திருநெல்வேலியில் நான் அதுவரை போயும் குளித்துமிராத சிந்துபூந்துறை படித்துறைக்கு அருகே என் அம்மாவின் சாம்பலை தாமிரபரணியில் கரைத்து முங்கி எழுந்தபோதுதான் உணர்ந்தேன்; எனக்குத் தெரிந்த வடிவத்தில் இருந்த அம்மா, இந்த உலகத்தில் இனி இல்லை என்பது. மழிக்கப்பட்ட தலையில் கக்கத்தில் தண்ணீர் நனைத்து உணர்ந்த குளிர் அதைச் சொல்லியது. என் தங்கை தெய்வானையிடம் இப்படித்தான் சொன்னேன். ஆறுதலுக்காக அவளுக்கோ எனக்கோ சொல்லிக் கொள்ளவில்லை. இந்த உலகத்துக்குள் வந்தவர்கள் யாரும் முற்றிலுமாக இல்லாமல் ஆகிவிடமுடியாதென்று. ஆமாம் என் அம்மாவின் உடன்பிறந்த அக்காளும் பெரியம்மாவும் இறந்தபிறகு, அவியலை எப்போதெல்லாம் சமைக்கிறேனோ உண்கிறேனோ அப்போதெல்லாம் அந்த அவியலில் அவள் இருக்கிறாள் என்பதை உணர்வேன். எங்கள் வீட்டிலேயே நாகர்கோயில் அவியலை அதன் முழுமையான ருசியில் சமைப்பவள் அவள்தான். அந்த அவியல் தொடர்பான நினைவு என்னில் இல்லாமல் ஆகும்வரை என் பெரியம்மா உண்மையில் இருக்கிறாள். என் அம்மாவும் அப்படித்தான்; அவள் எனக்குச் சிறுவயதிலிருந்து அறிமுகப்படுத்திய உணவுகள், அழைத்துச் சென்ற சினிமாக்கள், இடங்கள் இருக்கும்வரை அவள் வேறு வடிவங்களில் இருந்துகொண்டேயிருப்பாள். எனது ஒன்பதாவது வயதில் இடமாறுதல் உத்தரவு பெற்று அம்மா தூத்துக்குடிக்குச் சென்றபோது அறிமுகப்படுத்திய பட்டர் பீன்ஸை வாங்கிச் சென்னையில் சமைத்துச் சாப்பிடும்போது நான் அம்மாவை ருசித்திருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பட்டர் பீன்சை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வாங்கி வந்து குருமாவில், அவியலில் என விதவிதமாகப் போட்டுச் சமைத்து சாப்பிட்டிருக்கிறேன். மாவென வாயில் மென்மையாக அரையும் பட்டர் பீன்ஸின் வடிவம் அவள்தான். பணியாற்றிய ஆஸ்பத்திரி தோழிகளுடன் காளிமார்க் போய் சாப்பிட்டுப் பார்த்துவிட்டு என்னை முதல்முறையாக அழைத்துப் போய் வாங்கிக் கொடுத்த வெஜ் பப்ஸ், பைவ் ஸ்டார் சாக்லேட், கோல்ட் ஸ்பாட் கலர், தூத்துக்குடி ஞானம் பேக்கரியில் இப்போதும் கிடைக்கும் பட்டர் பேப்பர் சுற்றிய சாக்லேட் ஸ்டிக்....கமல்ஹாசன் நடித்த படம் என்று களத்தூர் கண்ணம்மா படத்துக்கு அவசர அவசரமாக கூட்டிப் போன மதியம் இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. நான் வழக்கமாக சிவாஜி, ஜெமினி நடித்த அழுகைப்படமாக இருக்காது என்ற நம்பிக்கையுடன் உடன் ஓடிச் சென்றேன். ஆனால், எனக்குத் தெரிந்த கமல்ஹாசன் அந்தப் படத்தில் இல்லை. என் அம்மாவின் வழக்கமான அழுகைப்படம் அது. ஏன் அம்மா இந்தப் படத்தில் கமல்ஹாசன் இல்லையே என்று கேட்டேன். அந்தப் படத்தில் வரும் என்னைப் போன்ற சிறுவனைக் காட்டி அவன் தான் கமல்ஹாசன் என்றாள். படம் முடிந்து வெளியே வரும் வரை அந்தப் படத்தில் கமல்ஹாசன் வளர்ந்து வழக்கமாக பாடி ஆடி சண்டையைச் செய்யவேயில்லை என்ற வருத்தம்தான் எனக்கு.
