நஞ்சுண்டனைப் பார்ப்பதற்கு முன்னரே அவருடைய ‘சிமெண்ட் பெஞ்சுகள்’ கவிதைத்
தொகுதியைப் பார்த்திருந்தேன். நீல நிறத்தில் அப்போது பிரபலமாக இருந்த ஸ்க்ரீன்
பிரிண்டிங் முறையில் வெளியான புத்தகம் அது. அமைப்பியல்வாதம் தொடர்பில், தமிழ் சிறுபத்திரிகை
சூழலில், புரிந்தும் புரியாமலும் பெங்களூரு முதல் நாகர்கோயில்
வரை தாக்கத்தையும் அச்சுறுத்தலையும் செலுத்திய காலகட்டத்தில் அறிமுகமான பெயர்களில் நஞ்சுண்டனும்
ஒன்று.
ந. பிச்சமூர்த்தி நூற்றாண்டை முன்னிட்டு சென்னை பாரதியார் இல்லத்தில்
நடைபெற்ற நிகழ்ச்சியில் தான் கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும், மொழி
செம்மையாக்குனருமான நஞ்சுண்டன் அறிமுகமானார்.
பாரதியார் இல்லத்துக்கு கவிஞர் விக்ரமாதித்யனுடன் போயிருந்தேன்.
கிட்டத்தட்ட நிகழ்ச்சி முடியும் தருவாயில் மதிய உணவு இடைவேளைக்குப் போனதாக எனக்கு
நினைவு. ஞானக்கூத்தன், ஜி. கே. மூப்பனார் எல்லாரும் கலந்துகொண்ட கூட்டம் அது.
பார்வையாளர்களும் பங்கேற்பாளர்களும் கலைந்துகொண்டிருந்த நிலையில், விக்ரமாதித்யன்
நேரடியாகப் போய், டேய் நஞ்சுண்டா என்று அருகே போய், அவரது தலையில் இருந்த
பாலுமகேந்திரா தொப்பியை கழற்றி எடுத்துவிட்டார். நஞ்சுண்டன் கடுமையாகக் கோபமாகி
என்ன நம்பி! என்று ஆவேசப்பட்டார். அதற்குப் பிறகு நஞ்சுண்டனை எப்படியோ விக்கி
சமாதானப்படுத்தினார்.
அடுத்த சில வருடங்கள் கழிந்து, நான் மின்பிம்பங்கள் தொலைக்காட்சி
நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தொலைபேசியில் என்னை பெங்களூருவில்
நடக்கும் தமிழ் – கன்னட கவிஞர்கள் கலந்துகொள்ளும் மொழிபெயர்ப்புப் பட்டறைக்கு
அழைத்தார். தமிழில் மனுஷ்ய புத்திரன், க. மோகன ரங்கன், சல்மா, கனிமொழி, பா. வெங்கடேசன்,
எம். யுவன், அப்பாஸ் ஆகியோருடன் என்னையும் தேர்ந்தெடுத்திருப்பதாகக் கூறினார். எனக்கு
மிகுந்த சந்தோஷம். ஒப்புக்கொண்டேன். எனது கவிதைகள் சிலவற்றை அவருக்கு அனுப்பியதாக
நினைவு. ஒரேயொரு தொகுதி மட்டுமே அப்போது வந்திருந்தது. 2002-ம் ஆண்டாக இருக்க
வேண்டும். அடுத்த ஓரிரு வாரங்களுக்குள்ளேயே பெங்களூரு பல்கலைக்கழகத்துடன் அந்த
நிகழ்ச்சியைச் சேர்ந்து நடத்துவது காலச்சுவடு பத்திரிகையும் என்ற தகவல் எனக்குத்
தெரிந்தது.
2000-வது ஆண்டின் இறுதியில் காலச்சுவடு நண்பர்களுடன் எனது நட்பையும்
தொடர்புகளையும் இதழ் பங்களிப்பையும் நிறுத்திவிட்ட நிலையில் எனக்கு இந்த
நிகழ்ச்சிக்குச் செல்வது குறித்து சங்கடம் ஏற்பட்டது. நஞ்சுண்டனை எஸ்டிடியில்
அழைத்து எனது சங்கடத்தைச் சொன்னேன். அவர் அதெல்லாம் ஒன்றும் பிரச்சினை இல்லை,
வாருங்கள் என்றார். எனக்கு அந்த நிகழ்ச்சியில் பங்குகொள்வதும் பங்கேற்கும் இடம்
பெங்களூரு என்பதும் கூடுதல் கிறுகிறுப்பையும் சபலத்தையும் கொடுத்திருந்ததால் அதை
மறுக்க முற்றிலும் என்னால் முடியவில்லை.
