Skip to main content

ஞானக்கூத்தனின் ‘அழிவுப் பாதை’

ஞானக்கூத்தனின் ‘அழிவுப் பாதை’கவிதையில் வரும் காட்சி இன்று பலருக்கும் பரிச்சயம் இல்லாதது. அதுகுறித்த எனது ஞாபகத்தை முதலில் சொல்லவேண்டும்.தென்காசியில் மேட்னி ஷோ பார்ப்பதற்காக கீழப்பாளையத் தெரு வீட்டிலிருந்து கிளம்பி உலகம்மன் கோயிலைக் கடந்தபோதுதான் அக்காட்சியை முதல்முறை பார்த்தேன் – 12 வயதுச் சிறுவனாக.

ஒரு பாம்பாட்டி. பக்கத்தில் பாம்புகளோடு சில கூடைகள். ஒரு கூடை மட்டும் லேசாகத் திறக்கப்பட்டு, கருப்பு நிறத்தில் பாம்பு சுருண்டிருந்தது.பாம்பின் வாயிலிருந்து நூலிழையாக இரட்டை நாக்கு அவ்வப்போது தென்பட, பாம்பாட்டி பேசிக்கொண்டிருந்தார். பத்து நிமிடத்துக்கு மேல் பேசிவிட்டு, சுற்றி நின்றிருந்தவர்களை, முட்டியைக் கட்டாமல் குந்தி உட்காரச் சொன்னார். முட்டியைக் கட்டினால் ரத்தம் கக்கிவிடுவீர்கள் என்று சொல்லி வட்டத்தை நெருக்கினார்.

ஞானக்கூத்தனின் அழிவுப் பாதை கவிதையில் வருவதுபோலவே பாம்பாட்டி பேசியதும்,  மகுடிநாதனுக்குக் கட்டுப்பட்டது போல எட்டுப்புறமும் திறந்திருந்த பஜாரில், சொற்கள் வழியாக உருவான சிறையில்நாங்கள் மயங்கிக் கட்டுண்டோம்.பிறகு, கூட்டத்தில் ஓரு பையனை எழும்பி வரச் செய்தார். அவனை மயக்கித் தரையில் படுக்கவைத்து தலையில் துணியைப் போட்டுவிட்டார். அதன்பின்னர் நடக்கும் நாடகத்தைத்தான் ஞானக்கூத்தன் வேறொன்றாக மாற்றியுள்ளார் இந்தக் கவிதையில்.   

யாருமே அங்கிருந்து எழுந்து அகன்றிட முடியாத,மாயக்கட்டு ஒன்றை, உணர்ந்த அரைமயக்க நிலை இன்னமும் ஞாபகத்தில் உள்ளது. அந்த மயக்கத்துடனேயே அன்றுமுழுவதும் வீட்டில் இருந்த ஞாபகமும் உள்ளது.“அழிவுப் பாதை” இந்த பாம்பாட்டி வித்தையினையே பின்புலமாக கொண்டிருக்கிறது. இன்று அந்த காட்சி எங்கும் காணக் கிடைப்பதில்லை. சொல்லால் கட்டும் அந்த ஏமாற்றும் கலை இன்று வேறு தளத்திற்கு மாறிவிட்டது. மகுடிக்காரர்களோ தெருவில் இல்லை.

000

“அழிவுப் பாதை” கவிதையை என் கல்லூரிப் பருவத்தில், முற்றிலும் புரியாமல் வாசித்தபோதும்,அந்தக் கவிதையின் தொடக்கம் என்னை வசீகரிக்கவே செய்தது. அந்தக் கவிதையின் தளத்தை நான் நெருங்கமுடியக் கூடிய இப்போதைய நிலையிலும் அதன் சொல்முறையில்வசீகரம் கூடியே ஈர்க்கிறது.

அரிசி வாங்க கடைக்குச் செல்லும் சிறுவன் பாம்பாட்டியால் மயக்கப்பட்டு தரையில் கிடக்கிறான். அவன் உளமயக்கமும், மயக்கத்தின் இருட்டில் அவன் மேற்கொள்ளும் பயணமுமே இந்த கவிதை.‘அழிவுப் பாதை’ என்பது தலைப்பு.ஆனால், முதல் வாக்கியமே ‘சொல்லப் பட்டது போலில்லை அழிவுப்பாதை’ என்று பிரகடனம் செய்து முரணில் தொடங்குகிறது. தலைப்புக்கு முரணாக படிப்படியாக மங்கல அம்சம் கொண்டு ஓசைநயத்துடன்கவிதைமயக்கத் தொடங்கிவிடுகிறது. நாடகமாக நிகழ்த்தக்கூடிய அளவில், சப்தத்தில் அர்த்த அளித்துக்கொண்டே செல்லும் நவீன கவிதைகளில் ஒன்று ‘அழிவுப் பாதை’.

