ஓவியம் : ஆர் பி பாஸ்கரன் |
மார்கழிப் பனியில்
வெளியே சுற்றுலாபோன
மாடிவீட்டுப் பூனைக்குட்டி
நிமோனியாவுடன் திரும்பியது
இரண்டே நாட்களில் முதுமையேறி
கெட்ட குமரனின்
குற்றவுணர்வுடன்
அலமந்து
அருந்தியது
முதல் நீரை
மருந்துடன் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு
நீட்டிப் படுத்திருக்கிறது
பூனைக்குட்டி
அது உறங்கும்
அறையில்
இன்னும்
விளக்கணைக்கப்படவில்லை
மீண்ட பூனைக்குட்டி
உறங்கிக் கொண்டிருக்கும்
மெத்தென்ற பஞ்சணை மீது
அமைதி தற்போதுதான் திரும்பிக்கொண்டிருக்கும்
அதன் நுரையீரல் மீது
முழுக்கப் பருகாமல்
மிச்சம் வைத்திருக்கும்
கோழிச்சாறு கிண்ணத்தின் மீது
அப்போதுதான்
அசதியும் சேர்ந்த நிம்மதியுடன்
உறங்கத்தொடங்கியிருக்கும்
வளர்ப்பவள் மீது
பிரகாசமாய்
இரண்டு வெளிச்சங்கள்.
Comments