Skip to main content

காஃப்காவின் விசாரணை


பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த ஃப்ரன்ஸ் காஃப்கா, நவீனமாகி வரும் உலகில் வாழ நேரந்த மனிதனின் துயரங்களை இலக்கியம் வழியாக மிக நுட்பமாக பரிசீலனை செய்தவர். மாறிவரும் மனித உறவுகள், அவனின் தனிமை, தனிமனிதனுக்கும் அமைப்புகளுக்கும் இடையிலான மோதல்கள், அமைப்புகள் முன் மனிதன் சின்னஞ்சிறிய பரிதாபகரமான உயிராக மாறிநிற்பது ஆகியவற்றை காஃப்கா துல்லியமாக விசாரணை செய்துள்ளார்.

மனிதனை ‘ஆரோக்கியமாகவும்’ ‘அகிம்சை’ முறையிலும் சிறைப்படுத்திய, அவர்களை வளர்ப்பு மிருகங்களாகச் சுருக்கிய அலுவலகம் என்னும் தீங்கைப்  பற்றி தனது உருவகக் கதைகள் வழியாக பல்வேறு சித்திரங்களை காஃப்கா உருவாக்கியுள்ளார். 

விசாரணை நாவலில் கண்ணுக்குப் புலப்படாத காவல் அமைப்பின் கீழ்நிலை ஊழியர்களால் யோசப் க. ஒரு நாள் காலை, எந்தக் காரணமும் இல்லாமல் அவன் அறையில் படுக்கையிலிருந்து எழும்முன்பாகவே கைது செய்யப்படுகிறான். அதைத் தொடர்ந்து தன்னை எப்படியாவது குற்றத்தின் பிடியிலிருந்து விடுவிக்க தொடர்ந்து போராடுகிறான். நீதி அமைப்பின் குளறுபடிகளை தன் மீது தவறாக போடப்பட்ட வழக்கின் வழியாக சரிசெய்யவும், எதிர்த்துப் போராடவும் துணிபவன். ஆனால் படிப்படியாக யோசப் க. நம்பிக்கை இழக்கிறான். நீதி விசாரணைகளில் ஏற்கனவே காத்திருக்கும் எண்ணற்ற நபர்களைப் போல கிட்டத்தட்ட மூடநம்பிக்கைகளுக்குத் தள்ளப்படுகிறான். யோசப் க, கைது செய்யப்பட்டவனே தவிர அவனுக்கு எதுவுமே மறுக்கப்படவில்லை. காதலிப்பதற்கோ, உணவுண்பதற்கோ, வெளியே நடமாடுவதற்கோ எதுவும் மறுக்கப்படவில்லை. தாம் கண்ணுக்குப் புலனாகாத ஒரு அமைப்பால் கண்காணிக்கப்படுகிறோம் மற்றும் விரட்டப்படுகிறோம் என்ற பிரக்ஞை தரும் தீராத வலியுணர்வைத் தவிர அந்தக் கைது எதையுமே யோசப் க.விடமிருந்து பறிக்கவில்லை. இறுதியில் தான் செய்த குற்றம் எதுவென்று தெரியாமலேயே 31-வது பிறந்த நாள் அன்று இருட்டில் அகௌரவமான முறையில் இரண்டு காவலர்களால் தண்டிக்கப்பட்டு உயிர்துறக்கிறான்.

21-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருக்கும் நமக்கு காஃப்காவின் படைப்புகள் பொருத்தப்பாட்டுடன் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பிக்கொள்ள வேண்டியது அவசியம். காஃப்கா அவர் காலத்தில் இருந்த சில, பல நன்மைகளைத் தன்னகத்தே வைத்திருந்த நவீன ஜனநாயக அரசு மற்றும் நிர்வாக, நீதி அமைப்பில் நேரத்தொடங்கியிருந்த அபத்த நடைமுறைகளையும், குளறுபடிகளையும் ஆராய்ந்துள்ளார்.

இன்று நாம் காணும் ஜனநாயக அரசு மற்றும் நிர்வாக அமைப்பின் சர்வ வல்லமை சென்ற நூற்றாண்டில் வெளிப்படையாக தெரிந்ததுபோல கண்ணுக்குப் புலப்படும் தன்மை கொண்டதல்ல. அதன் இருத்தலுக்கு ஒரே வெளிப்படையான நியாயமாக திகழ்ந்த வெகுமக்களின் நலன்களை நிர்வகிப்பதிலிருந்தும் ரொம்ப தூரம் விலகி விட்டது. அதன் அதிகாரத்துவத்தையும், வல்லமையையும் புதிய அமைப்புகள் நிர்வகிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஒரு தனிமனிதன் அல்லது ஒரு குழுவின் மேல் செலுத்தும் உரிமையையும், எதேச்சதிகாரத்தையும் பல கண்ணுக்குத் தெரியாத அமைப்புகள் பெற்றுவருகின்றன. இந்தச் சூழலில் நம் காலத்தின் எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள, விமர்சிக்க காஃப்கா மேலும் பொருத்தபாடு உடையவர் ஆகிறார்.