“பறவையின் சாதி உடன் வந்தழைக்க

காலுக்கடியில் பூமி குழைய

நாளையின் வாயில் பெருகிய கானம்

வருகையில் இருப்பவர் பெருமையை விரிக்க

சொல்லப்பட்டது போலில்லை அழிவுப்பாதை”

என்று கவிதை நீளும்போது,“ஆமாம், சொல்லப்பட்டது போல இந்த அழிவுப் பாதை இல்லையே” என்று நாமும் வியக்கிறோம்.

“தாரகை கடந்த ஒருபெரும் விசும்பில்

முடிவின் அருள்முகப் புன்னகை பொலியும்.”

இப்போது நான் அழிவுப் பாதையை ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டேன். முடிவு, துயரப்பட வேண்டியதல்ல என்ற நம்பிக்கையைக் கொடுக்கத் தொடங்குகிறது கவிதை.முடிவு சார்ந்த பொதுப்புத்தியை ஆமையைக் கவிழ்த்துப் போடுவது போலக் கவிழ்த்துப் போடுகிறது.

“நடக்கலாம்; இருக்கலாம்; நிற்கலாம்; படுக்கலாம்

அனைத்தும் ஒன்றுதான் அழிவுப் பாதையில்”

தொடர்ந்து மகுடியின் நாதமும், ஆடும் பாம்பும், மயக்கத்தில் இருக்கும் கவிதை சொல்லியும் வேறு வேறாகஇல்லாத ஒரு நிலை ஏற்படுகிறது. மகுடிநாதனின் பிடியிலிருந்து விடுபடும் தேர்வு கவிதைசொல்லியிடம் இல்லை. காதலில், போதையில் பிதற்றுவதைப் போல இப்போதும் குளறுவதைத் தவிர வேறு வழியில்லை.

“மகுடியின் துளைவழி

பிராணனின் நடனம்: மகுடிநாதா! வேண்டாம் என்பதா

கேளாமல்கிடைத்து நெளியும் உன் பாடலை”

மகுடியின் துளைவழி பிராணனின் நடனம் என்று சுட்டப்படுவதுஎது?பிராணன் நடனமிட்டு மயக்கும் என்றால், வெறுமனே உயிர்த்திருப்பதே ஆனந்த நிலை அல்லவா? ஆனந்த நிலை ஏன் ஞானக்கூத்தனால் அழிவுப் பாதை என்று சுட்டப்படுகிறது?ஓர் அனுபவத்தை ருசிக்கும் உயிர், தானே ருசியாகவும் மாறுகிற, அந்த மாற்றத்தை காணவும் இயல்கிற விபரீதசுகப் பிரக்ஞைஒன்று இங்கே தோன்றுகிறது.  மகுடிநாதனின் மயக்கத்தில் சிக்குவதற்கு முன் அந்தச் சிறுவன்கூட்டத்தில் ஒருவனாக இருந்தான். பார்வையாளர்களில் ஒருவனாகஇருந்தான். கும்பலின் பிரதநிதியாக சமூகத் தலைகளில் ஒருவனாகவே இருந்தான்.சமூகம் ஒழுங்கமைத்துக் கொடுத்த முகமூடியைஆளுமையாக அணிந்த தலைகளில் ஒன்றாகஇருந்தவனை மகுடி நாதம்தேர்வு செய்து அழைக்கிறது.

“மகுடி நாதா

வெட்டாமல் விழுந்தது என் தலை மண்ணில்

சுற்றிலும் ஒருமுறை பார்க்கச் சொன்னாய்

கண்டேன் அந்தச் சித்திரம்

பெரிதும் மாற்றப்படுவதை எப்படிக் கூறுவேன்”

எந்த நம்பிக்கைக்கோ கட்டுப்பட்டு வெட்டாமலேயேவிழுகிறது தலை. முடிவின் அருள்முகப் புன்னகையைக் காண்பதற்கான தைரியம்அந்த தலைக்கு எப்படியோ இருந்திருக்கிறது.எல்லாமே மாறிக் கொண்டிருப்பதை அது காண்கிறது. தலையற்ற புத்தனும் அதையே கண்டான். எல்லா இடங்களிலும் மாற்றமே நிகழ்கிறது. நம் சுயமும் அகந்தையும்அதைக் காண மறுக்கின்றன.ஆனால் தலை விழும்போது அது தெரிந்துவிடுகிறது. மாற்றத்தை உணராத, தொடர்ச்சியில் தான் காலம் இருக்கிறது. தொடர்ச்சியில்தான் பாலம் உள்ளது. தொடர்ச்சியில்தான் துயரம் உள்ளது. தொடர்ச்சியில்தான் வேட்கை உள்ளது. தொடர்ச்சியின் தொப்புள்கொடியை அறுக்கிறார் கவிஞர். மாற்றத்தை முன்வைக்கிறார். காட்சியை, சித்திரத்தை மாற்றி மாற்றிப் போடுகிறார். எல்லாம் மாறுவதை விழுந்த தலை கண்கொட்டாமல் பார்க்கிறது. தலைவிழும்போதுதான் நன்றாகப் பார்க்கமுடியும்.ஆனால் தலைவிழகூட்டம் சம்மதிப்பதில்லை. தலைவிழவீடு சம்மதிப்பதில்லை. தலைவிழ நாமும் சம்மதிப்பதில்லை.

