Skip to main content

ஆமாம், விழிப்பும் விமர்சனமும் வேறு வேறு அல்ல…

 
விஷால் ராஜாவின்தீக்கொன்றைசிறுகதையில், “சில விஷயங்களுக்கு யாரையும காரணம் சொல்ல முடியாது என்பதை அங்கே இருக்கும்போதுதான் கண்டுபிடித்தான்என்று ஒரு வாக்கியம் வருகிறது. விஷால் ராஜாவின் கண்கள் மையம் கொண்டிருக்கும் இடங்களில் ஒன்று அது.

நோய்க்கூறு, வலி, நிச்சயமின்மை ஆகியவையேதிருவருட்செல்விகதைகளின் மையம். யாரையும் காரணம் சொல்ல முடியாதவாறு, இக்கதைகளில் கலவரம் தற்செயலாக, தன்னிச்சையாக தொடங்கிப் படிப்படியாக அதிகரித்தபடியே இருக்கிறது. நம்மைச் சூழ்ந்துள்ள ஓயாத கலவரங்கள் மீதான விழிப்பு மற்றும் விமர்சனம் என்று விஷால் ராஜாவின் புனைவுலகத்தை மேலும் விவரிக்கலாம். தீர்க்கவே முடியாத கலவர முனைகளின் சந்திப்பு அது.

படைப்பு வெறும் மொழித் தோரணமாகவும், புதுமோகமாகவும், அதிகாரத்தையும் புகழையும் வெற்றியையும் அடைவதற்கான உபாயமாகவும் மாறியிருக்கும் ஒரு காலகட்டத்தில், படைப்புக்கே சம்பந்தமற்ற லட்சியங்களைக் கொண்டதாக படைப்புச் செயல் மாறியிருக்கும் ஒரு காலகட்டத்தில், நமது நிகழ்காலம் மீதான, நாம் ஒட்டுமொத்தமாக வந்து சேர்ந்திருக்கும் இடம் மற்றும் இருப்பின் மீதான கூர்மையான ஒரு விழிப்பையும் விமர்சனத்தையும் ஒரு படைப்பில் பார்க்கும்போது புதுமைப்பித்தன் நமக்கு அளித்துப்போன நவீனமானதொரு லட்சியம் முழுமையாக நீர்த்துவிடவில்லை என்ற நிறைவு ஏற்படுகிறது. அந்த விதத்தில் . மாதவன், தேவிபாரதி, லக்ஷ்மி மணிவண்ணன் ஆகியோரின் தொடர்ச்சியையும் நான் விஷாலிடம் காண்கிறேன்.நமது அன்றாடத்திலும், கொடுக்கல் வாங்கல் சார்ந்த உறவுகளிலும் மறைந்திருக்கும், நித்தியமான அபத்த ஓட்டைகளை முல்லாவின் கண் மட்டுமே தொடர்ந்து காணக்கூடியதாக இருக்கிறது. அவர் விழிப்பே அதை காட்டித் தருகிறது. 21-ம் நூற்றாண்டு எதார்த்தத்துக்கு மேலும் பொருந்துபவராக மாறியிருக்கும் காஃப்கா, தன் புனைவுகளில் உண்டாக்கிய அதீதக் காட்சிகள் யாவும் அவனது விழிப்பு உருவாக்கிக் காட்டியவையே. அசோகமித்திரனின்காலமும் ஐந்து குழந்தைகளும்கதையில் ரயிலைப் பிடிக்க ஓடும் நாயகனுக்கு எதற்காக முதுகில் கண்கள் முளைக்கின்றன? அந்த விழிப்பை தோற்றுவிப்பது எது? ஆமாம். விழிப்பும் விமர்சனமும் வேறு வேறல்ல.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளகண்ணாடித் தனிமைகுட்டிக் கதைகள், காஃப்காவின் குட்டிக் கதைகள் உயரத்தில் இருப்பவை. கவித்துவ மெய்மை நோக்கிச் சென்றிருப்பவை. விஷால் ராஜாவிடம் உருவாகியிருக்கும் உலகத்தைப் பிரதிபலிக்கும் சிற்றண்டம் அது. அதன் முதல் கதையில் இப்படி உரைக்கப்படுகிறது – “பிரச்சனையே அதுதான். யாருமே இங்கே பல வருடங்களாக இல்லை. நான் குறிப்பிடுவது அந்த பெரிய கடிகாரம் பற்றி. உள்ளே அதன் சக்கரங்களை சுழற்றிக் கொண்டிருக்கும் பிரம்மாண்டமான பாதங்களையுடைய அந்த பழைய உயிர் பற்றி.” அந்த பழைய உயிரை எப்படி வகுப்பது? குழந்தைக்குள்ளும் இருக்கும்பழையஉயிர் எப்படி இயங்குகிறது? சிறிதும் பெரிதுமாக, நுட்பமாக, ஒன்றுக்கொன்று உறவும் பகைமையும் சார்புமாக பற் சக்கரங்கள் இயங்குவதை தெய்வத்திடம் மட்டும் ஒப்படைத்துவிட முடியுமா? மாமிசம், ஆவி, ஸ்தூலம், சூட்சுமம் இவை எல்லாம் சேர்ந்தல்லவா அந்த எண் வட்டத்தட்டுக்குப் பின்னால் சடக் சடக் எனத் துடித்துக் கொண்டிருக்கின்றன? இந்தப் பற் சக்கரங்களின் ஓயாத இயக்கத்துக்கும், அதன் பின்னுள்ள சிரிப்புக்கும், துய்ப்பு துயரம் ஆகியவற்றுக்கும் விஷால் ராஜா விழிப்போடு இக்கதைகளில் செவிமடுத்திருக்கிறார்.விஷால் ராஜாவின் கதாபாத்திரங்கள் பாரம் மிகுந்தவர்கள். வேதாகமத்தின் நிழல் சுமையேறிய நவீன மாந்தர்கள். வரலாறோ அல்லது மதமோ கட்டமைத்த நினைவை சுமப்பவர்கள். தீமைக்கும் நன்மைக்கும் இடையே களங்கத்துக்கும் புனிதத்துக்கும் நடுவே இருளுக்கும் ஒளிக்குமிடையே அவர்கள் அலைகிறார்கள். இத்தொகுப்பில்நீர்வழி, “கடல், “சாட்சி, “திருவருட்செல்விஆகிய கதைகள் எனக்கு நெருக்கமானவை. குழந்தைகள் தங்கள் குழந்தைமையை ஒரு மூலையில் தக்கவைத்துக் கொண்டே பெரியவர்கள் ஆகும் கதைகள் இவை. ஆனால், அந்தக் குழந்தை இன்னும் இங்கே உயிர் தரித்திருப்பது எதார்த்தத்திலா, புனைவிலா, மாயத்திலா? அந்தத் திருப்பத்தில் நிகழும் தவிர்க்கவே முடியாத வேதனையையும் உருமாற்றத்தையும் இவை வலுவாக வெளிப்படுத்துகின்றன.