எப்போதெல்லாம் ஒரு தனிமனிதனின் மேல் புலப்படாத ஒரு அமைப்பின் கரம் நீள்கிறதோ, எப்போது தன் மேல் நடக்கும் தாக்குதல்களுக்கு காரண-காரியங்களைத் துலக்கமுடியாமல் மனிதன் அவதியில் சகலத்தையும் பிறாண்டி, உழன்று தன்னையும் துன்பத்திற்கு ஆட்படுத்திக் கொள்கிறானோ அதுவெல்லாமே காஃப்காவுக்கு நெருக்கமான தருணங்கள் தான். ரகசிய மரணதண்டனைகளும், அணுஉலைகள், அணைகள் போன்ற திடீர் திட்டங்களும், நம் குடிமக்களின் அங்கீகாரம் பெறப்படாமலேயே திணிக்கப்படும் நிலம் இது. பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் இல்லை. நீதிமன்றங்களில் நீதிபதி இல்லை. தண்டனைகளைத் தீர்மானிப்பது ஊடகங்களின் விவாத மேடைகள். முடிவுகள் எங்கோ, யாராலோ, யார் நலனுக்காகவோ எடுக்கப்படும் நிலையில் நமது நாடாளுமன்றம், ஒரு மெய்நிகர் தோற்றமே. சமீபத்தில் ஒரு நிறுவனத்தின் சார்பாக பெட்ரோலியக் குழாய்கள் தஞ்சையின் வேளாண்மை நிலங்களில் ஊடுருவிய சம்பவம் ஒரு உதாரணம்.

அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்கள்- தொழிலாளர்கள் முதல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள்வரை- தாங்கள் பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி, அதற்கான சாட்சியங்களையும் திரட்டி நீதிமன்றத்தில் ஒப்படைத்து குற்றத்தை நிரூபிக்க வேண்டிய நீதிஅமைப்பின் கீழ் நாம் இருப்பதால், காஃப்கா இன்னும் பொருத்தப்பாடு உடையவர் ஆகிறார்.       

000

காஃப்கா,நவீன மனிதனை முழுக்க களைப்படையவும், சிக்கவும் வைத்திருக்கும் பழுதான, நோயுற்ற, அர்த்தமற்ற நடைமுறைகளால் தேய்ந்த அமைப்புகளைப் பிரதிபலிக்கும் கற்பனைப் பிரபஞ்சம் ஒன்றை தனது கதைகளில் சித்தரித்துள்ளார். அங்குள்ள நிலவெளியும், கட்டடங்களின், அறைகளின் தோற்றங்களும், நடக்கும் சம்பவங்களும், உரையாடல்களும் நிச்சயமாக மிகுபுனைவின் தோற்றத்தைக்  கொண்டவை. ஆனால் தீவிரமான நிலையில் புனைவுக்கு வெளியே உள்ள எதார்த்தத்தை முரண்நகை செய்பவை. அந்த மிகுபுனைவால் ஈர்க்கப்பட்டு, நமது எதார்த்தத்தை கொஞ்சம் தீவிரமாக, யோசப் க.-வின் விழிப்புநிலையில் பார்த்தால், காஃப்காவின் அச்சமூட்டும் கற்பனைப் பிரபஞ்சம் நம் எதார்த்தத்துக்குள்ளேயே மறைந்திருப்பதை உணர முடியலாம். அப்போது காஃப்காவின் நகைச்சுவை  சிரிக்கமுடியாத வலிகொண்ட நகைச்சுவையாய் தோன்றும்.

விசாரணை கதையில் கைது செய்யப்பட்ட, யோசப் க., தனது கட்டிலில் இருந்து விழிக்கும்போதே, அவனது அறைக்கு எதிர்ப்புறம் வசித்து வந்த முதியவள் அவனைக் கவனித்துக் கொண்டிருப்பதை உணர்கிறான் யோசப் க. விசாரணையில் யோசப் க.வின் அறை தொடங்கி, அவன் செல்லும் தெருக்கள், அலுவலகம், நீதிமன்றம் இருக்கும் கீழ்நிலைக் குடியிருப்பு, நீதிமன்றம், வழக்கறிஞரின் அறை, நீதிமன்ற ஓவியனின் அறை என எல்லாமும் ஒரு பொந்துகளைப் போல குறுகியவை. யோசப் க. தங்கியிருக்கும் அறைக்கும், மிஸ் ப்யூர்ட்ஸ்னரின் அறைக்கும் ஒரு கதவு இடைவெளிதான் தூரம். எந்த அறைகளும் அந்தரங்கம் இல்லாதவை. விசாரணை நாவல் முழுவதும் ஜன்னல்கள், வாசல்கள் பற்றிய பல்வேறு சித்தரிப்புகள் உண்டு. ஜன்னல்கள் பெரும்பாலும் மூடியவை. வாசல்கள் திறந்தே இருக்கின்றன. ஆனால் எல்லாரும் போவதற்கு அதிகாரமோ, உரிமையோ இல்லாதவை. அறைகள் அனைத்தும் இருண்டவை. காப்கா, அந்த அறையில் இருக்கும் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த நினைக்கும்போதோ, அங்கு நடக்கும் செயல்கள் மீது வாசகனின் கவனத்தைக் குவிக்க வேண்டுமென்றோ நினைக்கும்போது சிறிய மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றுகிறார். நீதிபதியும், பார்வையாளர்களும் குற்றம்சாட்டப்பட்டவரும் கூடியிருக்கும் விசாரணை அறை, கலவியோ, ஒரு சல்லாபமோ, ஒரு வியாபார பேரமோ எதுவும் நடப்பதற்கான சாத்தியங்கள் கொண்டதுதான். விசாரணையில் வரும் அந்த ஓவியன் சொல்வது போல,“நீதிமன்ற அலுவலகங்கள் எல்லா கூரைகளுக்கும் கீழ் இருக்கத்தான் செய்கின்றன”.