எனது ஒவ்வொரு கவிதைப் பருவத்திலும் ஒரு திருப்பத்தை அம்மாவோடு தொடர்புடைய கவிதைகள் வழியாகக் கடந்திருக்கிறேன். 14 வயதுவரையிலான நினைவுகளின் குதிரிலிருந்து எனக்கு இன்னமும் வெளிப்படுத்திக் கவிதைகளில் தீரவில்லை என் அம்மாவை; அவளை என் கவிதைகளில் மட்டுமே பரிபூரணமாக நான் நேசித்திருக்கிறேன் என்பதையும் சொல்லவேண்டும்.
பெரிதாக ஆகி சமூக அர்த்தத்தில் வளர வளர நான் அப்பாவை விட்டு ஆதியிலிருந்து விலகியதைப் போலவே அம்மாவிடமிருந்தும் விலகத் தொடங்கிவிட்டேன். 18 வயதிலேயே கால்களிலிருந்த வேர் அரிப்புற்று அறத்தொடங்க, ஊரிலிருந்து வெளியேறியது அம்மாவிடமிருந்தும் வெளியேறியதுதான். அதற்கப்புறம் சமீபகாலம் வரை அவளுடனான தொந்தமும் சண்டையும் புகார்களும் பழிகளுமாகப் புண்ணாக்கிக் கொண்டோம். புறத்தில் மிகவும் கசப்பும் மௌனங்களும் இடைவெளியும் அதிகரிக்க அதிகரிக்க நான் அவளை எனது கவிதைகளில் கூடுதலாக புரிந்துகொள்ளவும் மகத்துவப்படுத்தியும் வரைந்துகொண்டே இருந்திருக்கிறேன். நான் கவிதைகள் எழுதத்தொடங்கிய பிறகு முதல்முறையாக கவனிக்கப்பட்ட கவிதையும் அம்மா தொடர்பிலானது தான். அந்தக் கவிதையின் தலைப்பு ‘அம்மா நீங்கிய அறையில்’. இப்போது உண்மையாகவே அவள் எனது வேளச்சேரி வீட்டில் படுத்திருந்த அறைக்கு அருகில் அமர்ந்துதான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
சென்ற ஆண்டு கரோனா முதல் அலை ஊரடங்கின்போது, தூத்துக்குடி துறைமுகம் தொடர்பில் அம்மா சொன்ன ஒரு செய்தியை முன்வைத்து கவிதையை எழுதினேன். அம்மா தூத்துக்குடி துறைமுகத்தை இயற்கைத் துறைமுகம் என்று எனது சிறிய வயதில் அறிமுகம் செய்தாள். அந்தக் கவிதையில் என் அம்மாவின் தனிக்குணம் உள்ளது.
