சமீப நாட்களாக மகாகவி பாரதியின் கீதை விளக்கத்தில் வரும் தொடக்க வாக்கியங்களை மனம் ஜெபித்துக் கொண்டு இருக்கிறது. பாரதியின் அந்த வரிகள் இருட்டைப் பிளக்கும் ஒளியின் தன்மையைக் கொண்டது.
“புத்தியில் சார்பு எய்தியவன் இங்கே, நற்செய்கை, தீச்செய்கை இரண்டையும் துறந்துவிடுகிறான்.”
சி.மோகனின் ஆளுமையை ஓரளவு வரையறுப்பதற்கு ‘புத்தியில் சார்பெய்த முயல்பவர்’, புத்தியில் சார்பு எய்துவதற்கான விழிப்புணர்வைத் தூண்டும் ஆசிரியர் என்றும் சொல்லலாம். புத்தியில் சார்புடைய நிலையும், தன்னை முழுக்க இயற்கையிடமோ கடவுளிடமோ சரணாகதி செய்யும் நிலை இரண்டும் ஒன்றுதான். ஒருவன் முழுமையான பொறுப்பைத் தன்னிடமே வைத்துக் கொள்கிறான். தனது நன்மைக்கும் தனது களங்கங்களுக்கும் எவரொருவரையும் புத்தியில் சார்புடையவன் பொறுப்பாக்குவதில்லை. மற்றவனோ தன்னை முழுமையாகப் பிரம்மத்திடம் ஒப்படைத்துவிட்டவன்; தனது சந்தோஷ துக்கங்கள் உட்பட அனைத்தும் ஈஸ்வர லீலை என்றே நினைத்து தன்னை ஓடும் புனலின் திசையில் பயணிக்கும் ஒரு படகாய், அங்குள்ள நாணற்புல்லாய் மாறிவிடுகிறான். அவனுக்கும் பிறர் மீது எந்தப் புகாரும் இல்லை.
சி.மோகனைப் பொருத்தவரை அவருக்கு லட்சிய ஆளுமைகள் மீது மிகுந்த ஈர்ப்புண்டு. லட்சிய நிலையில் சொந்த லௌகீகங்களையும் சுகசௌகரியங்களையும் உதைத்து எழும் தியாக உணர்வு மற்றும் மடத்தனத்தின் மீது தீராத வசீகரமும் கொண்டவர் சி.மோகன். அவரது நடைவழிக் குறிப்புகள் அதற்குச் சாட்சி. பிரமிள், சம்பத், தாஸ்தாயவெஸ்கி, ஜே.சி.குமரப்பா, காந்தி, ஜி. நாகராஜன், ஓவியர் ராமானுஜம் தொடங்கி நடிகர் சந்திர பாபு மற்றும் சாவித்திரி பற்றி அவர் எழுதியவற்றில் அந்தச் சாய்வைக் காணமுடியும்.
தீவிர நடைமுறைவாதிகள், பொது வாழ்க்கை விடுக்கும் சகல சவால்களையும் சாமர்த்தியக் கோரிக்கைகளையும் ஏற்று வெற்றிபெற்று நிற்கும் வெற்றியாளர்கள் மற்றும் பிரபலங்களோடும் தொடர்ந்தும், சில துண்டிப்புகளினூடாகவும் கொஞ்சம் சோர்வினூடாகவும் சி.மோகன் உறவுகளைப் பேணுவதையும் நான் தொடர்ந்து பார்த்திருக்கிறேன்.
லட்சியவாதிகள், நடைமுறைவாதிகள் இருவரையுமே குழந்தைகளைப் போல புதுக்காதலிகளைப் போல சி.மோகன் வருடித் தருவதை அருகிலிருந்து பொறாமையுடன் பார்த்து வந்திருக்கிறேன்.
ஆளுமை ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் தன்னிறைவு உடைய ஓட்டை உடைசல்கள் இல்லாத நோவா கப்பல்கள் போன்ற நபர்களிடம் சம உணர்வையும் சம மரியாதையையும் பேணுவார். நான்- நீ என்ற உறவும் பரஸ்பர தரிசனங்களும் சாத்தியமுள்ள நிலை அது.
