நாவல்
பற்றிய பி.கே.பாலகிருஷ்ணனின்
முழு சிந்தனைகளும் தமிழில் கிடைக்கத்தான் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கிறதே தவிர,
அவர் இந்த நூலை எழுதிய
மூன்று ஆண்டுகளிலேயே தமிழ் சூழலில் நாவல் பற்றிய விவாதம் தொடங்குவதற்குக் காரணமாகிவிட்டார். 1968-ல் நகுலன் ஆசிரியராக
இருந்து வெளியிட்ட “குருக்ஷேத்திரம் – ஓர் இலக்கியத் தொகுப்பு” நூலில்
பி. கே. பாலகிருஷ்ணனின் “நல்ல
நாவலும் மகத்தான நாவலும்” என்ற கட்டுரை, நீல.
பத்மநாபனின் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது.
அந்த
அடிப்படையில் பி. கே. பாலகிருஷ்ணன்
துவக்கி வைத்த நாவல் குறித்த உரையாடலின் தொடர்ச்சியையும் தாக்கத்தையும் சுந்தர ராமசாமி, சி. மோகன், ஜெயமோகன்
ஆகியோர் ஓரளவு பரந்த அளவில் விவாதமாக ஆக்கியுள்ளனர். நவீன நாவல்களைத் தாண்டி,
செவ்வியல், பின்நவீனத்துவ வடிவிலும் சிறந்த படைப்புகள் தமிழில் கடந்த கால் நூற்றாண்டில் வெளியாகியிருக்கின்றன.
நாவல் பற்றிய விவாதங்களும் இந்தச் சாதனைக்கு நிச்சயம் உரமூட்டியிருக்க வேண்டும்.
1965-ல்
மலையாளத்தில் எழுதி, ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும்
“நாவலெனும் கலைநிகழ்வு”
(மலையாளத்தில் நாவல் – சித்தியும் சாதனையும்) புத்தகத்தைப் படித்து முடித்தபோது, நாவல் என்பது
கவிதை மற்றும் சிறுகதையைவிட சற்றே கூடுதலான உழைப்பையும் காலத்தையும் கோரும் கதை வடிவம் மட்டுமல்ல
என்ற ஓர்மை மீண்டும் பலப்படுகிறது. வாசகன் சற்றே வெளியில் இருந்து கேட்கும் விவரணை வடிவமாக கவிதையும் சிறுகதையும் உள்ளன; நாவல் மட்டுமே வாசகனை பிரிதொன்றாக உணராமல் ஆழ்த்தும் தனித்த முழுமையான நிகழ்த்துகலை மொழி வடிவம் என்பதை,
சிந்தனைகள் வழியாக தொடர்ந்து இழை இழையாகப் பிரித்துப்
பிரித்து பி. கே. பாலகிருஷ்ணன்
இந்நூலில் உணர்த்திவிடுகிறார்.
சிம்ஃபனி
எப்படி ஒரு தனித்த இசைவடிவமோ
நாவல் அப்படி ஒரு தனித்த மொழிவடிவம்
என்கிறார் மிலன் குந்தேரா. நாவல் கலை சார்ந்து பிரக்ஞையுடன்
எழுதிய சில இலக்கிய ஆசிரியர்களில்
ஒருவரான சுந்தர ராமசாமி, நாவல் என்பது அடிப்படையாக “கண் தலை தெரியாத” ஒரு
அலைச்சலைக் கேட்டு நிற்கும் உருவமாகும் என்கிறார். நாவலாசிரியனுக்கு இலக்கு தெரியாது; திசை தெரியும் என்றும்
வலியுறுத்திப் போகிறார்.
நாம்
இதுவரை அறிந்திராத நமது இருப்பிற்கான மாறுபட்ட
சாத்தியங்களை நாவல் தனக்கேயுரிய ஞானத்தின் பாதைகளில் சென்று கண்டடைகிறது என்கிறார் சி. மோகன். நாவலாசிரியன்
ஒரு புனைவாளன் மட்டுமல்ல. அவன் தன்னளவில் ஒரு
தத்துவவாதி, சிந்தனையாளன், கண்டுபிடிப்பாளன் என்று எல்லையை விஸ்தரிக்கிறார். தஸ்தயெவ்ஸ்கியின் நாவல்களை சி. மோகன் “சூரியனின்
முகம்படாத ஊற்றுகள்” என்று வரையறுப்பதை இத்துடன் சேர்த்துக் காணலாம். நாவலுக்கும் காவியத்துக்குமுள்ள லட்சண ஒற்றுமைகளைக் கொண்டு செவ்வியல் நாவலின் குணத்தையும் வடிவத்தையும் விவரித்துள்ளார் ஜெயமோகன்.
