Skip to main content

இளங்கோவை பூதம் விழுங்கட்டும்


வேளச்சேரியில் யாவரும் பதிப்பகத்துக்கான கடை திறக்கப்பட்ட பின்னர் பழக்கமான நண்பர் கவிதைக்காரன் இளங்கோ. அவரது  நாவல் படைப்பான ‘ஏழு பூட்டுகள்’-ஐ முழுமையாக மதிப்பிடுவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

திடமான, உள் இணைப்புகள் கொண்ட கதை, கதாபாத்திரங்கள், மனித இருப்பின் அறியப்படாத அம்சங்கள் புலப்படும் ஓர் மையம் என்று நாவல் வாசிப்பு சார்ந்து நான் வகுத்திருக்கும் குணங்களைச் சோதனைக்குள்ளாக்கும் படைப்பு இது. அத்துடன் தமிழின் தற்காலப் புனைவில், சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் புதுமைப்பித்தன் தொடங்கி வைத்து முக்கியமான சாதனைகளோடு நிலைநிறுத்தப்பட்ட நவீன தமிழ் புனைகதை எழுத்து மரபின் சாயல்களே இல்லாத அபூர்வக் கதையினம் ஒன்று தோன்றியிருப்பதையும் ‘ஏழு பூட்டுக்கள்’ நாவல் வழியாக தெரிந்துகொள்ள முடிந்தது. கவிதைக்காரன் இளங்கோவின் எழுத்து மரபென்று பார்த்தால் சுஜாதா மட்டுமே தெரிகிறார். சென்ற நூற்றாண்டின் இறுதி இருபது ஆண்டுகளில் உருவான வெகுஜன பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளின் மொழி, உரையாடல் பாணியை இளங்கோ சுவீகரித்திருக்கிறார். ஆனால், அவரது தளத்தை வெகுஜன எழுத்துத் தளமென்று சொல்லிவிடவும் முடியாது; உலகியல் என்றும் லௌகீகம் என்றும் சொல்லக்கூடிய ஓர் உலகத்தில் மட்டும் கவிதைக்காரன் இந்த நாவலில் சஞ்சரிக்கவில்லை. கதை, கதையின் கதை, கதைக்குள் கதை எனக் கட்டற்ற வெளிப்பாட்டுடன், அறிவியல், யோக தியான மரபுகள், ஜென், அறிவியல் புனைவு, காலம் வெளி பற்றிய கோட்பாடு, சினிமா எனத் தரவுகளை அடுக்கடுக்காக தங்கள் உடலோடு கதையாகச் சுமக்கும் கதாபாத்திரங்களை இளங்கோ சிருஷ்டித்துள்ளார். சினிமா கனவு வடிவமாகவும், தொழில் வடிவமாகவும் பெரும் தாக்கத்தைச் செலுத்துகிறது. அறிவு, தத்துவம், அரசியல் அனைத்தும் கேளிக்கையாகவும் நுகர்வாகவும் பாலியல் உள்பட பல்வேறு விழைவுகளை அப்பட்டமாகத் திறப்பதற்கான சாவியாகவும் மாறியிருக்கும் முச்சந்தியில் உலவும் புதிய கதையினத்தின் பிரதிநிதி கவிதைக்காரன் இளங்கோ.               

குழந்தைகள் உருப்படாத காரியங்களில் ஈடுபடும்போது, கதை கெட்டுப் போய்ட்டான் என்று திருநெல்வேலியில் விரக்தியாகக் கூறுவது உண்டு. கதை கெடுவது என்று சொல்வது ஆள் கெடுவதைச் சொல்வது தான். நல்லதோர் வீணை புழுதியில் எறியப்படும் போது அதன் கதை கெடுகிறது. அது படைக்கப்பட்டதற்கு முன்னர் உத்தேசித்திருந்த அம்சம் கெடுகிறது என்று தான் நம்மைப் பெற்றவர்கள் அர்த்தப்படுத்தியிருக்க வேண்டும். 

அப்படி கதை கெட்டுப் போன மனிதர்கள், அப்படி கெட்டுப் போன கதைகள் தங்கள் மூல உத்தேசத்தை இந்த நாவலில் தேடுகின்றனவா?இந்த முதல் கேள்வியிலிருந்து எனது வாசிப்பை வைக்கத் தொடங்குகிறேன். தன் மகளைத் தொலைத்த பஃபிங் நசீரும், நித்திலனும், தன் மகளுக்காக வாழும் ஜென்சி தங்கமும் உதவி இயக்குனர்களின் லட்சியப் பிம்பமாக இருக்கும் கதைசொல்லியான ஜேசுவும் இந்த நாவலின் நடுவில் ஒரு வெயில் பொழுதில் சந்தித்துக் கொள்ளும் ஜெபக்கூடத்தில் தான் ஏழு பூட்டுக்கள் நாவலைத் திறக்கும் சாவி எனக்குக் கிடைத்தது. 

