Skip to main content

காஃப்காவின் சுய உணர்வு, விழிப்பால் தீண்டப்பட்டு பூச்சியான க்ரகர் சேம்சா

 


இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் வேளச்சேரி பூங்காவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, முகக்கவசம் அணிந்த அறுபது வயதைக் கடந்த ஒருவர், நடைப்பயிற்சியை முடித்து பெஞ்சில் அமர்ந்து கழுத்தை மெதுவாக வலது புறமும் இடது புறமும் திருப்பி கடப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். முகக்கவசத்தோடு இருந்த முகம் அச்சத்தை வெளியிட்டபடி இருந்தது. மக்கள் தொகையில் ஒரு வர்க்கத்தினரின் முகங்களில் பெருந்தொற்று காலத்துக்குப் பிறகும் முகக்கவசம், முகங்களிலேயே இயல்பாக ஒட்டித் தங்கிவிட்டது போலத் தோன்றுகிறது. அவர்கள் முகக்கவசத்தை பூர்வ இயல்பாக மாற்றிக் கொண்டுவிட்டனர். பெருந்தொற்றை முகாந்திரமாகக் கொண்டு முகக்கவசத்தை அவர்களது உறுப்பைப் போல மாற்றிக் கொண்டுவிட்டனர். முகக்கவசம் அவர்களை அச்சம் கொண்ட எலிகளாக மாற்றிவிட்டது. உயர்சாதியினரில் பலர், முகக்கவசத்துக்கு மிகவும் ஆசையோடு தகவமைத்துக் கொண்டுவிட்டனர்.

நான் இதற்கு முன்னர் வேலைபார்த்த ஊடக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, பெருந்தொற்றுக்குப் பிறகு, தனது அறையை விட்டே வெளியே வரவில்லை என்று சொல்லப்படுகிறது. சவரத்துக்குக் கூட யாரையும் அனுமதிக்காமல் தாடி இடுப்பு வரை வளர்ந்துவிட்டதாம் அவருக்கு. வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளில் கூட செய்தித் தாள்களை ஒட்டியிருக்கிறாராம். உணவுத் தட்டைக் கூட, கதவுக்கு வெளியேயே வைத்துவிட வேண்டும். அலுவலகத்தை தனது அறையிலிருக்கும் கணினி வழியாகவே இயக்குகிறார்; பணியாளர்களை நீக்குவதையும்.   

பெருந்தொற்றும் முகக்கவசமும் சமூக இடைவெளியையும் தீண்டாமையையும் நாகரிகமான முறையில் மறுஅமல்படுத்தியுள்ளது. கொஞ்சம்போல நீக்கப்பட்டிருந்த பாகுபாடுகள் மீண்டும் வலுப்பெற்றுள்ளன. ஒரு மக்கள் நல அரசு என்ற முகமூடியைக் கூட, பெருந்தொற்றின் முகக்கவசத்தை அணிந்து இந்திய அரசு இந்தக் காலகட்டத்தில்தான் கோவணத்தைப் போல நழுவவிட்டது. இந்தப் பெருந்தொற்றையும் அதனால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கையும் ஒட்டித்தான், பெருநகரங்களிலிருந்து பெருந்திரளான புலம்பெயர் தொழிலாளர்கள், அவர்களது பூர்விகங்களுக்கு, நமது மனசாட்சிகளுக்கும் முகக்கவசங்களை இட்டு, மத்திய அரசு அனுப்பியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பெருந்தொற்று சூழலைக் காரணமாக வைத்து, நமது இந்தியச் சமூகம் ஒரு பாசிசத் தலைமையை ஏற்பதற்கான மனநிலையைப் பெற்றுக்கொண்டிருக்கும் உருமாற்றத்தின் எதார்த்தத்தில் காஃப்காவின் ‘உருமாற்றம்’ குறுநாவலைத் திரும்பச் சென்று படிப்பது எனக்கு முக்கியமான அனுபவமாக இருந்தது.