நாவல்
என்பது பெரிய கதை அல்ல; நாவல்
என்பது வெறும் குடும்ப, தனிமனித, சமூக வரலாறு அல்ல;
நாவல் என்பது கருத்து, சிந்தனைகளின் மாலை அல்ல என்ற
உணர்வு தமிழில் உருவானதற்கு பின்னாலிருந்தவர்கள் இவர்கள். மலையாளத்தில் நாவல் பிரக்ஞை ஏற்பட வேண்டுமென்ற உத்தேசத்துடனே இந்த
நூலை ஆசிரியர் எழுதியிருக்கிறார். பஷீரைத் தவிர மற்ற நாவலாசிரியர்களைக்
கேலி செய்கிறார். ஆனால் தமிழிலும் அதே விளைவு உண்டானதிலும்
அவருக்கு பங்கு இருக்கிறது.
இந்த
நூலில் பேசப்பட்டிருக்கும் தாராசங்கர் பானர்ஜியின் “ஆரோக்கிய நிகேதனம்” பற்றி சுந்தர ராமசாமி ஒருமுறை நேர்ப்பேச்சில் இப்படிச் சொன்னார். “மருத்துவர் ஜீவன் மஷாய் தன் துறையில் ஆழம்கண்ட
ஒரு நிபுணர் என்பதை உணரும்படி நாவலில் தரவுகள் உள்ளன; ஆனால் நாவலாசிரியனான தாராசங்கர் பானர்ஜிக்கு எவ்வளவு மருத்துவ அறிவு என்ற வியப்பு நமக்கு
ஏற்படுவதில்லை. அதுதான் நாவலாசிரியனின் வெற்றி”.
தொழில், வரலாறு, சமூகம், காலம் எனப் பெரிய களன்களை
நாவல் ஆட்கொள்வதால் நாவலசாசிரியனுக்கு அது கூடுதல் சபலப்பொறியாகவும்
உள்ளது. வரலாற்று புனைவில் துறைசார்ந்த அதீத புலமையை, தேவையை
மீறித் துருத்திக் காட்டுகிற சமகால தமிழ் நாவல்கள் ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. “பிறகு”,
“வெக்கை” போன்ற
அபூர்வமான நாவல்களை எழுதிய பூமணியின், “அஞ்ஞாடி” யில் வரலாற்றைச் சொல்லும்
பொறியில் சிக்கி, அபூர்வமான நாவலின் அனுபவத்தை பணையம் வைத்துவிட்டதாகவே வாசிப்பிலிருந்து கருதுகிறேன்.
1980-களில்
இறுதியில் சில இதழ்கள் மட்டுமே
வெளிவந்து நின்றுபோன “புதுயுகம் பிறக்கிறது”
இதழில் சி. மோகன் நாவல்
பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
தமிழில் நாவல் முயற்சிகளே இருக்கின்றன; முழுமையான நாவல்கள் மிகக்குறைவே என்று அதில் குறிப்பிடுவதோடு ப.சிங்காரத்தின் “புயலில்
ஒரு தோணி”,
தி. ஜானகிராமனின் “மோகமுள்” ஆகியவற்றை பூரணமான நாவல்கள் என அடையாளப்படுத்துகிறார். சுந்தர ராமசாமியின்
நாவல்களை, நாவல் பிரக்ஞையைக் கொண்ட சிறந்த முயற்சிகள் என்றும் குறிப்பிடுகிறார். தமிழில் “ஜே. ஜே. சில
குறிப்புகள்”, “ஒரு
புளிய மரத்தின் கதை” இவற்றைத் தவிர
நாவல்களே இல்லை என்ற சர்ச்சைக்குரிய கருத்தைச்
சொல்லி, பின்னர் நாவல் குறித்த தனது வரையறையை “நாவல்
– கோட்பாடு” நூல்
வழியாக ஜெயமோகன் உருவாக்கினார். இந்த உரையாடல்கள் எல்லாவற்றையும்
பி.கே.பாலகிருஷ்ணனோடும் நம்மால்
இணைத்து யோசிக்க முடிகிறது.
000
பி.கே.பாலகிருஷ்ணனின் இந்த
நூல், அருகில் உட்கார்ந்திருக்கும் ஒரு சஹிருதயனிடம் பேசும்
உரையாடல் தன்மை கொண்டது. அந்த அடிப்படையில் சுந்தர
ராமசாமியை ஞாபகப்படுத்துவது. தனது வாழ்க்கையின் கடைசி
ஆண்டில் நாவல் கலை பற்றி சுந்தர
ராமசாமி பேசியிருக்கிறார். ”நாவல் படைப்பு சார்ந்து எந்த நிச்சய விதிகளையோ
அல்லது வாய்ப்பாடுகளையோ உருவாக்க முடியாது” என்று சொல்லி அந்தக் கட்டுரையை இப்படி முடிக்கிறார். ”நாவல் கலையை நாவலுக்கு வெளியே கற்றுக்கொள்வதும், நீச்சலைக் கற்றுக்கொள்ள கரையை நம்பிக்கொண்டிருப்பதும் ஒரே நிலைதான்”.