பாடப்புத்தகத்துக்கு முன்னர்
எப்போதும் சென்று கொண்டிருந்த
என் அம்மா
பணியிட மாறுதல் ஆகி
தூத்துக்குடிக்குப் போனாள்
இயற்கைத் துறைமுகத்துக்கும் செயற்கைத் துறைமுகத்துக்கும்
வித்தியாசம் அப்போதுதான் தெரிந்தது
கப்பல்கள் நின்று செல்வதற்கான அமைப்பு
இயற்கையாகவே அமைந்திருக்கும் இடம்தான்
இயற்கைத் துறைமுகம் என்று
தூத்துக்குடிக்கு நாங்கள் குடியேறிய போதே
சொல்லிவிட்டாள்
ஏற்கெனவே தூத்துக்குடி துறைமுகம்
என்னிடம் ஆழப்பட்ட பிறகுதான்
தூத்துக்குடி துறைமுகத்தை நேராகப் பார்த்தேன்
அம்மா பிறந்து வளர்ந்த ஊர் தூத்துக்குடி
தற்போது அங்குமிங்கும் பன்றிகள் மேயும் ஊராக
எனக்குத் தெரியப்போகும் உவர் நிலத்தை மகிமைப்படுத்த
துறைமுகத்தை அடையாளமாகச் சொல்லியிருக்கலாம்
அவள் பிறந்ததால்.
அது இயற்கைத் துறைமுகமாகவும்
முன்பு இருந்தது ஒரு தற்செயல்.
உதவிப் பொறியாளராக வேலைபார்த்த
அப்பாவின் தாய்மாமனான
தாத்தாவுடன்
துறைமுகத்துக்குள் உள்ளே நுழைந்தபோது
கடலோடு கலன்கள் ஆட
என் காலடியில் தார் பூசப்பட்ட தரைத்தளமும்
ஆட
எனக்கும் படகுகளுக்கும்
எனக்கும் தூரத் தெரிந்த கப்பலுக்கும் இடையில்
எண்ணெயும் அழுக்கும் மிதந்த கடலின் ஆழத்தில்
அம்மா சொன்ன
இயற்கையைத் துறைமுகத்தில் தேடியபடி
இருந்தேன்.
பெரியவனாகிச் சென்னைக்கு வந்தபின்னர்
மெரினாவிலிருந்து தெரியும் துறைமுகத்தை
ஒரு நாள் நண்பனுடன் பார்த்தபோது
அது செயற்கைத் துறைமுகம்தானென்று
இளப்பமாகச் சொன்னேன்
நண்பனுக்கு எனது வேறுபாடு தெரிந்திருக்காது
துறைமுகங்கள் ஆழத்தில் பிரிந்த ஒரு கதை
அவனுக்கு எப்படித் தெரியும்
இயற்கைத் துறைமுகமென்று
அம்மா
எதை
யாரைச் சொன்னாள்?
புற்றுநோய் கண்டறியப்பட்டு சென்னையில் இருந்த நான்கு மாதங்களில் என் அம்மாவை நெருங்கி, அவள் தனது தனிமையிலிருந்து வெளியேறாமல் காத்துவரும் தான்தோன்றி கம்பீரத்தையும், அசட்டு சாமர்த்தியத்தையும், யார் ஆதரவும் தேவையில்லையென்று, தன்னந்தனியாகத் தளிர்த்து வளர்ந்த அந்தத் தாவரம், என்னிடம் காக்கும் இறுக்கத்தையும் கடந்து அவளை அணைத்துத் தழுவிக்கொள்ள வேண்டுமென்று தினசரி முயற்சித்தேன். அவளது கடைசி நாட்களில் தான் தாங்கமுடியாத வலியில் தான் என்னைத் தொடுவதற்கும் பணிவிடை செய்வதற்கும் அனுமதித்தாள். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவளை நான் தொடாத இடங்களில் எல்லாம் மருத்துவமனையில் இருக்கும்போது தொட, எனக்குச் சிறுவனாக இருந்தபோது இருந்த அம்மாவை வெளிப்படுத்தி, என்னை அந்த நாட்களில் அனுமதித்தாள். நான் அவளைத் தொடவும் அவளை நெருங்கவும் அத்தனை வலியின் கடல்களை, அவள் கடந்து எனக்கு அந்தப் பரிசைக் கொடுக்க வேண்டியிருந்தது. என்னை முழுக்க கட்டித்தழுவ அம்மா, போதம் இருந்தவரை அனுமதிக்கவேயில்லை.