லட்சியத்துக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் நடுவே தத்தளிக்கும் இரண்டுங்கெட்டான்கள், தொடர்ந்து தன்னையும் பிறரையும் சூழலையும் சந்தேகத்தில் வைத்திருப்பவர்கள், நிர்ணயத்துக்குட்படாமல் லௌகீக வெளிக்கும் கலை, இலக்கிய வெளிக்குமிடையே அலைந்து கொண்டிருப்பவர்களை ஓட்டையுள்ள கலங்களாகப் பார்ப்பார் மோகன்.
முதலில் அந்த ஓட்டைக்கலங்கள் தான் கடந்து வந்த துறைமுகங்கள், சந்தித்த புயல்கள், நங்கூரமிட்டு இளைப்பாறிய ஏகாந்த தீவுகள் எல்லாவற்றையும் பொலபொலவென்று அறிவித்து மோகனிடம் தன் சரக்குகளை ஒப்படைத்து விடும். மோகனும் அந்தக் கலத்தின் ஓட்டைகளை, முதலில் இயேசுவின் சிலுவைக் காயங்களைத் தொடுவது போல நேசத்துடன் பிரியத்துடன் தொட்டு ஆறுதல் சொல்வார். அந்த ஓட்டைக் கலத்தை தன் கடல் குகைக்குள் பிரியத்துடன் வழிநடத்தியும் போவார். பெரும்பாலும் சி.மோகனின் குகைக்குள் அந்தக் கலம் உடைத்து நொறுக்கப்படும்.
துளைகள் முழுவதும் கீலால் அடைக்கப்பட்டு, பழுதுநீக்கப்பட்ட தன்னிறைவான கலனாக அரிதாக சில கலங்கள் வெளியே வருவதையும் பார்த்திருக்கிறேன். சுயபச்சாதாபத்தை ஒருபோதும் தொடர்ந்து கோதிக் கொடுத்துக் கொண்டிருக்க மாட்டார் சி.மோகன். எந்த உறவுநிலையும் பரஸ்பரம் திட்டங்களைக் கொண்டதுதான், அதில் லாப நஷ்டக் கணக்குகளுக்கு இடமில்லை என்பதை என்னிடம் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார். மூடப்பட்ட கதவின் முன்னால் அது எத்தனை மகத்தான வீட்டின் கதவாக இருந்தாலும் நிற்காமல் போய்க் கொண்டே இருக்கவேண்டும் என்பதே அவரது சித்தாந்தம். அந்த மூடப்பட்ட கதவு முன்பு நமது வீட்டினுடையதாகவும் இருந்திருக்கலாம்.
தன்னிறைவில்லாத தன் நிச்சயம் இல்லாத ஓட்டை மனிதர்களைப் பொருத்தவரை சி.மோகனின் உறவு நான்-அது என்ற உறவுநிலையே. அன்றாட உறவுகளையும் பெரும்பாலான நட்புகளையும் பொருள்களைக் கையாளும் லாவகத்திலேயே அவர் கையாள்கிறார். அவர்களின் சாத்தியங்களையும் அவர் கிட்டத்தட்ட வரையறுத்தும் விடுவார். குடும்பம், நிறுவனம், குழந்தைகள் என்ற அரண்கள் இல்லாமல் தனிமையையே தன் வாழ்க்கை முறையாகத் தேர்ந்தெடுத்த சி.மோகன் தன் வாழ்வை எதிர்கொள்வதற்கான கவசம் என்று கூட இந்த அணுகுமுறையைப் பார்க்கமுடியும்.
ஒரு குழந்தையைக் கொல்வதும் சிவபூஜை செய்வதும் கடவுளுக்கு ஒன்றுதான் என்பது போன்ற நிலையில் சி.மோகன் சகமனிதர்களைப் கொண்டாடுவதையும் நிர்மூலம் செய்வதையும் உடனிருந்து பார்த்திருக்கிறேன். பின்விளைவுகள், நஷ்டங்கள் எதையும் எண்ணாமல், நீண்டகாலப் பயன்கள் எதையும் கருதாமலேயே அவர் அந்த கொலையைச் செய்வார்.