சுந்தர
ராமசாமியால் கடைசி வரை நாவல் சார்ந்து
எந்த வரையறையினையும் எட்டவே முடியவில்லை. விமர்சனக் கட்டுரை எழுதும்போது விவரனை மற்றும் உருவகங்களின் சுழலுக்குள் அவர் சிக்கி கொள்வதுண்டு.
அதனால் கருத்துக்களை, கண்டுபிடிப்புகளை முன்வைப்பதில் அவரிடம் போதாமையும் உருவாகியிருந்தது. தஸ்தாயெஸ்கி பற்றிய அவர் கட்டுரையே எனக்கு
அப்படிதான் பொருள்பட்டிருக்கிறது. ஆனால் பி.கே.பாலகிருஷ்ணன்
தன்னிச்சையான கண்டுபிடிப்புகள் வழியே ஒரு பாதையை சாத்தியமாக்குகிறார்.
தான் விவாதிக்கும் நாவல்களைப் பற்றிப் பேசும்போது அந்தப் படைப்பை ரசிக்கும் சார்பிலிருந்து மேலே தவ்வி, புனைவாசிரியனுக்கு
இணையான அவதானிப்புகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்.
“நாவல்
என்றால் என்ன?” என்பதை வரையறுக்கும் உத்தேசம் பி.கே.பாலகிருஷ்ணனுக்கு
இல்லை என்று தோன்றும் வண்ணமே மொத்த நூலும் இருக்கிறது. தலைசிறந்த
நாவல்களின் குணங்களை அகழ்ந்து அகழ்ந்து பேசுகிறார். விமர்சகனிடம் பொதுவாக உணரும் உலர்ந்த உணர்வு இல்லை. புனைவாசிரியனின்
ஈரம், படைப்புக் களியுடன் தனது தர்க்கங்களை நெருக்கமான
உரையாடலாய் பகிர்கிறார். தாராசங்கர் பானர்ஜியையும் ஜேன் ஆஸ்டனையும் தஸ்தயெவ்ஸ்கியையும்
விரிவாக விவாதிக்கும்போது நாவல் வடிவம் சார்ந்த ஒரு வரையறையும் நமக்கு
படிப்படியாகத் துலங்கிவிடுகிறது.
தஸ்தயெவ்ஸ்கியை
படைப்பு என்னும் பிரமாண்ட ஆலயத்தில் வீற்றிருக்கும் பிரம்மராட்சஸ உரு என்றும், ஜேன்
ஆஸ்டனை கோயில் வளாகத்தில் கொட்டப்பட்டிருக்கும் மணலில் விளையாடும் குழந்தையென்றும் வர்ணிக்கிறார். குற்றம் என்ற இரை கிடைக்கும்வரை
தஸ்தயெவ்ஸ்கி சாதாரண படைப்பாளியாகவே இருந்தார் என்றும் குற்றம் என்ற உள்ளடக்கம் கிடைத்ததும்
எப்படி பெரும் நாவலாசிரியனாக தலையைக் கம்பீரமாக வானைநோக்கி உயர்த்தி தஸ்தயெவ்ஸ்கி, சிங்கமாக கர்ஜிக்கத் தொடங்கினார் என்று சொல்லும்போது இவன் புனைவுக் கலைஞனின்
சாகசம் கொண்ட விமர்சகன் என்ற உவகை ஏற்படுகிறது.
ஆரோக்கிய
நிகேதனத்தை முன்வைத்து நாவலில் காலமாற்றம் எப்படி வாசகனில் நிகழ்த்தப்படுகிறது என்பதைச் சொல்லும்போது, மாற்றத்தின் பிரதானமான வெளிப்பாடு சலனம்தான் என்கிறார். பி. கே. பாலகிருஷ்ணன்
ஆரோக்கிய நிகேதனம் தவிர, பரிசீலனைக்கு எடுக்கப்பட்டிருக்கும் பிற நாவல்கள்,
சென்ற நூற்றாண்டில் உருவான பிரமாண்ட கலைவடிவமான சினிமா சமூகத்தில் தன் செல்வாக்கை செலுத்துவதற்கு
முன்னால் எழுதப்பட்டவை.