கடல்சிறுகதையில் இரண்டு சிறுவர்களுமே ஒரு திருப்பத்தை எதிர்கொள்கிறார்கள். “நீர்வழியில் அலங்கல் மலங்கலான நிலையில் ஒரு சிறுவன் கொலைக்குச் சாட்சியாகிறான். “சாட்சிகதையில் செல்வன், இமான், யோவான் என எல்லாச் சிறுவர்களும் நிர்கதியாக தங்கள் குழந்தைமையிலிருந்து ஒரு திருப்பத்தை எடுக்கின்றனர். “திருவருட்செல்வியில் அந்தச் சிறுமி மட்டும் சற்று துக்கம் குறைந்து, சற்றே இதம்படர தன் குழந்தைமையை இனிமையாக வழியனுப்புகிறாள். “அப்பப்போ வந்து போயிட்டு இருங்கடேஎன்று பூனையிடம் அவள் கனிவாக சொல்கிறார். அவள் பெண்ணாக இருப்பதாலேயே இந்த வேறுபாடு வருகிறது போல. பிற கதாபாத்திரங்களை போல வரலாறோ மதமோ அவளுக்கு சுமையாக மாறவில்லை போல.

சாட்சிகதை தஸ்தயேவெஸ்கிக்கு அளிக்கப்பட்ட திருப்பலி. யோவான், இமான் இரட்டையர்களை டிமிட்ரி, அல்யோஷாவாகவும் வாசிக்கலாம். சதைஆன்மாவுக்கான போராட்டமாக, யாருடைய துயரத்தையும் தொடக்கூட இயலாமல் ஒருகட்டத்தில் ஆகிவிட்ட பரிசுத்த ஆவியின் செயலற்றசாட்சிஇந்தச் சிறுகதை. கோயில்களோ, தேவாலயங்களோ உயரமாக இருக்கின்றன. மனிதனோ மேன்மையை அடைய முடியாமல் அதன் அழுத்தத்தில் சிறுத்துக் கொண்டே வருகிறான்.

 இத்தொகுப்பில்நிழலின் அசைவுநெடுங்கதை தனித்துவமானது. அதைசாட்சிகதையின் விரிவான நீட்சி என்று சொல்வேன். அதில் சிந்தனையும் புனைவும் இயல்பாக உரையாடி உறவுகொள்கின்றன.