மனிதர்களால் உருவாக்கிய சமூகமும் அதன் அமைப்புகளுமே தன் அதிகாரத்தால் தன் அபத்தமான விதிகள் மற்றும் அதிகாரத்துவ நடைமுறைகளால் மனிதனின் சாத்தியத்தை மட்டுப்படுத்தி அவனை கண்காணித்து ஒடுக்கும் அபாயத்தை, தனது அதீத சுய உணர்வால், விழிப்பால் மனிதகுலத்துக்கு அறிவித்தவன் ப்ரன்ஸ் காஃப்கா. மனிதனின் சாத்தியம் அவன் உருவாக்கிய சமூகத்தாலேயே மட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்பதை துர்சொப்பனத்தின் தன்மையில் அறிவித்த புனைவுகள் காஃப்காவினுடையவை. விசாரணை, உருமாற்றம் இரண்டு நாவல்களிலும் அதன் நாயகர்களான யோசப் க., க்ரகர் சேம்சா இருவருமே ஒரு இழிவான மரணத்தைத் தழுவுகிறார்கள். விசாரணை நாவலின் கடைசியில் நாயகனுக்கு நேரும் இழிவைப் போலவே அத்தனை மனிதர்களையும் இந்த இழிவு தொடரப்போகிறது என்பதைத்தான் உருமாற்றம் நாவலில் வரும் க்ரகர் சேம்சாவும் நமக்கு ஞாபகப்படுத்துகிறான்.

திருமண வயதில் விற்பனைப் பிரதிநிதியாக பெற்றோர் தங்கையுடன் வாழ்க்கையை நடத்தும் க்ரகர் சேம்சா, ஒரு நாள் காலையில் பிரமாண்டமான பூச்சியாக மாறி, பிரியத்துக்குரிய தாய், தங்கையாலும் அருவருப்பானவனாக படிப்படியாக அவமதிக்கப்பட்டு இறுதியில் மரணத்தின் போது கூட கண்டுகொள்ளப்படாமல் இங்கிருந்து அகற்றப்படுகிறான்.

வலுவான இரண்டு கால்களுக்குப் பதில் பலவீனமான பல கால்களைப் பெற்று, சின்ன உரசல் ஏற்பட்டாலும் திரவங்கள் வழிகிற உடல் அமைப்பைப் பெற்று, தனது அறைக்கட்டிலிலிருந்து அறைக்கதவுக்குச் செல்வதற்குக்கூட உடல் நோவெடுக்கும் சிரம நடையுடன் வாழும் அவனது விகார வாழ்க்கை தான் இந்தக் குறுநாவல்.  

தங்கை அறையைச் சுத்தம் செய்யும்போது, அவள் அருவருப்போ அசூயையோ கொள்ளாமல் கட்டிலின் கீழே ஒளிந்துகொள்ளும் அவலம் தொடங்கி, வண்டுபோல இரைந்துகொண்டு சுற்றி ஓடுவது வரை பூச்சியாக மாறியவன் குறித்த சித்தரிப்பு மிகத் துல்லியமானது. கார்டூனாக நம்மால் சிரிக்க முடியாத அளவு க்ரகர் சேம்சாவின் அசைவு, மனநிலை ஆகியவற்றை தீவிர விழிப்போடு சித்திரிக்கிறார்.

தந்தைக்கும் க்ரகர் சேம்சாவுக்கும் உள்ள உறவு கிட்டத்தட்ட பகைவர்களுக்கிடையிலான உறவாகவே முதலிலிருந்து இருக்கிறது. பூச்சியாகிவிட்ட க்ரகர் சேம்சாவின் முதுகில் நிரந்தர காயத்தை ஆப்பிளை எறிந்து உருவாக்குவதும் தந்தைதான். காஃப்காவுக்கும் அவர் தந்தைக்குமான உறவின் பிரதிபலிப்பு உருமாற்றத்திலும் நீள்கிறது. க்ரகரின் தாய் இறுதிவரை சற்றே அனுதாபத்துடன் இருக்கிறாள். க்ரகரின் தங்கை பிரியத்துக்குரியவளாகத் தோன்றி குடும்பத்தின் சூழ்நிலை மாற மாற அண்ணனிடமிருந்து அன்னியம் கொள்கிறாள்.