ஆரோக்கிய
நிகேதனம் குறித்துப் பேசும்போது நாவலாசிரியனுக்கு விவரணைகள் அதிகம் பயனளிப்பதில்லை என்றும், தாராசங்கர் பானர்ஜி நேர்க்காட்சிகள் வழியாகவே நாவலைப் பெரும்பாலும் நகர்த்துகிறார் என்றும் கூறி, இந்த வகையான கதைகூறலை
சினிமா வந்த பிறகே நாவலாசிரியர்களால்
நிகழ்த்திப் பார்க்க முடிந்திருக்கிறது என்ற குறிப்பையும் முன்வைக்கிறார். தாராசங்கர்
பானர்ஜியின் “ஆரோக்கிய நிகேதனம்” நாவலின் உள்ளடக்கத்துக்கே இணைசொல்லக்கூடிய சினிமாப் படைப்பு அகிரா குரசோவாவின் “ரெட் பியர்ட்”. தனிப்பட்ட முறையில், காப்ரியல் கார்சிய மார்க்வெஸை நான் சினிமாவின் கதை
சொல்லல் முறையால் தாக்கமுற்ற ஆசிரியராகவே பார்க்கிறேன். “முன் கூறப்பட்ட சாவின்
சரிதம்”, “காலரா
காலத்துக் காதல்” போன்ற நாவல்கள் ஞாபகம் வருகின்றன.
நாவலின்
பேசுபொருள், வடிவம், தொழில்நுட்பம், மறைபிரதி, நாவலாசிரியனின் மேதைமை, சமயம் சார்ந்த கலைமனம், சிந்தனைக்கும் கலைக்கும் இடையிலான உறவு என அகமும்
புறமுமாகப் பிரித்துப் பிரித்து பேசினாலும் இந்த நூலின் கடைசியில்
நாமும், சுந்தர ராமசாமியைப் போலவே, உணர்கிறோம். நாவலுக்கு பின்னால் கண்ணுக்குப் புலப்படாத பற்சக்கரங்கள் இயங்குகின்றன என்பதையே அறிகிறோம். அதையே பி. கே. பாலகிருஷ்ணனும்
சுட்டி உணர்த்துவதாக போலத் தோன்றுகிறது. இங்கே வாழ்க்கையில் நிகழ்வது அதற்கு மேலும் அங்கேயும் நிகழ்கிறது; ஆனால் எப்படி அது நிகழ்கிறது?
– இந்த வினோதம் தீரவில்லை அவருக்கு. நாவல் தன்னகத்தே கொண்டிருக்கும் மேதைமையை விசாரித்து தர்க்கம் செய்து இறுதியில் நாவல் கலை அனுபவமென்னும் அடர்ந்த
நிசப்தத்துக்குள், சொல்லொண்ணாத திகைப்புக்குள் வாசகனையும் மூழ்கடித்துவிடுகிறார்
பாலகிருஷ்ணன்.
“காலம்”, “இரண்டாம்
இடம்”
போன்ற பிரமாண்ட நாவல்களை எழுதிய எம்.டி.வாசுதேவன்
நாயரின் மிகச் சிறிய படைப்பான “மஞ்சு” ஏன் நாவல் என்ற
உணர்வை ஏற்படுத்துகிறது? மாய எதார்த்தவாத இலக்கியத்தின்
தாய் என்று கருதப்படும் யுவான் ரூல்போவின் “பெட்ரோ ப்ரோமோ” நாவலை எப்படி வரையறுப்பது? கல்பற்றா நாராயணின்
“சுமித்ரா” நாவலை
எப்படி வகைப்படுத்துவது? சிறுவயதிலிருந்தே லௌகீகத்துடன் ஒட்டாத, அந்த உலகத்தின் குறைந்தபட்ச
வெற்றியைக்கூட பயின்று சாதித்துவிட முடியாமல் அனாதையாக ஒரு கோயில் வாசலில்
இறந்துபோகும் கணேசனின் கதையைக் கூறும் காசியபனின் “அசடு” நாவலை எங்கே வைத்துப் பார்ப்பது? ஜெயமோகன் “குழந்தைகளைப் பறிகொடுத்த தாய்மார்களின் மனத்தை அரிக்கும் பெரும் ஓலம்“ என்று குறிப்பிடுகிற தன் “இனி நான்
உறங்கட்டும்” நாவலை,
பி.கே. பாலகிருஷணன் எப்படி
அணுகுவார்?