ஏனெனில், “எம் பிதாவே எம்மை ஏன் கைவிட்டீர்?” என்ற முறையீட்டோடு தான் அங்கே ஜெபம் தொடங்குகிறது. கெட்ட கதைகள், தொலைந்த கதைகள் எல்லாம் தங்கள் மூல உத்தேசத்தைத் தெரிந்துகொள்ள, மூல உத்தேசத்தின் வழியில் திரும்புவதற்காக, கடவுளால் கைவிட்ட இந்த உலகத்தில் போராடும் கதைதானா ஏழு பூட்டுகள்? 

000

சமீபத்தில் லலித் கலா அகாடமியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சிக்குச் சென்றிருந்த போது, ஓவியர் ஜே கே, தனது சிற்பத்தைக் காட்டி என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது, சுவரில் மாட்டப்பட்டிருந்த ஓவியத்தைக் காட்டி, சுவரில் மாட்டப்பட்டிருக்கும் நீள அகலப் பரிமாணத்தில் இருக்கும் படம் எப்போது ஓவியமாக ஆகிறது என்று கேட்டு பதிலையும் சொன்னார். நீள அகலமாக உள்ள கித்தானில் அல்லது காகிதத்தில் ஆழம் என்னும் பரிமாணம் சேரும்போது ஓவியம் ஆகிறது என்று சொன்னார். 

தனது சிற்பத்துக்குத் திரும்பி, மூன்று பரிமாணத்தில் இருக்கும் தனது சிற்பம் எப்போது சிற்பமாகிறது என்று கேட்டுவிட்டுப் பதிலைச் சொன்னார். ஒரு சிற்பத்தைச் சுற்றி வந்து பார்க்கும் நிகழ்வில் நான்காவது பரிமாணத்தை எடுக்கும்போது அது சிற்பமாகிறது என்று சொன்னார். 

மொழியில் புழங்குபவனாக ஜே கே சொல்வதை நான் புழங்கும் தளத்துக்கு அதை நீட்டித்துப் பார்த்தேன். ஒரு சொற்கூட்டம் எப்போது கவிதையாக மாறுகிறது? ஒரு சொற்கூட்டம் எப்போது கதையாகிறது? எப்படி ஒரு சொற்கூட்டம் நீள அகல ஆழ பரிமாணங்கள் கொண்ட இன்னொரு உலகத்தைச் சிருஷ்டித்து விடுகிறது? 

சாதாரண நீதிக்கதையாக ஒன்றும், ஆலிஸின் அற்புத உலகம் போல புதிர்களையும் விந்தை தீராத சுவாரசியத்தையும் கொண்ட அற்புதக் கதையாக ஒன்றுமாக எப்படி வேறு வேறு சொற்கூட்டங்கள் தோற்றம் கொள்கின்றன?  

கவிதைக்காரன் இளங்கோவின் ஏழு பூட்டுக்கள் கதையில் வரும் கதாபாத்திரங்கள் சென்னையின் விளிம்பில், சமூகத்துக்கு வெளியில் புழங்கும் அ சமூகத்தவர்கள். ராணி, பொன்ராஜ், நசீர், ஜேசு, கார்த்திக் எல்லாரும் சிறு மாற்றமோ, அவதியோ வந்தாலும் உடைந்து நொறுங்கித் தொலைந்து போகும் முயல் வளைக்குப் பக்கத்திலேயே இருப்பவர்கள். ஆனாலும், மாஸ்டர் ஓஸ் சாக்ரம் அத்தியாயத்தில் வரும் துறவியின் பூனையான மியாவ்வைப் போல, தன் வழியே சென்று தனது கதைகளைத் திறப்பதற்குக் காத்திருப்பவை. ஆனால், அந்தத் துறவியோ பூனையின் வாலை கருப்பு மையில் முக்கியெடுத்து இன்னொரு கதையை இன்னொரு படத்தை எழுத முயன்றுகொண்டிருக்கிறார். துறவியின் கதையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளக் காத்திருக்கும் பூனை போன்றவர்களா ராணியும் பொன்ராஜும் நசீரும் ஜேசுவும் கார்த்திக்கும்? 

000

கோடம்பாக்கத்தில் எத்தனை சிக்கலான கதையையும் சரிசெய்து தரும் திறனுள்ள ஸ்டோரி டிஸ்கஷன் என்ற நிகழ்வில் அனைவருக்கும் நாயகனாக விளங்கும் ஜேசு, உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் அணுக்கமான சகோதரனாகவும் மனிதாபிமானியாகவும் தெரிகிறார். ஆனால், அந்த ஜேசுவால் ஏன் சொந்தமாகச் சாதிக்க முடியவில்லை. ஜேசுவின் விதியென்றும், ஜேசுவின் கதையென்றும் சொல்லமுடியக் கூடியது ஏன் இன்னும் விளங்காமலேயே இருக்கிறது? 