சில ஜன்னல்கள் திறக்கவே முடியாதவாறு, கண்ணாடி பதித்து மூடப்பட்டவை. காப்கா சித்தரிக்கும் ஜன்னல்கள் மேல் தெரியும் புகைக்கூண்டும், வானவெளியும் ஒரு படமாக இருக்கவும் சாத்தியம் உண்டு. ஜன்னல் மற்றும் வாயில்களை நோக்கிய ஏக்கம் காப்காவுக்கு விடுதலைக்கான, விடுபடுதலுக்கான உணர்வாய் துரத்தியிருக்க வேண்டும். வாயில்களைப் பற்றி சிரிப்பூட்டக்கூடியதும் துயரகரமானதுமான புனைவுகள் விசாரணை நாவலில் உண்டு. நீதிமன்ற ஓவியனிடம் தன் வழக்குக்கான சிபாரிசுக்காக யோசப் க. செல்லும்போது, ஓவியனின் அறைக்குள் ஒரு மர்மமான கதவு இருப்பது தெரியவருகிறது. அந்தக் கதவை ஓவியனின் கட்டிலின் அடியில் இருந்து திறக்கவேண்டும்.   உள்நுழைவதற்கும், வெளியேறுவதற்குமாக படைக்கப்பட்ட வாயிலில் அதிகாரத்துவம் உருவாக்கியிருக்கும் காவல்காரனை எதிர்த்து, விலக்கிச் செல்லமுடியாத நிலையை, நவீன மனிதனின் தடையாக உருவகப்படுத்துவதாக வாசிக்க இயலும். ஒரு ஆவணத்தை கவனத்துடன் படித்ததால் களைப்படைந்த அதிகாரி, வழக்கறிஞர்கள் படியேறி வரும் வாசல் ஒன்றில் நின்று, நடந்து ஏறிவரும் அனைத்து வழக்கறிஞர்களையும் படியில் இருந்து உருட்டி விளையாடுகிறார். வழக்கறிஞர்கள் அவரை எதிர்க்கவோ, வன்முறையைப் பயன்படுத்தவோ செய்யாமல் தொடர்ந்து படிகளில் ஏறிப்போய் அவரைக் களைப்படைய வைத்தே உள்ளே செல்வதற்கு நினைக்கிறார்கள். நாவலின் இறுதியில் வரும் நீதிமன்றப் பாதிரி, ஒரு வாயிற்காப்போன் கதையைச் சொல்கிறார். நம்மைச் சுற்றி உருவாகியிருக்கும் அதிகாரத்துவத்தின் மீது கவிந்திருக்கும் அபத்தம் மற்றும் அதைச் சார்ந்துள்ள மனிதனின் துயரத்தை இதைவிடத் தீவிரமாக உரைப்பது சாத்தியமேயல்ல.