விசாரணை நாவலைப் போலவே, வீடும் அறையும் சுவர்களும் குறுகியதாக, மனிதனை நெருக்குவது போலவே மிகச் சிறியதாகவே உருமாற்றம் கதையின் விவரிப்பில் மூச்சுமுட்டுவது போல இருக்கின்றன.

தனது அறைக்குள்ளேயே மறைந்திருக்க வேண்டிய க்ரகர் சேம்சாவின் வருமானம் இல்லாமல் போய்விட்டதால் அவனது பெற்றோரும் தங்கையும் வேலைக்குச் செல்ல வேண்டி வருகிறது. கூடுதலாக மூன்று இளைஞர்களை தங்கள் வாடகை வீட்டில் கூடுதலாகச் சேர்க்க வேண்டி வருகிறது. குடும்ப நிர்வாகம், பணம் சார்ந்த அதிகார உறவுகளின் மாறுதல் சத்தங்களை க்ரகர் தனது அறையின் மூலையில் உட்கார்ந்துகொண்டு செவிவழியாக கேட்டறிகிறான். வீட்டிலுள்ள உபயோகமற்ற பொருட்கள் அவன் அறைக்கு வந்து கொட்டப்பட்டு அவனது இடம் படிப்படியாக குறுக்கப்படுகிறது. எல்லாம் மாறுதல்களுக்குள்ளேயும் அகன்ற கண்களின் விழிப்பு ஒன்று எல்லாவற்றையும் தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஒரு உருவகக் கதை, தேவதைக் கதையைப் போலத் தோன்றினாலும் காஃப்கா அதை நமது எதார்த்தத்தின் சாயல்கள் தோன்றுமாறு தீவிரமாக உள் இணைப்புகளைக் கட்டுகிறார். விசாரணை நாவலில் உள்ளது போலவே அதிகார உறவுகளில் பால் கவர்ச்சி என்னவிதமான மாறுதல்களையும் இலகுத்தன்மையையும் ஏற்படுத்துகிறது என்பதையும் க்ரகர் சேம்சாவின் தங்கை வழியாக தீவிரமாகக் காட்டுகிறார். விழிப்புக்கு தங்கை, தாய், தந்தை என்று வித்தியாசம் கிடையாதல்லவா?

அதிகார உறவுச் சங்கிலிக்குள் லகுபொருளாகவும் பொறிகளாகவும் காப்காவின் கதையில் பெண்கள் செயல்படுகிறார்கள். ஒரு பிரமாண்ட பொறிக்குள் பரஸ்பரம் இருக்கும் பொறிகள் ஆண்கள், பெண்கள்.

க்ரகர் சேம்சா பூச்சியாகி குடும்பத்துக்கு சம்பாதித்துக் கொடுக்க இயலாமல் போகும் நிலையில் சற்று வயோதிகத்தை தன் மேல் போர்த்தியிருந்தது போலத் தெரிந்த தந்தை, மீண்டும் குடும்பத் தலைவரின் வேடத்தைப் பூண்டு வேலைக்குச் செல்லத் தொடங்குகிறார். அத்துடனேயே அதிகாரத்தையும் வன்முறையையும் கைகொள்ளத் தொடங்குகிறார்.

க்ரகர் சேம்சா சாப்பிடும் உணவு மாறிவிட்டதை அவன் தங்கைதான் முதலில் அறிபவள். அவனுக்கு மீந்த குப்பை உணவை, கெட்டுப் போன பாலாடைக் கட்டிதான் ருசியானது என்று தேர்ந்து தருகிறாள்.

க்ரகர் சேம்சா முதலிலிருந்தே தன் சுய உணர்வை இழக்காத நிலையில், படிப்படியாக உணவை ஒறுக்கத் தொடங்குவது போலத் தெரிகிறது.

க்ரகரின் இருப்பு குடும்பத்துக்கு பாரமாகிவிட்ட நிலையில், மாறிய பூச்சி க்ரகர் அல்ல, அப்படி க்ரகராக இருந்தால் அந்த வீட்டில் இத்தனை நாட்கள் துன்பம் கொடுத்துக் கொண்டிருக்காது என்று சொல்லி க்ரகரைச் சுமக்கும் துன்பத்திலிருந்து முதலில் விடுவிப்பவளும் சேம்சாவின் தங்கை க்ரீட் தான்.