மொழிபெயர்ப்புப் பட்டறை தொடங்குவதற்கு முந்தின தினம் காலையே அவரது
பல்கலைக்கழக ஊழியர் குடியிருப்பு வீட்டுக்குச் சென்று சேர்ந்துவிட்டேன்.
நஞ்சுண்டனின் சகாவாக ராமநாதனும் எனக்கு அன்று அறிமுகமானார். மலைப்பாங்கான
தெருக்கள், ஒரு வனத்தை ஒத்த பல்கலைக்கழக வளாகம், பருவநிலை எல்லாம் ஈர்த்தது. மதிய
உணவுக்கு முன்பே நானும் நஞ்சுண்டனும் இரண்டு லார்ஜ் ரம் எங்கள் குடலை
உஷ்ணமாக்கியதும் சகஜமானோம். அருமையான காய்கறி உணவு செய்திருந்தார். அவர் தூங்கப்
போனபின்னர், அவரது படுக்கையறைக்கு அடுத்திருந்த நூல் அலமாரி இருக்கும் அறைக்குள்
போனேன். அதில் இருந்த புத்தகங்களில் ஒன்றுதான் இதுவரை என்னை வழிநடத்தும்
புத்தகங்களில் ஒன்றாக இருக்கும் போர்ஹேயின் ‘Twenty four conversations with
borges’ என்ற அபூர்வ நூல். மதியத்தில் நிறை போதையில்,
போர்ஹே எழுதிய நிலவு குறித்த கட்டுரை சுத்தமாகப் புரிந்த நாள் அது. கருப்பு
நிறத்தில் அந்தப் புத்தகம் எனக்கு உடனடியாக மானசீகமானது.
அடுத்த நாள் மொழிபெயர்ப்புப் பட்டறை தொடங்கியது. காந்தி வளாகத்தில்
சித்தலிங்கையா தொடங்கிவைத்துப் பேசிச் சென்றார். பிரபஞ்சனும் வந்திருந்தார். நஞ்சுண்டன்
எல்லாருக்கும் அந்த வளாகத்துக்குப் பக்கத்திலேயே அறைகளை ஏற்பாடு செய்திருந்தார்.
மாலை, மதுவிருந்து தொடங்கியது. கனிமொழி, சல்மா எல்லாரும் விருந்தைத் துவக்கிவைத்து விட்டு, அவரவர் அறைகளுக்கு உறங்கப் போய்விட்டனர். பிரபஞ்சன், மனுஷ்ய புத்திரன், எம். யுவன் எல்லாரும்
இருந்தோம். காலச்சுவடிலிருந்து விலகியதும் அதைத் தொடர்ந்து அதுசார்ந்த
நண்பர்களிடமிருந்தும் விலக்கம் ஏற்பட்டது. அதுதொடர்பில் எம். யுவனுக்குக் கசப்பு
இருந்தது. திருக்கழுகுன்றத்தில் நான் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்க வந்தபோது
எனது ஞானத்தகப்பனாக இருந்து பராமரித்தவர் அவர். விலகிய ஆடாக அவருக்கு என் மேல்
இருந்த எரிச்சலைக் காண்பிக்க ஆரம்பித்தார். நான் கொஞ்சம்போல நிலைமையைப்
புரிந்துகொண்டு அடுத்த அறைகளில் இருக்கும் மதுவையும் நண்பர்களையும் பகிரப்
போயிருக்கலாம். ஆனால் நான் அங்கேயே இருந்தேன். பிரபஞ்சன் இந்த விளையாட்டில்
மத்தியஸ்தராகத் தலையிடவும் இல்லை. பார்வையாளராக இருந்தார். மனுஷ்யபுத்திரனுக்கோ
என் மீது பிரத்யேகமான புகார்கள். சிறுபத்திரிகை இயக்கத்தைக் காக்கும் சிலுவைப்
போராளியாக என்னைக் கருதிக் கொண்டு செய்த வினைகள் மனுஷ்யபுத்திரனைக் காயப்படுத்தியிருந்தன. அவர்
அப்போது உயிர்மையைத் தொடங்கியிருந்தார். வார்த்தைகள் தடித்தன. வெளியே போ என்று
சொல்லப்பட்டது. நான் யுவனைப் பார்த்து சொல்லக்கூடாத வசை ஒன்றைச் சொல்லிவிட்டு
அறையை விட்டு வெளியே வந்தேன். எனக்குள்ள அறையை மாற்றிக் கொண்டு நான் அங்கே போய் இருந்திருக்க வேண்டும். ஆனால், பழைய நண்பர்களுடன் இருக்கும் இதத்துக்குத் தானே இந்த அறையில்
இருந்தோம் என்ற ஆதங்கம் இருந்தது. ஆனால், அவர்கள் என்னை அப்போது பழைய நண்பன் என்பதற்காக மன்னிக்கத் தயாராக இல்லை.