“மனித
இருப்பின் புதிரான ஒரு பகுதி மீது
வெளிச்சமிட்டு விசாரிப்பது நாவல் கலையின் முக்கியமான பண்பு” என்கிற மிலன் குந்தேராவின் கருத்து தனிப்பட்ட முறையில் எனக்கு பல நாவல்களைத் திறக்கப்
பயன்பட்டிருக்கிறது. எம்.வி.வெங்கட்ராமின்
“காதுகள்” நாவலில்
மனம், உடல் என்ற பிரிக்க
இயலாத வெளியில் வாதைகள் மகாலிங்கத்தை யுத்தம் போல பல ஆண்டுகள்
படுத்தியெடுக்கிறது. “இடைவெளி” நாவலில் சம்பத்துக்கு மரணம் தொடர்பாக ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்துவிட
வேண்டுமென்ற உத்வேகமும் அதேபோன்றதுதான். நகுலனின் “வாக்குமூலம்”
நாவலின் நாயகன் ராஜசேகரன், தான் சாவதற்குத் தேர்ந்தெடுக்க
முயலும் வழி பொதுவில் விசித்திரமானதே.
000
புத்தகத்தின்
முதல் பகுதியில் தாராசங்கர் பானர்ஜியின் “ஆரோக்கிய நிகேதனம்” பற்றிய பாலகிருஷ்ணனின் அனுபவத்தை “கால விழுமிய மாற்றங்களில்
மகத்துவத்தை நோக்கிய எத்தனம்” என்று சுருக்கிச் சொல்லாம். ஜேன் ஆஸ்டனின் நாவல்களை
அனுபவ விலக்கம் வழியிலான “முரண்நகை” என்று வரையறுக்க முயல்கிறார். தஸ்தயெவ்ஸ்கியின் நாவல்களை விரிவாக விவாதிக்கும் மூன்றாவது பகுதியை “அன்றாட வாழ்க்கையும் சிந்தனைகளும் உக்கிரமாக மோதும் உலைக்களம்” என்பதாக விவாதிக்கிறார்.
ஆரோக்கிய
நிகேதனம் பற்றி பி கே பாலகிருஷ்ணன்
பேசும்போது இந்திய நாவல் என்ற தனித்த உருவம்
காலப்போக்கில் உருவாகியிருப்பதை அவதானிக்க இயல்கிறது.
க. நா. சுவின் “வாழ்ந்தவர்
கெட்டால்” குறிப்பிடத்தகுந்த
நாவல்களில் ஒன்று. நமக்கு அறிமுகமான சிறந்த இந்திய நாவல்களில் நிறையவற்றை “மாறும் காலங்களின் விழுமியங்களின் பின்னணியில் வாழ்ந்தவர் கெட்டால்” என்ற வரையறைக்குள்ளேயே கொண்டுவந்துவிடலாம்.
மலையாளத்தில் “மீஸான் கற்கள்”
(புனத்தில் குஞ்ஞப்துல்லா), “கஸாக்கின் இதிகாசம்”
(ஓ.வி.விஜயன்) ஆகிய
நாவல்களும் இந்த வகைப்பட்டவையே. காலம்
மற்றும் விழுமிய மாற்றத்தில் வாழ்க்கை என்னவாகிறது என்பதை விசாரிக்கும் நாவல்களாகவே தோப்பில் முகம்மது மீரானின் நாவல்களும் இருக்கின்றன. “ஓரு புளிய மரத்தின்
கதை” நாவலும் அத்தகையதே.
ப.சிங்காரம், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், தி.ஜா ஆகியோரின்
நாவல்களில் வாழ்க்கைக்கும் லட்சியத்துக்குமான உறவையும் கரிச்சான் குஞ்சு, கிருத்திக்கா ஆகியோரின் நாவல்களில் விமர்சனத்தின் இழையிலேயே கட்டப்பட்ட வாழ்நிலையையும், ஜெயமோகன், பா.வெங்கடேசன் போன்றோரின்
நாவல்களில் வாழ்க்கைக்கும் கருத்துநிலைக்குமான உறவையும் நம்மால் பார்க்க இயல்கிறது. பிற்கால நாவல்கள் கருத்துப் பரப்பை பிரமாண்டமாக
நிகழ்த்திப் பார்த்திருக்கின்றன. பி.கே.பாலகிருஷ்ணனின்
பார்வைக் கோணத்தை வைத்து தமிழ் நாவல்களின் பாதையினையும் நாம் வரைந்து பார்க்கலாம்.
000
நல்ல
கலைப்படைப்பு நம்மை ஈர்ப்பதற்கு அதன் மறைபிரதிதான் காரணம்
என்கிறார் பாலகிருஷ்ணன். மறைபிரதி என்றால் என்னவென்பதை குத்துமதிப்பாக “என்றென்றைக்குமான விளங்கிக்கொள்ளாமை” என்று
அர்த்தப்படுத்துகிறார்.