மாற்றம் பற்றி பேசுகையில் இயற்கை, வெளி, ஆள், நிலம் யாவும் மாறும்போது நடுவே மூக்குத் துளைகளும் விரிந்து மாற்றின என்கிறார் ஞானக்கூத்தன். கவிதையில் இப்படி சுவாசத்தின் மேல் தொடர் கவனம் பதிந்தபடியே உள்ளது.ஒவ்வொருமுறையும் சுவாசம் வழியாக, மனம் உள்ளே போய் வெளியே வருகிறது. ஒவ்வொருமுறையும் உலகம் தலைகீழாகப் புரண்டுவிடும் காட்சியாகிறது. “நீலம் இறங்கி நிலவு நெளிகிறது” என்று கவிதையில் வருவது போல, நாகம் நஞ்சு நீலம் நிலவு நெளிந்து நெளிந்து அனுபவத்தை அமிர்தமாக்கும் ரசவாதம் நடக்கிறது.    

மகுடிநாதனிடம் மயங்கித் தரையில் கிடக்கும் அந்தச் சிறுவனின் பூர்வ அடையாளங்கள் அனைத்தையும் நிர்மூலமாகி அவன் புகையால் உடுத்தப்படுகிறான். பிறகு, இல்லாமல் போன அவனை அழைத்து திரட்டி அங்கே இருப்பதைக் கூறு என்று ஆணையிடுகிறான் மகுடிநாதன்.கடைசியில், அந்தச் சிறுவன் மயக்கத்திலிருந்து எழ மீண்டும் சித்திரம் மாறுகிறது. வீட்டில் அவனை அரிசி வாங்கச் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.


“உன்னை வீட்டில் தேடுகிறார்கள்

ஆம் :

தான்யம் வேண்டுமே அமுது படிக்கு”

000

‘அழிவுப் பாதை’ குறித்து அபூர்வமானஒரு கட்டுரையை கவிஞர் ஆனந்த் எழுதியிருக்கிறார்.பெற்றோர், சமூகம், சூழல்ஆகியவை கொடுத்த ஓர் ஆளுமை, ஒரு மனச்சுயத்திலிருந்து(ego) விடுபட்டு, உயர்தள உணர்வு நிலைகளை பேசுவதாக அக்கவிதையை அவர் வகுக்கிறார். பார்ப்பதும் பார்க்கப்படுவதும் ஒன்றாகும் அனுபவம் என்று அதை ஆனந்த் சுட்டுகிறார்.

படைப்பு போதம், கவித்துவப்போதம், போதை, உடலுறவு ஆகியவற்றில் மனச்சுயமும்(ego) அதைச் சார்ந்துள்ள எண்ணங்களும் ஒரு க்ஷண விடுதலை நிலைக்கு எழுகின்றன.அலைபோல மோதி, ஓயாமல் தொணதொணப்பவை சட்டென்று அமைதியாகின்றன. உடனே நாம் பறந்து மிதக்கிறோம். அந்த உணர்வை அடைவதற்கு திரும்பத் திரும்ப முயற்சித்துக்கொண்டே இருக்கிறோம்.  அந்த அனுபவத்தை அழிவுப் பாதையில் சிறுவன் அடைகிறான்.

சுயத்தைச் சுற்றி கும்மியிடும் மனத்தின் சுமையிலிருந்தும் அதன் கட்டுப்பாட்டின் அழுத்தத்திலிருந்தும்  விடுதலை பெறும் அனுபவமே ஆன்மிக அனுபவம் என்று குறிக்கப்படுகிறது. ரமணர், ஜே கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்அந்த மனம்கடந்த நிலையைப் பேசியிருக்கிறார்கள். யு ஜி கிருஷ்ணமூர்த்தியோ ஞானமென்று அதைச் சொல்லாமல் விபத்துச் சம்பவம் என்றும், வெறும் உடலியல் நிகழ்வு என்றும் சுட்டுகிறார்.