நான் எனது பையை எடுத்துக் கொண்டு இனி இங்கேயிருக்கக் கூடாது என்று கிளம்பிவிட்டேன். பிறகு, ஏழெட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில்,
தேவதச்சன் விளக்கு விருது விழா நிகழ்ச்சி மதுரையில் நடந்தபோது, நான் எம். யுவனிடம்
காலில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பைக் கேட்டேன்.
கடும் குளிர். வனப்பாதையின் இருட்டில் நடந்து நடந்து வெளியே வந்தேன். ஒரு
ஷேர் ஆட்டோவில் ரயில் நிலையத்துக்குப் போனேன். அப்போதுதான் சென்னை ரயில்
கிளம்பியிருந்தது. பேருந்து நிலையம் வந்தேன். ஒரேயொரு ஏசி பேருந்துதான் இருந்தது.
என்னிடம் 50 ரூபாய் குறைவாக இருந்தது டிக்கெட்டுக்கு. அங்கே அறிமுகமான ஆள், காலை
நாலரைக்கு பேருந்து இருக்கிறது. தூங்கிவிட்டுப் போகலாம் என்று கூப்பிட்டார்.
நிறைபோதையில் அது சரியான முடிவாகத் தெரிந்தது. அவரே கூப்பிட்டுப்போய் பேருந்து
நிலையத்தின் மூலையில் ஒரு துண்டை விரித்து உறங்க வைத்தார். அவரும் பக்கத்திலேயே
உறங்கினார். அத்தனை இதமான தூக்கம். திடீரென்று எழுந்தேன். இரண்டரை மணி இருக்கும்.
என்னை அழைத்துத் தூங்க வைத்தவரைக் காணவில்லை. எனது பர்சையும் காணவில்லை. அப்போது
செல்போன் பாவிப்பு பரவலாகவில்லை.
பேருந்து நிலையத்துக்கு வெளியே நடந்துவந்தேன். இருபத்தி நான்கு
மணிநேரங்களுக்கு முன்பு அத்தனை ரம்மியமாக இருந்த பெங்களூர் வேறு கலங்கலான தோற்றத்தை
இருட்டும் வெளிச்சமுமாக எனக்குக் காண்பித்தது. ஒரு ஆட்டோகாரரிடம் சென்று,
ஞாபகத்திலிருந்த நஞ்சுண்டன் வீட்டு முகவரியைச் சொல்லிக் கேட்டேன். உடனடியாகச்
சம்மதித்தார். அன்று இரவு தொடங்கி நான் செய்த ஒரே புத்திசாலித்தனமான செயல்
அதுதான். நஞ்சுண்டன் வீட்டில் இருட்டில் இறங்கி அவரைக் கதவைத் தட்டி அழைத்தேன்.
அவரும் ராமநாதனும் வெளியே வந்து என்னைப் பார்த்து விவரங்கள் கேட்டனர். 300 ரூபாய்
கட்டணத்தைக் கொடுத்து உள்ளே அழைத்துப் படுக்க வைத்தனர்.
அடுத்த நாள் மொழிபெயர்ப்புப் பட்டறையில் அத்தனை நிம்மதியுடன் நான் இல்லை.
