Skip to main content

நகுலனின் ‘பூனை’

 

 

(ந. ஜயபாஸ்கரனின் சேகரிப்பிலிருந்து எனக்கு நேற்று தபாலில் வந்த நகுலனின் குறிப்பிடத்தகுந்த உரைநடைக் கவிதை ‘பூனை’. காவ்யா பதிப்பகம் வெளியிட்ட நகுலன் கவிதைகள் தொகுப்பில் இடம்பெறவில்லை.கவிஞர் நா. காமராசனின் ஆசிரியத்துவத்தில் வந்த பத்திரிகையான ‘சோதனை’யில் 1973-ம் ஆண்டு மே மாதம் வெளியாகியுள்ளது இந்த ‘பூனை’.நகுலனின் பிரத்யேக உலகம் தீவிரமாக இயங்கும் படைப்பு இது. காமத்தில், கலவி உணர்ச்சியில், அதன் வேகத்தில், இம்சையும் அகிம்சையும் பாலும் புலாலும் நீயும் நானும் வியர்வையும் ரத்தமுமாக அமானுஷ்யமும் மரணமுமாகப் பின்னிப் பிணைந்திருக்கும் விபரீத வசீகரத்தை பூனை வழியாக உருவாக்கியிருக்கிறார் நகுலன். சிருஷ்டி ரகசியம் சுடர்கிறது இப்படைப்பில்!)

 

கட்டமைந்த உடல்கட்டு, தட்டை முகத்தில் கூர்ந்த முக்கோண வடிவை நினைவு கூரும் நாசி, உருண்டு ஜொலிக்கும் “நீல”க் கண்கள், மெத்தென்ற பாதம்;

பழமொழியைப் பொய்யாக்கி, இரவைப் பகலாக்கி, பாலுக்கும் மீனுக்கும் ஒற்றுமை காட்டி உருவங்காட்டும் நின் உருவம்;

நிசப்தத்தில்  நினைவின் அடிச்சுவடும் மறைந்த நள்ளிரவில் இருட்குழம்பில், “இச்”சென்று ஊரும் சர்ப்பத்தின் அரவம் கேட்டு இரத்தம் பனியாவது போல்,

கிடந்த பிரேத வரிசையாக வீட்டில் நானும் நீயும் துயில் புணரும் நேரத்து

(வெள்ளை யென்றால் வெள்ளை

சாம்பல் என்றால் சாம்பல்

மஞ்சள் என்றால் மஞ்சள்

இல்லை கருப்பு என்றால் சரியான கறுப்பு

இல்லை வெள்ளையும் சாம்பலும்

மஞ்சளும் வெள்ளையும்

வெளுப்பும் கருப்பும்

கோடும் திட்டையுமாக

அழுத்தமான சாயங்காட்டி,

அழுத்தமான இயற்கை சாற்றி

காட்டில் பிறந்தாலும்

புகுந்த வீட்டை விட்டாலும் பிரியாது

பழைய வாசனை தொடர

சப்தம் செய்யாமல் நகரும் நின் உருவம்)

இருளைக் குலைத்துக் கொண்டு, நிம்மதியை ரணமாக்கி, சாவின் பயங்கர ஓலத்துடன் கலவியின் குதூகலத்தைப் பறைகொட்டி முழக்கும் நின் சாகசம் கேட்டுத் துணுக்குற்று

எங்கிருந்து வந்து எங்கு இருக்கின்றேன் என்பதை உணரச் செய்த நின்னை என்ன சொல்ல?

அன்பே,

கைப்பைச் சுரக்கும் மல்லிகையும் மன்மத பீடமும் துணைபுரிய

இருளில் துகில் உரித்து இன்பங்காணும் இந்த முள் பிசகாத நிமிஷத்தில்

பாலுக்கும் புலாலுக்கும் ஒற்றுமை கூறும்

அதுவும் நீயும் நானும் ஒன்றில் ஒன்றாக

இணைந்த இயற்கைத் தொடரின்

கொக்கி வளையங்கள் அன்றி வேறென்ன?

அழுத்தமான தினவு தீர்த்த அதன் மிடல் மேனியில் காணும் முத்தென அரும்பிய குருதி முத்துக்கள் என்னை வெறித்து நகைக்கும்.

ஏன்?

அது சிருஷ்டி ரகசியம். 

Comments