Skip to main content

விலாஸ் சாரங்கின் தம்மம் தந்தவன்




கலைஞர்கள், கவிஞர்கள் தொடங்கி மனிதனின் பேராசையால் சுரண்டப்பட்ட பூமியைப் பற்றிக் கவலைப்படும் சூழலியாளர்கள் வரை புத்தர் இன்றும் ஈர்த்துக் கொண்டிருக்கிறார். ப்ளேட்டோவின் சமகாலத்தவராக புத்தரை வைத்து, உலகளவில் நவீன சிந்தனைகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்திலிருந்து புத்தரின் வாழ்வையும் மரணத்தையும் சமகாலத்தில் நின்று பரிசீலிக்கும் பரிசீலிக்கும் நாவல் ‘தம்மம் தந்தவன்’. மராத்திய, ஆங்கில எழுத்தாளரான விலாஸ் சாரங், கவிஞரும் கூட.

பிறந்த அரண்மனைக்கும் புகுந்த அரண்மனைக்கும் நடுவே நடுக்காட்டில் ஒரு சாலமரத்தின் மடியில் மரத்தைப் பிடித்தபடி தாய் மாயாதேவிக்குப் பிறந்த சித்தார்த்தன், அரச மரத்தடியில் ஞானம் பெறுகிறார். பெரும் கருணையையும் ஈவிரக்கமற்ற தன்மையையும் ஒருசேரக் கொண்ட வெட்டவெளி இயற்கையில் பிறந்து, அதே வெட்டவெளியில் ஞானமென்று சொல்லப்படும் புரிதலை அடையும் புத்தனின் வாழ்க்கையைப் பற்றிய இந்த நாவல், ஒரு கவிஞனால் எழுதப்பட்ட அனுகூலங்களைக் கொண்டிருக்கிறது. தெரியாத கத்திமுனையின் கூரைக் கொண்ட சித்தரிப்பும் மொழியும். 

பழைய உபநிடதங்கள் தொகுக்கப்பட்டு பிரபலமான, புதிய உபநிடதங்களும் எழுதப்பட்ட கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் பிறந்த சித்தார்த்தனின் தேடலும் உபநிடதங்களிலிருந்தே தொடங்குகிறது. துன்பம் என்ற பிரச்சினை குறித்து உபநிடதங்களில் எதுவும் சொல்லப்படவில்லை என்ற புள்ளியில் அவனது தனிப்பயணம் ஆரம்பிக்கிறது. அதுவரையில் நிகழ்ந்த உச்ச அறிதல் என்று சொல்லப்பட்டவற்றை, ‘ஐநூறு தேர்கள் கடந்தபிறகு எஞ்சும் தூசி’ என்று சித்தார்த்தன் கடக்க வேண்டியிருக்கிறது. பச்சையாய் பெரிய உடம்போடு இருந்து மரத்திலிருந்து உதிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து நரம்புகளின் கூடாகி இன்மை நோக்கிப் பயணிக்கும் அரச மரத்தின் இலையை நாவலாசிரியர் வர்ணிப்பது போன்றே புத்தரின் துன்பங்கள், தோல்விகள், பலவீனங்கள், சமரசங்கள் அனைத்தும் இந்தப் படைப்பில் விசாரிக்கப்படுகின்றன.

உறக்கமற்றவனின் இரவு நீண்டது என்று தம்மபதத்தில் புகழ்பெற்ற வரி ஒன்று உண்டு. புத்தனாவதற்காக அவன் தந்தை சுத்தோதனரில் தொடங்கி, மனைவி யசோதரா, மகன் ராகுலன் உட்பட அனைவரது இரவுகளையும் உறக்கமற்றவைகளாக ஆக்குகிறான் சித்தார்த்தன்.