ஒரு நூற்றாண்டு காலத்தில் தனிமனிதனின் வெற்றிகள் மேல் அதீதக் கற்பிதங்களும் முதலீடும் பெருகிய நிலையில், கரோனா பெருந்தொற்று வந்துமனிதன் தனி உயிர் அல்லஎன்று ஞாபகப்படுத்திவிட்டது. சாதனைகள் என நம்பப்பட்டவை மனிதனை கைவிடத் தொடங்கிவிட்டன. வளர்ச்சி என்றும் மேம்பாடு என்றும் அவன் வெட்டி வெட்டி அழித்து ஆக்கிரமித்த காடுகள் அவனைப் பழிவாங்க ஆரம்பித்திருப்பதன் தடயங்களை நாம் உயிர்க்காட்சிகளாகக் காண ஆரம்பித்திருக்கிறோம். ஒரு பழ வௌவாலும் ஈரச்சந்தையில் விற்கப்படும் மீனும், கூண்டில் அடைக்கப்பட்ட குரங்கும் வேறல்ல என்று கரோனா தான் தெரியப்படுத்தியது நமக்கு. எண்ணங்கள் ஒன்றன் மீது ஒன்று படிந்து, நினைவுகள் ஒன்றைத் தழுவியொன்று பித்தில் மேவியதுபோல, மனிதர்கள் துணிபோர்த்திய பொட்டலங்களாய் மாறிய நோயும் மரணமும் ஒன்றையொன்று தழுவிய காலத்தை ஒரு துயரப்படிமமாக மாற்றியிருக்கிறார் விஷால். ஓயாத அடுப்பாக மின் மயானங்கள் பெருநகரங்களில் புகைபோக்கி வழியாக விட்ட சமகால வாழ்க்கையின் புகைச்சித்திரம் இக்கதை. ஒவ்வொரு கதாபாத்திரமும் இன்னொன்றாகி முயங்கி மறைந்து ஒன்றாகும் நெடுங்கதை இது. தமிழில் எழுதப்பட்ட சிறந்த கதைகளில் ஒன்றான லக்ஷ்மி மணிவண்ணனின்வெள்ளைப்பல்லி விவகாரம்கதையைநிழலின் அசைவுஞாபகமூட்டியது. தமிழில் பெருந்தொற்று காலத்தின் இலக்கிய சாட்சியம் இக்கதை.

பொதுவாக எளிமையான கதைகள் வாசகர்களை எளிதில் ஏமாற்றிவிடும். எளிமையால் அவற்றின் ஆழம் தவறவிடப்படும். “கிரேஸ் இல்லம்சிறுகதை அத்தகையது என்பதால் அதை தனியே குறிப்பிட வேண்டும். தமிழ் சிறுகதைகளில் எத்தனையோ சோதனைகளும் புதுமைகளும் காணப்பட்டுவிட்ட நிலையில் எளிமையையும் சாதாரணத்துவத்தையும் ஓர் அங்கியாகப் போர்த்தி வாசகர்களை எளிதாக ஏமாற்றிவிடக்கூடிய கதைகிரேஸ் இல்லம். தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான வண்ணநிலவனின்அயோத்திசிறுகதைக்குள் இருக்கும் மர்மத்தையும் அழிவையும் அது தன்னுள் பொதிந்து வைத்துள்ளது. தோல்வியும் மரணமும் சூழந்த உணர்வை அழுத்தமாகப் பதுக்கிவைத்திருக்கிறது.

அயோத்தியில் நாயகி எல்லாவற்றையும் பேசிவிடுகிறாள். கிரேஸ் இல்லத்தில் ஜானின் மனைவியோ எதையும் பேசவில்லை. பின்கட்டில் காலி குப்பிகள் புதைந்திருப்பது போலவே கிரேஸ் இல்லத்தில் ரகசியங்களும் புதைந்திருக்கின்றன. குடிப்பழக்கத்தால் குடும்ப வீழ்ச்சியை பற்றி பேசும் டி எச் லாரன்சின்கிரிசாந்தியப் பூக்களின் நறுமணம்குறுநாவலின் இன்னொரு கிளை என்றும் சொல்லத்தக்கதுகிரேஸ் இல்லம். அதன் நாயகன் ஜான் எனக்குத் தனிப்பட்ட வகையில் நெருக்கமானவன். சுந்தர ராமசாமியின்ரத்னாபாயின் ஆங்கிலம்கதையின் நாயகனுக்கும் கிரேஸ் இல்லத்தின் நாயகனுக்கும் ஒரே பெயர் என்பது ஆச்சரியம்தான். ரத்னாபாயின் கணவன் ஜான்சன். கிரேஸ் இல்லத்தில் ஆசிரியை ஹெலனின் கணவன் பெயர் ஜான். எனக்கு அந்தரங்கமான வகையில், மர்மங்கள் நிறைந்த கிரேஸ் இல்லம் நெருக்கமான சிறுகதை.

ஜானின் மகள் வளர்ந்து பெரியவளான பிறகும், அவளுக்கும் ஒரு மகள் பிறந்த பிறகும், ஜான் தன் கோப்பைகளோடு மகிழ்ந்திருக்கட்டும்.

கதை சொல்வதில் தீவிரம், வெளிப்படையானவற்றையும் மூட்டமானவற்றையும் ஒட்டுமொத்தமாக மொழிக் குதிரையில் பூட்டும் மெனக்கெடல், கச்சிதம், உன்னிப்பு என சமகாலச் சிறுகதைகளில் அரிதாகிப் போன அம்சங்களை வளம்குன்றாமல் தக்கவைத்திருக்கிறார் விஷால். இது வாசிப்பில் நிறைவைத் தருகிறது. சாதனைகளையும் சாதனை ஆசிரியர்களையும் கண்ட தமிழ் சிறுகதை மரபில் ஒரு காத்திரமான தொகுதிதிருவருட்செல்வி.


Comments