மரணத்தின் கடைசி மாதங்களில் சென்னையில் என்னுடன் இருந்தபோதும் அப்பாவைக் கூப்பிட்டு விசாரித்து, அவருக்குத் தேவையான மருந்துகள், உதவிகள் ஊரில் கிடைக்க ஏற்பாடு செய்துகொண்டே இருப்பாள். இத்தனை குரூரமாக இருக்கும் அப்பாவிடம் உனக்கு இப்படிப்பட்ட நேயம் எப்படி சாத்தியம் என்று கேட்டேன். என் அம்மாவின் தொனியை அதன் வெளிப்பாட்டை அப்படியே என்னால் மொழிபெயர்க்க முடியவில்லை. அப்பாவால் வதைபட்டுக் கொண்டு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளைக் கழித்தவள் நீ; அவர் வதைக்கும் அவர் குரூரத்துக்கும் எங்கேயோ பாட்டரி ஆக இருந்திருக்கிறாய் என்று சொன்னேன். நான் அவரோடு சந்தோஷமாக எப்போதேனும் இருந்திருக்கலாமாக இருக்கும் என்று அரிதான சிரிப்புடன் என்னிடம் சொன்னாள். அப்போது தெய்வானையும் உடனிருந்தாள். ஆமாம்! அம்மாவும் அப்பாவும் சேர்ந்திருந்த வீட்டில் அப்பா இல்லாத தருணங்களிலும் கூட, கழிப்பறையில் கூட நான் நிம்மதியாக இருக்க முடிந்ததில்லை. அம்மாவின் விசேஷம் அன்று கழிப்பறையில் இடமில்லாததால் கீழே வீட்டுக்குச் சென்று கழிப்பறையைப் பயன்படுத்தினேன். அப்பா ஹாலில் இருந்தார். ஒரு பாடலை ஹம் செய்தேன். அப்பா காட்டிய ரூபங்களுக்கு கண்ணுக்குப் புலப்படாத சக்தியை இதுவரை கொடுத்துவந்தவள் இந்த வீட்டிலிருந்து போய்விட்டாள் என்று தோன்றியது. அப்பா பரிதாபமாகத் தெரிகிறார்.
கடைசி நாட்களில் அம்மா 12 வயதுச் சிறுமியாக ஆகிவிட்டிருந்தாள். பட்பட்டென்று பேசினாள். வேண்டியது வேண்டாததைத் தீவிரமாக வெளிப்படுத்தினாள். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த கட்டிலைப் போலத்தான் வேண்டுமென்று அடம்பிடித்து வீட்டிலும் வாங்கிக்கொண்டால். நடைமுறை நாகரிக எல்லைகளைத் துறந்துவிட்டாள். நர்ஸ் பாட்டி பாட்டி என்று கூப்பிட்டதை மாற்றிப் புரிந்துகொண்டு என்னை ஏன் பட்டி பட்டி என்று அழைக்கிறாள் நர்ஸ் என்று கேட்டாள். மனப்பிரமைகளும் வரத்தொடங்கிவிட்டன. அப்போது அம்மாவை ஒரு தோழியைப் போல கேலி செய்யத் தொடங்கினேன். அதை அனுமதிக்கவும் செய்தாள். நான் கோபமாக அந்த நாட்களில் அவளிடம் நடந்துகொள்ளாவிட்டாலும் என்னிடம் ஏன் எரிந்து எரிந்து விழுகிறாய் என்று