விசாரண நாவலில் நாயகன் கே., முதல் ஞாயிற்றுக் கிழமை விசாரணை நீதிமன்றத்துக்குப் போகும் குடியிருப்பின் படிக்கட்டுகளில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் அவன் வழியில் தொந்தரவு செய்வார்கள். அடுத்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வரும்போத,
இந்தக் குழந்தைகளுக்கு மிட்டாய்கள் வாங்கி வரவேண்டும், அல்லது நல்ல பிரம்பை எடுத்து வரவேண்டும் என்று திரு.கே நினைத்துக் கொள்வான். சி.மோகனைப் பொருத்தவரை வசீகரிக்கும் மிட்டாய்க்கும் பிரம்புக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
எனது இருபது வயதில் சி.மோகனிடம் ஒரு பெண்ணின் வசீகரத்துடன் அறிமுகமாகி கிட்டத்தட்ட 18 வருடங்கள் பழகியிருக்கிறேன். வசீகரம், ஏக்கம், நேசம், வெறுப்பு, வன்மம், புகார், நிம்மதி, ஆசுவாசம், தாய்மை, சம உணர்வு, துரோகம் என எல்லா உணர்வுகளையும் நான் கடந்திருக்கிறேன். நான் என்பதை பிரக்ஞைப் பூர்வமாகவே சொல்கிறேன். அவர் என்ன உணர்ந்தார் என்பதை நான் சொல்லும் உரிமையை அவரிடம் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு அது. அந்த எச்சரிக்கை உணர்வும் உறவு எப்போதும் திருகிவிடலாம் என்ற அச்சமும் விழிப்புநிலையும் அவரிடம் எனக்கு எப்போதும் உண்டு.
எனது கவிதையின் உள்ளடக்கம், எனது ஆளுமையில் உள்ள ஊழல்கள், தன்னிறைவின்மை, அந்தந்தச் சூழ்நிலைகளுக்கேற்ப உறவுகளை தன்னிஷ்டத்திற்கு வளைத்துக்கொள்ளும் தன்மை, தன்மையம் ஆகிய ஓட்டைகள் நிறைந்த எனது கலத்தை இவை ஓட்டைகள் இவை ஓட்டைகள் என்று சொல்லிச் சொல்லி உடைத்து நொறுக்கி மறு உருவாக்கம் செய்ய முயன்றவர்களில் சி.மோகனுக்குப் பிரதானமான இடமுண்டு. குறிப்பிட்ட சம்பவங்களில் நான் அழுதுகொண்டே அவர் இருக்கும் அறைகளிலிருந்து என் அறை நோக்கிப் போயிருக்கிறேன். என் முதல் தொகுப்பு வெளிவந்த வேளையில் அவரும் விக்ரமாதித்யனும் லக்ஷ்மி மணிவண்ணனும் அளித்த மண்டகப்படியில் நள்ளிரவில் பேருந்தின்றி நடந்துபோன போதுதான் முதல்முறையாக பிணம் எரியும் சுடுகாட்டைத் தனியாகப் பார்த்தேன்.
சி.மோகனின் முரட்டுத்தனமான சிகிச்சைகள் அவ்வளவும் அவரது நல்லெண்ணத்தின் அடிப்படையிலிருந்து வருகிறதென்றெல்லாம் புனிதப்படுத்த மாட்டேன். அதை அவரும் விரும்பவோ ஏற்கவோ மாட்டார். ஒரு குழந்தையை தந்தை அடிக்கும்போதும், ஒரு திருடனை காவலர் அடிக்கும்போதும், ஒரு பக்தனை கடவுள் சோதிக்கும்போது ஒருவர் இன்னொருவர் மீது செலுத்தும் வன்முறையில் பகுத்தறிய இயலாத தொன்மைக்குணம் கொண்ட வன்மமும் வஞ்சமும் விஷம் போலச் சேர்ந்தே செயல்படுகிறது.
