அத்துவானத்தில்
ஒளியின் சிறு மினுமினுப்பு
என் இதயம்
அல்லலின் நகரம்
கனவிலிருந்து விழித்தெழுந்தது
தனிமையின் காலி இல்லத்தில்
காலை விடிகிறது
இன்னும் கனவிலிருந்து விழிக்காத எனது கண்கள்
பதற்றத்துக்குள்ளாகிறது
என் இதயத்து மதுக்கோப்பையில்
இறந்த காலத்தின் கசப்பையும் நிகழின் நஞ்சையும்
கலந்து
என்னுடைய காலை மதுவை ஊற்றுகிறேன்
அத்துவானத்தில்
ஒளியின் சிறு மினுமினுப்பு
கண்ணுக்கு எட்டாத தொலைவில்
ஏதோ
ஒரு காலையை
ஒரு பாடலை
ஒரு நறுமணத்தை
நம்பவே இயலாத
ஒரு அழகிய வதனத்தை
முன்னறிவித்துவிட்டு
அழுத்தம் நிறைந்த நம்பிக்கையைச் சுமந்தபடி
வந்தது தெரியாமல் மறைந்துபோனது
பார்வையாளர் தினமான இன்று
வருகைதரும் ஏக்கங்களுக்கு முன்னால்
இறந்தகாலத்தின் கசப்பைக் கலந்து
நிகழின் நஞ்சைச் சேர்த்த மதுக்கோப்பையை
உயர்த்துகிறேன்
எனது தாயகம்
அதற்கும் அப்பாலுள்ள
சக குடிகாரர்களே
உங்களுக்கு சலாம்
லோகாதி லோகங்களின் அழகுக்கு சலாம்
அன்புக்குரியவளின் நயமான அதரத்துக்கும்
கன்னத்துக்கும் சலாம்.
(லாகூர் கோட்டை சிறையிலிருந்து எழுதியது)
Comments