத்தியமா
என்ற கேள்வி எழ வேண்டும்
பார்ப்பது நிஜம்தான்
என்று தோற்றம் அளிக்க வேண்டும்
அப்பொழுது
நீங்கள் பார்ப்பது ஓவியம்
எனினும் என்ற பிரச்சினைக்கே
அங்கு இடம் கிடையாது.

முதலையில் உள்ள வண்ணங்களாய் எப்படி ஒழுகுவது என்ற கேள்விக்கே இங்கே இடமில்லை.

000

வார்த்தைகளை அப்படியப்படி மடித்துப் புரோட்டாவைப் போலப் பிய்த்துப் போட்டால் கவிதை என்று கவிதை வடிவத்தைக் கிண்டலாகச் சொல்பவர்கள் உண்டு. அது மட்டுமே அல்ல என்கிறார் போர்ஹே. அது ஒரு டைப்போகிராபிக்கல் குளறுபடி அல்ல. அது பொதுவில், வழக்கத்தில் இருக்கும் சிந்தனை மற்றும் புரிதல், வாசிப்பு முறைக்கு மாற்றானது.


சமுத்திரக் கரையின்
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி
வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல்நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது.
முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது.

பிரமிளின் மிகச் சிறந்த உருவகக் கவிதையான ‘வண்ணத்துப் பூச்சியும் கடலும்’ கவிதை இது. 16 வரிகள் இருக்கிறது. 50 வார்த்தைகள் மட்டுமே. சமுத்திரக் கரையின் பூந்தோட்டத்து மலர்களிலே தேன்குடிக்க அலைந்தது ஒரு வண்ணத்துப் பூச்சி என்ற முதல் சித்திரம் வழியாக, இந்தப் பூமியில் எங்கேயும் காணக் கிடைப்பதற்கு அரிதான ஒரு நிலத்தையும் கடலையும் தோட்டத்தையும் உருவாக்கி விடுகிறான் கவிஞன். வாசகன் எந்தப் பின்னணியில் எந்தவிதமான மனநிலையில் கலாசாரச் சூழலில் இருந்தாலும் அந்த நிலத்துக்கு அவன் மாறும் தகவமைப்பைக் கொண்டிருக்கிறான். அது நேர்கோட்டுத் தன்மையிலான கிடைமட்ட உறவு அல்ல; கவிஞனும் கவிதையை வாசிப்பவனும் சேர்ந்து நடத்துவது.

வழக்கமான காரண- காரியத் தொடர்புகளின் வழியிலான அர்த்தத்தையும் விளக்கங்களையும் கவிதை துவக்கத்திலேயே துண்டித்துவிடுகிறது. பகுத்தறிவு என்று நாம் வரையறை செய்திருக்கும் ஒன்றுக்கு மாற்றான மெய்மையை கவிதை முன்வைக்கிறது. அப்போதுதான் உவர்த்த சமுத்திரம் தேனாய் இனிக்கிறது என்னும் போது, இரண்டு நிமிடங்களேயான கால அளவில் இந்தக் கவிதை தரும் பிரமாண்டமான வாழ்க்கையும் காலமும் நிலவெளியும் வேறுவேறாகி விடுகிறது. அது சொல்லும் மரணம் வேறாகிறது. அந்த வகையில் ஆத்மாநாம் சொன்னது போல, அவர் நம்பியது போல, கவிதை மதத்துக்கு இணையான ஒரு மாற்று மெய்மை தான்.

உலகம் தோன்றிய, மனிதர்கள் தோன்றிய கதைகளை மதங்களும் பழங்குடி மக்களும் உரைத்திருக்கின்றனர். உலகம் தோன்றிக் கொண்டே இருக்கும் கதைகளை கவிஞர்கள் தானே அதிகம் சொல்லியபடியுள்ளனர். தடுக்கிவிழும்போது தோன்றும் பூமியை தேவதச்சன் தற்செயல் பூமி என்கிறார். இயற்கையை, மனிதர்களை, வாழும் காலத்தின் கோலங்களை, மாறும் பொருள்சார் கலாசாரத்தின் கதைகளைப் பாடிக் கொண்டிருக்கும் பாணர்கள் கவிஞர்கள்.

000

‘கவிதையின் கையசைப்பு’ நூலை முழுமையாகப் படிக்கும்போது, ஒரு வாசகனாக, கவிதை எழுதுபவனாக எனக்கு, என் கவிதை உலகத்துக்கு, எனது பார்வைகளுக்குச் செழுமை தருபவர்களாகவும் நெருக்கமானவர்களாகச் சில கவிஞர்களை உணர்ந்தேன். சில கவிஞர்கள் எனக்கு அன்னியமாகவும் பட்டனர். குறிப்பாகத் தேசியக் கவிகளிடம் எனக்கு ஈடுபாடு ஏற்படவில்லை. தகுபொகு இசிகாவா, கோயுன், ராபர்ட் ஜூரோஸ், மிலான் ஜோர்ட்ஜெவிக், அல்பர்தி, மிலன் ரூபஸ், ரான் பேட்ஜெட் ஆகியோரின் உலகம் எனக்கு தாக்கத்தையும் படிப்பினைகளையும் தருவதாக இருந்தது.