திரும்பக் கதை பற்றிப் பேசலாம். ஏழு பூட்டுக்கள் நாவலில் சிலரின் கதைகள் கூடி வருகின்றன. பல கதைகள் கூடவில்லை. சினிமா டிஸ்கஷனில் உருவாகும் அதே அலுப்பை தனாவும் நித்திலனும் ஜேசுவும் உருவாக்குகிறார்கள். ஜேசுவுக்காவது சுவாரசியத்துக்கு ஒரு க்ரீன் டீ கிடைக்கிறது.  

குழந்தைக் கதைகளிலிருந்து அறிபுனைவு எனப் பல வடிவங்களில் கதைகள் இருக்கின்றன. பிரதியின் வாசிப்பின்பம், ஆசிரியனின் மரணம் என நாவலாசிரியன் சிந்திக்கும் தடையங்கள் உள்ளன. அறிவியல் தரவுகள், சிந்தனை விவரணைகள் உள்ளன. ஆனால் புனைவின் எதார்த்தம் ஊன்ற வேண்டிய இடத்தில் கவிதைக்கும் மாயத்துக்கும் இலக்கியம் ஆழ வேண்டிய இடத்தில் கட் செய்து சினிமாவுக்கும் இப்பாலில் நிற்க வேண்டியிருக்கும் போது அப்பாலுக்கும் இந்தக் கதைகளும் கதாபாத்திரங்களும் தொலைந்து விடுகின்றன. ஏப்ரல் வெயிலில் அன்றாடம் கொந்தளித்துப் பரபரக்கும் பிராட்வே தெருவில் பகல் கனவு காணும் கதாபாத்திரங்களை இவர் படைத்துள்ளார். கூலிக்காரர்கள் விளையாடும் தாய ஓசையைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொன்ராஜின் வேடிக்கை பார்க்கும் சுவாரசியம் இந்த நாவலை வாசிக்கும்போது எனக்கு ஏற்படவில்லை. தரவுகள், விவரணைகள், கதைகளை இணைக்கும் லாவகம் அனைத்தும் தொழில்நுட்பமாக ஏமாற்றும் அனுபவம் நிகழ்கிறது. 

ஒரு நாவலுக்குத் தரவுகள், விவரணைகள், கதைகளை இணைக்கும் லாவகம் மட்டும் போதுமா? 

21-ம் நூற்றாண்டில் நாம் வந்து சேர்ந்திருக்கும் அறிவு, தகவல், ஊடகப் பெருக்கத்திலிருந்து தகவல் உபரியிலிருந்து கவிதையை, கதையை, நாவலை எப்படிக் காப்பாற்றப் போகிறோம். எந்த அறிவும் எந்தத் தொழில்நுட்பமும் மனிதன் உணரும் ஆழ்ந்த தனிமையை, இருப்பு குறித்த விந்தையை, இன்னொருவரால் பகிர முடியாத துயரத்தை, குறுக்குமறுக்காக ஊடாடும் நேச, வெறுப்புகளை வரையறுத்துப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் நமக்கு இன்னமும்  கவிதையும் நாவலும் சிறுகதையும் ஓவியமும் இசையும் சினிமாவும் ஏன் தேவையாக உள்ளது?

இதுவரை உலகம் அறிந்தவை அனைத்தும் என்னைக் காப்பாற்றப் போதவில்லை என்ற உணர்விலிருந்து புரிதலிலிருந்து ஆழத்திலிருந்து தான் இன்னும் ஒரு கவிஞனும் ஒரு கதைகாரனும் ஒரு ஓவியனும் தொடர்ந்து பிறந்துகொண்டிருக்கிறான்.

அறிவும் சமயமும் தத்துவமும் விடுதலையைத் தந்ததா என்று யூத வதைமுகாம்களுக்குச் சென்று கேட்டுப் பார்க்க வேண்டும். டேட்டா விடுதலை தந்ததா என்று டில்லியின் எல்லையில் போராடும் விவசாயிகளுடன் நின்று கேட்டுப் பார்க்க வேண்டும். 

 அறிவுகள், தத்துவங்கள் மாபெரும் களங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த உலகத்தில் இருந்துதான் களங்கமின்மையின் புள்ளியிலிருந்து நெல்மலர் தனது தோழியைக் காப்பாற்றும் சாகசத்தை அப்பாவை அழைத்துக் கொண்டு தொடங்குகிறாள். அந்தக் கதையில் வரும் பூதம் அலுமினியத் தட்டைப் போல முகத்தைக் கொண்டது தான். கீறிவிட்ட கண்களைக் கொண்டதுதான். 