சட்டத்தின் முன் ஒரு வாயிற்காவலன் நிற்கிறான். கிராமத்திலிருந்து ஒருவன் அந்த வாயிற்காவலனிடம் வந்து சட்டத்திற்குள் நுழைய அனுமதி வேண்டுகிறான். ஆனால், வாயிற்காவலன் அவன் நுழைய இப்போது அனுமதிக்க முடியாது என்கிறான். அந்த மனிதன் யோசித்துவிட்டு, அப்படியானால் பிறகு நுழைய அனுமதி உண்டா என்று கேட்கிறான். அது முடியலாம் என்கிறான் வாயிற்காவலன். ‘ஆனால் இப்போது முடியாது’. சட்டத்திற்கு செல்லும் வாயில் எப்போதும் போலத் திறந்திருப்பதால், ஒரு பக்கமாக சிறிது நகர்ந்தாலும், வாயில் வழியாக உள்ளே பார்ப்பதற்காக அந்த மனிதன் குனிகிறான். வாயிற்காவலன் அதை கவனித்துவிட்டு சிரித்தவாறு கூறுகிறான்:’அது உன்னை அந்த அளவுக்குக் கவர்ந்தால், என் அனுமதி இல்லாமல் உள்ளே செல்ல முயன்றுதான் பாரேன். ஆனால், ஒன்று மட்டும் கவனத்தில் வைத்துக்கொள். நான் மிகவும் பலசாலி. மேலும் நான் வெறும் கீழ்ப்படியிலிருக்கும் காவல்காரன்தான். ஒவ்வொரு கூடத்திலும் வாயிற்காவலர்கள் நிற்கிறார்கள். ஒவ்வொருவனும் மற்றவனை விட பலசாலி. மூன்றாவது காவல்காரனின் தோற்றத்தையே என்னால்கூடத் தாங்க முடியாது”. இதுபோன்ற கஷ்டங்களை கிராமத்தான் எதிர்பார்க்கவில்லை. சட்டம் எல்லாரும் எப்போதும் அணுகும்படிதானே இருக்கவேண்டும் என்று எண்ணுகிறான். ஆனால் இப்போது ஃபர் கோட்டு அணிந்துகொண்டிருக்கும் வாயிற்காவலனைச் சரியாகப் பார்க்கும்போது-அவனது கூர்மையான பெரும்நாசி, நீண்ட,மெல்லிய,கருத்த,டார்டார் இனத்தாடி-நுழைவதற்கு அனுமதி கிடைக்கும்வரை காத்திருப்பது மேல் என்று முடிவுசெய்கிறான். வாயிற்காவலன் அவனுக்கு ஒரு சிறிய பெஞ்சைக் கொடுத்து வாயிலிலிருந்து ஒதுங்கி உட்காரச் செய்கிறான். அங்கு அவன் நாள் கணக்காக, வருஷக்கணக்காக உட்கார்ந்திருக்கிறான். அவன் உள்ளே நுழையப் பல முயற்சிகள் செய்து, வாயிற்காவலனைத் தன் வேண்டுகோள்களினால் களைப்படையச் செய்கிறான். வாயிற்காவலன் அடிக்கடி அவனிடம் சிறு விசாரணைகள் நடத்துகிறான். அவன் சொந்த ஊரைப்பற்றியும் மற்ற விஷயங்களைப் பற்றியும் கேட்கிறான். ஆனால் அவை பெரிய நபர்கள் கேட்பதைப் போல ஒப்புக்கு கேட்கும் கேள்விகள். இறுதியில் அவனை இன்னும் உள்ளே விட முடியாது என்று திரும்பத் திரும்பக் கூறுகிறான். தன் பிரயாணத்திற்காகப் பலவற்றுடன் ஆயத்தமாக வந்திருந்த கிராமவாசி தனக்கு மிகவும் மதிப்புள்ளதாக இருந்தபோதிலும் எல்லாவற்றையும் வாயிற்காவலனுக்கு லஞ்சமாக கொடுக்க செலவு செய்துவிடுகிறான். அவன் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளத்தான் செய்கிறான், ஆனால் அத்துடன் கூறுகிறான், ‘ஏதும் செய்யாமல் விட்டுவிட்டோம் என்று நீ எண்ணக்கூடாது என்றுதான் நான் ஏற்றுக்கொள்கிறேன்’. இந்தப் பல வருஷங்களும் அவன் வாயிற்காவலனைக் கிட்டத்தட்ட கண்கொட்டாமல் கவனிக்கிறான். அவன் மற்ற வாயிற்காவலர்களை மறந்துவிடுகிறான். இந்த முதல் காவலன்தான் சட்டத்திற்குள் நுழைவதற்கு இருக்கும் ஒரே ஒரு முட்டுக்கட்டை போல் அவனுக்குத் தோன்றுகிறான். முதல் சில வருடங்கள் தன் துரதிர்ஷ்டத்தை வாய்விட்டு வைகிறான். பிறகு அவனுக்கு வயது ஆக,ஆக வெறுமனே தனக்குத்தானே முணுமுணுக்கத்தான் செய்கிறான். அவன் அறிவு தடுமாறுகிறது. பல வருடங்களாக வாயிற்காவலனைக் கவனித்து வந்திருந்ததால், அவனுடைய கோட்டின் காலரில் இருக்கும் ஈக்களையும் தெரிந்துகொண்டதால், தனக்கு உதவிசெய்யும்படி, வாயிற்காவலனின் மனதை மாற்றும்படி ஈக்களையும் கேட்டுக்கொள்கிறான். இறுதியில் அவனுடைய கண்களில் ஒளியும் மங்கிவிடுகிறது. அவனைச்சுற்றி உண்மையிலேயே இருண்டு கொண்டு வருகிறதா அல்லது அவனது கண்கள்தான் அவனை ஏமாற்றுகின்றனவா என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் இப்போது இருளில் ஒரு பிரகாசத்தைப் பார்க்கிறான். அது அணைக்க முடியாதவாறு சட்டத்தின் வாயிலிலிருந்து வெடித்துக்கொண்டு வெளிவருகிறது. இப்போது அவன் இன்னும் அதிக நாட்கள் உயிருடன் இருக்கப்போவதில்லை. இறக்குமுன், இக்காலம் முழுவதும் அவனுக்கு ஏற்பட்ட எல்லா அனுபங்களும் இதுவரை வாயிற்காவலனை அவன் கேட்டிராத கேள்வியாக அவன் மனதில் ஒன்றுதிரள்கின்றன. விறைப்பாகிக் கொண்டே வருகிற தன் உடலை நிமிர்த்த முடியாததால், அவன் வாயிற்காவலனை சைகை செய்து அழைக்கிறான். வாயிற்காவலன் மிகத் தாழக்குனிய வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்கிடையேயிருந்த யார் கேட்பது,யார் பதில் சொல்வது என்ற நிலை அந்தக் கிராமவாசிக்கு அனுகூலமாக தலைகீழாக மாறிவிட்டிருந்தது. ‘இன்னும் என்ன தெரிந்துகொள்ள வேண்டுமென்கிறாய்?’ என்று வாயிற்காவலன் கேட்கிறான். ‘உனக்குத் திருப்தி ஏற்படுவதேயில்லை.’ ‘எல்லாரும் சட்டத்தை அணுக முயல்கிறார்கள்’என்கிறான் கிராமவாசி, ‘எப்படி இத்தனை வருடங்களாக என்னைத் தவிர வேறு ஒருவரும் உள்ளே நுழைய அனுமதி கேட்கவில்லை?’. அந்த மனிதன் இறக்கும் தறுவாய்க்கு வந்துவிட்டான் என்று வாயிற்காவலன் அறிந்துகொண்டு, செவிடாகிக்கொண்டு வரும் அவன் காதுகளுக்குக் கேட்குமாறு அவனிடம் இரைந்து கூறுகிறான், ‘இங்கு வேறு ஒருவரும் நுழைய அனுமதி பெறமுடியாது, ஏனென்றால் இந்த வாயில் உனக்காக மட்டும்தான் இருக்கிறது. இப்போது நான் போய் அதை முடிவிடுகிறேன் ‘”என்கிறான்.