குறிப்பாக சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்பின் வாயிலாக எனக்கு அறிமுகமான வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் பிறந்த ஊரான பேட்டர்சனைச் சேர்ந்த ரான் பேட்ஜெட்டைப் பற்றிப் படிக்கும்போது, என் உலகத்துக்கு மிகவும் நெருக்கமானவர் இவர் என்று உற்சாகம் கொண்டேன். முடிவில் தான் பேட்டர்சன் என்ற திரைப்படத்தில் அவரது கவிதைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை எஸ். ராமகிருஷ்ணன் எழுதியிருந்தார். நான் பேட்டர்சன் படத்தை, ரான் பேட்ஜெட்டைப் பற்றி ஏதுமே அறியாமல் முன்பே பார்த்திருக்கிறேன். இனி ரான் பேட்ஜெட்டை இன்னும் கூர்மையாகத் தொடர்வேன்.

2019-ம் ஆண்டின் கடைசி நாட்களில் இந்த நூலைப் படிக்கும்போது, ஒரு கவிஞனாக நான் எனது உலகத்தையும் எனது படைப்பையும் இன்னும் எப்படிச் செழுமையாக்கிக் கொள்ளவேண்டும் என்ற கட்டளையைப் பெற்றேன். ஒரு நவீன கவிஞனாக கூடுதலான பொறுப்புகளைப் படைப்புசார்ந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அத்தியாவசியம் என்ற போதத்தை இந்தப் புத்தகம் கொடுத்திருக்கிறது.

000

புதுக்கவிதை, நவீன கவிதை என்ற வடிவம் சார்ந்து நமது மரபிலிருந்து பெற்ற செழுமைக்கு ஈடானது வெளிக் கலாசாரங்களிலிருந்து நாம் மொழிபெயர்ப்பாகப் பெற்றதும். காலம்தோறும் மாறும் வெளிப்பாட்டை, வடிவத்தை, நவீனத்தைச் சமைத்ததில் அப்படியான மொழிபெயர்ப்புகளுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் அவர்களை அறிமுகப்படுத்தியவர்களுக்கும் கவிதை வாசகனாக நான் கடமைப்பட்டிருக்கிறேன். பெட்ரோல்ட் ப்ரக்ட், விஸ்லவா சிம்போர்ஸ்கா, பாப்லோ நெருடா, ழாக் ப்ரெவர் தொடங்கி அன்னா ஸ்விர் ஆகியோரை மொழிபெயர்த்த பிரம்மராஜனையும் யமுனா ராஜேந்திரனையும் சுகுமாரனையும் வெ. ஸ்ரீராமையும் சமயவேலையும் நன்றியுடன் தமிழ் கவிதைச்சூழல் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.

தொன்மையான காலத்திலிருந்து காதல், பிரிவு, ஏக்கம், தனிமை, சந்தோஷம் என எல்லா உணர்வுநிலைகளும் ஒன்றுதான். நவீன கவிதை மாறாத அந்த உணர்வுநிலைகளுக்கு அருகே நவீன பொருட்களை வைக்கிறது. ஒரு ஹேர்பின்னை, ஒரு செல்போனை, ஒரு ஹேங்கரை, ஒரு மேஜை நடராஜரை, ஒரு பெண்டுலம் கடிகாரத்தை வைக்கிறது. அந்தப் பொருட்களில் நமது காலத்தின் நமது குணத்தின் நமது வலியின் சாயல்கள் படர்ந்துவிடுகின்றன. அப்படியான நவீனத்தை நம்மில் தூண்டிக் கொண்டேயிருப்பதில் இத்தகைய அறிமுகங்களுக்கும் முக்கியப் பங்குண்டு.

வாழ்க்கை மீதான தீவிரமான தலையீடு, செயல்பாடு செலுத்தும் கலைவடிவம் கவிதை என்பதை உணர்ந்தவர் எஸ். ராமகிருஷ்ணன்.  இந்த நூலில் அந்த உணர்நிலையிலிருந்து சர்வதேச அளவில் 12 கவிஞர்களையும் அவர்களது கவிதைகளையும் அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார். தேவதச்சனும் சமயவேலும் இதிலுள்ள கவிதைகளை மொழிபெயர்த்துள்ளனர்.