சி.மோகனின் சிகிச்சைகள் எனக்கு பல பலன்களை அளித்திருக்கின்றன. இன்றைய தலைமுறை இளம் எழுத்தாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் இதைப்போன்ற ஆசிரியர்களைப் பெறும் வாய்ப்புகள் அரிதுதான். இது வரம் தான். சாபமும் கூட. சம்பிரதாயக் கல்விமுறையிலும் பள்ளிக்கு வெளியிலான மரபுசாராக் கல்வியிலும் சுந்தர ராமசாமி, லக்ஷ்மி மணிவண்ணன், சி.மோகன் போன்ற ஆசிரியர்கள் மிகச்சமீப காலம் வரை இருந்திருக்கிறார்கள். நமது உலகநோக்கையும், கருத்துலகத்தையும், உறவு நிலைகளையும் அறவுணர்வையும் பிறரின் மீதான பரிந்துணர்வையும் அந்த ஆசிரியர்களே உருவாக்குகிறார்கள். சுயத்தைத் தீவிரமாக அலசிப் பரிசீலனை செய்வதற்கான இரக்கமற்ற கருவிகளை வழங்குபவர்கள் அவர்கள்.
படைப்பு, சினிமா போன்ற கூட்டுழைப்பைக் கோரும் கலைகளில் மனிதத் திட்டத்தை மீறி ஒரு ஆசிர்வாதமோ கொடையோ ஒரு பொற்கரத்தின் தீண்டலோ நிகழ்ந்தால் தான் அது அற்புதமும் வெற்றியும் சந்தோஷமும் முழுமையும் கொண்டதாகிறது. மனிதத் திட்டம் மட்டுமே செயல்பட்ட, வெளியிலிருந்து கிடைக்காத அல்லது அனுமதிக்கப்படாத ஆசிர்வாதம் இல்லாத படைப்பு எப்போதும் குறைவுபட்டதே. படைப்பு, எழுத்தாளனின் திட்டத்தை மீறி சுத்த ஞானநிலையை எட்டும்போது அந்த ஆசிர்வாதத்தையும் படைப்பாளியின் திட்டத்தில் இல்லாத மகத்துவத்தையும் எட்டுகிறது. மோகனின் நாவல் கலை தொடர்பான இந்த முடிவை வாழ்க்கைக்கும் நீட்டித்துப் பார்க்கலாம். அவரது ‘விந்தைக் கலைஞனின் கேலிச் சித்திரம்’ நாவலுக்கும் நீட்டித்துப் பார்க்கலாம். சி.மோகனின் திட்டம் அனைத்தும் வெற்றி பெற்ற நாவல் அது. படைப்பாக அது புறத்திலிருந்து வரும் ஆசிர்வாதத்தை அனுமதிக்கவில்லை. டார்வினே குரங்காக மாறிய ஐரனி அது.
லட்சியத்துக்கும் நடைமுறைக்கும் அறிவால் புலனாய்ந்து ஆட்சி செலுத்த முடியாத மாயையின் கூத்துகளுக்கும் இடைப்பட்ட உரையாடல்களும் வெற்றிகளும் சோர்வுகளும் கொண்ட படைப்பு வாழ்க்கை மோகனுடையது.
நீட்சேயின் ஜாரதுஷ்ட்ரா போல மோகனின் குகையில் மோகனுக்குப் பிரியமான உயிர்களாக கழுகும் பாம்பும் உள்ளன.
கழுகு, உயிர்களின் லட்சிய நிலையான பறத்தல் பண்பைக் கொண்டு வானில் பறக்கும் ஓர் உயிர். ஆனால் அதற்குத் தேவையான உணவான பாம்போ பூமியில் நெளிந்துகொண்டிருக்கிறது. பௌதீக ரீதியில் இரண்டுக்குமுள்ள இடைவெளி காத தூரம் என்றாலும் உயிர்ச்சங்கிலியில் ஒன்றுக்கொன்று அடுத்தடுத்த கண்ணியில் உள்ளவை.
களங்கமின்மையின் விதை களங்கமின்மையின் கனிகளை மட்டுமே ஈன வேண்டுமென்பதில்லை. வஞ்சத்தின் கனிகளையும் தரலாம். வஞ்சத்தின் விதைகளிலிருந்து களங்கமின்மையின் கனிகளும் விளையலாம்- இருட்டிற்குள் ஒளி உள்ளது போல.
