பெய்ரூட், நம் உலகின் ஆபரணம்
சொர்க்கத்தின் தோட்டமென
அலங்கரிக்கப்பட்டது
அந்தச் சிதறடிக்கப்பட்ட கண்ணாடிகள்
குழந்தைகளின் சிரிக்கும் கண்களாய்
இருந்தன ஒருகாலத்தில்
இப்போது நட்சத்திரங்களால் சுடரூட்டப்பட்டிருக்கின்றன.
இந்த நகரத்தின் இரவுகள் பிரகாசமானவை
பொலிவுற்று ஒளிர்வது லெபனான்.
பெய்ரூட், நம் உலகின் ஆபரணம்.
ரத்தம் அலங்கரித்த முகங்கள்
அழகுக்கும் அப்பால் திகைப்பூட்டூபவை.
அவர்களின் கம்பீர எழில்
பெய்ரூட் நகரத்தின் பாதைகளில் ஒளியேற்றுகிறது
லெபனான் ஒளிபடைத்தது.
பெய்ரூத் நம் உலகின் ஆபரணம்.
சாம்பலாக்கப்பட்ட இல்லம் சிதிலங்கள்
ஒவ்வொன்றும்
டேரிஸ் பேரரசின் கோட்டைகள்.
ஒவ்வொரு போர்வீரனும் அலக்சாண்டருக்கு
பொறாமையை ஊட்டுபவன்
ஒவ்வொரு மகளும் லைலாவைப் போன்றவள்.
படைக்கப்பட்ட காலத்திலிருந்து
பெய்ரூட் நகரம் நீடிக்கிறது
காலத்தின் அந்தத்திலும் பெய்ரூட் நிலைத்து நிற்கும்.
பெய்ரூட், லெபனானின் இதயம்
பெய்ரூட், நம் உலகின் ஆபரணம்
பெய்ரூட்,
அலங்கரிக்கப்பட்டது
சொர்க்கத்தின் தோட்டமென.
(1982-ம் ஆண்டு இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலுக்கும் ஆக்கிரமிப்புக்கும் உள்ளான பெய்ரூட் நகரம் பற்றி எழுதப்பட்ட கவிதை இது. )
Comments