காலையிலேயே துவங்கும்
உலகின் கலவர ஓசைகளுக்கு மேலே
மறுபடியும்
குயிலின் குரல்
எனக்கு உரத்துக் கேட்கத் துவங்கியுள்ளது
இருபதாம்
நூற்றாண்டின்
மகத்தான மனங்கள்
என்று சொல்லப்பட்ட மனிதர்களின்
விதைப்பைகள்
அனைத்தும் சலிக்கப்பட்டுவிட்டன
மகத்துவங்கள்
ஓட்டைத்துணிகளாகத்
தொங்கவிடப்பட்டுக்
கொண்டிருக்கும்
நூற்றாண்டு
இதில்
மீண்டும்
குயிலின்
குரல் உரத்துக் கேட்கத் துவங்கியுள்ளது
வறுமைக்கும்
வெப்பத் தாக்குதல் மரணங்களுக்கும்
ஊட்டச்சத்துக்
குறைபாட்டுக்கும் பால்யவயது திருமணங்களுக்கும்
ஒரு இட்லியை
விட மலிவாக இணையத்தரவு கிடைப்பதற்கும்
அதிகரிக்கும் மதக்கலவரங்களுக்கும்
உள்ள தொடர்பை
புரிந்து
மொழிபெயர்த்து விளக்குவதற்கு
என் கவிதை
சிரமப்படும்போது
குயிலின்
குரல் உரக்கக் கேட்கத் துவங்கியுள்ளது
பழைய செங்கோல் ஒன்றுடன் மடாதிபதிகள்
எமது நாடாளுமன்றத்துக்குள் நுழையும்போது
குயிலின் குரல் உரத்துக் கேட்கத் துவங்கியுள்ளது
வரலாற்றுப் பழிகளின் பேரால்
தாய்மார்களின் வயிறு கிழிக்கப்படுவதற்கு
தன் பெயரும் உடந்தையானதை
பார்த்தும் பாராமல்
ராமன் தனது டெஸ்லாவில் ஏறியபோது
மறுபடியும்
குயிலின் குரல் உரத்துக் கேட்கத் துவங்கியுள்ளது
எதுவுமே மாறவில்லை
எதுவுமே மாறாது
என்ற மூர்க்கத்துடன்
வைதீகக் குரல்களின் பொய் வன்மங்கள்
என் செவிகளில் மோதி ஆக்கிரமிக்கும்போது
உன் உலகத்தைத் துளைத்தே தீர்வேன்
என்ற வாத்சல்ய மூர்க்கத்துடன்
அந்தக் குயிலின் குரல்
எனக்கு உரத்துக் கேட்கத் துவங்கியுள்ளது
அம்மா இறந்தபிறகு
கேட்கவே கேட்காத
குயிலின் குரல்
மீண்டும் உரத்துக் கேட்கத் துவங்கியுள்ளது
தர்மனின்
வாகனம்
மீண்டும் நாற்சந்தியில் நிற்கிறது
அம்மா
இந்தக் கலவரக் குழப்பங்களில்
குழந்தைகளும் நாய்க்குட்டிகளும்
நாதியற்றவர்களாக
பிறந்து துள்ளித் திரியும்
விபரீத நாட்களின் தெருக்களில்
குயிலின் குரல் மூர்க்கமாகத் துளைக்கத் தொடங்கியுள்ளது
Comments