இந்த உருவகக் கதையால் மிகவும் ஈர்க்கப்பட்டு  வாயிற்காவலன், அந்த மனிதனை ஏமாற்றிவிட்டான் என்று யோசப் க., பாதிரியிடம் கூறுகிறான். ஆனால் பாதிரியோ, அந்த மனிதன் அதற்கு முன்பு வாயிற்காவலனிடம் அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை என்று கூறிவிட்டு, அந்த வாயிற்காவலன் தன் கடமையைத்தான் செய்தான் என்று சொல்கிறார்.

இந்த உருவகக்கதையைப் பொருத்தவரை கிராமத்தான் முதலில் பரிதாபகரமானவனாகத் தெரிகிறான். படிப்படியாக வாயிற்காப்போன் மீதும் நமது வெறுப்பு இல்லாமல் ஆகிறது. சட்டத்தின் அனுகூலங்களை அடைய விரும்பும் அந்த மனிதன் எப்படி அப்பாவியோ, அவனை ஒடுக்கும் அதிகாரத்துவ அமைப்பின் கீழ்ப்படியில் உள்ள வாயிற்காவலனும் அதைப் போன்ற ஒரு அப்பாவிதான். யோசப் க.வை கைது செய்யவந்து, அவனது காலை உணவையும், உடைகளையும் திருடிவிட்டு, அதற்காக யோசப் க. பணியாற்றும் அலுவலகத்தின் ஒரு நிலவறையிலேயே தண்டிக்கப்படும் கீழ்நிலைக் காவலர்களும் அந்த அமைப்பின் பகடைக்காய்கள் தான். ஆனால் யோசப் க.வை காரணமின்றி கைது செய்ய உத்தரவிட்ட, உயர்மட்ட அமைப்பும், நீதிபதிகளும் கண்ணுக்குத் துலங்காமல் மறைந்திருக்கின்றனர். நீதிமன்றம் எப்போதும் குற்றத்தால் ஈர்க்கப்படும் தன்மை கொண்டதாக இருக்கும் என்ற நியாயத்தில் கைதுகளும், தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. 

ஏனென்றால் யோசப் க.-வின் வழக்கறிஞர் சொல்வது போல பிரதிவாதம் உண்மையில் சட்டப்படி அனுமதிக்கப்படவில்லை. ஆனால் சகித்துக்கொள்ள மட்டும் படுகிறது. வழக்கறிஞர் ஹூல்ட், வக்கீல்களின் நிலைமை குறித்து சொல்வது இது.

“இந்த நீதிமன்றத்தின் முன்பு வக்கீல் என்ற முறையில் வாதிடுபவர்களெல்லாம் அடிப்படையில் சில்லறை வக்கீல்கள்தான். அது சந்தேகமில்லாமல் வக்கீல்களுடைய அந்தஸ்தையே தாழ்த்திவிடுகிறது. அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் குறுகிய,கொட்டில் போன்ற தாழ்வான அலுவலக அறையே, நீதிமன்றம் அவர்கள் மீது கொண்டிருக்கும் அசிரத்தையைக் காட்டுவது. ஒரு சிறுதுவாரத்தின் வழியாகத்தான் அந்த அறைக்குள் வெளிச்சம் வருகிறது. அதுவோ மிகவும் உயரத்தில் இருப்பதால், அதன் வழியே வெளியே பார்க்க வேண்டுமானால், ஒருவர் தன்னை முதுகில் ஏற்றிக்கொள்ள தயாராக இருக்கும் இன்னொருவரை தேடவேண்டும். மேலும் அந்த துவராத்திற்கு அருகே பொருத்தப்பட்டிருக்கும் சிம்னியிலிருந்து வரும் புகை மூக்கினுள் சென்றுவிடுகிறது. முகத்தைக் கறுப்பாகவும் ஆக்கிவிடுகிறது. அவர்கள் இருக்கும் நிலைமைக்கு ஒரு உதாரணம் கூறப்போனால், அந்த அறையின் தரையில் ஒரு வருடத்திற்கு மேலாகவே ஒரு துவாரம் இருக்கிறது. ஒரு ஆள் விழும் அளவுக்கு அவ்வளவு பெரியதல்ல. என்றாலும் ஒரு கால் முழுவதும் உள்ளே செல்லும் அளவுக்கு பெரியதாக இருக்கிறது. அதனால் ஒருவர் காலை விட்டுவிட்டால், அந்தக் கால் முதல்மாடியில், அதுவும் கட்சிக்காரர்கள் காத்துக்கொண்டிருக்கும் தாழ்வாரத்திலேயே தொங்கும். அதிகாரத்திடம் முறையிட்டாலும் சிறிதும் பயனில்லை. ஆனால் சொந்தச் செலவில் அறையில் ஏதாவதொன்றை மாற்றுவதற்கும் கடுமையாக தடைவிதிக்கப்பட்டிருக்கிறது”

