Skip to main content

அவரும் நானும் நீயும் - நகுலன்

 

புகைப்படம் : தி. பாண்டியராஜூ

அவர் என்னைப் பார்க்க வந்திருந்தார் – வேறு யார் – மனோதான் – தயவுசெய்து ஆராய்ச்சியில் புகுந்துவிடாதீர்கள் – அவர் பெயரே அதுதான் – மனோ – மனோ – னோ னோ னோ னோ – போதும் ஐயா போதும் – என்றாலும் நானும் இதையெல்லாம் படித்தவன்தான் – தானாவது நானாவது – உன் தலை – அவர் தீவிரம் – எதிலும் என்று வைத்துக் கொள்ளுங்கள் – நானோ, னோ னோ – தீ புகைந்துவிட்டது. ஒருபிடி சாம்பலாகிவிட்டேன் – இன்னும் ஒரு பொறி கனல்கிறது – அதுவரை பொறுத்துக்கொள்ளுங்கள் – அவர் சொன்னார் – என்றுதானே – சாம்பலைக் கரைக்க சந்ததியுமில்லை – அதனால் எல்லாம் சுபம் – அவர் மேலும் தொடர்ந்தார் – ஒரு தவா திருச்சியோ அல்லது மதுரையோ என்னவோ நிச்சயமில்லை – யாரோ ஒரு பெரிய அரசியல் தலை பவனி வருவதாகப் பேச்சு – தலை வரப்போவது என்னவோ 4-மணி – 2 மணிக்கே போக்குவரத்து எல்லாம் தடை செய்யப்பட்டது – ஒரு லாரி டிரைவர் அலுத்துக்கொண்டே இன்னொருவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் அல்லது உசாவினான் “ஜடத்தை எடுத்தாகிவிட்டதா?” எனக்கு உடன் பிடிபடவில்லை. அடுத்த வினாடி பிடிபட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள் – இப்பொழுது தெரிகிறதா?” என்றார்.

எதுவாயிருந்தால் என்ன. வார்த்தைகள் இருக்கும்வரை – வார்த்தையும் வார்த்தையும் பிணைய.

நான் ஒன்றும் சொல்லவில்லை – நான்தான் சாம்பலாகி விட்டேனே. இனி கரைக்கவேண்டியதுதான் மிச்சம்.

(கனவு, 1990, ஜூன் மாதம்) (கவிஞர் ந. ஜயபாஸ்கரனின் சேகரிப்பில் இருந்து எடுக்கப்பட்ட கதை இது)

Comments