சிற்பமோ, ஓவியமோ, கவிதையோ, சிறுகதையோ, சினிமா படைப்போ, நாவலோ ஒரு வாசிப்பில் தன்னை
முழுக்க வெளிப்படுத்திவிடுவதில்லை. ஆனால் அது தொடர்ந்து நம்மை
ஈர்த்துக்கொண்டே இருப்பதன் வழியாக தனது மறைபிரதியை கொஞ்சம்போலக்
காண்பித்துக் கொண்டிருக்கிறது.
இப்படி
மறைபிரதியைப் பற்றிப் பேசுவதுபோலவே நாவலாசிரியனின் மேதமை என்ற விஷயமும் நமக்குச்
சில தெளிவுகளைத் தருகிறது. நாவலாசிரியனுக்கு எத்தனை கதைத்தொழில்நுட்பப் பயிற்சி இருந்தாலும் இயல்பான மேதமை அவசியம் என்கிறார். உள்ளார்ந்த, இயற்கையாக அமையப்பெற்றது மேதமை என்பதில் ஆசிரியர் பாலகிருஷ்ணன் தீவிரமாகவே உள்ளார். மேதமைதான் ஒரு நாவல் படைப்புக்கு
பல அர்த்தங்களையும் மறைபிரதிகளையும் வழங்குகிறதென்கிறார். தனக்குக் கிடைத்திருக்கும் கொடைகளையும் தனது வரம்புகளையும் தெரிந்துகொள்வது
மேதமையின் ஒரு பகுதி என்கிறார்.
வான்கோவின்
தடித்த தீற்றல்களைக் கண்டு ஒவ்வாமையுடன் அவரது சக ஓவியர் காகின்,
“நீ ஓவியம் வரைகிறாயா? சிற்பம் செய்கிறாயா?” என்று கடிந்திருக்கிறார். பரந்த அறிவும் வாசிப்பனுபவமும் உள்ள தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள்
மேல் தல்ஸ்தோய்க்கு குறைவான மரியாதையே இருந்துள்ளது. வான்கோவும் தஸ்தயெவ்ஸ்கியும் இன்று நிறுவப்பட்ட மேதைகள். அத்துடன் நாவல் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக எழுத்து என்பதே சுய அனுபவம் மற்றும்
சுய மேதமையால் மட்டுமே சாதிக்க முடிகிற கலை என்றும் கூறுகிறார்.
இசை, சிற்பம் ஆகியவற்றை படிப்படியாக கற்று மேலேற வாய்ப்புகள் உண்டு என்றும், இலக்கியத்தைப் பொருத்தவரை மொழிப்பயிற்சியும், தொழில்நுட்பமும் ஓரளவு வரைதான் உதவுவதாக நிறுவுகிறார். நாவல் கலை குறித்து நீள
அகலமாக பாலகிருஷ்ணன் பேசினாலும் படைப்பு மேதமை குறித்துப் பேசும்போது அது ரகசியப்படுத்தலாகவே (mystification) இயல்பாக ஆகிவிடுகிறது.
அழகியல்
உணர்வு, விமர்சன உணர்வு, நீதி உணர்வு இந்த
மூன்றுமே வெளியிலிருந்து செலுத்த முடியாதவை என்பதே எனது தரப்பாகவும் உள்ளது.
இயல்பில் உள்ளார்ந்து இருப்பதைச் செம்மைப்படுத்தவும் புடம்போட முடியலாம்.
நாவலில்
கால உணர்வு பற்றி பேசும் பகுதி சுவாரசியமானது. கரமசோவ் சகோதரர்கள் கதையில் ஃபாதர் ஸோசிமாவின் பாத்திரத்தை பிரதான பாத்திரங்களுடைய கதைகளின் நடுவில் நுழைத்ததன் வாயிலாக தஸ்தயெவ்ஸ்கி கால உணர்வை சாதித்ததை
நமக்குப் புலப்படுத்துகிறார்.
இந்தப்
புத்தகத்தைப் பொருத்தவரை இந்திய ஆசிரியர் தாராசங்கர் பானர்ஜியின் வாழ்க்கைக் குறிப்புகள் கிட்டத்தட்ட இல்லவே இல்லை. ஆனால் ஜேன் ஆஸ்டன் மற்றும்
தஸ்தயெவ்ஸ்கி வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து அவர்களது நாவல் படைப்பாக்கத்துக்குள்ள தொடர்பு, தொடர்பின்மையைக் காட்டுவதற்கு தாராளமாக குறிப்புகளைத் தந்துள்ளார். தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புலகைப் பாதித்த அவரது சைபீரிய சிறை அனுபவம் அவரில்
குற்றம் குறித்த, குற்றவாளிகள் குறித்த கரிசனையை எப்படி ஏற்படுத்தியது என்பதை விவரிக்கிறார். கடவுளின் இருப்பு மீதான அவரது அக்கறை குறித்துப் பேசும்போது அவருக்கு அவ்வப்போது தற்காலிக மரணங்களை அளித்த வலிப்பு நோயைப் பற்றியும் அதன் வழியாக அவர்
எப்படி மரணத்தைத் தொட்டார் என்றும் விளக்குகிறார். ஜேன் ஆஸ்டனின் தனிவாழ்க்கையில்
குழந்தைகள், பணியாளர்கள் அதிகம்; ஆனால் அவர் படைப்புகளில் குழந்தைகளோ
பணியாளர்களோ இல்லவே இல்லை என்கிறார்.