ஜனநாயகம் முதல் நவீன சட்டவியல் வரை நவீன மனிதனுக்கு உரிமைகளையும், சுதந்திரத்தையும், ஆசுவாசத்தையும் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள் தான். ஆனால் அதே மனிதர்களால், அதை நிர்வகிக்கும் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளால் சர்வாதிகாரத் தன்மை கூடி மெத்தனத்தன்மையையும், கொடுங்கோன்மையை அடைகிறது.

யோசப் க.-வும் தனது மாமாவின் கிராமத்திற்குக் கூட தப்ப நினைக்கவில்லை. அவன் அலுவலகத்துக்குச் செல்வதற்கு நீதிமன்றத்தால் அனுமதிக்கப்படுவதன் மூலம் ‘சகஜமான’ வாழ்க்கைக்கு அனுமதிக்கப்படுகிறான். யோசப் க. கைது செய்யப்படும் நிகழ்ச்சியை சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பதற்காக, க-வின் அலுவலகத்தில் உள்ள கீழ்நிலைப் பணியாளர்கள் அவன் அறைக்கு வரவழைக்கப்படுகின்றனர். அதன் அடிப்படையில் மனிதனைக் காப்பாற்றும், குற்றம் செய்யாமல் பாதுகாக்கும் இடமாக அலுவலகமே இருக்கிறது. யோசப் கவுக்கு நீதிமன்றத்தின் நடைமுறைகள் தான் புதிராக இருக்கிறதே தவிர, அவன் வேலை பார்க்கும் வங்கியைப் பொருத்தவரை ஒரு மேலதிகாரியின் அத்தனை அதிகாரங்களையும், அல்ப தந்திரங்களையும், சாமர்த்தியங்களையும் பிரயோகிப்பவனே. தனது பதவியின் செல்வாக்கை சக அதிகாரிகள் சீர்குலைப்பதை ஒருபோதும் விரும்பாதவன். அலுவலகத்தில் தன் நிலையைத் தொடர்ந்து தக்கவைக்கும் வகையில் தொடர்ந்து சுற்றி நடப்பவைகளைக் கண்காணித்தபடி இருப்பவன். அலுவலகரீதியான உலகநோக்கே அவனுக்கு இருக்கிறது. அடுத்த அறையில் குடியிருப்பவளான மிஸ்.ப்யூர்ட்ஸ்னரை அவள் வெறும் தட்டச்சுப்பெண்தான் என்று விமர்சிக்கிறான். நீதிமன்ற வளாகத்திற்குள் ஒருமுறை போகும்போது, அங்குள்ள உஷ்ணக்காற்றால் மூச்சுமுட்டி பாதிக்கப்படும்போது, எனக்கு அலுவலக காற்று பழக்கமானதே என்று திரும்பத் திரும்பச் சொல்பவன்.

முதலில் கைதான தருணத்திலிருந்து, யோசப் தனது கைதை ஏதோ ஒரு வேடிக்கை நாடகமாக இருக்குமோ என்ற சந்தேகத்துடனேயே அணுகுகிறான். எப்போதும் இதெல்லாம் ஒரு விளையாட்டு என்று ஆட்டம் கலைவதற்கான தருணத்திற்காக காத்திருக்கிறான். ஒருகட்டத்தில் யோசப் க.-வுக்கு கடைசி தீர்ப்பு அளிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இரண்டு சீருடைக் காவலர்கள் அவனை அழைத்துச் செல்கிறார்கள். “மகா மட்டமான நடிகர்களை எனக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள். என் விஷயத்தை மலிவாக முடித்துவிட நினைக்கிறார்கள்” என்று நினைத்தபடி, எந்த நாடகக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் கேட்கிறான்.

அவர்கள் அவனை புறநகரில் உள்ள ஒரு கைவிடப்பட்ட கல்குவாரிக்கு அழைத்துச் சென்று, ஒரு கல்லில் உடலைக் கிடத்தி, கூர்மையான கசாப்பு கத்தியை வைத்து கழுத்தில் இறக்கிக் கொல்கின்றனர். கடைசியாக இறக்கப்போகும் தருணத்தில் யோசப் க சொல்கிறான். “எப்படி ஒரு நாயைப் போல” என்றான் அவன், இந்த இழிவு அவனுக்குப் பின்னும் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதைப் போல." அவன் மரணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ஒரு மீட்புக்கான நம்பிக்கை போல அவன் ஆசை வைத்திருந்த மிஸ். ப்யூர்ட்ஸ்னரின் சாயலில் ஒருத்தி கடந்துபோகிறாள். திருமணமாகாமல் நவீனத்தனிமையால் சபிக்கப்பட்ட யோசப் க.-வுக்கு தாம்பத்யமும் இந்த உலகில் மறுக்கப்பட்டது.

