அரச சபை ஊழியன் சொன்னான்.
“மன்னா, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக் கிடக்கிறது.
“புதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு, பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள் போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் இருக்கும் மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில்.”
அதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து துறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார்.
துறவியின் முன்னால் தாழ்பணிந்து வணங்கி, “பிரபுவே, சாலையில் கடவுளின் தோத்திரங்களைப் பாடுவதற்காகவா வானத்தைத் துளைத்து நிற்கும் பொன்னால் வேயப்பட்ட ராஜகோபும் கொண்ட இறைவனின் பிரமாண்ட இல்லத்தைத் துறந்தீர்கள்?”
“அந்த ஆலயத்தில் கடவுள் இல்லை" என்றார் துறவி.
ஆத்திரமடைந்த மன்னன் சொன்னான். “கடவுள் இல்லையா! நாத்திகனைப் போலப் பேசும் நீர் சாமியாரா. பொன் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட விக்கிரகம் பொன்னால் வேயப்பட்ட பீடத்தில் அமர்ந்துள்ளது. அந்த இடம் காலியாக இருப்பதாக நீர் சொல்கிறீர்.”
“காலியாக இருக்கிறதென்று சொல்லவில்லை. அரச அகங்காரத்துடன் உள்ளது. நீ உன்னைத்தான் அங்கே பிரதிஷ்டை செய்துள்ளாய், உலகத்தின் கடவுள் அங்கே பிரதிஷ்டை செய்யப்படவில்லை.”
அதிருப்தியுடன் முனகிய மன்னன் உரைத்தான்.
“இருபது லட்சம் தங்க நாணயங்கள் கொண்டு நான் கட்டிய வானுயரக் கோபுரம் கொண்ட கோயில் அது. முறையான சடங்குகளை நிறைவேற்றிய பிறகே அதை தெய்வத்துக்கு அர்ப்பணித்தேன். அப்பழுக்கற்ற அந்த மாளிகையில் இறைவன் இருக்கமாட்டாரா."
துறவி அமைதியாகச் சொன்னார்.
“இங்கே முன்னர் தீவிபத்து தாக்கியபோது இருபது ஆயிரம் மக்கள் வீடற்றவர்களாக அனாதைகளாக ஆனார்கள். அவர்கள் அபயக்குரல் போட்டு உனது வாசலுக்கு வேண்டி வந்து நின்ற போது, காடுகளில் குகைகளில் மர நிழல்களில் பாழடைந்த கோயில்களில் தங்கிய போது, நீ பொன்னாலான கட்டிடத்தைக் கட்டிக் கொண்டிருந்தாய். இருபது லட்சம் தங்க நாணயங்களைத் தெய்வத்துக்கு அர்ப்பணித்தபோது, கடவுள் சொன்னார், ‘எனது நிரந்தர வீடு எல்லையற்றுப் பரந்திருக்கும் நீலவானத்தில் எண்ணற்ற தீபங்களால் சுடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வீட்டின் அழியாத அடித்தளங்கள் அமைதி, உண்மை, நேசம், கருணை. வீடற்றுப் பரிதவிக்கும் மக்களுக்கு வீடுகளைக் கொடுக்க முடியாத அத்தனை சிறிய கருமி, எனக்கு ஒரு இல்லத்தைத் தரலாம் என்று நினைக்கிறான்.’ அந்தத் தருணத்தில் கடவுள் மரங்களுக்கடியில் வாழ்ந்து வந்த ஏழைகளுடன் சேர்வதற்காகக் கிளம்பிச் சென்றுவிட்டார். ஆழ்ந்த சமுத்திரத்தின் நுரையும் குமிழ்களும் போல உன்னுடைய கோயில் உள்ளீடற்றது, பிரபஞ்சத்துக்கு அடியில் உள்ள பாழைப் போன்றதுதான். பொன்னாலும் கர்வத்தாலுமான வெற்றுக்குமிழி.”
கோபாவேசத்துடன் மன்னன் சொன்னான். “போலியான ஏமாற்றுக்காரனே, எனது ராஜ்ஜியத்தை விட்டு உடனடியாக வெளியேறு.”
அமைதியுடன் அத்துறவி மன்னனிடம் சொன்னார்.
“பக்தர்களை நேசிக்கும் ஒருவனை நாடு கடத்தி விட்டீர்கள்.
தற்போது பக்தனையும் அதே இடத்துக்கு நாடு கடத்துகிறீர்கள்"
(1900-வது ஆண்டில் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கவிதை. இதன் வங்காளத் தலைப்பு ‘தீனோ தான்’. ஆதரவற்றவர்களுக்கு தானம் என்பது இதன் அர்த்தம். அருணவ சின்ஹா இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழில் : ஷங்கர், நன்றி : scroll.in)
Comments