புகார் செய்தாள். அவளுக்கு நான் எரிந்துவிழுபவனாக ஆழத்தில் பதிந்துவிட்டேன். ப்ரவுனியும் அவளது தலைக்குள் ஏறியிருந்தான். திருநெல்வேலிக்கு வந்தபிறகு அவன் கறி சாப்பிடவில்லை என்றும் வெந்நீரில் கறியை அவித்து அவனுக்குக் கொடு என்றும் சொன்னாள். பிரவுனி என் காலை நக்கிவிட்டுப் போயிடுச்சு, ஈரமாக இருக்கு பாரு என்றாள். ப்ரவுனியை அவள் அறைக்குள்ளேயே நாங்கள் அப்போது அனுமதிக்கவில்லை. அவ்வப்போது தொடர்ச்சியேயின்றி ஆரூடங்கள் போலச் சொல்லத் தொடங்கினாள். நீ எல்லா வேலையையும் மனசிலேயே செய்யற பயல் என்றாள் என்னிடம். அவள் என்னைக் கண்டுபிடிக்காமல் வேறு யார் கண்டுபிடிக்க முடியும். அவள்தான் முதல் கவிஞர் எனக்கு, என்னிடம் கவிதை எங்கேயாவது இருக்கிறதென்றால். அவள்தான் பெரிய கதைசொல்லி, என்னிடம் எங்காவது கதை இருக்கிறதென்றால். அவளால் எதையும் புனைவில்லாமல், மிகையில்லாமல் சொல்ல முடிந்ததேயில்லை. சிறுவயதில் நான் செய்யாத சாகசங்களை, அறிவாளித்தனத்தை எல்லாம் செய்ததாக என்னைப் பெருமையோடு விளம்பரப்படுத்தியவள். பிற்காலத்தில் என்குறித்தான சங்கடங்களையும் அடுக்கிவைத்துக் கொண்டிருந்தவள். அவள் எனது சிறந்த ஆசிரியர்களில் ஒருத்தி. அவள் கற்றுக்கொடுத்த வரை நான் பள்ளியில் சிறந்த மாணவனாக இருந்தேன். அவளால் பாடம் சொல்லிக் கொடுக்க இயலாமல் போனபோதுதான் படிப்பிலிருந்து திரிந்து குற்றத்தன்மையில் அடைக்கலம் கொண்டேன்.
அவள் நினைக்குமளவுக்கு நன்றிகெட்டவன், கொடியவன் இல்லை நான் என்று எனக்குச் சொல்வதற்கு என் அம்மா தனது கடைசி மாதங்களில் அவகாசத்தைக் கொடுத்தது மட்டுமே இப்போதைய என்னுடைய ஆறுதல்.
நான் உன்னிடமிருந்து தொலைதூரத்துக்கு ஓடிவந்து ஒரு நகரத்தில் தனியாகி திரிந்தது உண்மை அம்மா. நீ அளிக்க முடியாத பல ருசிகளை இந்த நகரம் அளித்தது உண்மை அம்மா. உனக்குத் தெரியாத கல்விகளையெல்லாம் நீ அறியாத கூடங்களில் நான் பயின்றதும் உண்மை. ஆனால், என் ருசிகளைத் திறந்தவள் நீ.நான் உழன்று செத்துச் செத்துத் திரும்ப உயிர்த்து ஜீவிக்கும், வெற்றியும் தோல்வியுமாகத் தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கும் எனது மொழியும் வாழ்க்கையும் நீதான், நீதான் எனக்கு அளித்தவள்.