அந்த மரணம் நவீன மனிதன் இழந்த சாத்தியங்களின் மரணம். நவீன மனிதன், தன்னோடு பாதுகாப்பாக இருப்பதற்கான சுதந்திரத்தை இழந்தவன். செய்திகள், விளம்பரங்கள் தொடங்கி கண்டங்கள் தாண்டிய அரசியல், தட்பவெப்பம் வரை அவன்மீது குழப்படிகளாகவும், தீமையாகவும் எப்போதும் மேலே விழுந்து தாக்குவதற்கான இலக்காக இருப்பவன். ஆல்பர் காம்யூ உரைப்பது போல ஒரு அர்த்தத்தை அல்லது ஒரு ஒழுங்கை, ஒரு விளக்கத்தை அல்லது ஒரு கடவுளை இன்றும் மனிதன் தன் வாழ்க்கையில் தேடியபடி இருக்கிறான். ஆனால் பகுத்தறிய இயலாத நவீன வாழ்வின் பல அடுக்கிலான குழப்படிகளும், அபத்தங்களும் ஒருபோதும் அவனுக்கு பதிலையோ, நீதியையோ குறைந்தபட்சம் விளக்கத்தையோ கூட அளிக்கவில்லை. அந்தவகையில் யோசப் க.-வின் இழிவு நம்மையும் தொடரவே செய்யும். 

காப்காவின் ஒரு குட்டிக்கதை இது.

“ஐயோ, ஒவ்வொரு நாளும் இவ்வுலகம் சுருங்கிக் கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் அது மிகப் பெரிதாக இருந்தது கண்டு அஞ்சினேன், ஓடினேன். கடைசியில் தொலைவில் வலமும் இடமுமாக சுவர்களைக் கண்டு சந்தோஷப்பட்டேன். ஆனால் இச்சுவர்கள் விரைவிலேயே நெருங்கிக் குறுகி வந்துள்ளன. நான் கடைசி அறையில் இருக்கிறேன். நான் ஓடி ஒளிந்துகொள்ள வேண்டிய பொறி, மூலையில் இருக்கிறது” என்றது எலி. “உனது திசையை மாற்ற வேண்டியதுதான் இப்போது செய்யவேண்டியது” என்ற அதை தின்றுவிட்டது.”

காப்காவின் குட்டிக்கதையில் வரும் எலியைப் போலத்தான் நவீன  மனிதனுக்கு அவனது பரிணாமத்தின் கதியில் உலகம் படிப்படியாக சுருங்கிவருகிறது. அதற்கு அவனும், அந்தக் குட்டிக்கதையில் வரும் எலியைப் போலவே பொறுப்புள்ளவன். 20 ஆம் நூற்றாண்டில் அலுவலகம் என்ற அமைப்பு, அதன் அதிகாரத்துவம், அவற்றின் அர்த்தமற்ற நியமங்கள், சடங்குகள், காகித நடைமுறைகளாக விரிந்து தடித்து, மனிதனை, எண்ணற்ற உயிர் சாத்தியங்களைத் துறந்த அலுவலகப் பிராணியாக மாற்றிவிட்டது. துல்லியமான பகுத்தறிவின் முழக்கத்துடன், கண்டிப்பாக பேணவேண்டிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாட்டு நெறிகளைக் கொண்ட, பாரபட்சமற்ற தன்மையையே லட்சியமாக கொண்ட எந்திரங்கள் அவை. எங்கெங்கும் நம்மைக் கண்காணிக்குமாறு, அறிவின் சர்வ வல்லமை மற்றும் அதிகாரத்தைப் புகட்டி நாம் உருவாக்கிய அரசு மற்றும் நீதிபரிபாலன அமைப்புகள் வரை அனைத்தும் குருட்டுத்தன்மையுடையவை என்றும், அவற்றின் பெரும்பாலான செயல்கள்- காரண-காரியத் தொடர்பில்லாதவை என்றும் காஃப்காவின் கதைகள் அறிவிக்கின்றன.