ஆசைகளும் குரோதமும் காமமும் மட்டுமே மனிதனின் இயல்பூக்கங்கள் என்பதை நிரூபிக்கப் போராடும் மாரனுக்கும் புத்தனுக்குமான உரையாடல் ஞாபகத்தில் நிலைக்கும் உருவகங்களால் நிரம்பியது. பிணங்களைத் தின்பதற்காக கழுகுகள் பறந்துகொண்டிருக்கும் அதே மலையில் தான் முட்டைகளையிட்டு ஒரு தாய்க்கழுகு அடைகாத்துக் கொண்டிருக்கிறது என்று பதிலளிக்கிறார்.

பிறப்பு இறப்பு என்னும் துன்பங்களால் உழன்ற மனிதர்களின் கண்ணீரினால் ஆன பொய்கையில் அவலோகிதேஷ்வரரால் பிறப்பிக்கப்படும் பெண் தெய்வமான தாரா, இந்த நாவலின் இறுதியில் அறிமுகமாகிறாள். மனிதனை மரணத்தின் பால் இட்டுச்செல்லாதவள் பெண் என்று அவளைப் படைத்த போதிச் சத்துவர் தன் செயலுக்குக் காரணம் கூறுகிறார்.

மனிதர்களின் பெரும் அச்சங்களைக் கடக்க வைக்கும் பெண் என்னும் இயற்கையின் அமுதத் தாரையை நாவலாசிரியர் பரிசீலிப்பதாகவும் இதைக் கொள்ளலாம்.

கருணையின் வடிவமான பொன்னிற தாரா, தவாங் புல்வெளியில் பூடானையும் திபெத்தையும் பார்த்தபடி இன்று சிலையாக நிற்கிறாள். இந்திய அரசால் நிறுவப்பட்ட சிலை அது.

பவுத்த ஓவியங்களில் சிங்கங்கள் வரையப்பட்டிருக்கின்றன. சிங்கங்களே இல்லாத திபெத்தில் இந்த சிங்கங்கள் ஓவியங்களில் இடம்பெற்றிருக்கின்றன. தாராவும் சிங்கங்களும் நாம் கடக்க வேண்டிய அச்சங்களின் குறியீடாகவும் பார்க்கலாம். தமிழில் சமீபத்தில் வந்த மொழிபெயர்ப்புகளில் காளிப்ரஸாத் மொழிபெயர்த்திருக்கும் இந்த நாவல் முக்கியமானது; சமகாலத்துக்குடன் பொருத்தப்பாடு கொண்டதும் கூட.

காளிப்ரஸாத் இந்த நாவலை மொழிபெயர்ப்பதற்கு ஜெயமோகன் பயன்படுத்தும் காவிய மொழியைத் தேர்ந்துள்ளார். ஜெயமோகனின் மொழி அவரது பார்வை, சிந்தனைகள், அனுபவங்கள் சேர்ந்து உருவாக்கிய தனித்தன்மை.

 ஹெர்மன் ஹெஸ்சேயின் சித்தார்த்தனை போன்று எழுதப்பட்ட நாவல் இது. புத்தரின் காலகட்டத்தை நவீனத்திலிருந்து பார்க்கும் இடைவெளியை அது வைத்திருக்கிறது. விலாஸ் சாரங்கின் மொழி ஜெயமோகனின் சொல்நடையின் தாக்கத்தால் மூடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளன் பெற்ற தாக்கமும் ஆளுமையும் மொழிபெயர்க்கப்படும் ஆளுமைக்குள் அவனது படைப்புக்குள் அதிகம் செயல்பட வழியில்லை. அப்படிச் செயல்பட்டால் அதை விலகி நின்று பார்க்கும் இடைவெளியும், தவிர்க்கும் விவேகமும் மொழிபெயர்ப்பாளனுக்கு அவசியமானது. அப்போதுதான் மூல ஆசிரியரின் தனிக்குரலும் சிந்தனையும் மொழிபெயர்க்கப்படும் மொழியிலும் கேட்கும். நாவல் முழுவதும் புரவி புரவி என்று வருகிறது. எனக்குக் குதிரை என்னும்போதுதான் ஓடத் தொடங்குகிறது. புரவி எனும்போது அது சிலைகளிலும் பல்லக்குகளிலும் ஓடாமல் உறைந்திருக்கிறது.    





Comments