இப்படித்தான் மரங்களிடம்
இலையுதிர்காலம்
வருகிறது:
அவற்றின்
எலும்புடல்கள் வெறிக்கத்
தோலுரித்துவிடுகிறது.
இதயங்களை உலுக்கிய உலுக்கில்
மரங்கள்
பழுப்பிலைகளைத் தரையெங்கும் சிதறடித்துவிடுகின்றன.
எதிர்ப்பின்
சிறுமுனகலும் இல்லாமல்
யாரும்
அவற்றை உதைத்து உருக்குலைத்துவிட முடியும்.
கனவுகளை
முன்னறிவித்த பறவைகளின்
தொண்டையிலிருந்தெழும்
ஒவ்வொரு குரலும் கிழிக்கப்பட்டு
தங்கள்
பாடலிலிருந்து நாடுகடத்தப்பட்டு
வேடன் நாணை ஏற்றுவதற்கு முன்பே
புழுதிக்குள்
வீசப்பட்டுள்ளன
மே
மாதத்தின் கடவுளே, இரக்கம் காட்டு.
உனது
புத்துயிர்ப்பு வேட்கையினால்
இந்த
மரங்களின்
இறந்த
நாளங்களுக்குள் மீண்டும் ரத்தம் பாயச்செய்து
அதன்
உலர்ந்துதிர்ந்த உடம்புகளை ஆசிர்வதி.
உனது
பசுமையின் பரிசை
இந்த
மரங்களில் கொஞ்சத்துக்காவது கொடு
ஒரு
பறவை பாடட்டும்.
Comments