இவை
எல்லாம் வெறும் தரவுகளாக இல்லாமல் படைப்புகளை ஒளிவிடச் செய்யும் சாதனங்களாகின்றன. மேலும் வாழ்க்கை மீதான மனிதர்கள் மீதான பாலகிருஷ்ணனின் ஆழமான பிடிமானமும் இதில் புலப்படுகிறது. ஜேன் ஆஸ்டனின் நாவல்களைப்
பற்றி பி. கே. பாலகிருஷ்ணன்
பேசும்போது திருமணத்தையும் காதல் உறவையும் முற்றிலும் தவிர்த்து வாழ்ந்த அவருடைய வாழ்க்கையைப் பற்றி விவரிக்கிறார். அப்படி இருந்தபோதிலும் திருமணாமாகாத, காதல் உறவு இல்லாத பெண்களிடம்
ஏற்பட்டுவிடும் கசப்பு கொஞ்சம் கூட இல்லாத படைப்புகளை
ஜேன் ஆஸ்டன் படைத்திருக்கிறார் என்கிறார். அத்துடன் பெண்கள் பற்றிய தனது பார்வைகளையும் பொதுவே
வைக்கிறார். அந்தக் குறிப்புகள் இன்றைய காலத்தில் பெண் வெறுப்பாகத் தோன்றிவிடக்
கூடியவை. ஆனால் பரிசீலிக்கப் பொருத்தப்பாடுடையவையே.
இந்த
நூலின் மேதமை மிகுந்த பகுதி என்றால் தஸ்தயெவ்ஸ்கியைப் பற்றி உரையாடும் அத்தியாயங்கள்தான். தஸ்தயெவ்ஸ்கியின் நான்கு முக்கியப் படைப்புகளுக்குள் பயணம் செய்யும் வாசகரை ஆர்க்டிக் பனிப்பிரதேசத்தில் பயணிக்கும் பயணியுடன் ஒப்பிடுகிறார். “மரணம் என்ற கடுங்குளிரும், அழிவற்ற
தன்மை என்ற வெண்மையும் சூடி,
அங்கே இங்கே என எல்லா இடத்திலும்
முடிவே இல்லாமல் நிறைந்திருக்கும் அந்த வெண்பனிப்பரப்பு அஞ்ச
வைக்கக்கூடியது. ஆர்க்டிக் பனிப்பிரதேசம் இந்த உலகத்தின் ஒரு
பகுதிதான். ஆனால் அது யக்ஷிகளின், கந்தர்வர்களின்
உலகமும்கூட.”
பனிப்பாளத்தில்
கால்வைத்து மூழ்கிவிடும் நீங்கள் மரணத்தில் எங்கெங்கும் வாழ்வீர்கள் என்று தஸ்தயெவ்ஸ்கியின் வாசகனுக்கு பாலகிருஷ்ணன் உரைக்கிறார். பாலகிருஷ்ணன் சாபம் விடுகிறாரா? வாழ்த்துகிறாரா? தஸ்தயெவ்ஸ்கியின் உலகத்துடன் சிறிய பரிச்சயமிருப்பவனுக்குக் கூட இது பயங்கர
வசீகரமுள்ள அழைப்பு என்று புரிந்துவிடும். அத்தனை தீமை சுரக்கும் மனத்திலேயே
நன்மை புதைந்திருப்பதை வேறு எப்படி விவரிக்க
இயலும்? இரக்கமும்
வன்மமும் கொலையும் காதலும் உக்கிரமாக மோதும் களத்தை வேறு எப்படி உருவாக்க
முடியும்?
வாழ்க்கை
முழுக்க வறுமையின் நிழலிலேயே வசித்த தஸ்தயெவ்ஸ்கின் ஆதாரமான படைப்புப் பரிசீலனையில் வறுமைக்கு இடமில்லை என்று ஒரு கண்டுபிடிப்பையும் சொல்கிறார் பாலகிருஷ்ணன்.