காலம்காலமாக அன்றாடத்தின் கண்களுக்குப் பழகித் தேய்ந்துபோன ஒரு வஸ்து கவிஞனுக்குத் தன்னைத்திறந்து வேறு பொருள் காட்டும் ephiphany என்னும் வெளிப்பாடும், அனுபவநிலையும் சன்னதமும் இலக்கியத்தில் தொடர்ந்து உணரப்படுவதாகவும் பேசப்படுவதாகவும் இருக்கின்றன.தன் வாழ்நாளின் பிற்பகுதியில்ஓர் அனுபவ நிலையில்  மனிதன் இரண்டாம் முறை பிறப்பதை அறிஞர் யுங் individuation என்கிறார். ஒரு நபர் தனது அகத்தின் ஆழத்தில் உள்ள தனியம்சத்தை உணர்ந்து உளவியல் ரீதியான தனி நபர் ஆகும் வினைமுறை என்று அதை வரையறுக்கிறார். பெற்றோர், சமூகம், சூழல் ஆகியவை அளித்த சார்புகள், சாய்வுகள், வடுக்கள், அவற்றுக்கான எதிர்வினைகளிலிலிருந்து எழுந்த சுயத்திலிருந்துகுணமூட்டப்பட்டு உருமாற்றம் கண்டு விகசிக்கும் ஆளுமை அது.அழிவுப் பாதையில் நுழைந்த சிறுவன் மீண்டும் பிறப்பெடுத்திருக்கவே வேண்டும். அதனால் தான் அவன் தலை தரையில் மடிவது அவனுக்கு அத்தனை சுகமாக இருக்கிறதுபோல.

ஒரு மனிதனின் இரண்டாம் பிறப்பு போன்ற ஒரு நிகழ்வை கலைஞன் என்ற நிலையிலிருந்து ஆல்பெர் காம்யூ இப்படிச் சொல்லிப் பார்க்கிறார்.

“மற்றவர்களிடமிருந்து தான் வேறுபட்டிருப்பதாக உணர்வதால் கலைஞனுக்கு உரித்தான வாழ்க்கைப் பாதையைத் தனக்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் கலைஞன், மற்றவர்களுடன் தனக்கு இருக்கும் ஒற்றுமையை ஏற்றுக்கொள்வதுதான் தன்னுடைய கலைக்கும், தன்னுடைய வேறுபாடுகளுக்கும் ஊட்டக் அளிக்கும் என்பதை விரைவிலேயே தெரிந்துகொள்வான்”

‘அழிவுப் பாதை’ கவிதையில் மகுடிநாதனின் நாதத்துக்கு மயங்கி தரையில் தலையை மடியவிடும் சிறுவன் மீண்டும் வீட்டுக்கு அரசி வாங்கச்சென்று சமூகத்திற்குள் கரைந்துவிடுகிறான். மகுடிநாதனும் அதை அனுமதிக்கிறான். காம்யூ சொன்னதுபோல தன்னுடைய தனித்துவத்தோடு அவன் சமூகத்தில் கரைந்திருப்பவனாகவும் இருக்கலாம். ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல இகத்தில் இருந்துகொண்டே பரத்தின் இனிப்பைச் சுவைப்பவனாக, அவ்வப்போது நிஷ்டையில் மிதப்பவனாக அல்லது இந்த அனுபவத்தை வாழ்க்கை முழுக்கச் சுவைத்தவனாக அந்தச் சிறுவன் இருக்கக் கூடும்.

‘அழிவுப் பாதை’ கவிதையை இன்றைய இந்திய அரசியல் சூழலின் பின்னணியிலும் வேறு வகையாக வாசித்துப் பார்ப்பதற்கு இடம் உண்டு. இந்தியச் சூழலில் மட்டுமில்லாமல் உலகின் பல நாடுகளிலும் சர்வாதிகாரிகள் அற்புதம், மர்மம், அதிகாரம் எனும்மோடி வித்தையையும் மகுடி வித்தையையும் கொண்டே மக்களை மயக்குகிறார்கள். விசாரணை அதிகாரியில் தஸ்தயெவ்ஸ்கி உரைத்தது இன்று எதார்த்தமாகியுள்ளது. அழிவுப் பாதையில் அத்தனை குஷியோடும் ருசியோடும் தனி ரசத்துடனும் வெகுமக்கள் எலிகளைப் போலப் பயணிக்கிறார்கள்.     

அழிவுப் பாதை கவிதை பல தசாப்தங்கள் கடந்தும் மொழியும் காட்சிகளும் இயைந்த மயக்கத்தை வாசகரிடம் ஏற்படுத்துகிறது. அர்த்தம் புரிந்தும் புரியாமலும் தோன்றும் அம்மயக்கம் மகுடிநாதனிடம் சிறுவன் உணர்ந்த அதே மயக்கம்தான். தமிழ் நவீன கவிதையின் தலையில் எப்போதும் சூடப்படத் தகுந்த பூஷணம்.  

(அழிவுப் பாதை முழுக்கவிதையை வாசிக்க இங்கே சொடுக்கவும் 

(அகழ் இதழில் வெளியானது)

Comments