எல்லாரிடமும் இரவில் நடந்த விஷயங்கள் குறித்த எனது தரப்பைப் புகார்களாகச் சொல்லிக்
கொண்டிருந்தேன். தெரியாத இடத்துக்குப் போய் கேவலமாக அவமானப்பட்ட உணர்நிலை
இருந்தது. அப்போது நான் காதலித்துக் கொண்டிருந்த என் மனைவியின், நான் மிகவும்
நேசித்த புகைப்படத்தையும் அந்த மணிபர்சுடன் தொலைத்திருந்தேன். அது கூடுதலான சஞ்சலத்தை
எனக்கு அளித்திருந்தது. உடைகளுக்கும் உடம்புக்கும் நடுவில் அடிக்கும் அவமானக்
காற்று சில்லென்று என்னை நிர்வாணமாக்கி அன்று முழுவதும் தொட்டுக் கொண்டேயிருந்தது.
கவிஞர் அப்பாஸ்தான், பாத்துக்கலாம்டா என்று ஆறுதலாகச் சொல்லி, மதிய உணவுக்கு முன்னர் பா. வெங்கடேசனுடன் ஒரு மதுவிடுதிக்கு காரில் அழைத்துப் போனார். இந்தப் புகைப்படம் காணாமல்
போனது ஒரு சகுனமா என்று கேட்டேன் அவரிடம். புதிதாக பார்க்கும் யாரிடமும் நான்
ஆருடம் கேட்பது அப்போதைய வழக்கம். அப்பாசும் ஆரூடக்காரர் ஆனார். விஸ்கியின் மேல்
கண்ணாடி கிளாசில் சோடாவை ஊற்றி கண்ணை மூடிக்கொண்டு ஒரு நிமிடம் அமர்ந்தார். நான்
தங்கநிறத்தில் நுரைக்கும் திரவக் கோளங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரிசா
போகவேண்டியது ஒண்ணு போட்டோவோட போயிடுச்சு. சரியாயிரும்டா என்றார். பா. வெங்கடேசன்
இதையெல்லாம் மிகத் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார், அருகிலிருந்து.
அங்கேதான், முதல்முறையாக ஒரு நடுவயதுக் காரர், தனது மனைவி மகளுடன் அந்த விடுதிக்கு
வந்து தனக்கு பானத்தைத் தருவித்து, மனைவிக்கும் மகளுக்கும் சிக்கன் ஆர்டர் பண்ணிச்
சாப்பிட்டதைப் பார்த்தேன்.
அன்று இரவு, நஞ்சுண்டன் எனக்கு ஊருக்குப் போக பேருந்துக் காசும் கொடுத்து
என்னைச் சரியாக ஏற்றிவிட, மொழிபெயர்ப்பாளர் குறிஞ்சிவேலனையும் ஒப்படைத்து
அனுப்பிவைத்தார். மொழிபெயர்ப்புப் பட்டறைக்காக எனக்குக் கொடுக்கப்பட வேண்டிய
பணத்தை அவர் முன்பே அனுப்பி வைத்திருந்தார்.
சென்னை திரும்பிய பிறகுதான் நஞ்சுண்டன் வீட்டில் படித்த போர்ஹேயின்
புத்தகம் எனக்கு அபூர்வ வஸ்துவெனத் தெரிந்தது. அவரைத் திரும்பவும் தொடர்புகொண்டு
அந்தப் புத்தகம் குறித்துக் கேட்க மூன்று நான்கு மாதங்கள் இடைவெளி
விழுந்துவிட்டது. அவரைக் கூப்பிட்டுக் கேட்கும்போது அதன் தலைப்பை மட்டும்
சொன்னார். அந்தப் புத்தகம் அப்போது தன்னிடம் இல்லை என்று சொல்லி யாரோ எடுத்துச்
சென்றிருப்பதாகவும் சொன்னார்.
அதைத் தேடுவது பைத்தியமாக மாறியது. நான் பார்த்தவரையில் போர்ஹேயின்
நூல்தொகைகள் எதிலும் இல்லாத நேர்காணல்கள் அவை. ஒருகட்டத்தில் அந்தப் புத்தகத்தை
வாங்கிவிடுவது என்று முடிவெடுத்துத் தேடத் தொடங்கியபோது, போர்ஹேயின் புத்தகம்
என்று நான் பார்த்த புத்தகம் உண்மையா என்று போர்ஹே கதைகளின் தன்மையிலேயே சந்தேகமும்
எழுந்தது. கூகுளில் அந்தப் புத்தகம் இருப்பதாக ஒருகட்டத்தில் தெரிந்தது.