000

முறையாக சட்டப்படிப்பை முடித்த காஃப்கா, முதலிரண்டு வருடங்கள் ஒரு இத்தாலிய காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றினார். அதற்குப் பிறகு பொகீமியா அரசின் தொழிலாளர் விபத்துக் காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீட்டு வழக்கறிஞராக சேர்கிறார். இங்குதான் நவீன சமூகவியல் மற்றும் சட்டவியல் குறித்த ஆழமான புரிதல்களையும், கண்டுபிடிப்புகளையும் அடைகிறார். இங்கே பணிசெய்த காலத்தில் பல்வேறு அலுவல்ரீதியான ஆவணங்களை அவர் எழுதியுள்ளார். நீதிமன்றத்தில் அவர் பணியாற்றவில்லையெனினும், சட்டம் மற்றும் நீதித்துறை நடைமுறைகள் சார்ந்து அவரது படைப்புகளில் காணப்படும் தர்க்கங்கள் மிகத் துல்லியமாக இருப்பதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். நீதித்துறையில் உள்ளும்-புறமும் நடக்கும் விஷயங்கள் சார்ந்த கூர்மையாக அவரிடம் விவரணங்களாக பெரும் விழிப்புநிலையுடன் முன்வைக்கப்படுகின்றன. காஃப்காவின் கண்கள் எல்லாவற்றையும் ஊடுருவிப் பார்த்துவிடுகின்றன. நிகழ்வின் எண்ணற்ற சாத்தியங்களையும், அதேவேளையில் அதன் பயனின்மையையும் காஃப்கா அதிசயிக்கத்தக்க அளவில் அடுக்கிவிடுகிறார். முதல் விசாரணைக்கு முதல் ஞாயிற்றுக்கிழமையில் நீதிமன்றம் இருக்கும் குடியிருப்புக்குப் போகும்போது, படிகளில் பல குழந்தைகள் யோசப் கவின் பாதையில் எதிர்படுகின்றன. அடுத்த வாரம் வரும்போது, அதற்கு மிட்டாய்கள் வாங்கவேண்டும் என்று க நினைக்கிறான். உடனேயே மிட்டாய்களைக் கொண்டு வராவிட்டால் ஒரு பிரம்பை எடுத்துவரவேண்டும் என்று சிந்திக்கிறான். இரண்டுமே யோசப் க.வின் அர்த்தத்தில் ஒன்றாகவே தொனிக்கிறது. அதற்குமேல் அந்த இரண்டு நோக்கங்களையும் நாம் சந்தேகப்பட முடியாது.

விசாரணையின் இறுதிப்பகுதியில் யோசப் கவுக்கு மரண தண்டனை அளிக்கப்படும் கல்குவாரி, அவர் பார்த்த அலுவலுடன் தொடர்புடையது. ஜெர்மனியில் நிலவிய கடும்சிக்கல் வாய்ந்த சட்ட நுணுக்கங்களைக் கடந்து சிறிய தொகை ஒன்றை விபத்து இழப்பீடாக வாங்குவதற்கு பல விதமான காகித நடைமுறைகள் மற்றும் பிரயத்தனங்களை தொடர்ந்து முயற்சி செய்து, காத்திருக்கும் தொழிலாளர்களின் துயரங்கள் அவரை பாதித்திருக்கலாம் என்றும் அதன் பிரதிபலிப்புகள் அவரது படைப்புகளில் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

தற்கால இந்திய வாழ்க்கையின் பின்னணியில் ஒரு வாசகன் காஃப்காவை எப்படி அணுகலாம்? என்ற கேள்வியை விசாரணையையும், காஃப்காவின் பிற படைப்புகளையும் முன்வைத்து கேட்கலாம். பெருநுகர்வின் அடிப்படையிலான சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிக்கும் அரசு நிர்வாகத்தின் கீழ் ஜனநாயகத்தின் இறுதிநம்பிக்கையான வெகுமக்கள் நலன் சார்ந்த அனைத்து பொறுப்புகளையும் கைவிட்ட அரசு நம்மை பரிபாலனம் செய்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் முதல் இறையாண்மை கொண்ட நிலத்திற்குள் தனிச்சட்டங்களைப் பராமரிக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக மாறிவரும் புதிய அமைப்புகளைப் புரிந்துகொள்வதற்கு காஃப்கா உதவிகரமாகவே இருப்பார் என்பது எனது துணிபு. அரசு அதிகாரம் மற்றும் அதிகாரத்துவத்தின் அதே உள்ளடக்கத்துடன் மாற்று அரசியல், மாற்று பண்பாடு ஆகிய கோஷங்களுடன் தட்டையாகப் பேசி அதையே அதிகாரமாகவும், அதிகாரத்துவமாகவும் உருத்திரட்டத் தொடங்கியிருக்கும் அமைப்புகளையும் புரிந்துகொள்வதற்கும் விமர்சிப்பதற்கும் காஃப்கா பல சாத்தியங்களைத் தருகிறார்.

 ஆனால் காஃப்கா சித்தரித்துள்ள நவீன அமைப்புகள் உருவாக்கி வைத்துள்ள அபாயகரமான,கண்காணிப்புக் கோபுரத்துக்கு வெளியே தப்பிப் பிழைப்பதற்கு, மறைந்து வாழ்வதற்கான வெளிகள், சாத்தியங்கள் நமது மரபில் உள்ளனவா என்பதை யோசித்துப் பார்ப்பதும் காஃப்காவை வாசிக்கும் ஒரு இந்திய வாசகனின் கடமை என்று கருதுகிறேன். அதற்கான சாத்தியங்கள் முழுமையாக அற்றுப்போய்விடவில்லை என்றே நான் நம்புகிறேன்.

(சிலேட் இதழில் 2012-ம் ஆண்டு வெளியான கட்டுரை)

----------

விசாரணை- ப்ரன்ஸ் காஃப்கா


தமிழில்: ஏ.வி.தனுஷ்கோடி


வெளியீடு: க்ரியா


காஃப்கா- கடிதங்கள்,கதைகள்,கட்டுரைகள்- தமிழில்: சா.தேவதாஸ்


In search on franz kafka”s concept of law- professor Reza Banakar


HOPE AND THE ABSURD IN KAFKA- Albert camus


Comments