Skip to main content

கவிதையின் எதிரொலி - ந. ஜயபாஸ்கரன்

 


கவிதை எதிரொலிக்க எடுத்துக்கொள்ளும் காலம் என்பது நம்முடைய நிர்ணயத்துக்கு அப்பால்தான் இருக்கிறது எப்போதும். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ சரணர்களின் கன்னட வசனங்கள், இருபதாம் நூற்றாண்டில் ஏ. கே. ராமானுஜனின் மனத்தில் எதிரொலித்திருக்கின்றன. 1973-ல் ‘சிவனைப் பேசுதல்’ என்ற தலைப்பில் பசவண்ணர், அல்லமப்பிரபு, அக்கமகாதேவி போன்ற நட்சத்திர வசன கவிகளின் ஒளிவீசும் கவிதைகளை ஆங்கிலத்தில் மனத்துக்கு நெருக்கமான வகையில் மொழிபெயர்த்திருக்கிறார் ராமானுஜன். 1983-ல் அகநெருக்கடியுடன் இருந்த காலகட்டத்தில், ஆத்மாநாம் தொடர்ந்து வாசித்து வந்த நூல் ராமானுஜனின் ‘சிவனைப் பேசுதல்’ என்பதாக ஆத்மாநாமின் சிறு வாழ்க்கைக் குறிப்பிலிருந்து தெரியவருகிறது. இது பற்றியும், ஆத்மாநாமின் கவிதைகள் பற்றியும் சில ஆண்டுகள் கழித்து அறிந்த ராமானுஜன், அவர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 1991-ல் ‘எனக்கு அவன் அல்லது அவனுக்கு நான்’ என்ற தலைப்பில் ஆங்கிலக் கவிதையை எழுதியிருக்கிறார். இன்னதென்று வரையறுக்க முடியாத ஒரு பிணைப்பு ஆத்மாநாமுடன் இருப்பதாக ராமானுஜன் உணர்ந்ததை கவிதையின் அடிக்குறிப்பு தெரிவிக்கிறது. 

சிறிது உரிமை எடுத்துக் கொண்ட, நெகிழ்ச்சியான எனது மொழிபெயர்ப்பில் இவ்வாறு அந்தக் கவிதை இருக்கிறது. ‘பல நூற்றாண்டுகளுக்கு முன் என்னைப் பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் சிவனைப் பாடிய ஞானிகளை இருபது ஆண்டுகளுக்கு முன் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். பத்து ஆண்டுகளுக்குப் பின் மதராசில் இருந்த ஒரு இளைஞன் மாத்திரைகளோடு அந்தக் கவிதைகளையும் விழுங்கிக் கொண்டிருப்பான் என்பதை நினைத்துப் பார்க்கவில்லை. படர்ந்த பனித்திரையில் மூச்சுத் திணறியபடி, மணிக்கட்டின் ஊசிகளுக்கும், இருப்பதா இறப்பதா என்பதற்கும் ஆன இடைவெளியில், நான் படிப்பதற்கான கவிதைகளை விட்டுச் சென்ற அவனையும், என்வழியே அவனிடம் பேசிய, ஆனால் ஒன்றுமே அவனுக்குச் சொல்லாத ஞானிகளையும் நினைத்துக் கொள்கிறேன்.’


ராமானுஜனின் இந்தக் கவிதை ஆத்மாநாமின் எளிய கவிதைகளில் ஒன்றான ‘எங்கோ’வை எனக்குள் எதிரொலிக்கச் செய்தது.

எங்கோ பார்த்த முகம்

எங்கோ பார்த்த கண்கள்

எங்கோ கேட்ட ஒலி

எல்லாம் எங்கோ

எங்கெங்கோ...


காலம் மறைந்து

நானும்

என்னெதிர்

நீங்களும்

மட்டுமே 

இருப்போம்


உதிரும் மலரின் 

கணிதத்தை

என்றாவது

நீங்கள் யோசித்திருந்தால்

மட்டும்

இது புரியும்.        

Comments