திருமணமாகி ஓரிரண்டு வருடங்களில் பெங்களூரு நண்பர் ரகுபதியின் உதவியுடன்
அமெரிக்காவிலிருந்து பழைய புத்தகமாகத் தருவிக்கப்பட்டு இப்போது என்னிடம் மிகப்
பத்திரமான சேகரிப்புகளில் ஒன்றாக இருக்கிறது.
000
அதற்குப் பிறகு இரண்டு சிறு சந்தர்ப்பங்களில் தான் நஞ்சுண்டனுடன் எனது
சந்திப்பு நிகழ்ந்தது. அவர் கன்னடச் சிறுகதைகளை வரிசையாக மொழிபெயர்க்க ஆரம்பித்த
போது, நான் அதில் பாதியை மின்னஞ்சல் வாயிலாகவே படித்துவிட்டுப் பதிலும்
எழுதியிருக்கிறேன்.
காலச்சுவடின் எந்த இதழ் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ‘இன்னொரு
சிறகு’ என்ற தலைப்பாக இருக்கலாம். ஒரு நெடுங்கதையை அவர் எழுதியிருந்தார். மிக நவீனக்குணம் கொண்ட நான் படித்த கதைகளில் ஒன்று. ஒரு பேராசிரியர் தான் கதையின் மையப்பாத்திரம்
என்று நினைவு. ஒட்டுமொத்தக் கதையிலும் அந்தக் கதாபாத்திரத்தின் குணம்,
பண்புநலன்கள், உருவம் எதுவுமே வடிவெடுக்காமல் இருக்கும். அப்படிப்பட்ட ஆளுமைதான்
அந்தக் கதையின் மையமே. அதை நஞ்சுண்டன் அருமையாக உருவாக்கியிருப்பார்.
நண்பர்களிடமும் அவரிடமும் அந்தக் கதையை வியந்திருக்கிறேன். அந்தக்
கதாபாத்திரத்துக்கும் நஞ்சுண்டனுக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை. சுகுமாரன் எழுதிய
நினைவுக் குறிப்பில் நஞ்சுண்டனின் அந்த அம்சத்தைத் தொட்டுக் காட்டியிருக்கிறார்.
கதைகளைச் செம்மை செய்வது தொடர்பில் கடைசியாகச் சந்தித்தபோது என்னிடம்
மிகவும் தீவிரமாகப் பேசினார். அரவிந்தனைப் பார்க்க இந்து தமிழ் அலுவலகத்துக்கு
வந்திருந்தபோது பார்த்தேன். அவரை நான் மைலாப்பூர் வரை பைக்கில் கொண்டு போய்விட்டேன்.
அப்போது அவர் கையில் ஒரு பசுமாடு வாலைச் சுழற்றி துளியூண்டு சாணியைத் தெளித்துவிட்டது.
அவர் பதற்றப்பட்டார். ஒன்றுமில்லை நஞ்சுண்டன் என்றேன். தான் ஒரு சிறுகதையின் எடிட்
செய்யப்படாத பிரதியையும் எடிட் செய்யப்பட்டதையும் அனுப்பி வைப்பதாகச் சொன்னார்.
எனது கருத்தைக் கேட்டு அனுப்பியும் வைத்தார்.
மொழியியல், தத்துவம் ஆகியவற்றில் ஏற்படும் தீவிரவாதம் படைப்பாற்றலையும்
விளையாட்டுத் தன்மையையும் கொன்றுவிடும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. அதனால் எனக்கு அவர்
சொன்ன விஷயத்தில் ஈடுபாடு இல்லை. அவருக்கு பதில் ஏதும் எழுதாமல் நண்டுகள் நகர்ந்துகொண்டேயிருக்கும்
ஸ்மைலியைத் தேர்ந்தெடுத்து ஐம்பது நண்டுகளை அனுப்பிவைத்தேன். என்னிடமுள்ள
விஷமக்குணம் அது. அப்படிச் செய்திருக்கக் கூடாது என்று இப்போது உணர்கிறேன்.
தாட்பூட் என்று சத்தமாகத் தெரிவார் நஞ்சுண்டன். அவரது கன்னட வாசமடிக்கும்
பேச்சும் ஒரு காரணம். ஆனால், நான் அவரிடம் வாஞ்சையைத்தான் அனுபவித்திருக்கிறேன்.
மரணம், படைப்பாளர்கள், கோட்பாட்டாளர்கள், மொழி செம்மையாக்குனர்கள் என்று
யாரையும் விட்டுவைப்பதில்லை.
Comments