பாலமித்ரா, அம்புலிமாமா புத்தகங்களின் அட்டை ஓவியத்துக்கும் ஒரு கதையை அவள் எனக்கு ஏழாவது வயதுவரை படித்துச் சொல்லியிருக்கிறாள். மூன்றாம் வகுப்பில் இனி உனக்கு அம்மா கதை சொல்ல மாட்டேன்; உனக்குக் கதை தேவையென்றால் படிக்கத்தான் செய்யவேண்டுமென்று இடுப்பிலிருந்து இறக்கிவிட்டுவிட்டாள். ஐந்தாவது வகுப்பில் தேவியில் வந்த கிளுகிளுப்பான ஒரு கதையைப் படித்துக்கொண்டிருந்த போது, என்னைப் பிடித்துவிட்ட எனது அப்பாவின் அத்தை, அதைப் புகாராக அலுவலகத்திலிருந்து வந்த அம்மாவிடம் சொன்னபோது அவள் கண்டிக்கவேயில்லை என்பது இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. சமீபகாலம் வரையிலான எனது கவிதைத் தொகுதிகளை அவள் முழுமையாக படித்துவந்தவள். நான் அபூர்வமாக கற்பனை கலந்து எழுதும் கவிதையிலும் என்னைக் கண்டுபிடித்து, உன் கவிதையில் உன் துக்கம் தெரியக்கூடாது என்று எனக்குச் சொன்னவள். அவள் எனது படைப்பு குறித்துப் பேசும்போதெல்லாம் நிர்வாணமாக அம்மா முன்னால் நிற்கும் கூச்சம் இருக்கும்; அதைத் தவிர்த்துவிடுவேன்.
என் அம்மாவோடு முதலில் எனக்கு அன்னியம் ஏற்பட்ட தினம் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. பற்களை ஒவ்வொன்றாக எடுத்து கடைசியில் பல்செட் போட்ட நாள்தான் அது. நான் டியூசன் முடித்து வீட்டுக்கு வரும்போது அந்தப் பல்செட்டை டப்பாவில் வைத்துக் காண்பித்தாள். அம்மா அல்லாத ஒரு வஸ்து எனது அம்மாவின் ஒரு பகுதியாக மாறியிருப்பது பிடிக்கவேயில்லை.
அம்மா சிகிச்சைக்காக சென்னை வந்திருந்தபோது, என்னைச் சிறுவயதிலிருந்து அச்சானியப்படுத்திய அந்தப் பல்செட்டை டைனிங் டேபிளில் வைத்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். அந்தப் பல்செட்டும் அவள்தான் என்று அதனுடன் இணக்கம் கொள்வதற்கு முயன்றேன்.
000
அம்மாவைப் பற்றி எழுதவேண்டியதை சென்னை வேளச்சேரி வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் கருப்பு வெள்ளைப் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டுதான் எழுத வேண்டுமென்று நினைத்தேன். திருநெல்வேலியில் நண்பர் காஞ்சனை சீனிவாசனிடம் நட்பு ஏற்பட்டு திடப்பட்டபோது, அவரிடமிருந்த பழைய 12 ப்ரேம் புகைப்படக் கருவியை எனக்கு இரவலாகக் கொடுத்தார். அப்போதே அதற்கான கருப்பு-வெள்ளை பிலிம் ரோல் கிடைப்பது அரிதாகிவிட்டது. அழகிய லெதர் உறையில் இரண்டு கைக்குள் அடங்காத பெரிய காமிரா அது. என்னிடம் அப்போதிருந்த வசதியில் ஒரேயொரு ஒரு பிலிம் ரோல் வாங்கி அதை அதில் இட்டு, சில புகைப்படங்களை எடுத்தேன். அதில் இரண்டே இரண்டு புகைப்படங்கள்தான் கழுவியபோது தேறின. அதில் நான் என் அம்மாவின் மத்திய வயதுப் பருவத்தைப் பிடித்திருக்கிறேன். நாங்கள் குடியேறியிருந்த அம்மா கட்டிய புதுவீட்டின் பின்புறத்தில் வெள்ளைச் செம்பருத்திகள் அருகில் அவளை வற்புறுத்தி உட்கார வைத்து எடுத்தேன். காலையா மாலையா என்பது ஞாபகத்தில் இல்லை.