போதை, காதல் போன்ற அதீத நிலைகள் தவிர சாதாரண பொழுதுகளில் மோகன் மிகுந்த அகத்தனிமையில் இருக்கக் கூடியவர். யாராவது சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தாலும் அவர் தனியாக இருப்பதை உணரமுடியும். அவரால் இரண்டு நாட்கள் வெறுமனே சாப்பாட்டுக்காக மட்டுமே எழுந்து வெளியே போய் விட்டு வந்து தொடர்ந்து உறங்கிக் கொண்டிருக்க முடியும். தன் மாயக்குறளிகளை வெளிப்பரப்புக்குள் வரவிடாமல் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு அவர் செய்யும் சடங்காக அவரது உறக்கம் இருக்கலாம்.
000
சி.மோகனைத் தேடிப் போய் அவரது இடத்தில் சந்திப்பதை கடந்த ஓரிரு ஆண்டுகளாகத் தவிர்த்து வருகிறேன். அவரது ஞாபகம் வரும்போதெல்லாம் அவருக்குப் பிரியமான பழைய தமிழ் பாடல்களைக் கேட்டு அவரது நட்பை நான் தனியாகப் புதுப்பித்துக் கொள்கிறேன். எனக்கு அதுவே போதுமானதாகவும் இருக்கிறது.
காவேரி ஓரம் கதை சொன்ன பாடல், சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர்,
காதல் சிறகை காற்றினில் விரித்து, கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும், சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ,
ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக, ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன், அன்புள்ள மான்விழியே, நெஞ்சம் மறப்பதில்லை, சொன்னது நீதானா, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து
நகுலனுக்குத் தனிமையைக் கற்றுக் கொடுத்தவர் சுசீலா. தனியாக இருக்கத் தெரியாதவன் யாரும் எழுத்தாளனாக இருக்கமுடியாது என்று சொல்லிப் போகிறாள்.
0000
எனது 20 வயதுகளில் யாரைப் போல ஆவதற்கு விருப்பம் என்று கவிஞர் மனுஷ்ய புத்திரன் என்னிடம் கேட்டார். நான் சி.மோகன் போல வாழவேண்டும் என்று அவரிடம் சொன்னேன்.
அதற்குப் பிறகு எனது உலக நோக்கும் அனுபவங்களும் சி.மோகன் என்ற ஆளுமையின் வாழ்க்கை மிகவும் சவாலும் ஆபத்துகளும் மிகுந்தது என்பதை எனக்கு உணரவைத்தது. எனது லட்சியங்களும் மாறின.
ஆனால் எனது 40 வயதில் சி.மோகன், தன் நாற்பதுகளில் தேர்ந்த தனிமைதான் என் மேலும் நிழலிட்டுள்ளதைப் பார்க்கும்போது, உனது சுத்த ஆசை இதுதானா உனது சுத்த ஆசை இதுதானா என்று என் மனக்குரளிகள் கேட்கின்றன.
அப்படியா அப்படியா என்றேன்.
ஒரு ஆசிரியர் நல்ல ஆசிரியராக இருக்கவேண்டும். அவர் நற்பண்புகள் கொண்டவராக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை.
“மாதா நாஸ்தி பிதா நாஸ்தி பந்து ஸஹோதரா
அர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத்
ஜாக்ரதா ஜாக்ரதா”
அர்தம் நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத்
ஜாக்ரதா ஜாக்ரதா”
“ஈன்று வளர்த்த அன்னையும், தந்தையும் அநித்தியம். இவையன்றி தனக்குரிமை என்றெண்ணும்பொருள்களும் அநித்தியம்.
தனக்குச் சொந்தம் என்றெண்ணும் வீடு முதலியவைகளும் அநித்தியம்.
ஆகையால் எச்சரிக்கையாய் இருங்கள்! எச்சரிக்கையாய் இருங்கள்!
இதை ஏதோ ஒரு விதத்தில் நண்பர்களுக்கு உணர்த்தியும் அதைக் கடைபிடித்தும் வருபவர் சி.மோகன்…
மோகன்… சி.மோகன்….ஐ லவ் யூ….ஐ ஹேட் யூ…ஐ லவ் யூ…
(விளக்கு விருது கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
(விளக்கு விருது கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
Comments