ஆனால், நெல் மலரின் கதையில், கடைசியில் பிரியத்துக்குரியதாக மாறும் அந்த இரண்டு பரிமாண பூதம் எப்படி முப்பரிமாணத் தன்மையுடையதாகிறது? அந்தப் பூதம் எப்படி அழகுடையதாகிறது? தான்யாவை அது பயத்துக்கும் அன்புக்கும் நடுவில் எப்படி வைத்திருக்கிறது?

நாம் பார்த்திருக்க நாம் பங்குபெறவும் கூடிய நாம் கதாபாத்திரங்களாகவும் கதைசொல்லிகளாகவும் இருக்கும் ஓர் மேடையை கதைவெளியாக்க முயற்சி செய்துள்ள இளங்கோவின் முயற்சி துணிச்சல் மிகுந்தது.

ஆனால் அந்தக் கதை என்னும் பூதத்தை தன்னை விழுங்க விடாமல் தனது டிபன் பாக்சில் உள்ள உணவைக் கொடுத்துத் தப்பித்துவிடுகிறாரா இளங்கோ? இது எனது கடைசிக் கேள்வி. 

இங்கே பிறக்கும் எவனும் எவளும் தன்னுடனேயே சொந்த நரக சொர்க்கத்தைக் கொண்டுவந்து அதை வாழ்ந்தும் தீர்த்தும் போகிறவராகவே இருக்கிறார்கள். அந்த நரகத்தைக் கைமாற்றவே முடிவதில்லை; சொர்க்கத்தையும் தான். 

‘காதுகள்’ நாவலில் மகாலிங்கம் அனுபவிக்கும் அத்தனை நரக அனுபவங்களும் எம். வி. வி தனது சொந்த வாழ்க்கையில் பத்திருபது வருடங்கள் அனுபவித்தது. வாழ்க்கையின் நடுப்பகுதியில் அவனுக்கு விபரீதமான குரல்கள்  கேட்கத் தொடங்குகின்றன. 

மேல்மனம், ஆழ்மனம், நனவிலி, கூட்டு நனவிலி என மனோதத்துவ அறிவு நம் மனத்தைக் கோடு போட்டு வகைப்படுத்தியிருப்பதெல்லாம் மகாலிங்கம் அன்றாடம் சந்திக்கும் துயரத்துக்கு முன்னால் இல்லாமல் போகிறது. அத்தனை அறிவும் தோற்கும் நரகம் அது. அதன் நுழைவு வழியும் வெளியேறும் வழியும் அவனுக்கு மட்டும்தான். அந்த நரகத்தை முற்றிலும் தாங்கி மாளாமல் மாண்டு அவன் பிறக்க வேண்டும்.

அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்த எம் வி வெங்கட்ராமால் தான், தனது வாழ்க்கையை அற்புதம் என்றும் அதிபயங்கரம் என்றும் சொல்லி ரசிக்க முடிந்திருக்கிறது.

“வாழ்க்கையை, என்னை வாழவைக்கிற இந்தச் சமுதாயத்தை இங்குள்ள உயிரினங்களையும் உயிரற்ற சடப் பொருள்களையும் நான் நேசிக்கிறேன். இந்த மண்ணுக்கு, இந்தச் சுழலுக்கு, சூழலுக்கு, இந்த இன்பதுன்பத்துக்கு என்னை அனுப்பிவைத்தது யார் அல்லது எது என்று கண்டுபிடிக்க நான் ஓயாமல் செய்யும் முயற்சிதான் என்னுடைய இலக்கியப் படைப்பு. அதாவது, என்னைத் தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன்" என்று உரத்துச் சொல்ல முடிந்திருக்கிறது.

அந்தப் பின்னணியிலிருந்து ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது  இளங்கோ. நம்மை தற்போது வதைக்கும் அத்தனை பூதங்களும் தான், நம்மைப் பின்னர் கனிவோடு வழிநடத்தப்போகும் தேவதைகள் ஆகப்போகின்றன. 

நாம் கண்டு நடுங்கும் பூதங்கள் அனைத்தும் நமது நிழல்கள்தான் என்று உளவியலாளர் யுங் சொல்வதை நான் நம்புகிறேன். 

வாழ்க்கை என்னும் பூதத்தைச் சந்தித்து தழுவுவதும் நாவல் என்னும் பூதத்தைச் சந்தித்து தழுவுவதும் வேறு வேறு அல்ல என்று நம்புகிறேன்.

உங்களுக்கு எனது வாழ்த்துகள்.  

Comments