அந்த காமிராவை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சென்னை வந்தபிறகும் காஞ்சனை சீனிவாசனிடம் கொடுக்காமல் வைத்திருந்தேன். அந்த காமிராவோடு, தங்கர்பச்சானின் சினிமா படப்பிடிப்பு நடந்த எக்மோர் மியூசியத்துக்கு தளவாயுடன் போனது ஞாபகத்துக்கு வருகிறது. ஒரேயொரு ரோலோ இரண்டு ரோலோ வாங்கி அதைப் படம்பிடித்திருந்தாலும் அந்தக் காமிராவை நான் சென்னையில் கழுத்தில் தொங்கவிட்டுத் திரிந்த ஆரம்ப ஆண்டுகள் அவை. காஞ்சனை சீனிவாசன் அந்தக் காமிராவைக் கொடுத்திருக்காவிட்டால் எனது பிரத்யேகமான புகைப்படம் என்னிடம் இப்போது இருந்திருக்காது.
அம்மாவின் கடைசி நாட்களில் அவளுடன் திருநெல்வேலியில் இருந்தபோது காலையும் மாலையும் குன்றத்தூர் பொற்றையடி குன்றுக்கு நடைபயிற்சி போவதை வழக்கமாக்கிக் கொண்டேன். பொற்றையை அடைவதற்கு முன்னால் இரண்டு பக்கமும் சமீபத்தில் அத்தனை பச்சையாக எனக்குப் பார்க்கக் கிடைத்த வயல்களின் ஓரத்தில் மேட்டிலும் சற்றே தாழ்ந்தும் ஓடும் இரண்டு ஓடைகளைப் பார்க்கும்போது அக்காவும் தங்கையும் அம்மாவும் பெரியம்மாவும் என்று சொல்லிக் கொள்வேன். சீனிக்கற்களும் காக்காய் முள் செடிகளும் சாயங்கால நிலப்பரப்பை அபூர்வ பழுப்பு மஞ்சளாக்கும் புல்செடிகளும் சூழ நிற்கும் மலை இனி நான் தான் உனக்கு என்று ஆறுதல் சொல்லத் தொடங்கியது. குன்றத்தூர் போகும் பாதையில் வரும் பாசனக்குளத்தின் நடுவே இருக்கும் கல் தூண் ஒன்றில் நிற்கும் முக்குளிப்பான், நாரைகள், கொண்டலாத்தி, மயில், சாலையை சாவகாசமாய் கடக்கும் சாரைப்பாம்பு, சாயங்காலத்தின் கடைசி கிரணங்களில் ஒன்றை சிறகில் வாங்கி நிலத்தில் இறங்கும் இந்த உலகின் மிகச் சிறிய பறவைகளில் ஒன்று என என்னுள் இறங்கிய ருசியிலும் போதையிலும் அவள் புரதமாக இருந்தாள்; அவள் புரதமாக இருக்கிறாள்; அவள் புரதமாக இருப்பாள்.
‘கல் முதலை ஆமைகள்’ தொகுதிக்கான கவிதைகளைத் தொகுத்துப் பார்க்கும்போதே, நான் பிள்ளைப் பருவத்தில் இனி நீடிக்கமுடியாது என்று தோன்றிவிட்டது. அம்மா அதை மறுபடியும் தீர்க்கமாக ஞாபகப்படுத்திப் போய் இருக்கிறாள்.
அவளைத் தகனம் செய்தபிறகு, நான் குளித்த ஆற்றில் அடைந்த குளிர்ச்சியும் தனிமையும் என்னுடன் எப்போதும் இருக்கப்போகிறது. அதிகாலையிலேயே எழுப்பி விறுவிறுவென்று நடத்திச் சென்று திருப்பணி முக்கைக் கடந்து ரயில்வே கேட் தாண்டி குளிரைச் சில்லென இறக்கிக் கொண்டு ஒளிரும் சோடியம் விளக்கொளியில் மினுமினுக்கும் நிசப்த மருதமரங்களை வெறித்தபடி கடந்து இறங்கினால் கருப்பிலிருந்து வெளுக்கும் குறுக்குத்துறையை தாமிரபரணியை என்னைச் சில்லென்று அறிமுகம் செய்தவள் அவள்தான்.
Comments