தஸ்தவெய்ஸ்கியின் மனம், சமயம் சார்ந்த மனம் என்றும் தஸ்தயெவ்ஸ்கியின்
சிறந்த நாவல்களை வேதாகமத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கமுடியும்
என்றும் குறிப்பிடுகிறார். அனுபவங்களை ஒட்டுமொத்தங்களாக அணுகுவதுதான் சமயம் சார்ந்த அணுகுமுறை என்பது அவருடைய அவதானிப்பு. அதனாலேயே அடிப்படை கேள்விகளிலும் உருவகங்களிலும், தஸ்தயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள் உழல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
பொருளற்றது
என்று புறக்கணிக்க இயலாத தன்மையும் அசரீரி போன்ற இயல்பும் சமயத்தன்மை கொண்ட கலைஞர்களிடம் இருக்கிறது. இங்குதான் தஸ்தயெவ்ஸ்கியினுடைய மேதமையின் இயல்பு அதன் எல்லையை மீறுகிறது.
அன்றாட வாழ்க்கைக்கு அப்பாலிருக்கும் தூய கருத்துருவங்களை எதார்த்தவாத
சட்டகத்தில் நம்பகத்தன்மையுடன் நிறுவியதுதான் சவால் என்று முடிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் மதத்தன்மை என்றே இதை மொழிபெயர்த்திருக்கிறார். Religious என்பதை மதத்தன்மை என்று மொழிபெயர்க்கும்போது சம்பிரதாய மதநம்பிக்கை சார்ந்த அர்த்தமாகவும், சமயத்தன்மை என்று மொழிபெயர்க்கும்போது ஆசிரியர் உத்தேசிக்கும் அர்த்தத்திலும் வந்துவிடுவதாக கருதுவதால் நான் சமயத்தன்மை என்றே
குறிப்பிடுகிறேன்.
000
சுந்தர
ராமசாமிக்கு கையில் வந்த நரம்புப் பிரச்சினை
காரணமாக நீளமான படைப்புகளை எழுத முடியாமல் போன
நிலையில், தனது இறுதி நாவலான
“குழந்தைகள் பெண்கள் ஆண்கள்” நூலை முழுமையாக உதவியாளரிடம்
சொல்லிச் சொல்லியே தட்டச்சு செய்ய வைத்தார். மிகப்பெரிய மேஜையின் கீழே சௌகரியமாகப் படுத்துக்கொண்டு,
விமானத்தில் உறங்குவதற்குப் பயன்படுத்தும் கருப்புத் துணியால் கண்ணை மூடி அன்றன்றைக்கான பகுதியை,
வாயால் சொல்வார். ஒரு சடங்கு போல
தினசரி இது நடக்கும். அதை
நான் ஆர்வமாய் கவனித்திருக்கிறேன்.
கண்ணை
மூடிய இருட்டிலிருந்தே அவர், தனது சிறந்த நாவல்
என்று நினைத்த “குழந்தைகள் பெண்கள் ஆண்கள்”-இன் கதாபாத்திரங்களைப் பிரசவித்தார். பி.
கே. பாலகிருஷ்ணன் இந்த நூலில் சொல்வதைப்
போலவே எல்லாருக்கும்தான் அனுபவக்களன் செழுமையாக உள்ளது. ஆனால், அதுகுறித்த அறிதலும் விசாரமும்தான் ஒரு மேதையை உண்டாக்குகிறது.
அந்த அறிதலும் விசாரமும், கைவிளக்கெனும் கருத்தின், திட்டத்தின், நோக்கத்தின் ஒளியில் கூடுவதல்ல; கைவிளக்கைத் தொலைத்துவிட்டு மரண பயங்கரமும் ஈர்க்கும்
வசீகரமும் கொண்ட இருட்டுக்குள் உலவும் நிர்க்கதியானவனின் நம்பிக்கையில் கூடுவது.
சுந்தர
ராமசாமியின் லச்சமும், தங்கமும் அந்த இருட்டிலிருந்துதான் இறங்கி வந்திருப்பார்கள்.
சிறுவன் பாலு அந்த இருட்டிலிருந்துதான்
கோட்டயத்தில் பெய்யும் மழையில் அப்பாவின் கட்டுப்பாட்டிலிருந்து தற்காலிகமாக மறைந்து குதியாட்டம் போடுகிறான். குழந்தைக்குள் உள்ளார்ந்திருக்கும் அராஜகம் வெளிப்படும் ஆனந்தமும் பாலுவும் பங்குகொள்ளும் ஊட்டுப்புரை விருந்து நிகழ்வு அந்த இருட்டிலிருந்துதான் அவருக்குக் கிடைத்திருக்க
வேண்டும்.
(நன்றி : அகழ்
இணைய இதழ்)
Comments