க்ரகரின் மரணம் தான் அவளை தன் இளம் உடலை உணருமாறு செய்து கால்நீட்டி ஆசுவாசமாக இருக்கவும் செய்கிறது.

பூச்சியான க்ரகரின் சடலத்தை அந்தக் குடும்பம் பார்க்காதவாறு சத்தமின்றி வெளியேற்றும் சேவையைச் செய்பவளும் அந்த வீட்டின் பணிப்பெண்தான்.

க்ரகரின் மரணம் ‘உருமாற்றம்’ கதையைச் சிரிக்க முடியாமலாக்குவது. மரணம்தான் உடல் முழுக்க இருக்கும் வலியை இல்லாமல் ஆக்குகிறது அவனுக்கு.

மொழிபெயர்ப்பாளர் ஆர். சிவகுமாரின் பெயர் சொல்லும் பங்களிப்பு இந்த ‘உருமாற்றம்’.

தமிழினி வெளியிட்டுள்ள உருமாற்றம் மற்றும் சில சிறுகதைகளை உள்ளடக்கிய இந்த நூலில் காஃப்காவுக்கும் புதுமைப்பித்தனுக்கும் இடையிலான உறவைப் பற்றி க. நா. சுப்ரமண்யம் எழுதியிருக்கும் கட்டுரை காஃப்காவை மேலும் அணுகுவதற்கு உதவக்கூடியது.

உருமாற்றம் குறுநாவலில் வரும் பூச்சி கரப்பான் பூச்சி அல்ல என்று விளாடிமிர் நபக்கோவ் சொல்லி, உருமாற்றம் குறுநாவலில் வரும் பூச்சியை வரைபடமாகவும் வரைந்து காட்டியுள்ளார். 1937-ம் ஆண்டு காஃப்காவின் நூலை புதுமைப்பித்தன் க.நா.சு.வுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஆனால் க. நா. சு., அதைக் கரப்பான் பூச்சி என்றே தனது கட்டுரையில் சொல்கிறார். க. நா. சுவும் உறக்கத்தில் கனவில் காணும் உலகம் என்றுதான் காஃப்காவின் உலகத்தைச் சொல்கிறார்.

இரண்டு உலக யுத்தங்களுக்கு மத்தியில் நசுக்குண்ட ஐரோப்பிய மக்களின் நிலைமை கரப்பான் பூச்சியினுடையது போலத்தான் நாதியற்றதாகவும், தார்மீக ரீதியான குறிப்பற்ற தன்மையிலும் இருந்தது என்கிறார் க. நா. சு.

காஃப்காவின் கனவுலகம் நமது நிஜ உலகத்தைப் பிரதிபலிக்கும் இன்னொரு லகம் போலத்தான் இருக்கிறது. அந்த வன்மையைத் தருவது காஃப்காவின் எழுத்து என்கிறார் க. நா. சு.

க. நா. சு.விடம் இரவலாகப் பெற்று காஃப்காவைப் படித்த மௌனி, இந்த காஃப்கா எனக்காகவே எழுதியிருக்கிறான் என்று கூறியிருக்கிறார்.

சுய உணர்வு, அந்த உணர்வு தரும் அதீத விழிப்பின் கொடுக்காலும் தீண்டி நீலம் பாரித்தது போல இன்னமும் பொருத்தப்பாட்டுடன் விளங்குகிறது காஃப்காவின் ‘உருமாற்றம்’.

பூச்சியானாலும் க்ரகர் சாம்சாவின் சுய உணர்வுதான் அவனை அமரன் ஆக்குவது. அந்தச் சுய உணர்வினாலேயே அவன் ஒரு நாள் காலையில் பூச்சியாகவும் உருமாற்றம் அடைந்திருக்கக் கூடும்.  

அந்த வலுவான தன்னுணர்ச்சியின் மகத்தான இலக்கிய உருவகம் தான் காஃப்காவும் கூட.

Comments