படைப்பியக்கச் சூழலின் அணுக்கத்தை, எழுத்தை வாழ்க்கையாகப் பணியாக திட்டமிடாமலேயே தேர்ந்துகொண்டிருக்கிறேன். எனது இருபது வயதுகளின் தொடக்கத்திலேயே இலக்கியம், வாசிப்பு, படைப்பு சார்ந்த மூட்டத்திலேயே உலவி உரையாடிக் கொண்டிருப்பதின், அதில் தரித்து அதுவாகவே வாழ்வதின் இனிமையை இனிப்பைச் சொல்லித் தந்தவர்களில் ஒருவர் எஸ். ராமகிருஷ்ணன். பொருள் தேடுவது, இணை தேடுவது எல்லாவற்றையும் விட பெரிய மகிழ்ச்சி வாசிப்பிலும் படைப்பதிலும் உரையாடலிலும் உள்ளது என்ற நம்பிக்கையை உருவாக்கியவர்களில் அவரும் ஒருவர்.  நாகர்கோயில் அருகே சுங்கான்கடை மலையின் மடியில் அமைந்திருந்த ஒரு பழைய ஆசிரமக் கட்டிடத்தின் திண்ணையில் ஒரு மகுடிக்காரனின் ஊதலில் ஈர்க்கப்பட்டது போல நானும் லக்ஷ்மி மணிவண்ணும் ராமகிருஷ்ணனின் பேச்சுக்குக் கவரப்பட்டோம். அதுதான் எங்கள் முதல் சந்திப்பு. ஒரு மாணவனுக்கு உள்ளும் வெளியேயும் அணுக்கமான பேராசிரியரின் இயல்பை, பகிர்தலை அவர் இன்னமும் தக்கவைத்திருக்கிறார், அகத்தில் என்பதை இப்புத்தகம் வழியாக மீண்டும் உணர்ந்தேன்.

மாணவ நாட்களில் அவரது தாவரங்களின் உரையாடல் சிறுகதையை முதலில் சுபமங்களா இதழில் வாசித்தேன். அருவியின் சத்தத்தை மௌனமாக்கும் சிறு செடி தான் அந்தக் கதையின் மையம். பேரருவியின் சத்தத்தைச் சிறிதாக்கி விடும் ஒரு சின்னஞ்சிறிய செடி மேற்குத் தொடர்ச்சி மலையில் நிஜமாகவே இருப்பதாக நம்பினேன். ஒரு பெரிய மலையில் மரங்களும் செடிகளும் சூழ்ந்த சூழலில் ஒரு அருவியைச் சத்தமில்லாமல் ஆக்கும் சிறு செடி என் அகத்தில் நிறைய நாட்கள் அதிர்ந்துகொண்டிருந்தது. கவிதையைத் தூண்டக்கூடிய கவிதை உணர்வுக்கு நெருக்கமான புனைவு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.


அருவியை மௌனமாக்கும் அந்தச் சிறுசெடி தான் கவிதை. அது மூலிகையாக அரும்பொருளாக இருக்கிறது; அதுவே மிக மலினப்படுத்தப்பட்ட வடிவமாகவும் உள்ளது. ஆனால், கவிதை இன்றும் அத்தியாவசியமானது, அழகு எவ்விதம் அத்தியாவசியமானதோ அதே வகையில் ஆழமாக.

தனிமையை நகுலனுக்கு உரைத்த சுசிலாவைப் போலவே மரணத்தை பிரிவை துறப்பை சொந்தம் கொண்டாடாமல் அனைத்தையும் அனுபவிக்கும் நிறைவை கவிதையைத் தவிர நமக்கு வேறு எது சொல்லித் தரமுடியும். மிலன் ரூபஸ் எழுதிய கவிதை இது.

அழகு


யாரால் கூற இயலும்
படைவீரர்கள் தங்களுடைய கேடயங்களில் ஓவியம்
தீட்டியது ஏன் என்று?
நமக்குள் எவ்வளவு ஆழத்தில் அழகு இருக்கிறது
என்பதை யார் கூற முடியும்?
மிக ஆழம்
உன்னோடு சேர்ந்து ஒரு சண்டைக்கோழியின் கத்தலைப்போல
நாம் மரணத்தைப் பயமுறுத்துகிறோம் அந்த அளவுக்கு
மிக ஆழம்.
உன்னோடு சேர்ந்து ஒரு சண்டைக்கோழியின் கத்தலைப்போ
நாம் மரணத்தைப் பயமுறுத்துகிறோம் அந்த அளவுக்கு
மிக ஆழம்.
எங்களது உலகில் நாங்கள் எல்லாப் பக்கங்களிலும்
பூட்டிவைக்கப்பட்டிருக்கிறோம்
கவிஞனைக் கைவிட்டுவிடாதீர்கள்.
ஒரு சக்கரத்தின்மேல் சும்மா கத்தும் குண்டுக் கரிச்சானை
அவனிடம் காட்ட வேண்டாம்.
பேச்சின் ஒரு சிறிய கூடு, முழுக்கவும் ஒரு மின்னுதல்
அவனுடன் இருப்பதுவும் துயரம் அவன் இல்லாமலிருப்பதும்
துயரம்.

மிக்க நன்றி…நண்பர்களே   


Comments